என் மலர்
செய்திகள்

2 டோஸ் தடுப்பூசி போட்ட பிறகும் அரசு டாக்டர் கொரோனாவுக்கு பலியானது எப்படி? சுகாதார துறையினர் ஆய்வு
வேலூர்:
வேலூர் அருகே உள்ள அரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஹேமலதா (வயது 47) இவர் கடந்த 2004-ம் ஆண்டு அரசு டாக்டராக பணியில் சேர்ந்தார்.
வேலூர் சைதாப்பேட்டையில் உள்ள நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2016-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த மே மாதம் கடைசி வாரத்தில் ஹேமலதாவுக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அவரை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு கடந்த 43 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையில் நேற்று திடீரென உடல்நிலை மோசமானதால் வேலூரில் உள்ள மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இரவில் ஹேமலதா இறந்தார்.
டாக்டர் ஹேமலதா கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டுக் கொண்டுள்ளார்.
இருந்தாலும் அவருக்கு சர்க்கரை அளவு மிக அதிகமாக இருந்ததாகவும் நோய் மிக தீவிரமாக இருந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சுகாதாரதுறை அதிகாரிகள் கூறுகையில்:- கொரோனாவுக்கு பலியான அரசு டாக்டர் ஹேமலதா கோவிஷீல்டு தடுப்பூசி 2 டோஸ் போட்டுள்ளார். ஆனால் அவருக்கு சர்க்கரை நோயின் பாதிப்பு அதிகளவில் இருந்தது. 40 நாட்களுக்கு மேலாக அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
நோயின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். தடுப்பூசி போட்ட பிறகும் டாக்டர் ஹேமலதா எப்படி இறந்தார்? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
அவருடைய மருத்துவ அறிக்கை, உடல் நிலை பாதிப்பு குறித்த அனைத்து விவரங்களும் சேகரித்து வருகிறோம். தடுப்பூசி செலுத்தி கொண்ட பின்னரும் அவர் எப்படி இறந்தார் என்பது இந்த ஆய்வில் தெரிய வரும் என்றனர்.
2-டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட அரசு டாக்டர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






