என் மலர்
வேலூர்
குடியாத்தம்:
குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்-இன்ஸ்பெக்டர் கிருபாகரன், போலீசார் மஞ்சுநாதன் உள்ளிட்டோர் சைனகுண்டா சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து குடியாத்தம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதில் வந்த 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தியனர். அவர்கள் முன்னுக்கு பின்னாக பதிலளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளின் சீட்டை புரட்டிப் பார்த்த போது அதில் சிறு சிறு பொட்டலங்களாக 400 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து பிடிபட்ட 2 வாலிபர்களையும் போலீசார் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், குமரன் ஆகியோர் அந்த வாலிபர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் குடியாத்தம் ஆர்.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்த குமரன் மகன் ராஜ்குமார் (வயது 22) என்றும் சென்னையில் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருவதும் மற்றொருவர் குடியாத்தம் ஜீவா நகரை சேர்ந்த ஜெயக்குமார் மகன் தினகரன் (19) என்றும் மேளம் அடிப்பவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா கடத்தி வந்த ராஜ்குமார், தினகரன் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 400 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் ஆந்திர மாநிலம் பலமநேர் அடுத்த காலவப்பல்லி பகுதியிலிருந்து கஞ்சாவை வாங்கி வருவது தெரியவந்தது.
இந்த காலவப்பல்லி பகுதியில் இருந்து பலர் கஞ்சா பொட்டலங்களை வாங்கி குடியாத்தம் பகுதியில் விற்பனைக்கு கொண்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
போலீஸ் உயர் அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி காலவப்பல்லி பகுதியில் கஞ்சா மொத்த விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த மாதம் வரை இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது. இதனால் மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ளத்தில் மூழ்கியது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பிறகு மார்கழி மாதம் குளிர்வாட்டி வதைக்க தொடங்கியது. இதனால் பகலிலேயே ஸ்வெட்டருடன் மக்கள் சுற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் மீண்டும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டத்தில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது.
மாவட்டத்தில் அரக்கோணம், வாலாஜா, காவேரிப்பாக்கம் பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வேலூர் காட்பாடி திருவலம் பகுதியில் மிதமான மழை பெய்தது. மற்ற இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.
வேலூர் மாநகர பகுதியில் தொடர் மழை காரணமாக பாதாளச் சாக்கடை, கால்வாய் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கியது. தெருக்களில் சேறும் சகதியுமாக காட்சியளித்தது. பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் மக்கள் அவதியடைந்தனர்.
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
வேலூர் 22.2, காட்பாடி 14.1, பொன்னை 3.6, குடியாத்தம் 12, திருவலம் 30, வாலாஜா 30.5, அரக்கோணம் 47.8, ஆற்காடு 21.3, காவேரிபாக்கம் 40, அம்மூர் 42, சோளிங்கர் 6, கலவை 12.4.
அணைக்கட்டு அருகே உள்ள மலை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி 8-ம் வகுப்பு படிக்கும் அவரது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவி இதுகுறித்து அவரது தாயாரிடம் தெரிவித்தார்.
மாணவியின் தாயார் இதுபற்றி வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற மகளுக்கு தந்தையே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஒமைக்ரான் பரவி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இதனால் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநில எல்லைகளையும் சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
காட்பாடியில் வெடிமருந்துத் தொழிற்சாலை அருகே உள்ள மாநில எல்லையில் ஆந்திராவிலிருந்து வருபவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நேற்று சித்தூரில் இருந்து வேலூர் நோக்கி வந்த அய்யப்ப பக்தர்கள் குழுவினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. வாகனங்களில் வருபவர்கள் 2 கட்ட கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். கொரோனா பரிசோதனை செய்யப்படுபவர்களின் முகவரி மற்றும் அவர்களுடைய செல்போன் எண்கள் பதிவு செய்யப்படுகிறது.
2 தவணை தடுப்பூசி போட்டிருந்தாலும் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். கடைகள் மற்றும் பொது இடங்களில் கூடும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
ஒமைக்ரான் கொரோனாவை விட அதிக வேகத்தில் பரவக் கூடும் என்பதால் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கின்றனர்.
மதுரையை சேர்ந்தவர் ஜோஸ்வா (வயது 23). வேலூர் சி.எம்.சி மருத்துவ கல்லூரியில் முதுகலை பட்ட படிப்பு படித்து வந்தார்.
இவர் சி.எம்.சி. மருத்துவமனை வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார். இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை.
இதனால் அங்கிருந்தவர்கள் அறைக்குச் சென்று பார்த்தனர். அப்போது அறையில் உள்ள படுக்கையில் ஜோஸ்வா இறந்து கிடந்தார்.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவ மாணவர் ஜோஸ்வா எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சி.எம்.சி. ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.






