என் மலர்
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு வந்தனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 42 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று அதிகபட்சமாக 87 பேர் பாதிக்கப்பட்டனர்.
நேற்று பாதிப்பு 2 மடங்கு உயர்ந்திருந்த நிலையில் இன்று 3 மடங்கு உயர்ந்து கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் வேலூர் மாவட்டத்தில் 208 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர 40 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
வேலூர் தனியார் ஆஸ்பத்திரி, வேலூர் ஜெயில் ஆகிய இடங்களில் பாதிப்பு ஏற்பட தொடங்கி உள்ளது. வேலூர் லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்கியுள்ள வெளிமாநிலத்தவர்கள் மூலம் பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதுதவிர வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் தரணம்பேட்டை, கள்ளூர் லத்தேரி, விரிஞ்சிபுரம், பிள்ளையார்குப்பம், ஒடுகத்தூர், கே.வி.குப்பம், அணைக்கட்டு, தொண்டான் துளசி, இடையன்சாத்து, கரசமங்கலம், வண்டறந்தாங்கல், அரியூர் காந்திநகர், கவசம்பட்டு, பொன்னை தாங்கல், சேனூர் ஆகிய இடங்களில் புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரே நாளில் கொரோனா 3 மடங்கு அதிகரித்துள்ளதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வேலூர் மாநகராட்சி பகுதியில் முக கவசம் அணிவது கட்டாயபடுத்தப்பட்டுள்ளது. முக கவசம் அணியாத வியாபாரிகளுக்கு ரூ.500 பொதுமக்களுக்கு ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா சமூக பரவலாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் கூட்டமாக கூட வேண்டாம். முடிந்த அளவு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
மீண்டும் கொரோனா பரவி வருவதால் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
கொரோனா பரவுவதால் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகளை பார்த்தால் கொரோனா போல் உள்ளது. தாறுமாறாக பஸ் நிலையத்தை கட்டி வருகின்றனர்.
பக்கத்தில் உள்ள தனியார் இடங்களில் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் பஸ் நிலையத்தில் தண்ணீர் தேங்கும் அளவிற்கு கட்டுமானப்பணிகள் திட்டமிடப்பட்டு நடந்துள்ளது.
புதிய பஸ் நிலையத்தில் 2 நுழைவு வாயில்கள் அமைக்கப்படும். மேலும் நுழைவுவாயில் அருகே எந்தவிதமான கடைகளும் கட்டக்கூடாது. கழிவறைகள் நவீனமாக கட்டி முடிக்கப்பட வேண்டும்.
இனிவரும் காலங்களில் புதிய பஸ் நிலையத்தை அடிக்கடி ஆய்வு செய்வேன். இதில் முறைகேடாக கட்டப்படுவது தெரிய வந்தால் சிபிசிஐடி மூலம் விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
வேலூர் கிரீன் சர்க்கிள் இருக்கும் வரை அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் தீர்க்க முடியாது. கிரீன் சர்க்கிள் பகுதியில் ஓட்டல் கடைகள் முன்பாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் மணல் குவாரி தொடங்குவது குறித்து அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும். தமிழகத்தில் எந்த பகுதியிலும் அனுமதி இல்லாமல் தற்போது கல் குவாரிகள் இயங்கவில்லை.
வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரி அருகே மேம்பாலம் அமைப்பது குறித்து நீண்ட நாட்களாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. வேலூர் கலெக்டர் அலுவலகம் காங்கேய நல்லூர் இடையே பாலாற்றில் பாலம் அமைப்பது குறித்து ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பாலம் அமைந்தால் புதிய பஸ் நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது ஒரு மாத பரோலில் வெளியே வந்துள்ள நளினி காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கியுள்ளார். தினமும் காட்பாடி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.
கோர்ட்டு உத்தரவுப்படி நளினி முருகன் இருவரும் 15 நாளைக்கு ஒரு முறை ஜெயிலில் நேரில் சந்தித்து வந்தனர். தற்போது பரோலில் வந்துள்ள நளினி, முருகனை சந்தித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தார்.
இந்த மனுவை சிறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நளினி, முருகன் இருவரும் சந்தித்து பேச அனுமதி அளித்துள்ளனர்.
நளினி வேலூர் மத்திய சிறையில் முருகனை சந்திக்க வரும்போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடித்து சந்திக்கலாம் என சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வருகிற 8-ந்தேதி வேலூர் ஜெயிலில் முருகன் நளினி சந்திப்பு நடைபெற வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
வேலூர்:
ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூர் வழியாக தமிழகத்திற்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்திவருகின்றனர்.இதனை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி கிருஷ்டியான்பேட்டை சோதனை சாவடியில் போதை பொருள் நுண்ணறிவு குற்ற புலனாய்வு துறை டி.எஸ்.பி., ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி, மற்றும் போலீசார் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சித்தூரில் இருந்து வேலூர் வந்த தனியார் பஸ்சில் சோதனை நடத்தினர். 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர்.
அதில் 10 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது. உடனடியாக அவரை பஸ்சில் இருந்து கீழே இறக்கினர். விசாரணையில் அவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள திராளி கிராமத்தைச் சேர்ந்த சீதாராமன் (வயது50) என்பது தெரியவந்தது.
இவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அனக்கா பள்ளியிலிருந்து கஞ்சாவை வாங்கிக்கொண்டு திருமங்கலத்திற்கு விற்பனைக்காக கொண்டு செல்வது தெரியவந்தது. சீதாராமனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் 17-ம் கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் பஸ்நிலையங்கள், மார்க்கெட், பஜார் உள்பட 505 இடங்களில் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று காலை 7 முதல் இரவு 7 மணி வரை சிறப்பு முகாம் நடந்தது. இதில், பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். குறிப்பாக 2-வது தவணை கொரோனா தடுப்பூசி அதிக நபர்கள் போட்டு கொண்டனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த சிறப்பு முகாம்களை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதேபோன்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் பானுமதி, வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், மாநகர் நலஅலுவலர் மணிவண்ணன் ஆகியோரும் பல்வேறு இடங்களில் நடந்த முகாமை பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 38,543 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் இதுவரை 87 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 57 சதவீதம் பேருக்கு 2-வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேரணாம்பட்டை அடுத்த அழிஞ்சிகுப்பம் கிராமத்தில் குடியாத்தம்-ஆம்பூர் சாலையில் மேல்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த 2 கார்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
அந்த நேரத்தில் ஒரு காரின் டிரைவர் கீழே இறங்கி தப்பியோடி விட்டார். 2 கார்களில் மொத்தம் 8 செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரிந்தது. 2 கார்களுடன் செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து பேரணாம்பட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
மற்றொரு காரின் டிரைவர் வேலூரை அடுத்த அமிர்தி அருகில் நஞ்சுகொண்டாபுரத்தை சேர்ந்த சுரேஷ் பாபு (வயது 30) என்றும், தப்பியோடிய கார் டிரைவர் ராகுல் என்றும் தெரிய வந்தது.
சுரேஷ்பாபு காட்பாடியில் இருந்து 2 கார்களில் செம்மரக்கட்டைகளை கடத்தி வந்து, பேரணாம்பட்டை அடுத்த எம்.வி.குப்பத்தை சேர்ந்த தன்னுடைய மாமா பழனி (52) என்பவரின் நிலத்தில் உள்ள குடோனுக்கு கொண்டு செல்ல முயன்றபோது, போலீசாரிடம் சிக்கியது தெரிய வந்தது.
இதையடுத்து எம்.வி.குப்பத்தைச் சேர்ந்த பழனியின் நிலத்தில் உள்ள குடோனில் போலீசார் சோதனை செய்தனர். அங்கு 10 செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து, பேரணாம்பட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 18 செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.12 லட்சத்து 10 ஆயிரம் ஆகும்.
இதையடுத்து மேல்பட்டி போலீசார் கார் டிரைவர் சுரேஷ்பாபு (28), அவரின் மாமா பழனி (52) ஆகியோரை பிடித்து பேரணாம்பட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்களை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய கார் டிரைவரும் செம்மரக்கடத்தல் கும்பலை சேர்ந்தவருமான ராகுலை வனத்துறையினரும், போலீசாரும், வலைவீசி தேடி வருகின்றனர்.






