என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வேலூர் மாவட்டம்
    X
    வேலூர் மாவட்டம்

    ஒரே நாளில் 3 மடங்கு உயர்ந்தது- வேலூரில் இன்று 208 பேருக்கு கொரோனா

    வேலூரில் ஒரே நாளில் கொரோனா 3 மடங்கு அதிகரித்துள்ளதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு வந்தனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 42 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று அதிகபட்சமாக 87 பேர் பாதிக்கப்பட்டனர்.

    நேற்று பாதிப்பு 2 மடங்கு உயர்ந்திருந்த நிலையில் இன்று 3 மடங்கு உயர்ந்து கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் வேலூர் மாவட்டத்தில் 208 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர 40 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

    வேலூர் தனியார் ஆஸ்பத்திரி, வேலூர் ஜெயில் ஆகிய இடங்களில் பாதிப்பு ஏற்பட தொடங்கி உள்ளது. வேலூர் லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்கியுள்ள வெளிமாநிலத்தவர்கள் மூலம் பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இதுதவிர வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் தரணம்பேட்டை, கள்ளூர் லத்தேரி, விரிஞ்சிபுரம், பிள்ளையார்குப்பம், ஒடுகத்தூர், கே.வி.குப்பம், அணைக்கட்டு, தொண்டான் துளசி, இடையன்சாத்து, கரசமங்கலம், வண்டறந்தாங்கல், அரியூர் காந்திநகர், கவசம்பட்டு, பொன்னை தாங்கல், சேனூர் ஆகிய இடங்களில் புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    ஒரே நாளில் கொரோனா 3 மடங்கு அதிகரித்துள்ளதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    வேலூர் மாநகராட்சி பகுதியில் முக கவசம் அணிவது கட்டாயபடுத்தப்பட்டுள்ளது. முக கவசம் அணியாத வியாபாரிகளுக்கு ரூ.500 பொதுமக்களுக்கு ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா சமூக பரவலாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் கூட்டமாக கூட வேண்டாம். முடிந்த அளவு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

    மீண்டும் கொரோனா பரவி வருவதால் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

    கொரோனா பரவுவதால் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×