என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூரில் இன்று 274 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் 400 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:-

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று வேலூர் மாவட்டத்தில் 274 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 

    கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர். 

    இந்த நிலையில் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க. வேலூர் தொரப்பாடி தந்தை பெரியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதி கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு உள்ளது. 

    இந்த 2 விடுதிகளில் 400 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ள கல்லூரி விடுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

    நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், நகர்நல அலுவலர் மணிவண்ணன், வேலூர் தாசில்தார் செந்தில் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
    வேலூரில் தங்கியுள்ள வெளி மாநிலத்தவர்கள் ஆஸ்பத்திரியை தவிர எங்கும் செல்லக் கூடாது என தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாநகர பகுதியில் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 

    வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரிக்கு வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்தவர்கள் காந்தி ரோடு, பாபுராவ்தெரு உள்ளிட்ட இடங்களில் உள்ள லாட்ஜ்களில் தங்கி உள்ளனர். 

    லாட்ஜிகளில் தங்கி உள்ள வெளிமாநிலத்தவர்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் வேலூர் மாநகர சாலைகளிலும் கோட்டை பகுதிகளிலும் பரவலாக சுற்றித் திரிகின்றனர்.

    தேவையில்லாமல் அவர்கள் சுற்றி திரிவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

    காந்தி ரோடு உட்பட 8 இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அவர்கள் வெளி மாநிலங்களை சேர்ந்த யாராவது அந்த வழியாக வந்தால் அவர்களை மருத்துவமனைக்கு மட்டுமே செல்ல அனுமதிக்க வேண்டும்.

    வேலூர் கோட்டை மற்றும் பூங்காவிற்கு செல்ல அனுமதிக்கக் கூடாது.மேலும் இதுகுறித்து லாட்ஜ் உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    ஏதாவது அத்தியாவசிய பொருட்கள் தேவையெனில் லாட்ஜி பணியாளர்கள் மூலம் வாங்கிக் கொள்ளவேண்டும் என உத்தர விடப்பட்டுள்ளது.
    மாடு விடும் விழா நடத்த அனுமதிக்கக் கோரி காளை மாடுகளுடன் ஊர்வலமாக வந்து போராட்டம் நடத்தினர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் மாடு விடும்விழா நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை வேலூர் மாவட்ட எருதுவிடும் பாதுகாப்பு மற்றும் ரசிகர் சங்கம் மற்றும் இந்து முன்னணியினர் இணைந்து கிரீன் சர்க்கிளில் இருந்து காளை மாடுகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர். 

    இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ் எருது விடும் விழா பாதுகாப்பு சங்க கவுரவத் தலைவர் பாபு, பத்மநாபன், சரவணன், வக்கீல் பாபு உட்பட 500-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

    கலெக்டர் அலுவலகம் முன்பு அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் கலெக்டர் அலுவலக கேட் மூடப்பட்டது. இதனையடுத்து நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர்.

    வருகிற பொங்கல் பண்டிகைக்கு மாடு விடும் விழா நடத்த அனுமதிக்க வேண்டும். மாடு விடும் விழா விற்கு தடை விதித்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். 

    அப்போது கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தற்போது அதிகரித்து வருகிறது. நோய் பரவல் குறைந்தவுடன் அனைத்து பகுதியிலும் நடத்த அனுமதிக்க பரிசீலனை செய்யப்படும் என உறுதி அளித்தார்.

    இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். மனு கொடுக்க வந்த ஏராளமானோர் கலெக்டர் அலுவலகம் முன்பு நீண்டநேரம் திரண்டிருந்தனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
    வேலூர் மாவட்டத்தில் இன்று 231 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 51,116 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 49,301 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,145 பேர் பலியானார்கள். 

    தற்போது 670 பேர் சிகிச்சையின் உள்ளனர். இன்று 231 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 150&க்கும் மேற்பட்டோர் பாதிக்க பட்டுள்ளனர். வேலூர் லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்கியுள்ள வெளிமாநிலத்தவர்கள் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை உள்ளவர்களில் இதுவரை யாருக்கும் ஆக்சிஜன் தேவைப்படவில்லை.மேலும் கூடுதலாக படுக்கை வசதிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா சமூக பரவலாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் கூட்டமாக கூட வேண்டாம்.முடிந்த அளவு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். 

    கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    அந்திரிநிவா திட்டத்தில் குப்பம் வரும் கிருஷ்ணா நீரில் 2 டி.எம்.சி. தண்ணீரை பாலாற்றில் திறந்துவிட வேண்டும் என்று சந்திரபாபு நாயுடுவிடம் தமிழக விவசாயிகள் மனு அளித்தனர்.
    வாணியம்பாடி:

    ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்தில் தனது தொகுதி குப்பத்தில் 3 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து இருந்து சாலை மார்க்கமாக ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி வழியாக வாணியம்பாடிக்கு வந்தார். அவருக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் வரவேற்பளித்தனர்.

    அப்போது திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியை சேர்ந்த அனைத்து விவசாய சங்கம், பாலாறு பாதுகாப்பு சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

    கடந்த முறை சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட கிருஷ்ணா நதியில் இருந்து 3 டிஎம்சி நீரை கொண்டு வந்து குப்பம் தொகுதியில் அந்திரி நிவா திட்டத்தில் கால்வாய் வெட்டப்பட்டு நீரை தேக்கி வைக்க தயாராக உள்ளது.

    அதில் 2 டி.எம்.சி. நீரை பாலாற்றில் விட வேண்டும் வாணியம்பாடியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் குப்பம் தொகுதியில் உள்ள விஜிலாபுரம் என்ற இடத்தை தேர்வு செய்து சர்வதேச விமான நிலையம் அமைக்க ரூ.98 கோடி நிதி ஒதுக்கி 1200 ஏக்கர் நிலத்தை வாங்கி தற்போது கிடப்பில் உள்ள அந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வந்தால் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலம் மக்களுக்கு வெளிநாடு பயணத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    சித்தூர் மாவட்டம், குப்பம் பகுதியில் அமைந்துள்ள திராவிட பல்கலைக்கழகத்தில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தர கோரிக்கை மனு ஆசிரியர் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது, திராவிட பல்கலைக்கழகத்தில் தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை அதிகரித்து தரவேண்டும். தமிழ் துறையில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலம் திராவிட பல்கலைக்கழகத்துக்கு வருவதற்க வசதியாக கூடுதல் பஸ் இயக்க வேண்டும், திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தடையின்றி செயல்பட ஆவன செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கொரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டி வேலூரில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி வேலூர் மாவட்டத்தில் வருகிற 9-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மற்ற நாட்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

    வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மதம் சார்ந்த திருவிழாக்கள் கூட்டம் நடத்த தடை செய்யப்படுகிறது. அனைத்து வணிக வளாகங்கள் ஷோரூம்கள் பெரிய கடைகளில் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக் கையாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

    ஓட்டல்கள் டீக்கடைகளில் 50 சதவிகித இட ஒதுக்கீடு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் கண்டக்டர் டிரைவர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.பஸ்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.

    வாடகை மற்றும் கார்களில் டிரைவர் தவிர்த்து 3 பேர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். வாடகை ஆட்டோக்களில் டிரைவர் தவிர்த்து 2 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து பூங்காக்கள் பெரிய அரங்குகள் அருங்காட்சியங்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

    தியேட்டர்களில் 50 சதவீத இருக்கையுடன் செயல்படலாம்.திருமண நிகழ்ச்சிகளில் 100 பேரும் இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்குள் கலந்து கொள்ளலாம்.

    வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வேலூர் மாவட்டத்திற்கு பஸ் ரெயில் மற்றும் இதர வாகனங்கள் மூலம் சுற்றுலா பயணிகள் வருவதற்கு அனுமதி இல்லை.

    வேலூர் மாவட்ட எல்லைகளில் இது தொடர்பாக போலீசார் மூலம் கண்காணிக்கப்படும்.

    முக கவசம் அணியாமல் வெளியே வரும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்படும். கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் முக கவசம் அணியாமல் வந்தால் அவர்களுக்கு எந்தவித பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது.

    பொதுமக்கள் அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். தேவை இல்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே நோய் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    தாய்க்கு செல்போனில் தொல்லை கொடுத்ததால் பரோட்டா மாஸ்டரை கொன்றேன். கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஒதியத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 48). இவர் வேலூர் பலவன்சாத்து குப்பத்தில் உள்ள ஒரு ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். 

    இந்தநிலையில் கடந்த 3-ந்தேதி வேலூர் புதிய மீன் மார்க்கெட் அருகே ஆட்டோவில் வைத்து வெங்கடேசனை தாக்கிய கும்பல் அவரை கீழே தள்ளி விட்டு தப்பி சென்றனர். மயங்கி கிடந்த அவரை போலீசார் மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.

    வெங்கடேசனை தாக்கி ஆட்டோவில் இருந்து கீழே தள்ளி விட்டு சென்ற கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். பிரேத பரிசோதனையில், வெங்கடேசன் தாக்குதலில் இறந்ததாக டாக்டர் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

    இந்த நிலையில் கொலை தொடர்பாக வேலூர் கொணவட்டத்தை சேர்ந்த அல்தாப் அகமது (21) அவரது நண்பர்கள் இலாகி (33) அப்துல் ரசாக் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

    இதுகுறித்து அல்தாப் அகமது போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    கடந்த மாதம் எனது தந்தைக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது. அவரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். அவருடன் எனது தாயார் தங்கியிருந்தார். அதே ஆஸ்பத்திரியில் கொலைசெய்யப்பட்ட வெங்கேடசனின் தாயார் உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சையில் இருந்தார்.

    அப்போது வெங்கடேசன் எனது தாயாருக்கு சிறு, சிறு உதவிகள் செய்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்வதாக நினைத்தோம். எனது தாயாரின் செல்போன் எண்ணை வெங்கடேசன் வேறு நபர்கள் மூலமாக பெற்றுள்ளார்.எனது தந்தை சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    இதையடுத்து வெங்கடேசன் எனது தாயாரிடம் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்தார். உனது கணவர் இறந்துவிட்டார் என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன் என பேசிய அவர் செல்போனில் பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். இதுகுறித்து எனது தாயார் என்னிடம் கூறினார்.

    இதனால் ஆத்திரமடைந்த நான் நண்பர்களை அழைத்துக் கொண்டு வெங்கடேசன் வேலைபார்க்கும் ஓட்டலுக்கு சென்று தட்டிக்கேட்டோம். அப்போது தகராறு ஏற்பட்டது. 

    வெங்கடேசனை ஆட்டோவில் கடத்தி வேலூருக்கு கொண்டு வந்தோம். மேலும் அவரை தாக்கினோம். பின்னர் அவரை மீன் மார்க்கெட் அருகே விட்டு சென்று விட்டோம். போலீசார் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்த போது இறந்துவிட்டார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    போலீசார் அல்தாப் அஹமது அவரது நண்பர்கள் இலாகி, அப்துல்ரசாக் மற்றும் அல்தாப்அகமது ஆகியோரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
    வேலூர் மாவட்டத்தில் இன்று 273 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 50,895 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 49,282 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,145 பேர் பலியானார்கள். தற்போது 468 பேர் சிகிச்சையின் உள்ளனர்.

    கடந்த வாரம் அதிக பட்சமாக 20 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு வந்தனர். திடீரென பாதிப்பு அதிகரிக்க தொடங் கியது. நேற்று 3 மடங்கு உயர்ந்து கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியது. இன்று ஒரே நாளில் வேலூர் மாவட்டத்தில் 273 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 150-க்கும் மேற்பட்டோர் பாதிக்கபட்டுள்ளனர். தற்போது பாதிக்கப் பட்டவர்களில் 200 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 268 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

    ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை உள்ளவர்களில் இதுவரை யாருக்கும் ஆக்சிஜன் தேவைப் படவில்லை. அவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் கூடுதலாக படுக்கை வசதிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களை ஏற்படுத்தும் நடவடிக் கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

    வேலூர் தனியார் ஆஸ்பத்திரி, வேலூர் ஜெயில் ஆகிய இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    வேலூர் லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்கியுள்ள வெளிமாநிலத்தவர்கள் மூலம் பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    வேலூர் மாநகராட்சி பகுதியில் முகக் கவசம் அணிவது கட்டாயப் படுத்தப்பட்டு உள்ளது. முக கவசம் அணியாத வியாபாரிகளுக்கு ரூ.500 பொதுமக்களுக்கு ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா சமூக பரவலாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் கூட்டமாக கூட வேண்டாம்.முடிந்த அளவு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

    தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    வேலூரில் கொரோனா பரவலை தடுக்க நேதாஜி மார்க்கெட் கடைகளை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூரில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.மார்க்கெட் பகுதிகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் அங்கு வரும் பொதுமக்களுக்கு நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

    வேலூர் நேதாஜி மார்க்கெட் காய்கறி கடைகள் மற்றும் மீன் மார்க்கெட் கடைகளை இடமாற்றம் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

    இன்று காலையில் வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட் மற்றும் லாங்கு பஜார் பழ கடைகள் உள்ள இடங்களில் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் ஆய்வு செய்தார். மேலும் புதிய மீன் மார்க்கெட் பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டார்.

    ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது மாங்காய் மண்டி அருகே உள்ள மைதானத்தில் மார்க்கெட் செயல்பட்டது. அந்த இடத்தையும் பார்வையிட்டார்.

    மாநகராட்சி நல அலுவலர் மணிவண்ணன், உதவி கமிஷனர் வசந்தி, மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    இதனை தொடர்ந்து விரைவில் மார்க்கெட் கடைகள் இடமாற்றம் குறித்து காட்பாடியில் வியாபாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

    மார்க்கெட் கடைகளை இடமாற்றம் செய்வதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த ஆண்டு கடைகளில் மாற்றம் செய்த போது வியாபாரம் சரியான அளவில் இல்லை.

    மேலும் பல இன்னல்கள் சந்தித்தோம். கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றி நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோம். எந்தக் காரணத்தைக் கொண்டும் மார்க்கெட் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டாம் என அவர்கள் தெரிவித்தனர்.

    கடைகள் இடமாற்றத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர் மாநகராட்சி பகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி குடியாத்தம் பேரணாம்பட்டு நகராட்சிகள் மற்றும் பள்ளிகொண்டா ஒடுகத்தூர் திருவலம் பென்னாத்தூர் பேரூராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தேவையான வாக்குபதிவு எந்திரங்கள் வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனது. இதில் மொத்த வாக்குச்சாவடிகள் 646-க்கு 20 சதவீத கூடுதல் ஒதுக்கீடு சேர்த்து 779 மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவி 779 பயன்படுத்தப்பட உள்ளன.

    இன்று வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன் படுத்தக்கூடிய வாக்குப்பதிவு எந்திரங்கள் கம்ப்யூட்டர் மூலம் முதற்கட்ட ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.

    அனைத்துஅரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு ஒதுக்கீடு செய்யும் மின்னனு வாக்குப் பதிவு எந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் ஒதுக்கீடு செய்யும் பணியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.
    வேலூரில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்து அபராதம் விதித்தனர்.
    வேலூர்:

    வேலூரில் இன்று கொரோனா புதிய உச்சத்தை எட்டி உள்ளது. மாநகராட்சி பகுதியில் முககவசம் அணியாத வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    வேலூர் பழைய பஸ் நிலையத்தில் மாநகராட்சி 2-வது மண்டல உதவி கமிஷனர் வசந்தி, சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் இன்று பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தினர்.

    மேலும் முகக்கவசம் அணியாத வியாபாரிகளுக்கு ரூ.500,பொதுமக்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர்.

    வாகனங்களில் முகக் கவசம் அணியாமல் வந்த வர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது இன்று காலை ஒரு மணி நேரத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதித்தனர்.

    அதிகாரிகள் அபராதம் விதிப்பதை கண்ட பொதுமக்கள் பலர் வேகமாக சென்று கடைகளில் முகக்கவசம் வாங்கி அணிந்து சென்றனர்.

    பொது மக்கள் தங்களை தானாகவே தற்காத்துக் கொள்ள வேண்டும். பொது இடங்களில் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
    பேரணாம்பட்டு தாசில்தார் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பான இடத்தில் சீஸ்மோ கிராப் கருவி பொருத்தப்பட்டது. ஒரு மாத காலம் அக்கருவி அங்கு பொருத்தப்பட்டிருக்கும்.
    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு நகராட்சிக்கு உள்பட்ட தரைக்காடு, குப்பைமேடு, நகரை ஒட்டியுள்ள ஒன்றியத்தின் சில பகுதிகளில் கடந்த மாதத்தில் அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டது.

    இதில் 40-க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களில் லேசான விரிசல்கள் ஏற்பட்டன. நில அதிர்வு சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நில அதிர்வு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி விட்டுச் சென்றார்.

    இதேபோல் குடியாத்தம், ஆம்பூர் பகுதியிலும் தொடர்ந்து நில நடுக்கம் உணரப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, ஹைதராபாத்தில் உள்ள மத்திய புவியியல் துறையின் உதவி புவியியாளர் அனிமஸ் தாகூர், சென்னையை சேர்ந்த மூத்த புவியியலாளர் சிவகுமார், வேலூர் வி.ஐ.டி.யின் புவியியல் துறை பேராசிரியர் கணபதி ஆகியோர் தலைமையிலான குழுவினர் சில நாட்களுக்கு முன் பேரணாம்பட்டு பகுதியில் முதல்கட்ட ஆய்வு மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக அக்குழுவினர் நேற்று 2-ம் கட்ட ஆய்வு நடத்தினர்.

    நில அதிர்வை பதிவு செய்யும் சீஸ்மோ கிராப் எனும் கருவியை மண்ணில் பொருத்தி ஆய்வு செய்ய திட்டமிட்டனர். இக்கருவியை பொருத்த பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்ய பல்வேறு இடங்களை குழுவினர் பார்வையிட்டனர்.

    இறுதியில் பேரணாம்பட்டு தாசில்தார் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பான இடத்தில் சீஸ்மோ கிராப் கருவி பொருத்தப்பட்டது. ஒரு மாத காலம் அக்கருவி அங்கு பொருத்தப்பட்டிருக்கும்.

    இந்த கருவியானது பேரணாம்பட்டு பகுதியைச் சுற்றி 50 கி.மீ. பரப்பளவில் ஏற்படும் நிலஅதிர்வை பதிவு செய்யும். அதன் அடிப்படையில் நில அதிர்வு ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பது தெரியும் என குழுவினர் தெரிவித்தனர்.


    ×