என் மலர்
வேலூர்
வேலூர் உதவி கலெக்டர் விஷ்ணு பிரியாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உதவி கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதேபோல கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் உதவி திட்ட அலுவலர் மோகன் என்பவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து கலெக்டர் அலுவலகம் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் முழுவதும் சுகாதார பணிகள் செய்யப்பட்டன.
பாதிக்கப்பட்ட அலுவலகங்களில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலகத்தில் வழக்கமாக திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் இன்று கலெக்டர் அலுவலக வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் புதிய வேகம் எடுத்துள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்கு வருகின்றனர். வேலூர் நகரப் பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளில் சுமார் 7 ஆயிரம் பேர் தங்கி உள்ளனர்.
கடந்த சில நாட்களாக லாட்ஜ்களில் தங்கி இருக்கக்கூடிய வெளிமாநிலத்தவர்கள் 600-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று வெளி மாநிலத்தவர்கள் 65 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் மூலம் சிஎம்சி ஆஸ்பத்திரியில் உள்ள நர்சு மற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா பரவியுள்ளது. நேற்று வரை சிஎம்சி ஆஸ்பத்திரியில் 200 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று மேலும் 50 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி வெளிமாநிலங்களில் உள்ளவர்களுக்கு இந்த கொரோனா காலகட்டத்தில் சிகிச்சைக்கு அனுமதி இல்லை என உத்தரவிட்டுள்ளது.
மேலும் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் லாட்ஜிகளில் தேவையில்லாமல் தங்கியுள்ள வெளிமாநிலத்தவர்களை கட்டாயமாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மாநகராட்சி 2-வது மண்டல இளநிலை பொறியாளர் மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்கியுள்ள வெளிமாநிலத்தவர்கள் குறித்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு நோயாளியுடன் ஒருவர் மட்டுமே தங்கி இருக்க வேண்டும். கூடுதலாக தங்கியிருப்பவர்கள் உடனடியாக சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டனர்.
லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்களும் ஒரு நோயாளியுடன் ஒருவர் மட்டுமே தங்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
வேலூரில் வெளிமாநிலத்தவர்கள் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் மூலம் தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் நர்சு ஊழியர்களுக்கும் கொரோனா பரவி உள்ளது.
பாதிக்கப்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.அதனை மீறியும் வெளிமாநிலத்தவர்கள் சுற்றித் திரிகின்றனர்.
இதனால் தேவையில்லாமல் தங்கி இருப்பவர்களை வெளியேற்றி வருகிறோம்.லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதியில் நோயாளியுடன் ஒருவர் மட்டுமே தங்கி இருக்க வேண்டும் மற்றவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம் என்றனர்.
வேலூர்:
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 ஆண்டுகளுக்கு மேல் எம்.பி.பி.எஸ். படித்து முடித்த மருத்துவ மாணவர்கள் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வருகின்றனர். தற்போது ஆஸ்பத்திரியில் சுமார் 100 பயிற்சி மருத்துவர்கள் பணியில் உள்ளனர்.
இவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக பயிற்சி ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும் கொரோனா ஊக்கத்தொகை மற்றும் ஜூலை மாதம் சம்பளம் நிலுவை ஆகியவை 50 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
மூன்று மாதங்களாக பயிற்சி டாக்டர்கள் சம்பளம் கேட்டு கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் அவர்களுக்கான சம்பளம் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்று காலை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் பயிற்சி டாக்டர்கள் அனைவரும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ கல்லூரி முதல்வர் அலுவலகம் முன்பு திரண்டு சம்பளம் வழங்க கோரி கோஷம் எழுப்பினர்.
எங்களுக்கு மாதந்தோறும் ரூ 25,000 பயிற்சி ஊதியமாக வழங்கப்படுகிறது. 3 மாதங்கள் இந்த ஊதியம் வழங்கப்படவில்லை. கொரோனா ஊக்கத் தொகை ரூ.15 ஆயிரத்துக்கு பதில் ரூ.7 ஆயிரம் மட்டுமே வழங்குகின்றனர். அதேபோல ஜூலை மாத சம்பளம் அரியர் பணமும் குறைந்த அளவே வழங்கியுள்ளனர்.
மற்ற மருத்துவ கல்லூரிகளில் முறையாக சம்பளம் வழங்கும் போது இங்கு மட்டும் ஏன் வழங்கப்படவில்லை என்பது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. முறையான சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தால் இன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.
கொரோனா காலத்தில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது ஆஸ்பத்திரி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அமிர்தி வன உயிரியல் பூங்காவில் மான், மயில், புள்ளி மான், மலைப்பாம்பு, நட்சத்திர ஆமை, முயல் என 17 வகையான விலங்குகள் பறவைகள் உள்ளது.
இந்த விலங்குகள், பறவைகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாதவாறு அனைத்து விலங்குகள் உள்ள அறைகளுக்கு உட்புறமாக மஞ்சள்தூள் தூவியும், பிளீச்சிங் பவுடர் தெளித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல் சுற்றுலா பயணிகள் பூங்காவிற்கு வரும் முன்பு கால்களைத் தண்ணீரால் சுத்தம் செய்ய பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைதி வனத்துறை ரேஞ்சர் முருகன் கூறுகையில்:-
கொரோனா பாதிப்பு வந்தது முதலே விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க மஞ்சள்தூள், பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளும் கிருமி நாசினி கொண்ட தண்ணீரால் கண்களை சுத்தம் செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர் என்றார்.
இன்று பூங்கா வழக்கம் போல செயல்பட்டது. நாளை ஊரடங்கையொட்டி பூங்கா மூடப்படுகிறது.






