என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் முத்துரங்கம் கல்லூரி பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
    வேலூர்:

    வேலூர் முத்துரங்கம் கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் இன்று பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார்.

    அதில் முத்துரங்கம் அரசு கல்லூரியில் பணியாற்றி வரும் பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

    இந்த புகார் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது இதுதொடர்பாக அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    கல்லூரி பேராசிரியர் மீது மாணவி புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் போராட்டம் கலெக்டர் பேச்சுவார்த்தையால் முடிவுக்கு வந்தது.
    வேலூர்:

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 ஆண்டுகளுக்கு மேல் எம்.பி.பி.எஸ். படித்து முடித்த மருத்துவ மாணவர்கள் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வருகின்றனர். தற்போது ஆஸ்பத்திரியில் சுமார் 100 பயிற்சி மருத்துவர்கள் பணியில் உள்ளனர்.

    இவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக பயிற்சி ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும் கொரோனா ஊக்கத்தொகை மற்றும் ஜூலை மாதம் சம்பளம் நிலுவை ஆகியவை 50 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் பயிற்சி டாக்டர்கள் அனைவரும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ கல்லூரி முதல்வர் அலுவலகம் முன்பு திரண்டு சம்பளம் வழங்க கோரி கோஷம் எழுப்பினர்.இதனைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி டாக்டர்கள் மனு அளித்தனர்.

    அவர்களிடம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக பயிற்சி டாக்டர்கள் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஆஸ்பத்திரியில் உள்ள புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் அருகே அமர்ந்து அவர்கள் சம்பளம் வழங்க கோரி கோஷம் எழுப்பினர்.

    இதுகுறித்து பயிற்சி டாக்டர்கள் கூறுகையில்:-

    கடந்த 3 மாதங்களாக எங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை.ஆஸ்பத்திரியில் உள்ள பயிற்சி டாக்டர்கள் 100 பேரில் 50 பேர் ஏழை விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். படிக்கும்போதே கஷ்டப்பட்டு படித்தோம். ஆனால் இப்போது வேலை பார்ப்பதற்கு கூட சம்பளம் கிடைக்கவில்லை. சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் திண்டாடுகிறோம். கடன்வாங்கி அந்த பணத்தில் சாப்பிட்டு வருகிறோம்.

    சம்பளம் வழங்க கோரி பலமுறை ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தோம். இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தால் இன்று 2-வது நாளாக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்களிடம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    வேலூர் பாகாயம் பெண் இன்ஸ்பெக்டர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
    வேலூர்:

    வேலூர் பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா (வயது40) இவருக்கு கடந்த சில நாட்களாக சளி இருமல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

    இதனைத் தொடர்ந்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் பாதிக்கப்பட்டதால் பாகாயம் போலீஸ் நிலையம் முழுவதும் இன்று காலை கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. 

    மேலும் போலீஸ் நிலையம் மூடப் பட்டது. அங்கு பணிபுரிந்து வரும் சப்&இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அனைவருக்கும் இன்று காலை கொரோனா சோதனைக்காக சளி மாதிரிகள் எடுக்கப்பட்டன.

    போலீஸ் நிலையத்திற்கு வெளியே பந்தல் அமைத்து போலீசார் பொதுமக்களிடம் புகார் மனுக்களை வாங்கினர்.
    வேலூர் பழைய பஸ் நிலையத்தில் கத்தியை காட்டி பஸ் கண்டக்டரிடம் ரூ.2 ஆயிரம் வழிப்பறி செய்து மிட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    வேலூர்:

    வேலூர் வேலப்பாடி அருணாசல முதலியார் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 58). அரசு பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். 

    இவர் இன்று அதிகாலை பணிக்காக வேலூர் பழைய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப் போது மேட்டுஇடையம் பட்டியை சேர்ந்த அருணாசலம் (வயது25) என்பவர் பாஸ்கரை வழிமறித்து பணம் கேட்டார்.

    அவர் கொடுக்க மறுத்ததால் அருணாசலம் கத்தியை காட்டி மிரட்ட தொடங்கினார். நான் பலமுறை ஜெயிலுக்கு சென்று வந்தவன். நான் கேட்டு பணம் தர மறுக்கிறாயா என்று கூறி கத்தியால் குத்த பாய்ந்தார்.
    அப்போது பாஸ்கர் விலகிக் கொண்டார். 

    மேலும் கத்தி முனையில் மிரட்டிய அருணாசலம் கண்டக்டர் பாஸ்கரிடம் இருந்து ரூ.2 ஆயிரத்தை பறித்தார். போலீசில் புகார் அளித்தால் வந்து வெட்டுவேன் எனக்கூறிவிட்டு சென்று விட்டார்.

    இதுகுறித்து பாஸ்கர் வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் உத்தரவின்பேரில் சப்&இன்ஸ்பெக்டர் பால வெங்கட்ராமன் மற்றும் போலீசார் இன்று காலை பழைய பஸ் நிலையம் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

    அப்போது அவர்களிடம் பணம் பறித்த அருணாசலம் அங்குள்ள ஒரு ஓட்டல் அருகே நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் கத்திமுனையில் நகை பணம் பறிப்பது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து அருணாசலத்தை கைது செய்தனர்.
    குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் கழிவுகளை கொட்டிய தொழிற்சாலைக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    குடியாத்தம்:

    குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் காமராஜர் பாலம் அருகே நேற்று இரவு காலணி தொழிற்சாலை கழிவுகளை கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தியுள்ளனர் இதனை கண்ட திமுக நகர பொறுப்பாளர் சௌந்தரராஜன் குடியாத்தம் நகராட்சி ஆணையரிடம் தகவல் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு மற்றும் அதிகாரிகள் காலனி தொழிற்சாலை கழிவுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி அதனை கொட்டிய காலனி தொழிற்சாலை நிறுவனத்திற்கு 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

     மேலும் நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களில் கழிவுகளை கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவுறுத்தப்பட்டனர் மேலும் அந்த காலணி தொழிற்சாலை நிறுவனமே ஆற்றில் கொட்டிய கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றி இருபுறமும் சாலைகள் அமைக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் கடந்த ஒரு மாத காலமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள வீடுகள், கடைகள், வணிக வளாகங்களை நீர்வள ஆதார துறையினர் படிப்படியாக அகற்றி வருகின்றனர்.

    இப்பணிகளை நேற்று தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் குமார வேல்பாண்டியன், அணைக்கட்டு ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ, குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ, குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், நகர மன்ற முன்னாள் துணைத் தலைவர் எஸ்.சவுந்தரராஜன், தாசில்தார் லலிதா, நீர்வள ஆதார துறை உதவி செயற்பொறியாளர் குணசீலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-

     ஒரு காலத்தில் கவுண்டன்யமகாநதி ஆறு பார்க்க ஆசையாக இருந்தது இங்கு நடைபெறாத அரசியல் கூட்டமே இல்லை எனலாம், மாலை ஓய்வு நேரத்தில் கிடைக்க கடற்கரை மாதிரி இருந்த இடம் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு ஓடை போல் மாறி உள்ளது.

    அதிகாரிகள் 1424 ஆக்கிரமிப்புகளை கணக்கெடுத்துள்ளனர் தற்போது 320 ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளனர். மீதுமுள்ள ஆக்கிரமிப்புளை அகற்றி மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாத வண்ணம் இருபக்கமும் சாலைகள் அமைக்கப்படும்.

    மேலும் இந்த சாலைகள் பைபாஸ் சாலை போன்று போக்குவரத்து நெரிசலை குறைக்கும் இதற்காக அமைச்சர் என்னுடைய இலாக்காதான் எனவே இத்திட்டத்திற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் இங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றும் போது பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உடனடியாக வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களுடன் கலந்து பேசி உள்ளேன் அவர் அனைவருக்கும் குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக வீடு கட்டித் தரப்படும் என உறுதி அளித்துள்ளார். 

    எனவே ஆக்கிரமிப்புகள் அகற்றும் போது பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைவில் வீடுகள் கட்டித் தரப்படும்.
    வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் திருமணத்திற்காக நர்சு உடையில் நகை பறித்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    அணைக்கட்டு அருகே உள்ள பிச்சாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராம்பதியம்மாள் (வயது 80). இவர் வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வந்தார். அங்குள்ள எக்ஸ்ரே அறை முன்பு காத்திருந்தார்.

    அவரிடம் நர்சு உடை அணிந்திருந்த இளம்பெண் ஒருவர் பேச்சு கொடுத்தார். எக்ஸ்ரே எடுக்கும்போது நகை எதுவும் அணிந்திருக்கக் கூடாது. எனவே அதை கழட்டிக் கொடுங்க என கேட்டுள்ளார்.அந்த ஆஸ்பத்திரியில் பணிபுரியும் நர்சுதான் என நம்பிய ராம்பதியம்மாள் அவர் அணிந்திருந்த 2‌ பவுன் தங்க நகைகளை கழட்டிக் கொடுத்தார். நகை வாங்கியதும் இளம்பெண் அதனை ஒரு பேப்பரில் சுற்றி தருவதாகக் நகையை எடுத்துக்கொண்டு வெறும் பேப்பரை சுற்றி ராம்பதியம்மாளிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ராம்பதியம்மாள் வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கேமராவில் இளம்பெண் நர்சு உடையில் மூதாட்டியிடம் நகை வாங்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இந்த படத்தை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று செயின் பறிப்பு நடந்த இடத்தில் அதே இளம்பெண் நர்சு உடையில் நின்று கொண்டிருந்தார்.

    இதனை நோட்டமிட்ட ஆஸ்பத்திரி காவலர்கள் இளம் பெண்ணை மடக்கிப் பிடித்தனர்.

    அவரை வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் இளம்பெண்ணுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் திருமணத்திற்காக நகை பறிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் தனியார் ஆஸ்பத்திரியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    வேலூர், திருப்பத்தூர் பகுதிகளில் அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது கிணறு மண்ணில் புதைந்துள்ளது ஆம்பூர் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஆம்பூர்:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, குடியாத்தம் பகுதிகளிலும், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரிலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் ஆம்பூரில் கிணறு ஒன்று மண்ணுக்குள் புதைந்துள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியை சேர்ந்தவர் ராமு விவசாயி. விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார். நிலத்தில் பாசன கிணறும் உள்ளது.

    நேற்று காலை ராமு நிலத்தின் அருகே பலத்த சத்தம் கேட்டுள்ளது. இதனால் குடும்பத்தினருடன் அக்கம் பக்கத்தினர் சென்று பார்வையிட்டனர்.

    அப்போது கிணற்றின் பக்கவாட்டில் கட்டப்பட்டிருந்த செங்கல் சுவர்களுடன் கிணறு மண்ணுக்குள் புதைந்து கொண்டிருந்தது.

    இதனை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்தில் முழுமையாக கிணறு மண்ணுக்குள் புதைந்தது. அங்கிருந்த மின்கம்பமும் கிணறுக்குள் அப்படியே புதைந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர்.

    கடந்த 2 மாதங்களாக மாதனூர், குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதிகளில் அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது கிணறு மண்ணில் புதைந்துள்ளது சின்னவரிக்கம், பெரியவரிகம், கைலாசகிரி என ஆம்பூர் சுற்றி உள்ள பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



    வேலூரில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடந்தது.

    பட்டியல் அணி தலைவர் சக்கரவத்தி தலைமை தாங்கினர். கார்த்தியாயினி மற்றும் மாவட்ட பார்வையாளர் வெங்கடேசன், மாநில செயற்குழு ஆனந்தன், பொதுச்செயலாளர் கார்த்தி, மாவட்ட செயலாளர் மதன், துணை தலைவர் தமிழகன், இமனுவேல், ஒன்றிய தலைவர் பாண்டியன், ஜெயசூரியா, ராஜன் பாபு மாவட்ட துணை தலைவர் ஜெகன், பொதுசெயலளர்கள் பாஸ்கர், மாவட்ட செயலாளர் சரவணகுமார், 

    ஓ.பி.சி. மாவட்ட செயலாளர் எஸ்.கே.மோகன், பிரச்சார பிரிவு செந்தில்குமார், வெங்கடேசன், மகளிர்அணி கிருஷ்ணகுமாரி, மண்டல் தலைவர், ஜெகன். தேவராஜ் நிர்வாகிகள் சுமார் கலந்து கொண்டனர்.
    வேலூர் ஜெயிலில் பரோலில் வந்துள்ள நளினி-முருகனுடன் சந்தித்து பேசினர்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

    கோர்ட்டு உத்தரவுப்படி கணவன்-மனைவி 15 நாட்களுக்கு ஒருமுறை நேரில் சந்தித்து பேசி வருகிறார்கள்.

    தற்போது பரோலில் வெளியே வந்துள்ள நளினி காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கியுள்ளார். அவர் முருகனை சந்திக்க அனுமதி கேட்டு போலீசார் மற்றும் சிறை துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தார். 

    சந்திப்பின் போது கொரோனா விதி முறைகளை கடைபிடிக்க வேண்டும் என நிபந்தனை அளித்து இருவரும் சந்திக்க அனுமதி வழங்கினர். நளினி-முருகன் சந்திப்பு இன்று வேலூர் பெண்கள் ஜெயிலில் நடைபெற்றது.

    இதையொட்டி பிரம்மபுரத்தில் இருந்து நளினியை வேலூர் ஆயுதப்படை டிஎஸ்பி மணிமாறன் தலைமையிலான போலீசார் பலத்த காவலுடன் பெண்கள் ஜெயிலிலுக்கு அழைத்து சென்றனர்.

    அங்குள்ள ஒரு அறையில் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நளினி முருகன் சந்தித்து பேசினர். பின்னர் நளினி மீண்டும் பிரம்மபுரம் அழைத்து செல்லப்பட்டார்.
    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கியது.
    வேலூர்:

    வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கியது.

    பூஸ்டர் தடுப்பூசி என்பது, ஒருவர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டதில் இருந்து 90 நாட்களை கடந்தவர்களுக்கு செலுத்தப்படுவதாகும். 

    அதாவது, ஒருவர் தன்னுடைய 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி, 90 நாட்கள் ஆன நிலையில் பூஸ்டர் அதாவது 3-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயாராகியிருக் கிறார் என்பதாகும்.

    இந்த பூஸ்டர் தடுப்பூசி, முதல் கட்டமாக முன்களப்பணியாளர்களாக அறியப்படும் மருத்துவத்துறை, சுகாதாரத் துறை, வருவாய்த்துறை, போலீஸ் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு செலுத்தப்படுகிறது.

    இந்த வகையில், வேலூர் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 451 பேர், திருப்பத்து£ர் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 800 பேர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8 ஆயிரம் பேருக்கு இன்று முதல் செலுத்தப்பட உள்ளது.

    வேலூர் கொணவட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், நந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் பானுமதி, மாநகராட்சி நல அலுவலர் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள் ஆரம்ப சுகாதார மையங்களில் இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்படுகிறது.

     ஏற்கனவே 2-வது டோஸ் செலுத்தி 9 மாதங்கள் கடந்தவர்களுக்கு மட்டும் பூஸ்டர் தடுப்பூசி தற்போது செலுத்தப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் காந்தி பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்தார். கலெக்டர் பாஸ்கரபாண்டியன், நகராட்சி கமிஷனர் ஏகராஜ்,  சுகாதார துணை இயக்குனர் மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. கலெக்டர் அமர் குஷ்வாகா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கிவைத்தார்.

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் முருகேஷ் இன்று தொடங்கி வைத்தார்.

    முதற்கட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 6807 முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
    குடியாத்தம் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடந்த வருகிறது.
    குடியாத்தம்:

    குடியாத்தம் நகராட்சி பகுதிகளில் கொரனோ தோற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

    வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேலு பாண்டியன், வேலூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சுரேந்திரன் ஆகியோர் உத்தரவின் பேரில் குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு மேற்பார்வையில் நகராட்சி பொறியாளர் சிசில்தாமஸ், சுகாதார ஆய்வாளர் பாலசந்திரன், சுகாதாரப்பணிகள் மேற்பார்வையாளர் பிரபுதாஸ் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள், 

    தூய்மைப் பணியாளர்கள் குடியாத்தம் நகராட்சி பகுதியில் 3 வாகனங்களிலும் மற்றும் கை தெளிப்பான்கள் மூலமும் நகரின் முக்கிய பகுதிகளான புதிய பழைய, பஸ் நிலையங்கள், சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் அனைத்து தெருக்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    ×