search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கற்பகம் கூட்டுறவு அங்காடி பெண் அதிகாரி
    X
    கற்பகம் கூட்டுறவு அங்காடி பெண் அதிகாரி

    கற்பகம் கூட்டுறவு அங்காடி பெண் அதிகாரி வீட்டில் சோதனை

    கற்பகம் கூட்டுறவு அங்காடி பெண் அதிகாரி வீட்டில் ரூ.2.45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய காட்சி.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலை கற்பகம் சிறப்பு அங்காடி வேலூர் அண்ணா சாலையில் செயல்பட்டு வருகிறது. அதன் இணை பதிவாளராகவும் மற்றும் மேலாண்மை இயக்குனராகவும் ரேணுகாம்பாள் என்பவர் பணியாற்றி வருகிறார். 

    இவர் புத்தாண்டை முன்னிட்டு சோப்பு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் டீலர்களிடம் லஞ்சமாக பணம் பெறுவதாகவும், மற்றும் பல்வேறு வகைகளில் பில் தொகை வழங்குவதற்காக லஞ்சம் பெறுவதாகவும் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

    அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரஜினிகாந்த், விஜய் மற்றும் போலீசார் நேற்று இணைப்பதிவாளர் அலுவலகத்தை கண்காணித்தனர். 

    இந்தநிலையில் மாலை 6 மணி அளவில் திடீரென அலுவலகத்துக்குள் நுழைந்த போலீசார் அங்கு இணைப்பதிவாளர் அறை மற்றும் ஊழியர்களின் மேஜைகளில் சோதனை செய்தனர்.

    அப்போது அலுவலகத்தில் இருந்து ஏஜெண்டு சீனிவாசன் என்பவரிடம் ரூ.1 லட்சத்து 82 ஆயிரம் பறிமுதல் செய்தனர். மற்றும் அலுவலகத்தில் இருந்து ரூ.63000 பறிமுதல் செய்தனர். 

    இந்த சோதனையின் முடிவில் அலுவலகம் மற்றும் அவரிடமிருந்து கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 45 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே அலுவலகத்திற்கு வெளியாட்கள் யாரும் வராத  வகையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

    இந்த சோதனை இரவு 10 மணி வரை நீடித்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் லஞ்சமாக பெற்றது தெரிய வந்தது. மேலாண்மை இயக்குனர் ரேணுகாம்பாள் கற்பகம் கூட்டறவு அங்காடி ஊழியர்கள் சண்முகம், நவீன்குமார், ஏஜெண்டு சீனிவாசன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை வேலூர் சாய்நாதபுரத்தில் உள்ள பெண் அதிகாரி ரேணுகாம்பாள் வீட்டில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். 1 மணி நேரம் இந்த சோதனை நடந்தது. இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.  

    இந்தசம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    Next Story
    ×