என் மலர்
திருவண்ணாமலை
- தரிசு நிலத்தை விவசாய நிலமாக மாற்ற சோதனை
- அதிகாரிகள் உடன் இருந்தனர்
செங்கம்:
செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பாலியப்பட்டு, பீமானந்தல் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சியை திட்டப் பணிகளை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
மேல்பெண்ணாத்தூர் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகளை குறித்தும் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செங்கம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.
அப்போது செங்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள உள்கட்டமைப்புகள், தாய்-சேய் விடுதிகள், பிரசவ வார்டுகள், ஆய்வகங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது தாசில்தார் முனுசாமி, மருத்துவ அலுவலர் (பொ) சவுத்ரி, கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் உடனிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து புதுப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பனை ஓலைப்பாடி, காரப்பட்டு, காஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
அப்போது காஞ்சி அருகே வேளாண்மை துறை சார்பில் தரிசு நிலத்தில் உள்ள முள்வேலிகளை அகற்றி விவசாய நிலமாக மாற்றும் திட்டம் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள அருகாவூர் கிராமத்தில் புதியதாக திரவுபதி அம்மன் கோவில் ரூ.2 கோடியில் கட்ட பூமி பூஜை விழா நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள் சங்கர், மூர்த்தி ஆகியோர் வரவேற்றனர்.
ஒ.ஜோதி எம்எல்ஏ கலந்துகொண்டு கட்டிடம் கட்ட பூமி பூஜையை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
- அம்மா வீட்டிற்கு நீ செல்லக்கூடாது என கணவன் தடுத்ததால் விரக்தி
- போலீசார் விசாரணை
போளூர்:
போளூர் அருகே உள்ள துரிஞ்சிகுப்பத்தை சேர்ந்த ராஜா கவுண்டர் மனைவி சாந்தி (வயது 48).
இவருடைய மகள் சாரதா (வயது 27) கடந்த 9 வருடங்களுக்கு முன் ஓகூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சத்தியமூர்த்திக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சரிதா தன் கணவரிடம் என் அம்மாவை பார்க்க அம்மா வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு கணவர் அம்மா வீட்டிற்கு நீ செல்லக்கூடாது என்று கூறியுள்ளார்.
உடனே சாரதா மனமுடைந்து பூச்சி மருந்தை குடித்து உள்ளார் உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார் அங்கிருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்து விட்டார்.
போளூர் போலீசார் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் பேச்சு
- ஜெயலலிதா பிறந்த நாள் பொதுகூட்டம் நடந்தது
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அண்ணாசிலை அருகில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா பொதுகூட்டம் நடந்தது. நகர செயலாளர் அசோக்குமார் வரவேற்றார்.
மாவட்டச் செயலாளர் தூசி மோகன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராசன் ஆகியோர் முன்னில வகித்தனர். மாவட்ட ஆவின் தலைவரும் நகர மன்ற துணை தலைவருமான பாரிபாபு தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் ஆரணி எம்.எல்.ஏவுமான சேவூர் ராமசந்திரன் தலைமை கழக பேச்சாளர் சிங்கமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் பேசியதாவது:-
கடைக்கோடி தொண்டனும் அ.தி.மு.க.வில் அமைச்சராகலாம் அதே போல் நெசவாளராகிய என்னை எம்.எல்.ஏ சீட்டு கொடுத்து அமைச்சராக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா 2-வது முறை சீட்டு வழங்கியவர் எடப்பாடி பழனிசாமி ஆரணியில் இதே இடத்தில் பிரசாரம் செய்தபோது ஆரணியை மாவட்டமாக அறிவிக்கபடும் என்று வாக்குறுதி அளித்தார் அதே போல மீண்டும் விரைவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி மலர்ந்தவுடன் ஆரணியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கபடும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மதுபோதையில் விபரீதம்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி அடுத்த வடுகசாத்து கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 65), தொழிலாளி. இவர், மதுபோதையில் விஷம் குடித்ததாக தெரிகிறது.
மயங்கி கிடந்த முத்துவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேதபுரீஸ்வரர் பல்லக்கில் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
- ஏராளமானோர் சாமி தரிசனம்
செய்யாறு:
செய்யாறு டவுன், திருவத்தூரில் அமைந்துள்ள திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமான பால குஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவலில் நேற்று காலை மாசி மகத்தைெயாட்டி உற்சவமூர்த்தி களுக்கு சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனை நடைபெற்றது.
பின்னர் அலங்காரம் செய்யப்பட்ட உற்சவர்கள் பல்லக்கில் எழுந்தருளி கோவிலில் இருந்து மார்க்கெட் வழியாக ஆதி கேசவ பெருமாள் கோயில் தெரு, காந்தி சாலை, பஜார் வீதி, காஞ்சிபுரம் சாலை வழியாக புளியரம்பாக்கம், சிறிய வேலைய நல்லூர், வட எலப்பாக்கம், பெருங்களத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் சுவாமிக்கு மண்டக படி பூஜைகள் பக்தர்கள் நடத்தினர்.
பின்னர் பெருங்களத்தூரில் இரவு அப்பாவு தோப்பு குளக்கரையில் எழுந்தருளி சிறப்பு அலங்காரத்தில் பாலு குஜாம்பிகை வேதபுரீஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
- பவுர்ணமி இன்று இரவு 7.14 மணி வரை உள்ளது.
- போலீசார் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று மாலை 5.39 மணி அளவில் தொடங்கியது. இதனால் நேற்று மாலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். அதன் பின்னர் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. நள்ளிரவில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
முன்னதாக அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு தண்ணீர் வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர்.
திருவண்ணாமலை நகரில் உள்ள முக்கிய இணைப்பு சாலை பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத படி தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.
கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பவுர்ணமி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.14 மணி வரை இருந்ததால் இன்று காலை வரை விடிய, விடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
மேலும் போலீசார் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- தீர்த்தவாரிக்கு முன்பு அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
- இன்று சாமிக்கு மகுடாபிஷேக விழா நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இதில் கார்த்திகை தீபம், மகா சிவராத்திரி போன்றவை முக்கியமான நிகழ்ச்சிகளாகும்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழும் அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சிகளும் மிகவும் சிறப்பு மிக்கது.
அதன்படி தை மாதம் 5-ம் நாள் தென்பெண்ணையாற்றிலும், ரத சப்தமியன்று செய்யாற்றிலும், மாசிமகத்தன்று பள்ளிகொண்டாப்பட்டு கவுதம நதியிலும் அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.
மாசிமகம் நட்சத்திர தினமான நேற்று மாசிமக உற்சவ விழா திருவண்ணாமலை அருகே உள்ள பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதம நதியில் அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக நேற்று காலை சிறப்பு அலங்காரத்தில் சந்திரசேகரர் திருவடிவில் அருணாசலேஸ்வரர் அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் அவர் கோவிலில் இருந்து பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதமநதியில் தீர்த்தவாரிக்கு சென்றார். சாமி செல்லும் வழிநெடுகிலும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். அப்போது பக்தர்களுக்கு அன்னதானம், நீர், மோர் போன்றவை வழங்கப்பட்டது.
அருணாசலேஸ்வரர் கோவில் திருப்பணியில் பெரும் பங்காற்றியவர் வள்ளால மகாராஜா. இவர் குழந்தை பேறு இல்லாமல் தவித்த போது அருணாசலேஸ்வரரே குழந்தையாக தரிசனம் அளித்ததாக ஆன்மிக புராணங்கள் தெரிவிக்கிறது. எனவே சுகநதி ஆற்றங்கரையோரம் நடந்த போரில் உயிரிழந்த வள்ளால மகாராஜாவுக்கு ஆண்டு தோறும் மாசி மகத்தன்று பள்ளிகொண்டாப்பட்டு கவுதம நதிக்கரையில் அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து கவுதம நதியில் அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரியும் நடைபெறுவது வழக்கமாகும்.
அதன்படி நேற்று கவுதம நதிக்கரையில் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கவுதம நதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. தீர்த்தவாரி நடைபெறும் இடத்தை சுற்றி இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த இடத்தில் ஏராளமான போலீசார், தீயணைப்புத் துறையினர் மற்றும் கோவில் பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தீர்த்தவாரிக்கு முன்பு அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் சாமியின் சூல ரூபமான அஸ்திரதேவருக்கு கவுதம நதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. தீர்த்தவாரி முடிந்த பிறகு ஏராளமான பக்தர்கள் கவுதம நதியில் நீராடினர்.
மேலும் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்களும் கவுதம நதிக்கரையில் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். மேலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் வன்னிய குல ஷத்திரிய வல்லாள மகாராஜா மடாலய சங்க தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான த.வேணுகோபால், துணைத்தலைவர் அ.அ.ராஜமாணிக்கம், செயலாளர் ரா.காளிதாஸ், துணை செயலாளர் நா.லட்சுமணன், பொருளாளர் மா.பன்னீர்செல்வம், சட்ட ஆலோசகர் நா.இளங்கோவன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) கோவிலில் மாலை 6 மணிக்கு மேல் சாமிக்கு மகுடாபிஷேக விழா நடைபெற உள்ளது.
- உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் உள்ள மாற்றுத்தி றனாளி களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் கீழ்பென்னாத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
முகாமிற்கு, வட்டார வளமைய மேற்பார்வை யாளர் செல்வம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ராம் ராமச்சந்திரன் முகாமினை தொடங்கி வைத்தார்.
கீழ்பென்னாத்தூர் வட்டார கல்வி அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர் ஆகியோர் கலந்துகொண்டு முகாமினை பார்வையிட்டு ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கினார்கள்.
மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் 150 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
88-நபர்களுக்கு அடையாள அட்டைகளை மருத்து வர்கள் வழங்கினார்கள். 9-மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் மாவட்டமாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் வழங்கப்பட்டது.
வட்டார சிறப்பு பயிற்றுநர்கள், இயல் முறை வல்லுநர்கள் முகாமிற்கு வந்த மாற்று திறனாளிகளுக்கு உதவி புரிந்தனர்.
- ைகதான 5-வது நபர் ஜெயிலில் அடைப்பு
- ரூ.2 லட்சம், கார் பறிமுதல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களை கொள்ளை யடித்துச் சென்ற வழக்கில் இதுவரை 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பலரை தனிப்படை போலீசார் அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முகாமிட்டு தேடி வருகின்றனர். எனினும் மற்ற குற்றவாளி களை பிடிக்க முடியவில்லை. ரூ.69 லட்சம் வரை பணமும் மீட்கப்படாமல் உள்ளது.
இந்த நிலையில் கோலார் பகுதியில் இருந்து நிஜாமுதீன் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். நேற்று விசாரணை 4-வது நாளாக நடந்தது.
விசாரணையின் முடிவில் அவரிடம் இருந்து ரூ.2 லட்சம், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கொள்ளை சம்ப வத்திற்கு நிஜாமுதீன் தான் மூளையாக செயல்பட்டதாக போலீசார் கூறினர்.
அவரை போலீசார் நேற்று கைது செய்து, வேலூர் ஜெயிலில் அடைத்தனர். நடவ டிக்கையில் ஈடுபட்டனர். ஏ.டி.எம். கொள்ளையில் 5 பேர் கைதான பிறகும் பணத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அரியானாவில் தனிப்ப டையினர் வேட்டையில் கும்பல் சிக்கினால் மட்டுமே முழுமையாக பணத்தை மீட்க முடியும்.
மேலும் கொள்ளை போன ரூ.67 லட்சத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
- அதிகாரிகள் ஆய்வு
- திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியம் எலத்தூர் கிராமத்தில் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் மாசிமகம் திருவிழா நடத்துவதற்காக பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வந்தது. இதனையொட்டி அருகில் தீர்த்தவாரி நடைபெறும் செய்யாற்றில் பொக்லைன் எந்திரம் கொண்டு சமன் செய்யப்பட்டது. அப்போது அங்கு மண்ணில் பெரிய பெரிய கற்கள் சிக்கி உள்ளன. அதன்பிறகு சிறிது தூரத்தில் பக்கவாட்டில் தோண்டிய போது பழமையான செங்கல் சுவர் இருப்பது தெரியவந்தது. உடனடியாக பொக்லைன் எந்திரத்தின் பணி நிறுத்தப்பட்டது.
அந்த இடத்தில் பழமை வாய்ந்த கோவில் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்று கருதப்பட்டதால் அதுகுறித்து வருவாய்த்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) வருவாய்த்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் நேரில் வந்து பார்த்து ஆய்வு செய்ய உள்ளதாகவும், அதன்பிறகே அந்த இடத்தை தோண்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
இது பற்றி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்:-
எலத்தூர் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் பல ஆண்டுகளாக திருவிழாக்கள் நடத்தப்படாமல் இருந்து வந்தது. தற்போது இந்த ஆண்டு திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் செய்யாற்றின் கரை ஓரம் சமன் செய்தபோது அங்கு கற்கள் இருப்பது தென்பட்டது.
மேலும் கோவிலின் மேல் மட்டம் இருப்பது போன்றும், பக்கவாட்டில் அந்த காலத்தில் கட்டப்பட்ட செங்கல் சுவர்கள் இருப்பது போன்றும் தெரியவந்தது. உடனடியாக வருவாய்த்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தோம். அவர்கள் முன்னிலையில் இதை சுற்றி பள்ளம் எடுத்து பார்த்தால் தான் கோவில் உள்ளதா என்பது தெரியும்.
இச்சம்பவம் கிராமத்து பொது மக்களிடையே ஒரு பரவசத்தை ஏற்படுத்தி உள்ளது என்றார்.
- புதுப்பாளையம் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
செங்கம்:
செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது.
ஒன்றியக் குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா முன்னிலை வகித்தார்.
புதுப்பாளையம் யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படுத்த வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் செலவினங்கள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்வில் ஒன்றிய கவுன்சிலர் பொன்னி, பாரதிதாசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராயர், உள்பட ஒன்றிய கவுன்சிலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் தீர்மானங்களை அலுவலர் ரவி வாசித்தார்.






