என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • மக்கள் வேலை மற்றும் மருத்துவ தேவைகளுக்கு ஆந்திர மாநிலம் இல்லத்தூர் எல்லை வழியாக விஜயபுரத்திற்கு சென்று வருகின்றனர்.
    • துணை போலீஸ் சூப்பிரண்டிடம் அரும்பாக்கம் கிராமமக்கள் கோரிக்கை மனு அளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    திருவள்ளூர்:

    திருத்தணி அருகே ஆந்திர எல்லையை ஒட்டி உள்ளது அரும்பாக்கம் ஊராட்சி. இந்த கிராம மக்கள் வேலை மற்றும் மருத்துவ தேவைகளுக்கு ஆந்திர மாநிலம் இல்லத்தூர் எல்லை வழியாக விஜயபுரத்திற்கு சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் தமிழக எல்லையில் உள்ள அரும்பாக்கம் ஏரியில் இரவு நேரங்களில் ஆந்திராவை சேர்ந்த மர்ம கும்பல் கள்ளச்சாராயம் காய்ச்சி தமிழக எல்லைப் பகுதியில் விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டிடம் அரும்பாக்கம் கிராமமக்கள் கோரிக்கை மனு அளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • டிராக்டரின் பின்பக்க டயரில் சிக்கிய முதியவர் ரவி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் பத்தியால் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது60). கூலித் தொழிலாளி. இவர் டிராக்டரில் எம்சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு டிரைவர் இருக்கையின் அருகில் அமர்ந்து பயணம் செய்தார். காக்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது ஈக்காடு அருகே உள்ள வளைவில் டிராக்டரை டிரைவர் வேகமாக திருப்பினார்.

    அப்போது அங்குள்ள வேகத்தடையில் டிராக்டர் ஏறி இறங்கியதில் நிலைதடுமாறிய ரவி தவறி கீழே விழுந்தார். இதில் டிராக்டரின் பின்பக்க டயரில் சிக்கிய முதியவர் ரவி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் புல்லரம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து ரவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து நடந்ததும் டிராக்டர் ஓட்டிவந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கனரக வாகன போக்குவரத்தை பஜார் வீதியில் கட்டுப்படுத்த வேண்டும்.
    • வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வியாபாரிகளிடையே கலந்தாலோசனை காவல்துறை சார்பில் காவல் ஆய்வாளர் காளிராஜ் தலைமையில்காவல் நிலையத்தில் நடைபெற்றது.

    இதில் சமீப காலங்களாக சைபர் கிரைம் குற்றங்கள் பெருமளவில் நடைபெற்று வருவதால் குறிப்பாக அலைபேசியில் 91140என்ற எண்ணில் துவங்கி நமக்கு அழைப்பு வந்தால் அதனை நாம் தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் இதனால் நமது வங்கிக் கணக்குகளில் உள்ள பணங்கள் திருடப்படுவதாகவும் பல குற்றச்சாட்டுகள் காவல் நிலையத்திற்கு வருவதால் வியாபாரிகளும் பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் பட்டாசு லைசென்ஸ் இல்லாத கடைகள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் , கஞ்சா விற்பனை செய்தல் குறித்த தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் கடைகளில் மாமூல் கேட்டு மிரட்டினால் காவல் நிலையம் மற்றும் செல்போனிற்கு தகவல் கொடுத்தால் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனை நடைபெற்றது.

    பின்னர் வியாபாரிகள் தெரிவித்ததாவது பண்டிகை காலங்களில் மீஞ்சூர் பஜார் வீதியில் பொதுமக்கள்கூட்டம் அதிகம் காணப்படுவதால் காலை மாலை இரவு நேரங்களில் பஜார் வீதியில் போலீசின் கண்காணிப்பு ரோந்து பணிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கனரக வாகன போக்குவரத்தை பஜார் வீதியில் கட்டுப்படுத்த வேண்டும்.

    மீஞ்சூர்ரயில் நிலையத்திற்கு அருகில் அரியன் வாயல் பகுதியில் உள்ள பேருந்து மற்றும் ஆட்டோ நிறுத்துமிடங்களை அரியன் வாயில் அரசு பள்ளிக்கூடத்திற்கு எதிரில் மாற்றி அமைக்க வேண்டும் எனவும் இதனால் ரெயில் பயணிகள் மாணவ மாணவியர்கள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பயணிக்க இயலும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    மேலும் வியாபாரிகள் அனைவரும் தங்கள் கடைகளில் வெளிப்புறத்தையும் இணைக்கும் விதமாக கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மீஞ்சூர் பஜார் வீதியில் உள்ள புறக்காவல் நிலையத்தில் காவலர்கள் அமர்ந்து ஒலிபெருக்கியில் விழிப்புணர்வு ஏற்படுத்த கூட்டத்தில்முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆய்வாளர் காளிராஜ் தெரிவித்தார் இந்த கூட்டத்தில் மீஞ்சூர் அத்திப்பட்டு கவுண்டர்பாளையம் பட்ட மந்திரி நந்தியம்பாக்கம் ரமணா நகர் நாலூர் கேசவபுரம் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கிரைம் ஆய்வாளர் சுதாகர், மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்கம் ஷேக் அகமது துணைத் தலைவர் அலெக்சாண்டர் மற்றும் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.34 கோடி செலவில் கால்வாய் அமைக்கும் பணி ஜனவரி மாதம் தொடங்கும்.
    • தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றனர்.

    பூந்தமல்லி:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கனஅடி ஆகும். தற்போது ஏரியில் 3,123 மில்லின் கனஅடி தண்ணீர் உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு மழைநீர் மற்றும் பூண்டிஏரியில் இருந்து வரும் கிருஷ்ணா தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும் போது திறக்கப்படும் உபரி நீர் சிறுகளத்தூர், குன்றத்தூர், வழுதிளம்பேடு, திருநீர் மலை வழியாக அடையாறு ஆற்றில் வீணாக கலந்து வருகிறது.

    சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது மாங்காடு அருகே உள்ள சிக்கராயபுரத்தில் கைவிடப்பட்ட கல்குவாரிகளில் தேங்கிய தண்ணீர் சுத்திகரித்து குடிநீர் தேவைக்கு அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து கல்குவாரியில் தேங்கி இருக்கும் தண்ணீர் அனைத்தையும் சென்னை குடிநீர் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் போது தண்ணீர் வீணாக அடையாறு ஆற்றில் கலப்பதை தடுத்து அதனை கல்குவாரி குட்டையில் சேமிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதற்காக உபரிநீர் செல்லும் பாதையில் காவனூர் அருகில் இருந்து கல்குவாரிக்கு தனியாக கால்வாய் அமைக்கும் பணி ரூ. 34 கோடி செலவில் அமைய இருக்கிறது. இதற்கான டெண்டர் விரைவில் விடப்பட இருக்கிறது. இதன் பின்னர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் காவனூர் அருகே செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீரை சிக்கராயபுரம் கல்குவாரி பகுதிக்கு கொண்டு செல்ல சுமார் 2 கி.மீட்டர் தூரத்துக்கு கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்படும்.

    கடந்த மாதம் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை(மொத்த உயரம் 24 அடி) தாண்டியதை அடுத்து ஏரியில் இருந்து 100 கனஅடி உபரி நீர் வீணாக அடையாறு ஆற்றில் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரை சிக்கராயபுரத்தில் உள்ள கைவிடப்பட்ட கல்குவாரிகளுக்கு கொண்டு செல்ல 2 கி.மீ., நீளத்துக்கு கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ரூ.34 கோடி செலவில் கால்வாய் அமைக்கும் பணி ஜனவரி மாதம் தொடங்கும். 250 கனஅடிதண்ணீரை கால்வாய் வழியாக சுமார் 20 நாட்களுக்கு அனுப்பினால் குவாரிகளில் 500 மில்லியன் கனஅடி சேமிக்க முடியும்.

    ஏற்கனவே தண்ணீர் நிரம்பிய குவாரிகளில் இருந்து சென்னை மெட்ரோ வாட்டர் தினமும் சுமார் 10 மில்லியன் லிட்டர் நீரை குடிநீருக்கு எடுத்து வருகிறது. குவாரிகளில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல 3.5 கி.மீட்டர் நீளமுள்ள குழாய் சமீபத்தில் பதிக்கப்பட்டு உள்ளன.

    செம்பரம்பாக்கம் உபரி நீர், கல்குவாரிக்கு திருப்பி விடப்படுவதால் வெள்ள பாதிப்பும் குறையும். தற்போது குவாரிகளில் 300 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள புலிப்பாக்கம் மற்றும் கேளம்பாக்கம் பகுதியில் உள்ள குவாரிகளை குடிநீருக்கு பயன்படுத்து வதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து வருகிறோம். பம்மல் மற்றும் பல்லாவரம் பகுதியில் உள்ள குவாரிகளில் இருந்து பெறப்படும் தண்ணீர், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றனர்.

    • திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.
    • வேனில் 5 டன் ரேசன் அரிசி ஆந்திராவுக்கு கடத்தி செல்வது தெரிந்தது.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்ன ஒபுளாபுரம் கிராமம் அருகே உள்ள சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டு இருந்தது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது வேனில் 5 டன் ரேசன் அரிசி ஆந்திராவுக்கு கடத்தி செல்வது தெரிந்தது. இதற்கிடையே காயமடைந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். போலீசார் ரேசன் அரிசியுடன் வேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • இதயத்துடிப்பு போன்ற பல பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது.

    சென்னை அம்பத்தூரில் உள்ள அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சென்னை சேத்துப்பட்டு அரிமா சங்கம் மற்றும் அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் இருதயநோய் மருத்துவம், புற்றுநோய் விழிப்புணர்வு முகாம், பல் பரிசோதனை, கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், ஈ.சி.ஜி., சர்க்கரை அளவு, இதயத்துடிப்பு கண்டறிதல், எலும்பு தேய்மானம் போன்ற இலவச பரிசோதனைகள் செய்யப்பட்டது. அப்பல்லோ மருத்துவ மனையில் இருந்து மருத்துவர்கள் வருகை புரிந்து இருதய பிரச்சினை உள்ள நபர்களை கண்டறிந்து அவர்களுக்கான அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் இருந்து மருத்துவர்கள் வருகை புரிந்து 300-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய் கண்டறிந்து ஆலோசனையும் வழங்கப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், ஈ.சி.ஜி., சர்க்கரை அளவு, இதயத்துடிப்பு போன்ற பல பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது. மாணவர்கள் தன்னார்வத்துடன் ரத்த தானம் வழங்கினர்.

    இதில் சிறப்பு விருந்தினர்களாக அரிமா சங்க மாவட்ட ஆளுனர் ராஜேஷ் என்.தவே, முன்னாள் சர்வதேச இயக்குனர் சம்பத், வழி காட்டி மற்றும் மெகா கவர்னரும், ஆலோசகரும், சி.இ.ஓ.வுமான என்.ஆர்.தனபாலன், கல்லூரி முதல்வர் இனிதா லீபனோன் எபன்சி பங்கேற்றனர். இதில் 1000-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • தப்பி ஓடிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    பூந்தமல்லி அருகே உள்ள கோலப்பஞ்சேரி பகுதியில் வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் லாரன்ஸ் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கோலப்பஞ்சேரி கூட்டுறவு வங்கி அருகே உள்ள முட்புதரில் சந்தேகப்படும்படி 6 பேர் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களில் 2 பேரை மடக்கி பிடித்தனர். மற்ற 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

    விசாரணையில் பிடிபட்ட வாலிபர்கள் திருமழிசை உடையார் கோவில் பகுதியை சேர்ந்த வேலன் (22), மணிமாறன்(21) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கூட்டுறவு வங்கியில் கொள்ளை அடிக்க வந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் குற்ற செயலில் ஈடுபட திட்டமிட்டு இருந்தனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.

    • முகாமை பொன்னேரி முன்னாள் எம். எல். ஏ. சிறுனியம் பலராமன் துவக்கி வைத்தார்.
    • பல்வேறு நோய்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    பொன்னேரி:

    பொன்னேரி நகர அனைத்து வியாபாரி கள் சங்கம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட் சிட்டி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனை இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் பொன்னேரியில் வியாபாரிகள் சங்க தலைவர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொது மருத்துவம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இ.சி.ஜி., பெண்கள், குழந்தைகளுக்கான மருத்துவம், கண், மூக்கு, காது, தொண்டை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    முகாமை பொன்னேரி முன்னாள் எம். எல். ஏ. சிறுனியம் பலராமன் துவக்கி வைத்தார். முகாமில் பொது செயலாளர் அப்துல் காதர், பொருளாளர் பிரகாஷ் சர்மா, மருத்துவமனை துணைவேந்தர் டாக்டர் நாராயண பாபு, மருத்துவ கண்காணிப்பாளர் முனியப்பன் , பொன்னேரி காவல் ஆய்வாளர் வடிவேலு முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிகிச்சை பலனின்றி சசிகலா பரிதாபமாக இறந்தார்.
    • கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருத்தணி:

    திருத்தணி அருகே உள்ள கனகம்மாசத்திரம், பாளையக்கார தெருவை சேர்ந்தவர் சசிகலா (வயது33). இவருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். சசிகலா கணவரை பிரிந்து குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் திருத்தணி காந்தி ரோடு பகுதியில் கழுத்து அறுபட்ட நிலையில் சசிகலா உயிருக்கு போராடியபடி கிடந்தார். அவரது உடல் முழுவதும் கத்திக்குத்து காயமும் இருந்தது.

    உடனடியாக அவரை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சசிகலா பரிதாபமாக இறந்தார். விசாரணையில் கள்ளக்காதலில் சசிகலா கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. இது தொடர்பாக முத்து கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும் சசிகலாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தோம். சம்பவத்தன்று இருவரும் சேர்ந்து இருந்தபோது எனக்கு கடன் பிரச்சினை இருந்ததால் ரூ.2 ½ லட்சம் பணம் கேட்டேன். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்தார். இதனால் சசிகலா அணிந்து இருந்த நகையை பறிக்க முயன்றபோது என்னை தாக்கி தள்ளிவிட்டார். கோபம் அடைந்த நான் அவரது கழுத்தை கத்தியால் அறுத்தும், சரமாரியாக குத்தியும் விட்டு தப்பி ஓடிவிட்டேன். இதில் பலத்த காயம் அடைந்த சசிகலா இறந்து போனார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நாயிடமிருந்து குழந்தையை காப்பாற்ற வந்த தாத்தாவையும் நாய் கடித்துள்ளது.
    • தெருவில் சுற்றித் திரியும் நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து செல்ல வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் பெரியார் நகர் விவேகானந்தர் தெருவில் தேவி என்ற பெண் தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையை தூக்கி கொண்டு வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த தெரு நாய் ஒன்று திடீரென குழந்தை மீது பாய்ந்து குழந்தையின் முகத்தில் கடித்து குதறி உள்ளது.

    நாயிடமிருந்து குழந்தையை காப்பாற்ற வந்த தாத்தாவையும் நாய் கடித்துள்ளது. அது மட்டுமில்லாமல் அதே பகுதியில் நான்கு பேரை அந்த நாய் கடித்துள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    காயமடைந்த குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதியில் ரெட்டமலை சீனிவாசன் தெரு, ஒத்தவாடை தெரு உள்ளிட்ட இடங்களில் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் உள்ளதாகவும் அந்த தெரு நாய்கள் கடித்து விடும் என்ற அச்சத்துடனே அந்த பகுதி மக்கள் வாழ்ந்து வருவதாகவும் மாநகராட்சிக்கு புகார் அளித்தால் ஊழியர்கள் வந்து நாயை பிடித்து சென்று திரும்பவும் அந்த பகுதியிலேயே விட்டு விடுவதாகவும் தெருவில் சுற்றித் திரியும் நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து செல்ல வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியின் வளர்ச்சி பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
    • மழை நீரை அகற்றுவதற்கு கூடுதலாக ஜேசிபி இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமையில், செயல் அலுவலர் வெற்றியரசு, துணைத்தலைவர் அலெக்சாண்டர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியின் வளர்ச்சி பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள், பருவமழை தொடங்குவதற்கு முன்பு தண்ணீர் தேங்கும் தெருக்களை ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் கொசு உற்பத்தியாகி நோய்கள் அதிகமாக பரவுவதற்கு வழிவகை உள்ளதாகவும், மழை நீரை அகற்றுவதற்கு கூடுதலாக ஜேசிபி இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கைகளை தெரிவித்தனர்.

    • தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நியமனம் செய்து அறிவித்துள்ளார்.
    • காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    பூந்தமல்லி:

    திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளை மாவட்ட தலைவர் வீராபுரம் லயன் ஆர்.எம்.தாஸ் பரிந்துரையின் பேரில் காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் டாக்டர் கே.ஜெயக்குமார் எம்.பி ஒப்புதலுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நியமனம் செய்து அறிவித்துள்ளார்.

    அதன்படி திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவராக திருவேற்காடு ஜி.ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    ×