என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • திருவேற்காடு நகராட்சியில் நகர்மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி தலைமையில் தீவிர தூய்மைப் பணி நடைபெற்றது.
    • திருவேற்காடு நகராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு.

    பூந்தமல்லி:

    திருவேற்காடு நகராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    திருவேற்காடு நகராட்சியில் நகர்மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி தலைமையில் தீவிர தூய்மைப் பணி நடைபெற்றது. இதற்காக பேருந்து நிலையம், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பொது இடங்களில் இருந்த பேனர்கள், சுவரொட்டிகளை அகற்றி தூய்மை செய்யப்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளில் மரம் நடுதல், வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரசாரம், நடமாடும் வாகனம் மூலம் இயற்கை உரம் விற்பனை, தெருக்கூத்து நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழிப்புணர்வு மெகா கோலம் வரையப்பட்டு உறுதிமொழி வாசிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் நகர்மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி, நகர்மன்ற துணைத்தலைவர் ஆனந்திரமேஷ், நகராட்சி ஆணையர் ரமேஷ், பொறியாளர் குமார், சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள், குடியிருப்போர் நகர்நலச் சங்க நிர்வாகிகள், நகராட்சி பணியாளர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஏராளமான பக்தர்கள் மொட்டையடித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
    • முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீப ஆராதனைகள் நடைபெற்றன.

    வைகாசி விசாகம் விழாவையொட்டி அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருத்தணிகோவிலில் வைகாசி விழா வழிபாட்டு க்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டத்தால் மலைக்கோவில் நிரம்பி வழிந்தது. அரோகரா கோஷமிட்டபடி அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ஏராளமான பக்தர்கள் மொட்டையடித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 2 மணிநேரத்துக்கும மேல் ஆனது.

    திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற கந்தசுவாமி கோயிலில் இன்று வைகாசி விசாக பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை நடை திறக்கப்பட்டதும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்

    வைகாசி விசாகத்தை யொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு மொட்டையடித்து சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த கோவிலை கடந்த 17-ஆம் நூற்றாண்டு ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள் கட்டிய தாக வரலாறு உள்ளது. அவர், திருப்போரூரில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கண்ணகப்பட்டு என்ற இடத்தில் மடம் ஒன்றை நிறுவி அங்கிருந்தபடியே மடாதிபதியாக விளங்கி முருகப்பெருமானை நித்திய வழிபாடு செய்து வந்தார்.

    பின்னர் ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள் வைகாசி விசாக நாளில் இறைவனோடு ஜோதிமயமாக இரண்டறக் கலந்ததாக கூறப்படுகிறது. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் விசாகத்தில் கண்ணகப்பட்டில் உள்ள சிதம்பர சுவாமிகள் மடத்திலும் குருபூஜை பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

    அதன்படி மடத்தில் உள்ள சிதம்பர சுவாமிகள் சன்னிதியில் மகா அபிஷேகம், சிறப்பு அலங்கார தீப ஆராதனை கள் நடைபெற்றது.

    இதே போல் கந்தசாமி திருக்கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ள சிதம்பர சுவாமிகள் சந்நிதியிலும் அபிஷேகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் செவ்வாய்க் கிழமை, வியாழக்கிழமை ஆகிய நாட்களில் தொடர்ந்து 6 வாரங்கள் வழிபாடு செய்தால் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை ஆகும்.

    மேலும் ஆடி கிருத்திகை, வைகாசி விசாகம் உள்ளிட்ட முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களில் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.இந்த நிலையில்இன்று வைகாசி விசாகம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 8 மணி வரை தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இதேபோல் வல்லக்கோட்டை முருகன் கோவிலிலும் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. முருகப்பெருமானுக்கு காலை சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரா கிராமகள், வெளி மாவட்டம், வெளி மாநிலத்தில் இருந்து திரளானா பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வழிபட்டனர்.

    பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிர மணியசுவாமி கோயில் மற்றும் பெரும்பேடு முத்துக் குமாரசாமி கோவிலில் பிரதோஷம் மற்றும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வைகாசி விசாகத்தை யொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.

    • ஜெயக்குமார் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.
    • வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் நகை-பணத்தை அள்ளி சென்று உள்ளனர்.

    பூந்தமல்லி:

    மாங்காடு அடுத்த முகலிவாக்கம். குருசாமி நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் நேற்று முன்தினம் பெங்களூரில் உள்ள உறவினர் விட்டிற்கு சென்று விட்டனர்.

    இந்தநிலையில் ஜெயக்குமார் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். பின்னர் இரவு வீட்டுக்கு திரும்பி வந்த போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 60 பவுன் நகைகள் மற்றும் பணம் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் நகை-பணத்தை அள்ளி சென்று உள்ளனர். இதுகுறித்து மாங்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமாரக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    • மது போதையில் தள்ளாடிக் கொண்டு வந்ததால் டிக்கெட் கொடுக்க முடியாது என தியேட்டர் நிர்வாகம் அனுப்பி வைத்து உள்ளது.
    • தியேட்டரையும், அடித்து நொறுக்கினார்கள். இதனால் திரையரங்கில் கலவரம் போல் காணப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் தேரடி அருகே உள்ள ஒரு தியேட்டரில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

    இந்த திரையரங்கில் மது அருந்திவிட்டு வரும் நபர்களுக்கு டிக்கெட் விநியோகிப்பது இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ஒரு சிலர் மது அருந்திவிட்டு வந்து டிக்கெட் கேட்டுள்ளனர்.

    அவர்கள் மது போதையில் தள்ளாடிக் கொண்டு வந்ததால் டிக்கெட் கொடுக்க முடியாது என தியேட்டர் நிர்வாகம் அனுப்பி வைத்து உள்ளது.

    இதனால் ஆத்திரம் அடைந்த 10 பேர் கொண்ட கும்பல் திரையரங்கில் புகுந்து பணிபுரியும் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் பேசி பலமாக தாக்கினர். தியேட்டரையும், அடித்து நொறுக்கினார்கள். இதனால் திரையரங்கில் கலவரம் போல் காணப்பட்டது.

    இது குறித்து திரையரங்கு மேலாளர் டி.என்.அரசு திருவள்ளூர் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் மேற்பார்வையில் திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி வழக்குப்பதிவு செய்து திரையரங்கை அடித்து நொறுக்கி தாக்கு தலில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகிறார்.

    தியேட்டரை அடித்து நொறுக்கியதுடன் ஊழியர்களை தாக்கிய சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகியுள்ளது.

    • மணிமாறன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஹாலில் தூங்கச் சென்றார். வீட்டின் படுக்கை அறையில் தீபக்கும், விக்னேசும் தூங்கச் சென்றனர்.
    • இறந்த பள்ளி மாணவன் தீபக் உடலை மீட்டு அதனை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பூந்தமல்லி:

    சென்னை திருவொற்றியூர் விம்கோ நகர் 3- வது மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரகாசம். இவரது மகன் தீபக் (15) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

    பள்ளி விடுமுறை என்பதால் தீபக், தனது தம்பி விக்னேசுடன், கடந்த வாரம் குன்றத்தூர் மணிகண்டன் நகர், இந்திராகாந்தி தெருவில் உள்ள தனது பெரியப்பா மணிமாறன் வீட்டிற்கு வந்தான்.

    நேற்று இரவு மணிமாறன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஹாலில் தூங்கச் சென்றார். வீட்டின் படுக்கை அறையில் தீபக்கும், விக்னேசும் தூங்கச் சென்றனர்.

    இரவு திடீரென மணிமாறன் எழுந்து, படுக்கையறைக்கு சென்று பார்த்த போது, அங்கு குழந்தைகள் தூங்குவதற்காக சேலையால் கட்டி வைத்திருந்த தொட்டிலில், கழுத்து இறுக்கிய நிலையில் தீபக் தொங்கிக் கொண்டிருந்தான்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மணிமாறன், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து பார்த்து விட்டு, தீபக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்த பள்ளி மாணவன் தீபக் உடலை மீட்டு அதனை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • 60 வயதை கடந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்கவேண்டும்.
    • திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறோம்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கம் சார்பில் 50-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறோம். எங்களுக்கு மதிப்பூதியத்திலிருந்து காலமுறை ஊதியம் மாற்றி அமைக்க வேண்டும். பணப்பலன், பணி தொடர்ச்சி ஆகியவை திரும்பப் பெறவேண்டும். 60 வயதை கடந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்கவேண்டும். இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டரிடம் முறையிட வந்தோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    பின்னர் அவர்கள் தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகி பாபு தலைமையில், மாவட்ட தலைவர்கள் தயாளன், மணிவண்ணன், பன்னீர் செல்வம், சீனிவாசன், பாஸ்கரன் ஆகியோர் புகார் மனுவை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    • தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கம் சார்பில் 50-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டம்.
    • திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறோம்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கம் சார்பில் 50-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறோம்.எங்களுக்கு மதிப்பூதியத்திலிருந்து காலமுறை ஊதியம் மாற்றி அமைக்க வேண்டும்.பணப்பலன், பணிதொடர்ச்சி ஆகியவை திரும்பப் பெறவேண்டும்.60 வயதை கடந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்கவேண்டும். இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டரிடம் முறையிட வந்ததாக தெரிவித்தனர்.பின்னர் அவர்கள் தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகி பாபு தலைமையில், மாவட்ட தலைவர்கள் தயாளன், மணிவண்ணன், பன்னீர்செல்வம்,சீனிவாசன், பாஸ்கரன் ஆகியோர் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்..

    • சாலை வசதி, மின் விளக்கு வசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்.
    • மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் திருத்தணி தொகுதி எம்.எல்.ஏ எஸ்.சந்திரன் தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக் கோரி ஒரு மனு கொடுத்தார். அதன் விவரம் வருமாறு:-

    திருத்தணி தொகுதிக்குட்பட்ட உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி தரக்கோரியும், பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட நபார்டு உலக வங்கி நிதி உதவி மூலம் நிதி ஒதுக்கீடு செய்து தரக் கோரியும், தொகுதியில் பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் கல் குவாரிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், இருளர் இன மக்களுக்கு பட்டா வழங்க வேண்டியும், பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர கோரியும் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வசதி, சாலை வசதி, மின் விளக்கு வசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    • அரசு பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை காலையில் சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
    • 1 முதல் பிளஸ் 2 வரை தமிழ் வழியில் கல்வி பயில்வோருக்கு 20 சதவீதம் அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்,

    இந்த விழிப்புணர்வு பேரணியில் 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, காமராஜர் சிலை அருகே நிறைவு அடைத்தனர்.

    இதில் பங்கேற்றோர் மாணவ-மாணவிகள் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பதாதைகளை ஏந்திச் சென்றனர்.

    இந்த விழிப்புணர்வு பேரணி போது மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறியதாவது:-

    தற்போது அரசு பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை காலையில் சிற்றுண்டி வழங்கப்படுகிறது. 1 முதல் பிளஸ் 2 வரை தமிழ் வழியில் கல்வி பயில்வோருக்கு 20 சதவீதம் அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. பெண் கல்வி இடைநிற்றலை தடுக்க, அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

    இதுபோல் பல திட்டங்களை அரசு வழங்குகிறது. பெற்றோர்கள் தவறாமல் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்து திட்டங்களை பெற்று பட்ட மேற்படிப்பு வரை படிக்க வைக்க வேண்டும் என கூறினார்.

    இந்த பேரணியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன், மாவட்டக் கல்வி அலுவலர் எல்லப்பன், திருவள்ளூர் நகர மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன், நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி, நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், வட்டார கல்வி அலுவலர் குருநாதன், பூவராகவன், பாபு, பள்ளி துணை ஆய்வாளர் சவுத்ரி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நடராஜ், பத்மஸ்ரீ பபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கவிதா திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
    • பொன்னேரி அருகே உள்ள சின்னகாவனம் அழகு நிலையத்திற்கு சென்ற கவிதா திரும்பி வீட்டிற்கு வரவில்லை.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த சின்னகாவனம் தலையாரி பாளையத்தை சேர்ந்தவர் கவிதா (வயது 22). இவர் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் பொன்னேரி அருகே உள்ள சின்னகாவனம் அழகு நிலையத்திற்கு சென்ற கவிதா திரும்பி வீட்டிற்கு வரவில்லை. இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பகுதியை சேர்ந்த முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் க. சுந்தரம் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
    • அவரிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் செல்போனில் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்து கேட்டறிந்தார்.

    பொன்னேரி:

    பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பகுதியை சேர்ந்த முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் க. சுந்தரம் (74) உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

    அவரிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் செல்போனில் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்து கேட்டறிந்தார். அப்போது பால்வளத்துறை அமைச்சர் சா.மு நாசர் பொன்னேரி நகர மன்ற தலைவர் பரிமளம், டிஜேஎஸ் கோவிந்தராஜன் எம்எல்ஏ, தமிழ் உதயன் மற்றும் பலர் உடன் இருந்தனர்

    • மொன்னவேடு-ராஜபாளையம் ஆகிய 2 கிராமங்களையும் இணைக்கும் விதமாக கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கடந்த 2020-ம் ஆண்டு சுமார் 13.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது.
    • பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்கள் இறையூர், மொன்னவேடு, மெய்யூர், ராஜபாளையம்.

    இந்த கிராமங்களுக்கு இடையே கொசஸ்தலை ஆறு ஓடுகிறது. இப்பகுதி மக்கள் கொசஸ்தலை ஆற்றை கடந்து தான் மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும். மேலும் அங்கிருந்த தரைப்பாலம் கடந்த 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தின் போது சேதமடைந்தது.

    இதையடுத்து அப்பகுதியில் தற்காலிக பாலம் அமைத்து கிராமமக்கள் பயன்படுத்தி வந்தனர். கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் போது இறையூர், மொன்னவேடு உள்ளிட்ட கிராமமக்கள் சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றி செல்லும்நிலை உள்ளது.

    இந்த நிலையில் மொன்னவேடு-ராஜபாளையம் ஆகிய 2 கிராமங்களையும் இணைக்கும் விதமாக கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கடந்த 2020-ம் ஆண்டு சுமார் 13.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது.

    இந்த பாலம் கட்டும் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறும் பணிகள் இன்னும் முடியவில்லை. இதனால் பள்ளி மாணவிகளும், பொதுமக்களும் ஆற்றுக்குள் இறங்கி செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது.

    மேலும் கட்டுமானப்பணிகள் நடைபெறுவதால் பாலத்தின் ஓரத்தில் ஆற்றுக்குள் கிடக்கும் இரும்பு கம்பிகள் குத்தி பலர் காயம் அடைவதாகவும், வாகனங்கள் பழுது ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

    எனவே பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×