search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வைகாசி விசாகம்: முருகன் ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
    X

    வைகாசி விசாகம்: முருகன் ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

    • ஏராளமான பக்தர்கள் மொட்டையடித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
    • முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீப ஆராதனைகள் நடைபெற்றன.

    வைகாசி விசாகம் விழாவையொட்டி அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருத்தணிகோவிலில் வைகாசி விழா வழிபாட்டு க்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டத்தால் மலைக்கோவில் நிரம்பி வழிந்தது. அரோகரா கோஷமிட்டபடி அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ஏராளமான பக்தர்கள் மொட்டையடித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 2 மணிநேரத்துக்கும மேல் ஆனது.

    திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற கந்தசுவாமி கோயிலில் இன்று வைகாசி விசாக பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை நடை திறக்கப்பட்டதும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்

    வைகாசி விசாகத்தை யொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு மொட்டையடித்து சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த கோவிலை கடந்த 17-ஆம் நூற்றாண்டு ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள் கட்டிய தாக வரலாறு உள்ளது. அவர், திருப்போரூரில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கண்ணகப்பட்டு என்ற இடத்தில் மடம் ஒன்றை நிறுவி அங்கிருந்தபடியே மடாதிபதியாக விளங்கி முருகப்பெருமானை நித்திய வழிபாடு செய்து வந்தார்.

    பின்னர் ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள் வைகாசி விசாக நாளில் இறைவனோடு ஜோதிமயமாக இரண்டறக் கலந்ததாக கூறப்படுகிறது. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் விசாகத்தில் கண்ணகப்பட்டில் உள்ள சிதம்பர சுவாமிகள் மடத்திலும் குருபூஜை பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

    அதன்படி மடத்தில் உள்ள சிதம்பர சுவாமிகள் சன்னிதியில் மகா அபிஷேகம், சிறப்பு அலங்கார தீப ஆராதனை கள் நடைபெற்றது.

    இதே போல் கந்தசாமி திருக்கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ள சிதம்பர சுவாமிகள் சந்நிதியிலும் அபிஷேகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் செவ்வாய்க் கிழமை, வியாழக்கிழமை ஆகிய நாட்களில் தொடர்ந்து 6 வாரங்கள் வழிபாடு செய்தால் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை ஆகும்.

    மேலும் ஆடி கிருத்திகை, வைகாசி விசாகம் உள்ளிட்ட முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களில் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.இந்த நிலையில்இன்று வைகாசி விசாகம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 8 மணி வரை தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இதேபோல் வல்லக்கோட்டை முருகன் கோவிலிலும் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. முருகப்பெருமானுக்கு காலை சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரா கிராமகள், வெளி மாவட்டம், வெளி மாநிலத்தில் இருந்து திரளானா பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வழிபட்டனர்.

    பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிர மணியசுவாமி கோயில் மற்றும் பெரும்பேடு முத்துக் குமாரசாமி கோவிலில் பிரதோஷம் மற்றும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வைகாசி விசாகத்தை யொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.

    Next Story
    ×