என் மலர்
திருவள்ளூர்
- 6 வழிச்சாலைக்கு நிலம் ஒப்படைக்க விவசாயிகள் மறுத்து உண்ணாவிரதம்
- ஆலப்பாக்கம் கிராமத்தில் நேற்று ஆறு வழிச்சாலை அமைக்க அதிகாரிகள் பணிகளை தொடங்கினர்.
ஊத்துக்கோட்டை:
பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை மத்திய நெடுஞ்சாலைத்துறை ரூ.3200 கோடி செலவில் 136 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 வழிச்சாலை அமைக்க உள்ளது.
6 வழிச் சாலை அமைத்தால் ஊத்துக்கோட்டை தாலுகாவில் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் 3 போகங்கள் விளையக்கூடிய விளைநிலங்கள், 15 ஏரிகள், 30 குளங்கள், 100 க்கும் மேற்பட்ட வீடுகள், பள்ளி கட்டிடங்கள், கோவில்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 6 வழிச்சாலைக்கு நிலம் ஒப்படைக்க விவசாயிகள் மறுத்து உண்ணாவிரதம், தர்ணா, வீடு, கடைகளில் கருப்புக் கொடி ஏற்றி பல தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பெரியபாளையம் அருகே உள்ள ஆலப்பாக்கம் கிராமத்தில் நேற்று ஆறு வழிச்சாலை அமைக்க அதிகாரிகள் பணிகளை தொடங்கினர். தகவல் அறிந்ததும் திரளான விவசாயிகள் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் சம்பத், செயலாளர் துளசி நாராயணன், ஊத்துக்கோட்டை தாலுகா நஞ்சை விவசாயிகள் சங்க தலைவர் குணசேகர்ரெட்டி, செயலாளர் சசிகுமார் ஆகியோரின் தலைமையில் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடபட்டனர். விவசாயிகளின் கடும் எதிர்ப்பை புரிந்து கொண்ட அதிகாரிகள் சாலை அமைக்கும் பணிகளை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
6 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைந்து வருவதால் என்ன செய்வது என்பது தெரியாமல் அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். இந்த சாலை பணிக்கு எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்து உள்ளனர்.
போராட்டம் வலுத்து வரும் நிலையில் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
- அமைச்சர் செந்தில் பாலாஜி வடசென்னை அனல் மின் நிலையத்தின் 4-வது நிலை பணிகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்தார்.
- 90 ஆயிரம் டன் நிலக்கரி மாயமானதாக வெளியான தகவல் தவறானது.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த ஊரணம்பேடு பகுதியில் எண்ணூர் பொருளாதார மண்டல திட்டத்தின் கீழ் வடசென்னை அனல்மின் நிலையத்தின் 4-வது நிலை அமைக்கப்பட்டு வருகிறது. 1320 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் இது அமைய உள்ளது.
திட்டப்பணி கடந்த 2010-ம் ஆண்டு 7 ஆயிரத்து 800 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு கட்டுமான பணிகள் முடிந்து 2015-ம் ஆண்டு மின் உற்பத்தி தொடங்க பட்டிருக்க வேண்டும். ஆனால் 7 ஆண்டுகளுக்கு மேலாகியும் கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வடசென்னை அனல் மின் நிலையத்தின் 4-வது நிலை பணிகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்தார்.
பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர் 2024-ம் ஆண்டு மின் உற்பத்தியை தொடங்கு வதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் 4-ம் நிலையின் இரு அலகுகளில் தலா 660 விதம் நாள் ஒன்றுக்கு 1320 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான பணிகள் 2010 -ம் ஆண்டு தொடங்கபட்டது. 2014-ம் ஆண்டு நிறைவு பெற வேண்டிய கட்டுமான பணிகள் முடிக்கப்படாததால் உற்பத்தியை தொடங்க கால தாமதம் ஆகி உள்ளது. கூடுதல் பணியாட்களை நியமித்து கட்டுமான பணிகளை விரைந்து முடிக்குமாறு பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனத்திடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
4-ம் நிலையின் முதல் அலகில் 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் மின் உற்பத்தியை தொடங்கப்பட்டது. 2-ம் அலகில் 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் மின் உற்பத்தி தொடங்கப்படும். வருகி்ற 5 ஆண்டுகளில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலம் 6 ஆயிரத்து 220 மெகாவாட் மின் உற்பத்தி என்ற இலக்கை அடையும்.
வடசென்னை அனல்மின் நிலையத்தில் 90 ஆயிரம் டன் நிலக்கரி மாயமானதாக வெளியான தகவல் தவறானது. நாள்தோறும் நிலக்கரி கையிருப்பு குறித்து கண்காணித்து வருகிறோம். வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி கொள்முதல் செய்ய 143 டாலருக்கு வெளிப்படையாக டெண்டர் விடப்பட்டு 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி தற்போது நான்கு கப்பல்களில் வந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் மேலும் இரு கப்பல்களில் நிலக்கரி வர உள்ளது. பிற மாநிலங்கள் 187 டாலருக்கு நிலக்கரி கொள்முதல் செய்யும் நிலையில் இந்தியாவிலேயே தமிழகம்தான் குறைந்த விலையில் அதாவது 143 டாலருக்கு நிலக்கரி கொள்முதல் செய்து வருகிறது.
நிலக்கரி பற்றாக்குறை ஏற்படும்போதுதான் 25 சதவீத ஆயிலும் 75 சதவீத நிலக்கரியும் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யப்படும். தற்போது அத்தகைய நிலை ஏற்படவில்லை.
இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
- மீஞ்சூரை அடுத்த புங்கம்பேடு சீனிவாச நகரைச் சேர்ந்தவர் சுந்தர் பாபு.
- போலீசார் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த புங்கம்பேடு சீனிவாச நகரைச் சேர்ந்தவர் சுந்தர் பாபு.
ரெயில்வே ஊழியர். இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பொன்னேரியில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த காதணி விழாவிற்கு சென்றார்.
இரவில் சுந்தர் பாபு வேலைக்கு செல்வதற்காக திரும்பி வந்தபோது கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 7 சவரன் நகை உண்டியல் பணம் ரெயில்வே அடையாள அட்டை உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
பீரோவில் கவரிங் நகைகளுடன் கலந்திருந்த தங்க நகை மட்டும் கொள்ளையர்கள் பிரித்தெடுத்து கவரிங் நகையை வீசி விட்டு சென்றிருப்பது தெரியவந்தது.
- திருத்தணி, அரக்கோணம் நெடுஞ்சாலையில் உள்ள கால்வாய் நீருடன் மழை நீரும் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
- இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நடந்து செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று மாலை திடீரென கனமழை கொட்டி தீர்த்தது.
இந்த கனமழை அரை மணி நேரத்திற்கும் மேலாக திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல் திருத்தணி பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. திருத்தணி, அரக்கோணம் நெடுஞ்சாலையில் உள்ள கால்வாய் நீருடன் மழை நீரும் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நடந்து செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் கழிவுநீருடன் மழை நீர் கலந்து சாலைகளில் ஓடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இந்த திடீர் மழையால் இரவில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
- கிராமங்கள் வழியாக 6 வழிச்சாலை அமைக்ககூடாது என்று கிராம பொதுமக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
- பெரியபாளையம் அருகே உள்ள ஆலப்பாக்கம் கிராமத்தில் ஆறு வழிச்சாலைக்காக விளைநிலத்தை சமன் செய்யும் பணி தொடங்கியது
பெரியபாளையம்:
பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ரூ.3200 கோடி செலவில் 136 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த சாலை கண்ணிகை பேர், பெரியபாளையம், தண்டலம்,பாலவாக்கம், சென்னங்காரணி, பருத்தி மேனிகுப்பம், பனப்பாக்கம், பெரண்டூர், போந்தவாக்கம், வெங்களத்தூர், பிச்சாட்டூர் வழியாக சித்தூர் வரை அமைய உள்ளது.
இந்த சாலை அமைக்க பூர்வாங்க பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் 800-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக அமைந்துள்ள ஆயிரத்து 300 ஏக்கர் நஞ்சை நிலம் பாதிப்படையும். மேலும் 15-க்கும் மேற்பட்ட ஏரிகள், 30-க்கும் மேற்பட்ட குளங்கள் அழியும் அபாயம் உள்ளது. ஏழு கோவில்கள், 200 வீடுகள், இரண்டு அரசு பள்ளி கட்டிடங்களை இடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு தங்கள் கிராமங்கள் வழியாக 6 வழிச்சாலை அமைக்ககூடாது என்று கிராம பொதுமக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆயினும் அதிகாரிகள் சாலை அமைக்கும் பூர்வாங்க பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை பெரியபாளையம் அருகே உள்ள ஆலப்பாக்கம் கிராமத்தில் ஆறு வழிச்சாலைக்காக விளைநிலத்தை சமன் செய்யும் பணி தொடங்கியது. இது பற்றி அறிந்த ஊத்துக்கோட்டை வட்ட நஞ்சை விவசாயிகள் சங்கத்தினர் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர்.
அவர்கள் பொக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி. சாரதி தலைமையில் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் 6 வழிச்சாலையை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து விவசாயிகள் அனைவரும் விளைநிலத்தில் அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் 10 கிராம விவசாயிகள் பங்கேற்று உள்ளனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டு உள்ளது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
- கடந்த வாரம் பிரகாஷ் வீட்டில் வளர்த்து வந்த நாய் ஒன்று திடீரென வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து போனது.
- மீஞ்சூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கொள்ளை சம்பவம் அதிகரித்து உள்ளது.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த அரியன் வாயல் திருப்பதி நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ். கட்டிட காண்ட்ராக்டர். இவரது மனைவி சரண்யா.
நேற்று காலை வேலை சம்பந்தமாக பிரகாஷ் வெளியில் சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவி சரண்யா மட்டும் தனியாக இருந்தார்.
இந்த நிலையில் சரண்யா வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். சிறிது நேரத்தில் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. அவர் உள்ளே சென்று பார்த்தபோது ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம் மற்றும் நகையை அள்ளிக் கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே கொள்ளையர்களை சரண்யா தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் சரண்யாவை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினர். இதில் முகத்திலும் மூக்கிலும் ரத்தம் வழிந்தது.
பின்னர் கொள்ளையர்கள் நகை-பணத்துடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். சரண்யாவின் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது கொள்ளையர்கள் கைவரிசை காட்டி தப்பி சென்று இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து மீஞ்சூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த வாரம் பிரகாஷ் வீட்டில் வளர்த்து வந்த நாய் ஒன்று திடீரென வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து போனது. எனவே மர்மகும்பல் கொள்ளை திட்டத்துக்காக நாயை கொன்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.
இந்த கொள்ளை தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
மீஞ்சூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கொள்ளை சம்பவம் அதிகரித்து உள்ளது. இதனை தடுத்து கொள்ளைகும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், போலீசார் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- மத்துார் கிராமத்தில் கட்டிய புதுவீட்டிற்கு மின் விளக்குகள் அலங்காரம் செய்வதற்காக கிஷோர் சென்றார்.
- வீட்டின் மாடியின் மீது அலங்கார விளக்குகள் அமைக்கும் போது, அருகே சென்ற மின் வயர் அறுந்து கிடந்தது.
திருத்தணி:
திருத்தணியை அடுத்த மத்தூர் காலனியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் கிஷோர் (வயது 17). மத்தூர் அரசினர் மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
இவர் பொதுத் தேர்வு எழுதி இருந்தார். தற்போது விடுமுறை என்பதால், கிஷோர் தனது உறவினர் ஒருவருடன் திருவிழா மற்றும் புதுமனை புகுவிழா நடக்கும் வீடுகளுக்கு ரேடியோ மற்றும் மின்விளக்குகள் அலங்காரம் செய்யும் பணி செய்து வந்தார்.
இந்த நிலையில் மத்துார் கிராமத்தில் கட்டிய புதுவீட்டிற்கு மின் விளக்குகள் அலங்காரம் செய்வதற்காக கிஷோர் சென்றார்.
அப்போது வீட்டின் மாடியின் மீது அலங்கார விளக்குகள் அமைக்கும் போது, அருகே சென்ற மின் வயர் அறுந்து கிடந்தது. இதனை கவனிக்காத கிஷோர் வயர் மீது கால் வைத்தார்.
இதில் மின்சாரம் பாய்ந்து கிஷோர் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மின்சாரம் தாக்கியதில் மாணவன் கிஷோர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் காலனியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 38).
- திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் காலனியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 38). பேரம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ மனையில் எக்ஸ்ரே டெக்னீசினியாக பணிபுரிந்து வருந்தார்.
இவருக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் ஹரிஹரன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். மேலும் கணவன்- மனைவியிடையேயும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹரிஹரணை பிரிந்து அவரது மனைவி சென்று விட்டார். குழந்தை இல்லாத ஏக்கத்தாலும், மனைவி பிரிந்து சென்றதாலும் மன உளைச்சலில் இருந்த ஹரிஹரன் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். மப்பேடு போலீசார் ஹரிஹரன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சோழவரம் அருகே உள்ளது இருளிபட்டு சத்திரம் கிராமம்.
- பள்ளத்தை சரியான முறையில் உடனடியாக மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பொன்னேரி:
சோழவரம் அருகே உள்ளது இருளிபட்டு சத்திரம் கிராமம். இன்று காலை அப்பகுதியில் மீஞ்சூர்-நெகநாதபுரம் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது.
இந்த பள்ளம் ஆழ்துளை கிணற்று பள்ளமாக இருக்கலாம் என்று தெரிகிறது. குடியிருப்பு அருகே சிறுவர், சிறுமிகள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் பொதுமக்கள் பள்ளத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
இந்த பள்ளத்தை சரியான முறையில் உடனடியாக மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
இந்த பள்ளம் 100 அடிக்கும் கீழ் சென்றது. ஆழ்துறை கிணறுக்காக போடப்பட்ட பள்ளத்தை சரியாக மூடாமல் அதன் மேல் சாலை அமைத்து உள்ளனர்.
இந்த சாலை 15 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. குழந்தைகள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இந்த ஆழ்துளை கிணற்று பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மணலி அருகே சேலைவாயல், துர்கை அவின்யூ,12-வது தெருவை சேர்ந்தவர் ஜான் போஸ்கோ.
- ஜான்போஸ்கோவின் வீட்டு சுவற்றில் என் பிள்ளை விளையாட இடம் இல்லை என்றாய்... நீ இப்போது அவதிப்படுவாய்.
திருவொற்றியூர்:
மணலி அருகே சேலைவாயல், துர்கை அவின்யூ,12-வது தெருவை சேர்ந்தவர் ஜான் போஸ்கோ. ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் திருவொற்றியூர் கான்கார்டு கண்டெய்னர் யார்டில் செக்யூரிட்டி அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.
இவர் நேற்று மதியம் வீட்டைப் பூட்டி விட்டு பெசன்ட் நகரில் உள்ள தேவாலயம் சென்றார். பின்னர் மாலையில் திரும்பி வந்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 40 பவுன் நகை- ரூ.40 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து மணலி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஜான்போஸ்கோவின் வீட்டு சுவற்றில் ''என் பிள்ளை விளையாட இடம் இல்லை என்றாய்... நீ இப்போது அவதிப்படுவாய் '' என்று கொள்ளையன் எழுதி இருப்பது தெரிந்தது.
இதனால், கொள்ளையிில் ஈடுபட்டது பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். ராணுவ வீரரை பழிவாங்க , கொள்ளையில் ஈடுபட்டு கோபத்தில் சுவற்றில் வாசகம் எழுதி வைத்து சென்று இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.ராணுவ வீரர் ஜான் போஸ்கோ தனது மகள் திருமணத்திற்காக நகை- பணத்தை பீரோவில் வைத்து இருந்தார். அதனை கொள்ளையர்கள் அள்ளி சென்று விட்டனர். இதனை நன்கு அறிந்த நபர்களே திருடி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.
இதற்கிடையே அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ராணுவவீரர் ஜான் போஸ்கோ வீட்டுக்குள் 2 ஆண்கள் செல்வது பதிவாகி உள்ளது. ஆனால் வீடியோவில் அவர்களது உருவம் சரியாக தெரியாததால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து கண்காணிப்பு கேமிராவில் பதிவான மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் சீட்டுகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
- சந்தேகம் அடைந்த போலீசார் 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலை, பஸ் நிலையம், பஜார் வீதி போன்ற பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பஸ் நிலையம் அருகே சென்றபோது 3 பேர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர்கள் திருவள்ளூர் முகமது அலி தெருவை சேர்ந்த அன்சாரி, திருவள்ளூர் எடப்பாளையம் காமராஜர் தெருவை சேர்ந்த கதிரவன், அகமது பாஷா என்று தெரியவந்தது.அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் சீட்டுகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1980 பறிமுதல் செய்யப்பட்டது.
- மஞ்சம்பாக்கம் அருகே வெளிமாநில மற்றும் வெளி மாவட்டங்களில் வரும் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கபடுவது வழக்கம்.
- மாதவரம் அருகே லாரியை திருட முயன்ற 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை.
மாதவரம் ரவுண்டானா, மஞ்சம்பாக்கம் அருகே வெளிமாநில மற்றும் வெளி மாவட்டங்களில் வரும் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கபடுவது வழக்கம். இப்பகுதியில் மாதவரம் துணை கமிஷனர் குமார், உதவி கமிஷனர் அருள் சந்தோஸ் முத்து மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகப்படும் படியாக இருந்த 5 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ரகுமான் , மணிகண்டன், சஞ்சய், விக்னேஸ்வரன், ஆனந்த் என்பதும் அவர்கள் லாரியை திருட திட்டமிட்டு வந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 செல்போன், 3 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.






