என் மலர்
உள்ளூர் செய்திகள்

மணலி அருகே ராணுவ வீரர் வீட்டில் ரூ.40 லட்சத்தை கொள்ளையடித்தது யார்?
- மணலி அருகே சேலைவாயல், துர்கை அவின்யூ,12-வது தெருவை சேர்ந்தவர் ஜான் போஸ்கோ.
- ஜான்போஸ்கோவின் வீட்டு சுவற்றில் என் பிள்ளை விளையாட இடம் இல்லை என்றாய்... நீ இப்போது அவதிப்படுவாய்.
திருவொற்றியூர்:
மணலி அருகே சேலைவாயல், துர்கை அவின்யூ,12-வது தெருவை சேர்ந்தவர் ஜான் போஸ்கோ. ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் திருவொற்றியூர் கான்கார்டு கண்டெய்னர் யார்டில் செக்யூரிட்டி அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.
இவர் நேற்று மதியம் வீட்டைப் பூட்டி விட்டு பெசன்ட் நகரில் உள்ள தேவாலயம் சென்றார். பின்னர் மாலையில் திரும்பி வந்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 40 பவுன் நகை- ரூ.40 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து மணலி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஜான்போஸ்கோவின் வீட்டு சுவற்றில் ''என் பிள்ளை விளையாட இடம் இல்லை என்றாய்... நீ இப்போது அவதிப்படுவாய் '' என்று கொள்ளையன் எழுதி இருப்பது தெரிந்தது.
இதனால், கொள்ளையிில் ஈடுபட்டது பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். ராணுவ வீரரை பழிவாங்க , கொள்ளையில் ஈடுபட்டு கோபத்தில் சுவற்றில் வாசகம் எழுதி வைத்து சென்று இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.ராணுவ வீரர் ஜான் போஸ்கோ தனது மகள் திருமணத்திற்காக நகை- பணத்தை பீரோவில் வைத்து இருந்தார். அதனை கொள்ளையர்கள் அள்ளி சென்று விட்டனர். இதனை நன்கு அறிந்த நபர்களே திருடி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.
இதற்கிடையே அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ராணுவவீரர் ஜான் போஸ்கோ வீட்டுக்குள் 2 ஆண்கள் செல்வது பதிவாகி உள்ளது. ஆனால் வீடியோவில் அவர்களது உருவம் சரியாக தெரியாததால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து கண்காணிப்பு கேமிராவில் பதிவான மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.






