என் மலர்
திருவள்ளூர்
- வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் கருவிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
- இதில் அரசு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத 80-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் கண்டறியப்பட்டன.
பொன்னேரி:
கோடை விடுமுறை முடிந்து கடந்த திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன.
பள்ளி வாகனங்கள் சரியான பராமரிப்பில் பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ளதா? என்று போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பொன்னேரியில் உள்ள தனியார் பள்ளி வளாகம் ஒன்றில் கும்மிடிப்பூண்டி, செங்குன்றம், பொன்னேரி ஆகிய பகுதிகளில் உள்ள 34 தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான சுமார் 400 வாகனங்கள் ஒரே இடத்தில் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையில் வட்டாரப் போக்குவரத்து மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.
பள்ளி வாகனங்களில் விதிமுறைகளின்படி கண்காணிப்பு கேமரா, வேகக்கட்டுப்பாட்டு கருவி, ஜி.பி.எஸ் கருவி, மற்றும் அவசர கதவு, தீயணைப்பான், மருத்துவ உபகரணங்கள் ஆகியவை உள்ளனவா என்று சரிபார்க்கப்பட்டது.
அப்போது வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் கருவிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில் அரசு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத 80-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் கண்டறியப்பட்டன.
நேற்று ஆய்வு செய்த 126 வாகனங்களில் முறையாக பராமரிக்கப்படாத 35 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி கூறியதாவது:-
விதிமுறைகளை பின்பற்றாத தனியார் பள்ளி வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் 5 ஆண்டுகள் அனுபவம் இல்லாத டிரைவர்களை பணியமர்த்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும். பள்ளி நிர்வாகத்தினர் மாணவ-மாணவிகளை அழைத்து வரும் வாகனங்களை முறையாக பாரமரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலர் இளமுருகன், மாவட்ட கல்வி அலுவலர் மோகனா, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருப்பையன், ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
திருத்தணி கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, பொதட்டூர் பேட்டை, திருவாலங்காடு, திருத்தணி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
திருத்தணி அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் இந்த வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நடந்தது. முதற்கட்டமாக தனியார் பள்ளிகளில் உள்ள பஸ்கள், வேன்கள் என மொத்தம் 78 வாகனங்கள் நேற்று சோதனை செய்யப்பட்டன.
திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் லீலாவதி ஆய்வு செய்தார். ஆர்.டி.ஓ. சத்யா, மாட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணீத் ஆகியோர் உடன் இருந்தனர்.
- கும்மிடிப்பூண்டி சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணி.
- குப்பம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் நாளை மின் சப்ளை தடைபடும்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையத்தின் பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி பகுதியில் நாளை (சனிக்கிழமை) மின் வினியோகம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படுகிறது.
இதனால் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி, கோட்டக்கரை, பிரித்விநகர், முனுசாமிநகர், பூபாலன்நகர், மா.பொ.சி.நகர், பாலகிருஷ்ணாபுரம், தேர்வழி, ரெட்டம்பேடு சாலை, பெரிய நத்தம், வழுதிலம்பேடு, தம்புரெட்டிபாளையம், அப்பாவரம், மங்காவரம், ஆத்துப்பாக்கம், குருவியகரம், சோழியம்பாக்கம், ஏனாதி மேல்பாக்கம், அயநல்லூர், வேற்காடு, பெத்திக்குப்பம், சாமிரெட்டி கண்டிகை, பாப்பன்குப்பம், சித்தராஜ கண்டிகை, குருவராஜகண்டிகை ஆகிய பகுதிகளில் மின் சப்ளை இருக்காது.
அதே போல் கும்மிடிப்பூண்டி சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் ஒரு பகுதி, புதுகும்மிடிப்பூண்டி, பைபாஸ் சாலை, சிப்காட் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கங்கன்தொட்டி, பாப்பான் குப்பம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் நாளை (சனிக்கிழமை) மின் சப்ளை தடைபடும்.
இந்த தகவலை மின்துறை உதவி செயற்பொறியாளர் முரளி தெரிவித்து உள்ளார்.
- ரெயில்வே சிக்னல் வயரை திருடியது தொடர்பாக கைதானவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான சிக்னல் வயர் மற்றும் கம்பிகளை பறிமுதல் செய்தனர்.
- பின்னர் கைதான 7 பேரையும் போலீசார் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருத்தணி:
திருவாலங்காடு ரெயில் நிலையம் அருகே தொழுதாவூர் ரெயில்வே கேட் பகுதியில் சிக்னலுக்காக பொருத்தப்பட்ட காப்பர், அலுமினியம் கலந்த வயர்களை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.
மேலும் சில வயர்களை தொழுதாவூர் ரெயில்வே கேட் அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் வீசி இருந்தனர். அதனை ரெயில்வே போலீசார் மீட்டனர்.
இதுகுறித்து சென்னை ரெயில்வே கோட்ட முதுநிலை ஆணையர் செந்தில் குமரேசன் உத்தரவின் பேரில் அரக்கோணம் கோட்ட உதவி ஆணையர் ஏகே.பிரித் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மதுசூதன ரெட்டி, பூமிநாதன் மற்றும் திருவள்ளூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செபஸ்டின் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக அரக்கோணம் அடுத்த சின்ன மோசூர் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன், விக்னேஷ்வரன், ஜீவா, திருவலாங்காடு சின்னம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த சாரதி, தினேஷ், திருவள்ளூர் சேர்ந்த முத்துகிருஷ்ணன், சுபாஷ் ஆகிய 7 பேரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான சிக்னல் வயர் மற்றும் கம்பிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 7 பேரையும் போலீசார் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- வேப்பம்பட்டு அருகே உள்ள கந்தன்கொள்ளை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்.
- செவ்வாப்பேட்டை போலீசார் அவனிடம் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு அருகே உள்ள கந்தன்கொள்ளை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்.
இவர் சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இரவு 10.30 மணியளவில் புறநகர் ரெயில் மூலம் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் இறங்கி திருவள்ளூர் ஆவடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் முருகேசனை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி விலை உயர்ந்த செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்து தப்பி சென்றான்.
இதுகுறித்து முருகேசன் இரவு ரோந்துப் பணியில் இருந்த செவ்வாப்பேட்டை போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து செவ்வாப்பேட்டை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது செவ்வாய்பேட்டை பெட்ரோல் பங்க் அருகே சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரித்த போது அவன், திருநின்றவூர் அடுத்த நடுக்குத்தகை ராஜேஸ்வரி நகர் பகுதியைச்சேர்ந்த சத்யா (19) என்பதும் முருகேசனிடம வழிப்பறியில் ஈடுபட்டு தப்பி வந்ததும் தெரிந்ததது.
இதையடுத்து சத்யாவை போலீசார் கைது செய்தனர். அவன் மீது ஏற்கனவே பல்வேறு வழிப்பறி குற்ற வழக்குகள் உள்ளன. அவனிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ5 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. செவ்வாப்பேட்டை போலீசார் அவனிடம் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் பணி மலைக்கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் நடந்தது.
- 20 நாட்கள் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 73 லட்சத்து 63 ஆயிரத்து 674 வருவாயாக கிடைத்தது.
திருத்தணி:
திருத்தணி முருகன்கோவிலில் தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வைகாசி விசாகம், கிருத்திகை மற்றும் முகூர்த்த காலங்களில் பக்தர்கள் கூட்டம் கோவிலில் அலைமோதியது.
பக்தர்களின் காணிக்கையால் கோவிலில் இருந்த உண்டியல்கள் நிரம்பியது. இதையடுத்து உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் பணி மலைக்கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் நடந்தது.
கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா தலைமையில் உண்டியல் எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
இதில் 20 நாட்கள் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 73 லட்சத்து 63 ஆயிரத்து 674 வருவாயாக கிடைத்தது.
மேலும் தங்கம் 3/4 கிலோ தங்கம், வெள்ளி 5கிேலாபும் காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்ததாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
- பையில் இருந்து தவறி கீழே விழுந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
- குண்டு வெடித்ததில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் நிலை குலைந்து கீழே விழுந்தனர்.
பூந்தமல்லி:
சென்னையை அடுத்துள்ள மாங்காடு பரணி புத்தூரில் மவுலிவாக்கம் சாலை சந்திப்பில் நேற்று இரவு 10.30 மணி அளவில் ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் சென்று கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த 2 பேரில் ஒருவர் பை ஒன்றை வைத்திருந்தார். அந்த பையில் நாட்டு வெடிகுண்டுகள் இருந்துள்ளன.
இதில் ஒரு குண்டு பையில் இருந்து தவறி கீழே விழுந்தது. இதில் அந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் அருகில் இருந்த டீக்கடையின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
இதனால் பரணிபுத்தூர் சந்திப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு திரண்டனர். குண்டு வெடித்தது பற்றி மாங்காடு போலீசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
குண்டு வெடித்ததில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் நிலை குலைந்து கீழே விழுந்தனர். இதில் வாலிபர் ஒருவர் பலத்த காயம் அடைந்திருந்தார். மற்ற இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டிருந்தது.
அவர்கள் காயம் அடைந்த வாலிபரை அங்கேயே தவிக்க விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
காயத்துடன் போராடிய வாலிபரை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர். அவரது பெயர் வினோத் குமார் (27) என்பதும் அய்யப்பன்தாங்கலை சேர்ந்த ரவுடி என்பதும் தெரிய வந்தது.
ரவுடி வினோத்குமாரை போலீசார் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வினோத்குமாருடன் மோட்டார் சைக்கிளில் வந்து தப்பிய 2 பேர் குறித்தும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ரவுடி வினோத்குமார் தேடப்படும் குற்றவாளி என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளி வந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.
வினோத்குமார் கூட்டாளிகளுடன் வெடிகுண்டுகளை எடுத்துக்கொண்டு எங்கு சென்றார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வினோத் குமார் மீது எதிரிகள் யாரை யாவது கொலை செய்யும் நோக்கத்துடன் நாட்டு வெடிகுண்டுகளை எடுத்துச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதுதொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது.
நடுரோட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியதில் அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- நரிக்குறவ மாணவ- மாணவிகளுக்கு சாதிச் சான்றிதழ்களை பூந்தமல்லி நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், பூந்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் ஆகியோர் வழங்கினர்.
- தனியார் கல்லூரி பங்களிப்புடன் புத்தகப்பை, நோட்டு, புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
பூந்தமல்லி:
பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட அம்மான் நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவ இன குடும்பங்கள் வசித்து வருகின்றன. அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் வசித்து வரும் இவர்களின் குழந்தைகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
கோடை விடுமுறைக்கு பின் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் நரிக்குறவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.
இதையடுத்து பூந்தமல்லி அம்மான் நகர் பகுதியில் நரிக்குறவ மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நரிக்குறவ மாணவ- மாணவிகளுக்கு சாதிச் சான்றிதழ்களை பூந்தமல்லி நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், பூந்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் ஆகியோர் வழங்கினர். மேலும் தனியார் கல்லூரி பங்களிப்புடன் புத்தகப்பை, நோட்டு, புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் காஞ்சனா சுதாகர் பேசும்போது, நரிக்குறவர்களுக்கு தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவடியில் நரிக்குறவ மாணவிகள் வீட்டுக்கு சென்று உணவு அருந்தியது குறித்தும் பேசினார்.
இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன், வழக்கறிஞர் மாலினி ஆகியோர் நரிக்குறவ இன மாணவ மாணவிகளுக்கு கல்வியின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும், கல்வியினால் ஏற்படும் மாற்றத்தையும், வளர்ச்சியையும் எடுத்துக் கூறி தொடர்ந்து பள்ளிக்கு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர். கல்லூரி மாணவ - மாணவியர் மற்றும் நரிக்குறவ மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நகர்மன்ற துணைத் தலைவர் ஸ்ரீதர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
- மதுக்கடையை மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும். அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பெண்கள் தெரிவித்தனர்.
திருத்தணி:
திருத்தணி அருகே உள்ள காசிநாதபுரம் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடை, குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மதுக்கடையை மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும். அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பெண்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருத்தணி தாசில்தார் வெண்ணிலா தெரிவித்தார். மேலும் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து அனுமதி வந்தவுடன் கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதாகவும், அதுவரை மதுக்கடையை மூடவும் உத்தவிட்டார்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- பொதுமக்களுக்கு இலவசமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கினார்.
- பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினார்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் நரசிங்கபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எதிரே பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ வும் திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினருமான வி.ஜி. ராஜேந்திரன் தலைமை தாங்கி ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். பின்னர் அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு இலவசமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கினார். அதைத் தொடர்ந்து அவர் நரசிங்கபுரம் அரசினர் ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் ஏதுவாக ரூபாய் 4 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை துவக்கி வைத்து பார்வையிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திமுகவின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி பூபதி, கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி, நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி மோகனசுந்தரம், மாவட்ட விவசாய பிரிவு நிர்வாகிகள் ஆர்.டி.இ. ஆதிசேஷன், களாம்பாக்கம் பன்னீர்செல்வம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பூண்டி மோதிலால் உட்பட கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய மின் பாதைகளில் பராமரிப்பு பணி.
- பூண்டி, ஒதப்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டிருக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் கோட்டத்தை சார்ந்த காக்களூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வருகின்ற 18ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டிருக்கும். அந்த நேரம் காக்களூர்,காக்களூர் சிட்கோ, நரசிங்கபுரம், ஆஞ்சநேயபுரம், புல்லரம்பாக்கம்,மெய்யூர், குஞ்சலம்,பென்னலூர்பேட்டை, ஈக்காடு, செவ்வாப்பேட்டை, காக்களூர் ஹவுசிங் போர்டு, பூண்டி, ஒதப்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டிருக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- ஏரிகள் தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.
- சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு வராது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
திருவள்ளூர்:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம் பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
தற்போது ஏரியில் 7810 மி.கன அடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 66 சதவீதம் ஆகும். கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு 595 கன அடி தண்ணீர் வருகிறது.
கிருஷ்ணா நீர்வரத்தை கருத்தில் கொண்டும், பூண்டி ஏரியில் கூடுதல் தண்ணீரை சேமித்து வைக்கவும் பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பப்படுகிறது.
இதனால் தற்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்து உள்ளது. இந்த 2 ஏரிகளிலும் நீர் இருப்பு 90 சதவீதம் உள்ளது. இதனால் ஏரிகள் தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.
சென்னை குடிநீர் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதாலும், கிருஷ்ணா நீர் தொடர்ந்து வந்து கொண்டு இருப்பதாலும் இந்த ஆண்டு சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு வராது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி. கன அடி. அதில் 3058 மி. கன அடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 92.6 சதவீதம் ஆகும். ஏரிக்கு 180 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 205 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி. கன அடி இதில் 3276 மி. கன அடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 90 சதவீதம் ஆகும்.
ஏரிக்கு 460 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீருக்காக 206 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் பூண்டி ஏரியில் இருந்து சோழவரம் ஏரிக்கு தண்ணீர் அனுப்ப அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
சோழவரம் ஏரியில் தற்போது தண்ணீர் முற்றிலும் குறைந்து காணப்படுகிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி. கன அடி. இதில் வெறும் 131 மி. கன அடி மட்டுமே தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி. கன அடி. இதில் 924 மி. கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா நீர் 595 கன அடி வருகிறது. 821 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.
திருவள்ளூர்:
பூந்தமல்லி அருகே உள்ள கூடப்பாக்கம், குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சசிகுமார்(25), இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பரான அஜித் என்பவருடன் செல்போனில் பப்ஜி விளையாட்டை விளையாடினார்.
அப்போது சசிகுமாருக்கும் அஜித்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இது கோஷ்டி மோதலாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இதில் சசிக்குமார், அஜித் ஆகியோருக்கு கத்திக்குத்து விழுந்தது. படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்தின் உறவினரான செல்வம், சசிகுமாரின் ஆதரவாளர்கள் விஜயகுமார், சாமுவேல், அபிலேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.






