என் மலர்
திருவள்ளூர்
- இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1,700 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
- செம்பரப்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் தண்ணீர் இருப்பை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
பூந்தமல்லி:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி ஆகும்.
தற்போது பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் வந்து கொண்டு இருப்பதால், பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது.
இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. மொத்த கொள்ளளவில் தற்போது 3475 மி.கன அடி தண்ணீர் உள்ளது. இது மொத்த நீர் இருப்பில 95 சதவீதம் ஆகும்.
இந்த நிலையில் நேற்று இரவு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பூண்டி ஏரியில் இருந்து வரும் தண்ணீரோடு, மழை நீரும் சேர்ந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1,700 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியில் 23.36 அடிக்கு (மொத்த உயரம் 24 அடி) தண்ணீர் உள்ளது.
வழக்கமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 23 அடியை தாண்டினால் உபரி நீர் திறக்கப்படுவது வழக்கம். தற்போது ஏரியில் 23 அடியை தாண்டி தண்ணீர் உள்ளதால் உபரி நீர் திறக்கப்படலாம் என்று தெரிகிறது.
மேலும் பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் அனுப்புவதையும் நிறுத்த முடிவு செய்து உள்ளனர்.
செம்பரப்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் தண்ணீர் இருப்பை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். கோடை காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரி முழுவதும் நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.
- வழக்கு விசாரணை பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதி மன்றத்தில் நடந்து வருகிறது.
பூந்தமல்லி:
பயங்கரவாத அமைப்புகளுக்கு சமூக வலைதளங்கள் மூலம் ஆட்கள் சேர்த்ததாகவும், துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் கடந்த பிப்ரவரி மாதம் சென்னை, கோவை, மயிலாடுதுறையை சேர்ந்த ராமா சாதிக், முகமது ஆசிக், முகமது இர்பான், ஜெகபர்அலி, ரகமத் ஆகிய 5 பேரை மயிலாடுதுறை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதி மன்றத்தில் நடந்து வருகிறது.
வழக்கு விசாரணையின்போது, கைதான 5 பேரையும் 8 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று தேசிய புலனாய்வு முகமை போலீஸ் தரப்பில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி இளவழகன், கைதான 5 பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நேற்று முதல் வருகிற 23-ந் தேதி காலை 10 மணி வரை விசாரணைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து திருச்சி, புழல் சிறையில் வைக்கப்பட்டு இருந்த 5 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து தேசிய புலனாய்வு முகமை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- பொன்னேரி அடுத்த சோம்பட்டு கிராமத்தில் சிவன் கோயில் உள்ளது.
- தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
பொன்னேரி அடுத்த சோம்பட்டு கிராமத்தில் சிவன் கோயில் உள்ளது. நேற்று நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் இங்குள்ள 2 அம்மன்சிலைகளில் இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதுகுறித்து கவரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- நடைபயிற்சிக்கு சென்று கொண்டிருந்த வினோத் லாரியின் பின்பக்கம் நடந்து சென்றார்.
- அப்போது எதிர்பாராதவிதமாக பின்நோக்கி வந்த லாரி வினோத்தை இடித்து தள்ளி மேலே ஏறி இறங்கியது.
அம்பத்தூர்:
அம்பத்தூர் ஜீவரத்தினம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் வினோத்(48). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
வினோத் நேற்று மாலை நடைபயிற்சி சென்றார். அப்போது வீட்டின் அருகே உள்ள இரும்பு தொழிற்சாலையில் லோடு ஏற்ற கனரக லாரி வந்தது.
நடைபயிற்சிக்கு சென்று கொண்டிருந்த வினோத் லாரியின் பின்பக்கம் நடந்து சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக பின்நோக்கி வந்த லாரி வினோத்தை இடித்து தள்ளி மேலே ஏறி இறங்கியது.
இதில் வினோத் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்த டிரைவர் லாரியை நடுரோட்டில் நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வினோத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- லாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார்கள்.
- ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன.
அம்பத்தூர்:
செங்குன்றம் ஜி.என்.டி. சாலையில் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ் ராவ் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார்கள். அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன. இதையடுத்து டிரைவர், கிளீனர் மற்றும் லாரியை சென்னை பட்டரை வாக்கத்தில் உள்ள குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய போது வியாசர்பாடியை சேர்ந்த பாண்டியன், கிருஷ்ணமூர்த்தி என்று தெரியவந்தது. ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்தி செல்வதாக தெரிவித்தனர்.
இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். லாரியில் இருந்த 12 ஆயிரம் கிலோ எடை கொண்ட 240 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
- பொன்னேரி திருப்பாலைவனம் வட்டத்தில் அடங்கிய கிராமம்.
- பொன்னேரி வட்டாட்சியர், சிறப்பு தனி வட்டாட்சியர்கள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பொன்னேரி:
பொன்னேரி திருப்பாலைவனம் வட்டத்தில் அடங்கிய கிராமங்களைச் சேர்ந்த பட்டாதாரர்கள் ஜமாபந்தியில் உரிய ஆவணங்களுடன் மனு அளித்து பட்டா பெற்றுக் கொண்டனர். பொது மக்களின் இதர மனுக்களான வீட்டுமனை பட்டா, பட்டா மேல்முறையீடு, பட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், முதியோர் உதவித்தொகை, உள்ளிட்ட மனுக்களும் பெறப்பட்டது.
பொன்னேரி, தடப் பெரும்பாக்கம், பழவேற்காடு, கணவன் துறை, மெதூர் திருப்பாலைவனம் அடங்கிய அப்பகுதி பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு உடனடி தீர்வு காண வேண்டிய மனுக்களுக்கு உடனடியாகவும், விசாரணைக்கு பின் தீர்வு காணக்கூடிய மனுக்களை அதிகாரிகளுக்கும் பரிந்துரை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் பொன்னேரி வட்டாட்சியர் ரஜினிகாந்த், சிறப்பு தனி வட்டாட்சியர்கள் கார்த்திகேயன், சுமதி, கிராம நிர்வாக அலுவலர் சாந்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- செல்வ விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
- கொழுக்கட்டை கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
திருவள்ளூர் அடுத்த திருப்பந்தியூர் கிராமத்தில் செல்வவிநாயகர் கோவில் உள்ளது. இந்த விநாயகர் கோவிலில் ஆனி மாதம் சதுர்த்தியின் போது திருப்பந்தியூர் கிராம மக்கள் ஒன்றுகூடி 350 கிலோ அரிசி மாவு, 350 கிலோ வெல்லம், 300 தேங்காய், 2 கிலோ ஏலக்காய் ஆகியவற்றை கொண்டு 21,000 கொழுக்கட்டை தயாரித்தனர்.
இந்த 21 ஆயிரம் கொழுக்கட்டையும் செல்வ விநாயகர் ஆலய மூலவர் மற்றும் உற்சவர் விநாயகருக்கு படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து செல்வ விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இதில் திருபந்தியூர் மற்றும் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கொழுக்கட்டை கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
- ஊராட்சி தலைவர் நர்மதா யோகேஷ்குமார் உடனிருந்தார்.
- சோழவரம் ஒன்றியம் சீமாபுரம் ஊராட்சியில் அடங்கிய பெரியகுளம்.
பொன்னேரி:
சோழவரம் ஒன்றியம் சீமாபுரம் ஊராட்சியில் அடங்கிய பெரியகுளம், மாயாண்டி குளம், சின்ன குளம், சுண்ணாம்புகுளம், ஆகிய 4 குளங்களின் கரை பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விவசாயம் செய்யப்பட்டிருந்தன. இந்த ஆக்கிரமிப்புகளை வருவாய் ஆய்வாளர் சந்தானலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் லோகநாதன் முன்னிலையில் அகற்றினர். மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி அங்கு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அப்போது ஊராட்சி தலைவர் நர்மதா யோகேஷ்குமார் உடனிருந்தார்.
- திருவள்ளூர் அடுத்த ஈக்காடு சம்பத் நகரைச் சேர்ந்தவர் யோகராஜ்.
- அகிலாவின் தந்தை சொக்கலிங்கம் புல்லரம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த ஈக்காடு சம்பத் நகரைச் சேர்ந்தவர் யோகராஜ். வழக்கறிஞர். இவருக்கும் அவரது உறவுக்கார பெண் அகிலா (31) என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. அகிலா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தனர்.
நள்ளிரவு ஒரு மணியளவில் அகிலா தூங்க சென்ற அறையில் வெளிச்சமாக இருந்ததால் கணவர் யோகராஜ் சென்று பார்த்துள்ளார். அப்போது மனைவி அகிலா மின்விசிறியில் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தார். ஆனால் அகிலாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அகிலாவின் தந்தை சொக்கலிங்கம் புல்லரம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி. சாரதி தலைமையில் புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருவள்ளூரை அடுத்த கரிக்கலவாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 24).
- திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கரிக்கலவாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 24).இவர் தனது மனைவி அர்ச்சனா (23)என்பவரை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் நோக்கி வந்துகொண்டிருந்தார்.
அவர்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.சிலை அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளில் இன்ஜினில் இருந்து புகை வந்தது.இதைக்கண்ட சந்தோஷ் உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். சிறிது நேரத்தில் அந்த புகை தீயாக மாறி மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்தது.
உடனடியாக கணவன் மனைவி இருவரும் வண்டியை சாலையின் நடுவே விட்டு விட்டு இறங்கி உயிர் தப்பினார்கள்.சாலையின் நடுவில் மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிவதைக் கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் இதுகுறித்து உடனடியாக திருவள்ளூரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினார்கள். ஆனால் அதற்குள் மோட்டார் சைக்கிள் முழுவதுமாக எரிந்து நாசமானது. இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில் சாலையில் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஜமாபந்தி நிறைவை முன்னிட்டு விவசாயிகள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- தீ விபத்தில் வீடு இழந்த பெண்ணுக்கு நிதி உதவி வழங்கினார்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 7-ந் தேதி தொடங்கியது. மாவட்ட வழங்கல் அலுவலர் ஜோதி, தலைமையில் தாசில்தார் ரமேஷ் முன்னிலையில் தொடர்ந்து நடைபெற்ற ஜமாபந்தி நேற்று மாலை முடி வடைந்தது.
வீட்டுமனை பட்டா, பட்டா மேல்முறையீடு, பட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, பெயர் சேர்த்தல், நீக்கல் முகவரி மாற்றம், முதியோர் உதவித்தொகை கேட்டு மொத்தம் 730 மனுக்கள் பெறப்பட்டன.
இதில் 109 மனுக்கள் ஏற்கப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது. 621 மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஜமாபந்தி நிறைவை முன்னிட்டு விவசாயிகள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வழங்கல் அலுவலர் ஜோதி தலைமை தாங்கினார். கும்மிடிபூண்டி எம்.எல்.ஏ. டி.ஜே. கோவிந்தராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வீட்டுமனை பட்டா உட்பட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும் தீ விபத்தில் வீடு இழந்த பெண்ணுக்கு நிதி உதவி வழங்கினார்.
நிகழ்ச்சியில் தாசில்தார் ரமேஷ், சிறப்பு தாசில்தார் லதா, வட்ட வழங்கல் அலுவலர் ரவி, துணை தாசில்தார் நடராஜன், கிராம நிர்வாக அலுவலர் யுகேந்திரன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் மாவட்ட தலைவர் சுந்தர்ராஜ் வட்ட தலைவர் கிருஷ்ணகுமார், வட்ட செயலாளர் பிரகாசம் பொருளாளர் ராஜூ, தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, ஊத்துக்கோட்டை பேரூராட்சி தலைவர் அப்துல்ரஷீத், துணைத் தலைவர் குமரவேல்.
வார்டு கவுன்சிலர்கள் அபிராமி, கல்பனா, பார்த்திபன், சமீமாரஹிம், ஒன்றிய கவுன்சிலர்கள் ஞானமுத்து, சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் செல்வ சேகரன், பெரிஞ்சேரி ரவி, சக்திவேல், மாவட்ட பிரதி நிதி ரவிக்குமார், ஊராட்சி மன்றத் தலைவர்கள் தில்லை குமார், சித்ரா பாபு, பொறுப்புக் குழு உறுப்பி னர்கள் சிவய்யா, சீனி வாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிகிறது.
- கடைகளை அகற்றுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த வன்னிபாக்கம் ஊராட்சி மேட்டுப்பாளையம் மூகாம்பிகை நகர், கிராம தெரு சாலையில் டீக்கடை, காய்கறி கடை, சிமெண்ட் கடைகள் உள்ளன.
இந்த கடைகள் ஆக்கரமிப்பு இடத்தில் செயல்பட்டு வருவதாகவும், இதனை அகற்ற வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தனர். அதன்படி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் வரு வாய்த்துறை, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரத்துடன் ஆக்கிரமிப்பு கடைகளை இடித்துஅகற்ற வந்தனர்.
அவர்களிடம் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாப்புக்கு வந்த போலீசார் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பத்து நாட்களுக்குள் தாங்களே கடைகளை அகற்றி விடுவதாக எழுத்து மூலமாக வியாபாரிகள் தெரிவித்ததனர்.
இதையடுத்து கடைகளை அகற்றுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அப்போது ஊராட்சி மன்றத்தலைவர் மஞ்சுளா பஞ்சாட்சரம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.






