என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தச்சூர்-சித்தூர் இடையே 6 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைகிறது
- 6 வழிச்சாலைக்கு நிலம் ஒப்படைக்க விவசாயிகள் மறுத்து உண்ணாவிரதம்
- ஆலப்பாக்கம் கிராமத்தில் நேற்று ஆறு வழிச்சாலை அமைக்க அதிகாரிகள் பணிகளை தொடங்கினர்.
ஊத்துக்கோட்டை:
பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை மத்திய நெடுஞ்சாலைத்துறை ரூ.3200 கோடி செலவில் 136 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 வழிச்சாலை அமைக்க உள்ளது.
6 வழிச் சாலை அமைத்தால் ஊத்துக்கோட்டை தாலுகாவில் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் 3 போகங்கள் விளையக்கூடிய விளைநிலங்கள், 15 ஏரிகள், 30 குளங்கள், 100 க்கும் மேற்பட்ட வீடுகள், பள்ளி கட்டிடங்கள், கோவில்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 6 வழிச்சாலைக்கு நிலம் ஒப்படைக்க விவசாயிகள் மறுத்து உண்ணாவிரதம், தர்ணா, வீடு, கடைகளில் கருப்புக் கொடி ஏற்றி பல தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பெரியபாளையம் அருகே உள்ள ஆலப்பாக்கம் கிராமத்தில் நேற்று ஆறு வழிச்சாலை அமைக்க அதிகாரிகள் பணிகளை தொடங்கினர். தகவல் அறிந்ததும் திரளான விவசாயிகள் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் சம்பத், செயலாளர் துளசி நாராயணன், ஊத்துக்கோட்டை தாலுகா நஞ்சை விவசாயிகள் சங்க தலைவர் குணசேகர்ரெட்டி, செயலாளர் சசிகுமார் ஆகியோரின் தலைமையில் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடபட்டனர். விவசாயிகளின் கடும் எதிர்ப்பை புரிந்து கொண்ட அதிகாரிகள் சாலை அமைக்கும் பணிகளை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
6 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைந்து வருவதால் என்ன செய்வது என்பது தெரியாமல் அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். இந்த சாலை பணிக்கு எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்து உள்ளனர்.
போராட்டம் வலுத்து வரும் நிலையில் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.






