என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடசென்னை அனல்மின் நிலையத்தில் 4-வது நிலையில் 2024-ம் ஆண்டு உற்பத்தி தொடங்கும்- அமைச்சர் தகவல்
    X

    வடசென்னை அனல்மின் நிலையத்தில் 4-வது நிலையில் 2024-ம் ஆண்டு உற்பத்தி தொடங்கும்- அமைச்சர் தகவல்

    • அமைச்சர் செந்தில் பாலாஜி வடசென்னை அனல் மின் நிலையத்தின் 4-வது நிலை பணிகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்தார்.
    • 90 ஆயிரம் டன் நிலக்கரி மாயமானதாக வெளியான தகவல் தவறானது.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த ஊரணம்பேடு பகுதியில் எண்ணூர் பொருளாதார மண்டல திட்டத்தின் கீழ் வடசென்னை அனல்மின் நிலையத்தின் 4-வது நிலை அமைக்கப்பட்டு வருகிறது. 1320 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் இது அமைய உள்ளது.

    திட்டப்பணி கடந்த 2010-ம் ஆண்டு 7 ஆயிரத்து 800 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு கட்டுமான பணிகள் முடிந்து 2015-ம் ஆண்டு மின் உற்பத்தி தொடங்க பட்டிருக்க வேண்டும். ஆனால் 7 ஆண்டுகளுக்கு மேலாகியும் கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வடசென்னை அனல் மின் நிலையத்தின் 4-வது நிலை பணிகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்தார்.

    பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர் 2024-ம் ஆண்டு மின் உற்பத்தியை தொடங்கு வதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் 4-ம் நிலையின் இரு அலகுகளில் தலா 660 விதம் நாள் ஒன்றுக்கு 1320 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான பணிகள் 2010 -ம் ஆண்டு தொடங்கபட்டது. 2014-ம் ஆண்டு நிறைவு பெற வேண்டிய கட்டுமான பணிகள் முடிக்கப்படாததால் உற்பத்தியை தொடங்க கால தாமதம் ஆகி உள்ளது. கூடுதல் பணியாட்களை நியமித்து கட்டுமான பணிகளை விரைந்து முடிக்குமாறு பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனத்திடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    4-ம் நிலையின் முதல் அலகில் 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் மின் உற்பத்தியை தொடங்கப்பட்டது. 2-ம் அலகில் 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் மின் உற்பத்தி தொடங்கப்படும். வருகி்ற 5 ஆண்டுகளில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலம் 6 ஆயிரத்து 220 மெகாவாட் மின் உற்பத்தி என்ற இலக்கை அடையும்.

    வடசென்னை அனல்மின் நிலையத்தில் 90 ஆயிரம் டன் நிலக்கரி மாயமானதாக வெளியான தகவல் தவறானது. நாள்தோறும் நிலக்கரி கையிருப்பு குறித்து கண்காணித்து வருகிறோம். வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி கொள்முதல் செய்ய 143 டாலருக்கு வெளிப்படையாக டெண்டர் விடப்பட்டு 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி தற்போது நான்கு கப்பல்களில் வந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் மேலும் இரு கப்பல்களில் நிலக்கரி வர உள்ளது. பிற மாநிலங்கள் 187 டாலருக்கு நிலக்கரி கொள்முதல் செய்யும் நிலையில் இந்தியாவிலேயே தமிழகம்தான் குறைந்த விலையில் அதாவது 143 டாலருக்கு நிலக்கரி கொள்முதல் செய்து வருகிறது.

    நிலக்கரி பற்றாக்குறை ஏற்படும்போதுதான் 25 சதவீத ஆயிலும் 75 சதவீத நிலக்கரியும் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யப்படும். தற்போது அத்தகைய நிலை ஏற்படவில்லை.

    இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

    Next Story
    ×