என் மலர்
திருவள்ளூர்
- அத்திப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்.
- போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த அத்திப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (51) சோழவரம் ஒன்றிய கவுன்சிலராக உள்ளார்.
இவர் தற்போது அண்ணா நகரில் வசித்து வருகிறார். வாரம் ஒரு முறை இங்கு வந்து செல்வதுண்டு. இந்நிலையில் நேற்று முன்தினம் அத்திப்பேடு கிராம வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது 2 பவுன் நகை, ரூ.5000 பணம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து சோழவரம் போலீஸ் நிலையத்தில் பிரகாஷ் புகார் கொடுத்ததர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- எம்.எஸ். விஸ்வநாதனும், டி.கே.ராமமூர்த்தியும் ஒரு பாடலுக்கு டியூன் அமைக்க ரொம்ப நேரமாக யோசித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
- ஒரு கவிஞர் ரொம்ப நேரம் முயற்சித்தும் அந்த பாடலுக்கான வரிகள் கிடைக்கவில்லை.
மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதனும், டி.கே.ராமமூர்த்தியும் ஒரு பாடலுக்கு டியூன் அமைக்க ரொம்ப நேரமாக யோசித்துக் கொண்டே இருக்கிறார்கள்.. ஆனால் அதற்கான டியூன் பிடிபடவேயில்லை.
சரி.... கொஞ்ச நேரம் வெளியே போயிட்டு வரலாம். அப்ப ஏதாவது நல்ல டியூன் கிடைத்தாலும் கிடைக்கலாம்.. என்று இரண்டு பேரும் வெளியே கிளம்பினார்கள்.
அவர்கள் எங்கே போனார்கள் தெரியுமா? கவிஞர் மருதகாசி ஐயா வசனம், கவிதை, பாடல்கள் எழுதிய நாடகத்தைப் பார்க்க போனார்கள்.
நாடகத்தை பார்த்து விட்டு வெளியே வரும் போது கவிஞர் மருதகாசியை சந்தித்து, நாடகம் மிகவும் அருமை என்று பாராட்டினார்கள். குறிப்பாக அதில் இடம்பெற்ற கவிதை மிக மிக சிறப்பு என்றார்கள்.
தென்றல் உறங்கியது
திங்கள் உறங்கியது
கண்கள் உறங்காது...
என்ற அந்த கவிதையை மையமாக வைத்து நமக்கு ஒரு பாட்டு எழுதிக் கொடுக்கலாமே.. என்று கேட்கிறார்கள்.
நீங்கள் அதற்கு ஏற்ற மாதரி டியூன் போட்டுக் கொடுங்க, நான் பாட்டு எழுதிக் கொடுக்கிறேன் என்று மருதகாசி சொல்கிறார்.
அந்த வேகத்தோடு வந்து ஸ்டூடியோவில் உட்காருகிறார்கள் மெல்லிசை மன்னர்கள். அங்கே உருவாகியது சவாலான அந்தப் பாடல்.
மெல்லிசை மன்னர்கள் அந்த பாட்டுக்காக போட்ட டியூனை கவிஞர் மருதகாசியிடம் போட்டு காட்டி விட்டு, அதிகபட்சம் எத்தனை வார்த்தைகள் போடமுடியுமோ அவ்வளவு வார்த்தைகளை போட்டு இந்த பாடலை எழுதிக் கொடுங்கள் என்று கேட்கிறார்கள். அப்படி அவர்கள் ஆர்மோனியத்தில் இருந்து போட்ட டியூனில் உருவான பாடல்தான்..
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா...
காதல் கண்கள் உறங்கிடுமா...?
என்ற பாடல்.
பெற்ற மகனை விற்ற அன்னை என்ற படத்தில் வரும் இந்த பாடல் உருவான கதை இதுதான்.
ஒரு நாடகத்தில் மருதகாசி ஐயாவோட கவிதையை கேட்டுவிட்டு, அந்த கவிதையை இன்ஸ்பிரேஷனாக வைத்து அவரிடமே பெறப்பட்டது அந்த பாடல்.
மெல்லிசை மன்னர்கள் சொன்ன மாதிரி, கவிஞர் மருதகாசி அந்த பாடலில் அதிகபட்சமான வார்த்தைகளை போடுகிறார்..
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா?
நேசமாக பேசிடாமல்
பாசம் வளருமா?
ஆசையாக கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா?
இப்படியாக வார்த்தைகள் வந்து விழுந்து கிட்டே இருக்கு.எங்கேயோ கேட்ட ஒரு கவிதையில் இருந்து உருவான இந்த பாடல், ரொம்ப வருசம் கழிச்சு மற்றொரு பாடல் உருவாகவும் காரணமாக இருந்ததுதான் வியக்கத்தக்க விசயம்.
ஒரு கவிஞர் ரொம்ப நேரம் முயற்சித்தும் அந்த பாடலுக்கான வரிகள் கிடைக்கவில்லை. குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே யோசிக்கிறாரு. பாடலுக்கான டியூன் இருக்கு.. அந்த டியூனுக்கு ஏற்ற பாடல் எழுதனும்.. ரொம்ப நேரம் யோசிக்கிறாரு..
அந்த சமயம் திடீரென ரேடியோவை திருப்புராரு, தென்றல் உறங்கிய போதும்.. திங்கள் உறங்கிய போதும்.. என்ற பாடல் ஒலிக்கிறது.
அதை கேட்டபோது கவிஞருக்கு பளிச்சென சிந்தையில் ஊற்றெடுத்தது அவர் எதிர்பார்த்திருந்த பாடல் வரிகள்.
இளையராஜா சாரோட டியூனுக்கு அந்த வார்த்தைகளை கொண்டு பாட்டு கட்டிக் கொடுத்த அந்த கவிஞர் அறிவுமதி.
தென்றல் தான்
திங்கள் தான்
காதல் சந்தம்...
என்ற அந்த பாடல் கேளடி கண்மணி படத்தில் இடம் பெற்றுள்ளது.
ஒரு செயின் மாதிரி... ஒரு நாடகத்தில் வந்த கவிதை பாட்டாகி, அந்த பாட்டிலிருந்து இன்னொரு பாட்டு உருவான அழகான கதையைப் பார்க்கிறோம்.
ஒரு பாடலில் அளவுக்கு அதிகமான வார்த்தைகளை போட்டு கையாள்வது என்பது சாதாரண விசயம் அல்ல. மெட்டுக்கு பாட்டு எழுதும் போது கவிஞர்களுக்கு அது ஒரு பெரிய சவால்.
எம்.எஸ்.வி. சார் அடிக்கடி சொல்லுவார், "மீட்டருக்கு மேட்டரா அல்லது மேட்டருக்கு மீட்டரா?" என்று கேட்பது வழக்கம். அதாவது நான் டியூனை போட்டதுக்கு அப்புறம் பாடலை எழுதுகிறீர்களா? அல்லது நீங்க எழுதுன பாட்டுக்கு டியூன் போடனுமா? என்பது தான் அதன் அர்த்தம்.
இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் கிட்டதட்ட இதே மாதிரியான ஒரு சம்பவம் நடந்தது.
அதிகபட்ச வார்த்தைகள் வருகிற மாதிரி ஒரு பாடலை எழுதிக் காட்டுங்கள் என்று ராஜா சார் சொல்கிறார்.
எந்த பாட்டு அந்த மாதிரி உருவாச்சி தெரியுமா?
வெட்கப்படுவது.." என்ற பாடல் தான்.
அந்த பாடலின் பல்லவியைக் கேட்டு இருக்கீங்களா..?
டட் டட் டடடா
டட் டட் டடடா
என்ற டியூனுக்கு ஏற்றவகையில் "சிட்டுக்குருவி வெட்கப்படுதுன்னு" எழுதியிருப்பார் வைரமுத்து.
இந்த மாதிரியான உரையாடல் இசையமைப்பாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் இடையே நடக்கும் போதுதான் நமக்கு நல்ல நல்ல பாடல்கள் கிடைக்கின்றன.
இதெல்லாம் சட்டென வந்த பாடல்கள். ஆனால் நீண்ட நாட்கள் முயற்சித்தும் வராமல் தவிக்க விட்ட பாட்டு ஒன்னு இருக்கு.
6 மாதமாக முயற்சித்தும் ஒரு டியூனும் சரிபட்டு வரல. அதனால் கோவம் வந்திருச்சு ஸ்ரீதர் சாருக்கு. இனிமே இந்த பாடலை நம்பி உட்கார்ந்திருக்க முடியாது என்று கோவப்படுகிறார்.
ஆனால் அந்த காத்திருத்தலுக்கு பரிசாக முத்து மாதிரி வந்து விழுந்தது டியூன். அதில் பிறந்த பாடல் தான்
"நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழப்பதில்லை...."
இந்த பாடலை கேட்டுவிட்டு கண்ணீர் விட்டு அழுதாராம் ஸ்ரீதர் சார். இந்த பாட்டுக்காக இத்தனை நாட்களா காத்துகிட்டு இருந்தது தப்பே இல்லை என்றாராம். 6 மாதம் தவமிருந்து பெற்ற குழந்தை தான் அந்த பாடல்.
சில பாடல்கள் இந்த மாதிரி கதையோடு உருவாகும். சில பாடல்கள் களத்தில் வந்து மாறும். அப்படியும் நிறைய நடந்திருக்கு. அந்த மாதிரி நடந்த ஒரு அழகான சம்பவம்தான் இது...
ஒரு தடவை கம்போஸ் நடந்துகிட்டு இருக்கும் போது எல்லாரும் இருக்காங்க. ஆனால் இயக்குனர் ஸ்ரீதர் சார் மட்டும் அங்கு இல்லை. வெளியே வந்து ஒரு மரத்துக்கு அடியில் சிகரெட் பிடிச்சுக்கிட்டு நிக்கிறாரு.
அப்போது அங்கு வந்த எம்.எஸ்.வி. அவர்கள் "என்ன.. எல்லோரும் உள்ளே ரிக்கார்டிங்கில் இருக்காங்க. நீங்க மட்டும் வெளியே வந்து நிக்கிறீங்களே ஏன்?" என்று கேட்டார்.
"நான் என்னத்துக்கு வரணும்? நீங்க டியூன் போட்டீங்க.. சுற்றி இருந்தவங்க எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னாங்க. அது போதும்! எனக்கு பிடிக்கிறதா என்று யார் கேட்டீங்க?" என்றார்.
"அப்படி சொல்லாதீங்க... உங்களுக்கு எந்தமாதிரி பிடிக்கும்னு சொல்லுங்க, அந்த மாதிரியே டியூன் போட்டுடலாம்" என்றார் எம்.எஸ்.வி.
இந்த மாதிரியான தர்க்க வாதத்தில் தான் சிவந்த மண் படத்தோட பாடல்கள் உருவாகிச்சு.
தனக்கு என்ன வேணும் என்பதை சிலசமயம் தான் சிலரால் சொல்ல முடியும். சொல்ல முடியாமலே ஸ்ரீதர் சார் பல சமயம் தவிச்சு இருக்கார். அந்த மாதிரியான ஒரு சம்பவம் இது...
அன்றைய தினம் எம்.எஸ்.வி. அவர்கள் கதைக்கு ஏற்றபடி முழுக்க முழுக்க கர்நாடக இசை அடிப்படையில் பந்துவராளி ராகத்தில் ஒரு பாடலை கற்பனை செய்து கொண்டு ஸ்டூடியோவுக்கு வந்துட்டாரு.
பாடலை கம்போஸ் செய்ய உட்காரும் போது ஸ்ரீதர் சார் சொன்ன காட்சி வேறு, ஒரு கவர்ச்சி நடனத்துக்குரிய காட்சியை சொல்கிறார்.
அதை கேட்டு எம்.எஸ்.விக்கு மூடு அவுட் ஆகிவிட்டது. நாம என்னத்தையோ நெனச்சிக்கிட்டு வந்தோம், இவர் வேற எதையோ சொல்றாரே... என்று குழப்பமடைகிறார்.
"இப்ப சொன்னீங்கள்ல, டியூன் ரெடியா இருக்கு என்று... அதை அப்படியே இந்த பாடலுக்கு பொருத்திடலாம்" என்று ஸ்ரீதர் சொல்கிறார்.
சுத்தமான கர்நாடக இசை ராகத்துல நினைச்சுக்கிட்டு வந்த டியூனை கிளப் டான்ஸ் பாடலுக்கு ஏற்றவாறு மாற்றுகிறார் எம்.எஸ்.வி.
எப்படி அது சாத்தியம்? எம்.எஸ்.வி.சாருக்கு அது சாத்தியம் தான். அந்த பாடல்தான் "நீராட நேரம் நல்ல நேரம்..." பாடல்.
இந்த பாட்டோட டியூனை பாடி காட்டியாச்சு. அதுக்கானப் பாடலை எழுதி வாங்கியாச்சு.பிரமாதமாக இருக்கு என்று ஸ்ரீதர் சாருக்கு ரொம்ப சந்தோசம். பாடலைப் பாட எல்.ஆர்.ஈஸ்வரியை கூப்பிடுங்க என்கிறார்.
எம்.எஸ்.வி.யோ வாணி ஜெயராமை கூப்பிடுங்க என்றார்.
இந்த மாதிரியான கிளப்டான்ஸ் பாடலுக்கு வாணிஜெயராம் சரிபடுமா என்று இசைக் குழுவினர் கேட்டார்கள்.
"முதலில் அவர் பாடி நீங்க கேளுங்க... அப்புறமா சொல்லுங்க" என்றார்.
வாணிஜெயராம் வந்து "நீராட நேரம் நல்ல நேரம்.." பாடலைப் பாடினாங்க. பிரமாதமாக அமைந்தது அந்த பாடல். அது அவரது இசைப்பயணத்தில் திருப்பு முனையாகவும் அமைந்தது.
ஒவ்வொரு பாடலுக்கு பின்னாடியும் இந்த மாதிரியான பல சுவாரசியமான கதைகள் இருக்கும். அந்த கதைகளைக் கேட்கும் போது அந்த பாடல்கள் மீதான மரியாதை அதிகமாகும். அடுத்தப் பகுதியில் இது போன்ற சிலவற்றை பார்ப்போம்!.
தொடர்புக்கு-info@maximuminc.org
- கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 2 தடுப்பணைகள் கட்ட ஆந்திர அரசு திட்டமிட்டு நிதி ஒதுக்கி உள்ளது.
- தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
திருவள்ளூர்:
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 2 தடுப்பணைகள் கட்ட ஆந்திர அரசு திட்டமிட்டு நிதி ஒதுக்கி உள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இந்த நிலையில் கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திர அரசை கண்டித்து பள்ளிப்பட்டு பேரூராட்சி அலுவலக எதிரே பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது ஆந்திர அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாநிலத் துணைத் தலைவர் வைத்தியலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் பாலயோகி, மாநில அமைப்பு துணைச் செயலாளர் வெங்கடேசன், மாவட்டத் தலைவர் விஜயன், மாவட்ட செயலாளர் தினேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திக், மாவட்டத் துணைச் செயலாளர் லோகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் கே. சந்திரமோகன் தலைமையில் பாராட்டுவிழா நடைபெற்றது.
- பள்ளி தலைமை ஆசிரியை ஜெக ஜோதி மற்றும் உதவி தலைமை ஆசிரியை சித்ராஜெயசிலி முன்னிலை வகித்தனர்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் சாத்துமாநகர் தனியார் மேல்நிலைப் பள்ளியில் மண்டல அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. மொத்தம் 46 பள்ளிகளின் அணிகள் பங்கேற்றன.
இதில் மணலியில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் சீனியர் பிரிவில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினர்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் கே. சந்திரமோகன் தலைமையில் பாராட்டுவிழா நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியை ஜெக ஜோதி மற்றும் உதவி தலைமை ஆசிரியை சித்ராஜெயசிலி முன்னிலை வகித்தனர்.
விழாவில் மணலி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரம் கலந்து கொண்டு மாணவிகளுக்கு தங்கப்பதக்கத்தை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் மணலி சேக்காடு பொது வியாபாரிகள் சங்க நிறுவன தலைவர் ஏ.தங்கம், சென்னை வாழ் நாடார் சங்க துணை செயலாளர் செல்லத்துரை, சமத்துவ மக்கள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் மணலி பாலா,மணலி சேக்காடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் காளியப்பன், செயலாளர் பாண்டியன், ஆலோசகர் மாடசாமி கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆசிரியர் சுஜாதா வரவேற்றார். முடிவில் நாடார் உறவின் முறை பொதுச்செயலாளர் அரிஹரன் நன்றி கூறினார்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு அமுதா, கணவர் மற்றும் 2 குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலன் ஜோதீஸ்வரனுடன் ஓட்டம் பிடித்தார்.
- கள்ளக்காதல் ஜோடி தனியாக வீடு எடுத்து கணவன்-மனைவி போல் வசித்து வந்தனர்.
திருவள்ளூர்:
சோழவரம் அடுத்த புதிய எருமைவெட்டி பாளையத்தை சேர்ந்தவர் பாபு. தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அமுதா (வயது 30). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
அமுதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஜோதீஸ்வரனுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமுதா, கணவர் மற்றும் 2 குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலன் ஜோதீஸ்வரனுடன் ஓட்டம் பிடித்தார். கள்ளக்காதல் ஜோடி திருவள்ளூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் தனியாக வீடு எடுத்து கணவன்-மனைவி போல் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை பூட்டிய வீட்டில் அமுதாவின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. உடன் தங்கி இருந்த கள்ளக்காதலன் ஜோதீஸ்வரன் மாயமாகி இருந்தார்.
அமுதா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே அமுதாவின் கள்ளக்காதலன் ஜோதீஸ்வரன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதன் பின்னரே அமுதா எப்படி கொலை செய்யப்பட்டார்? அதற்கான காரணம் என்ன? வேறு யாருக்கேனும் இதில் தொடர்பு உள்ளதா? என்ற முழுவிவரம் தெரியவரும்.
- கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு பலத்த மழை கொட்டி வருகிறது.
- செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளவு 3645 மி.கனஅடி. இதில் 3292 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.
பூண்டி ஏரியில் மதகு, கால்வாய் சீரமைப்பு பணி நடைபெறுவதையொட்டி கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க வேண்டாம் என்று ஏற்கனவே தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இதனால் கிருஷ்ணா நீர் பூண்டி ஏரிக்கு அனுப்புவது நிறுத்தப்பட்டது.
இதையடுத்து பூண்டி ஏரியில் சீரமைப்பு பணி நடைபெறுவதையடுத்து ஏரியில் இருந்த தண்ணீர் முழுவதையும் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஏற்கனவே புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருந்தது. தற்போது தொடர்ந்து பூண்டி ஏரி தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தண்ணீர் முழுவதும் நிரம்பி வருகிறது. இந்த 2 ஏரிகளிலும் 90 சதவீதம் தண்ணீர் உள்ளது.
இதேபோல் கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் மழை நீரும் குடிநீர் ஏரிகளுக்கு அதிக அளவு வரத் தொடங்கி உள்ளன.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி ஆகும். இதில் 636 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. தண்ணீர் வரத்து இல்லை. 315 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி இதில் 2994 மி.கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 256 கன அடி தண்ணீர் வருகிறது. சென்னை குடிநீர் தேவைக்காக 201 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளவு 3645 மி.கனஅடி. இதில் 3292 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 127 கனஅடி தண்ணீர் வருகிறது. குடிநீருக்காக 185 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சோழவரம் ஏரியில் 132 மி.கனஅடி தண்ணீரும் (மொத்த கொள்ளவு 1081 மி.கனஅடி) கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் முழு கொள்ளவான 500 மி.கனஅடி தண்ணீரும் உள்ளது.
- விநாயகர் சதுர்த்தி விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
- போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
திருவள்ளூர்:
விநாயகர் சதுர்த்தி விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. திருவள்ளூரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விநாயகர் சிலைகளை வைக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர். சிலைகள் நிறுவப்பட்டுள்ள இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மாவட்டத்தில் மொத்தம் 951 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட போலீசார் அனுமதி அளித்து உள்ளனர். அதன்படி திருவள்ளூரில் 173, திருத்தணியில் 284, ஊத்துக்கோட்டையில் 210, பொன்னேரியில் 68, கும்மிடிப்பூண்டியில் 216 இடங்களில் விநாயகர் சிலை வழிபாடு நடைபெறுகிறது.
விநாயகர் சிலைகளுக்கு அந்தந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும், பூஜை நடத்துபவர்கள், ஒருங்கிணைப்பாளர்களின் பெயர், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை போலீசார் பெற்று வருகின்றனர். மேலும் கடுமையான கட்டுப்பாடுகளும் விதித்து உள்ளனர்.
பூஜை முடிந்த பின்னர் விநாயகர் சிலைகள் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட 17 இடங்களில் கரைக்கப்பட இருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா அமைதியான முறையில் நடைபெறவும், பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்பதை வலியுறுத்தும் வகையிலும் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
மாவட்ட போலீஸ் சூரப்பிரண்டு எம்.சுதாகர் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கொடி அணி வகுப்பு ஊர்வலத்தில் திரடிப்படை, அதிவிரைவு படை, ஆயுதப்படை, சட்ட ஒழுங்கு போலீசார்,என 300-க்கும் மேற்பட்ட போலீசாரும், உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
கொடி அணிவகுப்பு பேண்டு வாத்தியங்கள் முழங்க காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.
- கோவிந்தசாமி அப்பகுதியில் உள்ள மரத்தில் திடீரென துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- முதியவர் தற்கொலை குறித்து மப்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த சிவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது60). இவர் கடம்பத்துார் ஒன்றி யம் தொடுகாடு ஊராட்சியில் உள்ள பஞ்சமி தாங்கல் பகுதியில் உள்ள ஏரியில் ஏலம் எடுத்து மீன்பிடித்து வந்தார்.
இந்தநிலையில் கோவிந்தசாமி அப்பகுதியில் உள்ள மரத்தில் திடீரென துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மப்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- லாரியில் இரும்பு பொருட்களை திருடி ஏற்றிச்சென்ற போது அனல் மின் நிலைய வளாகத்தில் சோதனை செய்தபோது சிக்கியது.
- மீஞ்சூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
பொன்னேரி:
அத்திப்பட்டில் வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்குள்ள இரண்டாவது நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களாக மீஞ்சூரை சேர்ந்த சதீஷ்குமார், அக்பர், அத்திப்பட்டு புது நகரை சேர்ந்த சரண்ராஜ் ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் அனல்மின் நிலையத்தில் பழைய பொருட்களை கையாளும் பிரிவில் பணி வழங்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில அவர்கள் பழைய இரும்பு பொருட்களை சேமிப்பு கிடங்கில் கொண்டு சேர்க்காமல் அதனை திருடி வெளியில் இருந்து லாரியை அனுமதி இல்லாமல் வரவழைத்து வெளியில் கொண்டு சென்று விற்று வந்தனர்.
சம்பவத்தன்று லாரியில் இரும்பு பொருட்களை திருடி ஏற்றிச்சென்ற போது அனல் மின் நிலைய வளாகத்தில் சோதனை செய்தபோது சிக்கியது. இதுகுறித்து அனல்மின் நிலைய நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மீஞ்சூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் லாரியில் 18 டன் எடை கொண்ட 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள இரும்பு பொருட்களை திருடி சென்றது தெரிந்தது. இதுதொடர்பாக லாரி டிரைவரான தூத்துக்குடியை சேர்ந்த பதீஷ்குமார், ஒப்பந்த தொழிலாளர்கள் சதீஷ்குமார், அக்பர், சரண்ராஜ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். லாரியுடன் இரும்பு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- கள்ளக்காதல் ஜோடி திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பம், கம்பர் தெருவில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தனர்.
- கடந்த சில நாட்களாக கள்ளக்காதல் ஜோடி வீடு பூட்டியே கிடந்தது.
திருவள்ளூர்:
சோழவரம் அடுத்த எருமை வெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு. தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக உள்ளார். இவரது மனைவி அமுதா (வயது30). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
அமுதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜோதீஸ்வரன் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த பாபு, மனைவியை கண்டித்தும் கேட்கவில்லை. அவர் தொடர்ந்து கள்ளக்காதலனுடன் பழகி வந்தார்.
கடந்த 2 மாதத்திற்கு முன்பு கணவர் மற்றும் குழந்தைகளை தவிக்க விட்டு அமுதா தனது கள்ளக்காதலன் ஜோதீஸ்வரனுடன் ஓட்டம் பிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாபு, தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்கிடையே கள்ளக்காதல் ஜோடி திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பம், கம்பர் தெருவில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தனர். கடந்த சில நாட்களாக அவர்களது வீடு பூட்டியே கிடந்தது.
இந்த நிலையில் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் திருவள்ளூர் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி மற்றும் போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்த போது அமுதா உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். உடன் தங்கி இருந்த கள்ளக்காதலன் மாயமாகி இருந்தார்.
அமுதாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அமுதாவின் உடல் அழுகிய நிலையில் இருப்பதால் அவர் இறந்து ஒரு வாரம் இருக்கும் என்று தெரிகிறது. அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது தொடர்பாக அமுதாவுடன் தங்கி இருந்த காதலன் ஜோதீஸ்வரனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர். அவர் சிக்கினால் தான் அமுதா எப்படி இறந்தார் என்பது தெரியவரும்.
கொலையுண்ட அமுதா இதற்கு முன்பும் 2 முறை ஜோதீஸ்வரனுடன் ஓட்டம் பிடித்ததாக தெரிகிறது. அப்போது அவர் இருக்கும் இடம் தெரிந்து பாபு சமாதானம் பேசி அழைத்து வந்து உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 3-வது முறையாக அமுதா ஓட்டம் பிடித்தபோது பாபுவுக்கு அவரது நண்பர் ஒருவர் மூலம் இருக்கும் இடம் தெரிந்து உள்ளது.
அப்போது பாபு, மனைவி அமுதாவை சந்தித்து பேசியபோது, கள்ளக்காதலன் ஜோதீஸ்வரன் தன்னை ஏமாற்றி விட்டதாக தெரிவித்து சென்று இருக்கிறார். இதன் பின்னர் அமுதா கொலை செய்யப்பட்டு உள்ளார்.
இது தொடர்பாக பாபுவின் நண்பரிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர். கள்ளகாதலனுடன் சென்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திருவேற்காடு நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற பல்வேறு தூய்மைப் பணிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சி.
- நகர்மன்ற அலுவலக வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற்றது.
பூந்தமல்லி:
திருவேற்காடு நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற பல்வேறு தூய்மைப் பணிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பாராட்டு விழா நகர்மன்ற தலைவர் என்.இ.கே. மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இதில் நகர்மன்ற துணைத் தலைவர் ஆனந்தி ரமேஷ், ஆணையர் ரமேஷ், பொறியாளர் குமார், சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன், நகர்மன்ற உறுப்பினர்கள், குடியிருப்போர் நலச் சங்கத்தினர், தன்னார்வலர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் நகராட்சி சார்பில் குப்பைகள் அகற்றுதல், நீர்நிலைகளை தூர்வாறுதல், மரம் நடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு, மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்கள் சீரமைத்து சுத்தம் செய்தல், இயற்கை உரம் விற்பனை, குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல், மஞ்சப்பை பயன்படுத்துவது, வாகனங்கள் மூலம் பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நிகழ்ச்சியில் குடியிருப்போர் நலச் சங்கத்தினர், தன்னார்வலர்கள், நகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதனால் திருவேற்காடு நகராட்சி குப்பையில்லாத சுத்தமான நகரமாக மாறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்றவர்களை ஊக்குவிக்கும் விதமாக பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பாக செயலாற்றியவர்களை பாராட்டி நகர்மன்ற தலைவர் என். இ.கே. மூர்த்தி பரிசும், சான்றிதழும் வழங்கினார்.இதைத் தொடர்ந்து நகர்மன்ற அலுவலக வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற்றது.
- பள்ளியில் நடந்த கராத்தே வகுப்புக்கு செல்லாமல் மாணவி மட்டும் தனியாக வகுப்பறையில் இருந்தார்.
- மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அதே பள்ளியில் ஆசிரியராக பணி செய்து வரும் தனது தாயிடம் தெரிவித்தார்.
பொன்னேரி:
பொன்னேரி அருகே தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. இங்கு பெரும்பேடு பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் மாணவியின் தாயும் ஆசிரியராக உள்ளார்.
இந்த நிலையில் பள்ளியில் நடந்த கராத்தே வகுப்புக்கு செல்லாமல் மாணவி மட்டும் தனியாக வகுப்பறையில் இருந்தார். அப்போது சமூகஅறிவியல் ஆசிரியராக வேலை பார்த்து வரும் ஆரோக்கிய ராஜ் வகுப்பறைக்கு வந்தார்.
மாணவி மட்டும் தனியாக இருப்பதை கவனித்த அவர் பேச்சு கொடுத்தார். திடீரென அவர் மாணவியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி எதிர்ப்பு தெரிவித்ததால் ஆசிரியர் ஆரோக்கியராஜ் அங்கிருந்து சென்று விட்டார். மேலும் இதுபற்றி வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டியதாகவும் தெரிகிறது.
இந்தநிலையில் மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அதே பள்ளியில் ஆசிரியராக பணி செய்து வரும் தனது தாயிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அவர் அதிர்ந்து போனார்.
இதுகுறித்து பொன்னேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. பழவேற்காட்டில் மறைந்திருந்த ஆசிரியர் ஆரோக்கிய ராஜை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.






