என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்பதை சென்னை ஐகோர்ட்டு உறுதிப்படுத்தி உள்ளது.
    • இன்று எடப்பாடி பழனிசாமி இல்லம் தொண்டர்கள் வருகையால் நிரம்பி வழிந்தது.

    சென்னை:

    சென்னையில் கடந்த ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.

    இதனால் ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்பதை சென்னை ஐகோர்ட்டு உறுதிப்படுத்தி உள்ளது.

    இந்த தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தீர்ப்பை கேட்டதுமே சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் அவரது ஆதரவாளர்கள் திரண்டனர்.

    அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உற்சாக கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    மேலும் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இதனால் இன்று எடப்பாடி பழனிசாமி இல்லம் தொண்டர்கள் வருகையால் நிரம்பி வழிந்தது.

    • ஆற்காடு குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக விழிப்புணர்வுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
    • போலீஸ் துணை கண்காணிப்பாளர் விக்னேஷ், தலைமை ஆசிரியர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருத்தணி:

    திருத்தணி அருகே உள்ள ஆற்காடு குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக விழிப்புணர்வுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெற செய்ய வேண்டிய வழிமுறைகள், படிக்க வேண்டிய வழிமுறைகள், குறித்து பேசினார். நிகழ்ச்சியில் திருத்தணி போலீஸ் துணை கண்காணிப்பாளர் விக்னேஷ், தலைமை ஆசிரியர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகம் கடற்கரை அருகில் ஆண் ஒருவர் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
    • காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகம் கடற்கரை அருகில் ஆண் ஒருவர் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காட்டூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்தவருக்கு சுமார் 60 வயது இருக்கும். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரிய வில்லை. அவர் கடலில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக காட்டுப்பள்ளி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாயமானவர்கள் பற்றிய விபரத்தை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

    பிணமாக மீட்கப்பட்டவரின் உடல் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

    • செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கன அடி. இதில் 3,279 மி.கன. அடி தண்ணீர் உள்ளது.
    • பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கன அடி. இதில் 584 கன அடி தண்ணீர் உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு கனமழை கொட்டி வருகிறது. நேற்று மாலை பரவலாக பலத்த மழை கொட்டித் தீர்த்தது.

    இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும். புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி ஆகும். இதில் 3082 மி.கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. கனமழை காரணமாக இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு நீர்வரத்து 1,128 கன அடியாக அதிகரித்து உள்ளது.

    ஏற்கனவே ஏரியில் 90 சதவீதத்துக்கும் அதிகமாக தண்ணீர் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏரியில் இருந்து குடிநீர் தேவைக்காக 202 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து வந்தது. ஏரிக்கு 290 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கன அடி. இதில் 3,279 மி.கன. அடி தண்ணீர் உள்ளது. குடிநீர் தேவைக்காக 174 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கன அடி. இதில் 584 கன அடி தண்ணீர் உள்ளது. பூண்டி ஏரியில் மதகு, கால்வாய் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் ஏரியில் உள்ள தண்ணீர் முழுவதையும் புழல், செம்பரம்பாக்கம் ஏரிக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது.

    ஏரியில் இருந்து 315 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்து 25 கன அடியாக உள்ளது. சோழவரம் ஏரியில் தண்ணீர் இருப்பு 133 மி.கன அடியாகவும் (மொத்த கெள்ளளவு 1081 மி.கன அடி), கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரியில் தண்ணீர் இருப்பு முழு கொள்ளளவு 500 மி.கன அடியாகவும் இருக்கிறது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு பலத்த மழை கொட்டுகிறது.
    • திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை கொட்டியது.

    செங்குன்றம்:

    வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு பலத்த மழை கொட்டுகிறது. இதேபோல் நேற்று மதியம் கனமழை கொட்டி தீர்த்தது. மாலை வரை பல இடங்களில் விட்டு விட்டு மழை நீடித்தது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை கொட்டியது. புழல், ஆவடி, சோழவரம், பொன்னேரி, திருவாலங்காடு, திருத்தணி, தாமரைப்பாக்கம், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை பகுதியில் மழை வெளுத்து வாங்கியது.

    கனமழை காரணமாக தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 70 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு: -

    கும்மிடிப்பூண்டி - 6

    பள்ளிப்பட்டு - 10

    ஆர்.கே.பேட்டை - 12

    சோழவரம் - 35

    பொன்னேரி - 10

    புழல் - 47

    ஜமீன் கொரட்டூர் - 17

    பூந்தமல்லி - 17

    திருவாலங்காடு - 30

    திருத்தணி - 16

    பூண்டி - 12

    தாமரைப்பாக்கம் - 39

    திருவள்ளூர் - 24

    ஊத்துக்கோட்டை - 16

    ஆவடி - 70

    • விநாயகர் சிலைகள் பழவேற்காடு கடலில் நாளையும் மற்றும் 4-ந் தேதியும் கரைக்கப்படுகிறது.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செபாஸ் கல்யாண் கடற்கரை பகுதியில் ஆய்வு செய்தார்.

    பொன்னேரி:

    விநாயகர் சதுர்த்தியையொட்டி பொன்னேரி, மீஞ்சூர் ஜனப்ப சத்திரம், தச்சூர், திருப்பாலைவனம் மெதுர் பழவேற்காடு காட்டூர், அத்திப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டன.

    இந்த சிலைகள் பழவேற்காடு கடலில் நாளையும் மற்றும் 4-ந் தேதியும் கரைக்கப்படுகிறது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செபாஸ் கல்யாண் கடற்கரை பகுதியில் ஆய்வு செய்தார்.

    அப்போது விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை அமைதியாக நடத்துவது, கடலில் ஒதுக்கப்பட்ட இடங்களில் சிலைகளை கரைப்பது, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வண்ணம் தடுப்பு அமைப்பு ரோந்து பணியில் ஈடுபடுவது, தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் இருப்பது, மருத்துவ குழுவினர், ஆம்புலன்ஸ், கடலில் பாதுகாப்பிற்காக, மீனவர்கள் படகுடன் தயார் நிலையில் இருப்பது குறித்து ஆலோசனை செய்தார்.

    டி.எஸ்.பி. சாரதி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். அப்போது பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார், திருப்பாலைவனம் இன்ஸ்பெக்டர் சின்னத்துரை மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • அரிசி ஆலையில் நேற்று காலை நெல் மூட்டைகளை அடுக்கி வைத்துவிட்டு தொழிலாளி அருகில் அமர்ந்து கொண்டு இருந்தார்.
    • எதிர்பாராத விதமாக மூட்டைகள் சரிந்து வாலிபர் மீது விழுந்தது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம், மாளந்தூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலை ஒன்று இயங்குகிறது. இங்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த காளி முக்கியா (வயது 25) என்ற வாலிபர் தனது குடும்பத்துடன் கடந்த 2 ஆண்டுகளாக தங்கி இருந்து பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில், நேற்று காலை அரிசி ஆலையில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்துவிட்டு அருகில் அமர்ந்து கொண்டு இருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக மூட்டைகள் சரிந்து வாலிபர் மீது விழுந்தது. இதில் மூச்சு திணறி உயிருக்கு போராடிய அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இந்த விபத்து குறித்து வாலிபரின் சகோதரி நித்திஷ் முக்கியா பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஜயா உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தனது மகள் வீட்டிற்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றிருந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே புலியூர் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் விஜயா (வயது 69). இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த மாதம் 11-ந் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு சென்னை முகப்பேரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றிருந்தார்.

    இந்த நிலையில், நேற்று வீட்டிற்கு வந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ரொக்க பணம் ரூ.10 ஆயிரம், வெள்ளி பொருட்கள் விலை உயர்ந்த சேலைகள் உள்ளிட்டவைகளை திருடி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து வெங்கல் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • ஊத்துக்கோட்டை பழைய பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென இருவரையும் வழிமறித்தது.
    • அவர்களது கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ராபின், கமல் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.

    ஊத்துக்கோட்டை:

    திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மகன் ராபின். 24 வயதான இவர் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள புதுவாயலில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ராபினுக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    இந்த நிலையில் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பொந்தவாக்கத்தில் ராபினின் நண்பர் ஒருவரின் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இது தொடர்பாக நடந்த விருந்தில் கலந்து கொள்வதற்காக ராபின் சென்றிருந்தார். விருந்து நிகழ்ச்சி முடிவடைந்ததும் ராபின், தனது நண்பர் கமலுடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    ஊத்துக்கோட்டை பழைய பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென இருவரையும் வழிமறித்தது.

    அவர்களது கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ராபின், கமல் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். ஆனால் 4 பேர் கும்பல் ராபினை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது.

    இதில் பலத்த காயம் அடைந்த ராபின் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஊத்துக்கோட்டை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொலையுண்ட ராபினின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பெண் தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக ராபினுடன் திருமண விருந்தில் பங்கேற்றவர்கள் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ராபின் வேலை செய்து வந்த தனியார் நிறுவனத்தில் தான் பெண் தொடர்பாக அவருக்கும் வேறு சிலருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாகவே ராபின் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக ஊத்துக்கோட்டை போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    கொலையாளிகள், ராபினை வெட்டிக்கொன்று விட்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர். கொலை சம்பவம் நள்ளிரவு 11 மணி அளவில் நடைபெற்றுள்ளது.

    இதைத் தொடர்ந்து கொலை நடந்த நேரத்தில் அப்பகுதியில் சுற்றி திரிந்தவர்கள் யார்-யார்? என்பது பற்றி செல்போன் டவர் மூலமாகவும் போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் முடுக்கி விடப்பட்டு உள்ளனர்.

    ஊத்துக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தக் கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது 3269 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
    • சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் 132 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னைக்கு நீர் வழங்கும் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.

    மேலும் கிருஷ்ணா நீர் தொடர்ந்து பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. இந்த ஏரிகளிலும் 90 சதவீதம் தண்ணீர் உள்ளது.

    பூண்டியில் உள்ள சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் 3231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டது. இதில் 600 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. சென்னை மக்கள் குடிநீருக்காக 315 கன அடி நீர் வெளியேற்றப்படுகின்றது. இது 18.57 சதவீதம் ஆகும்.

    புழல் ஏரியில் மொத்தக் கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது 3002 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 256 கன அடி நீர் வருகிறது. 205 கன அடி சென்னை மக்களின் குடிநீருக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் 90.97 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தக் கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது 3269 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 60 கன அடியாக உள்ளது. சென்னை மக்களின் குடிநீருக்காக 176 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது 89.69 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

    சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் 132 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. இதனால் 12.21 சதவீதம் தண்ணீர் உள்ளது.

    தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவு 500 மில்லியன் கன அடி. தற்போது இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டியதாலும் 40 கன அடி நீர் வருவதாலும் 30 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் தென்னரசு.
    • தமிழக அரசுக்கும் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசுக்கும் நன்றியை தெரிவித்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் தென்னரசு. கூலித்தொழிலாளி. இவரது மகன் லோகேஷ்.

    இவர் 2018-2019-ம் கல்வியாண்டில் பொன்னேரி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் பாடப் பிரிவில் சேர்ந்து படித்து வந்தார்.

    3 செமஸ்டர்கள் முடித்த நிலையில் தனது 17 வயதில் லோகேஷ் திருநங்கையாக மாற்றம் அடைவது தெரிய வந்தது. அதனையடுத்து 18 வயதில் லோகேஷ் முழுமையாக திருநங்கையாக மாறியுள்ளான்.

    இதனால் 2-ம் ஆண்டில் வகுப்பறைக்குள் செல்ல அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார்.

    இந்நிலையில் 2020-21 மற்றும் 2021-22 கல்வியாண்டில் கொரோனா காரணமாக கல்லூரியில் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    அதனையடுத்து 2022- 2023-ம் கல்வியாண்டில் ஏதேனும் பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்று எண்ணிய லோகேஷ் திருநங்கையாக மாறியதால் தனது பெயரை ஓவியா என பெயர் மாற்றம் செய்து பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரியில் சேருவதற்காக விண்ணப்பித்துள்ளார்.

    ஆனால் திருநங்கைகளுக்கான இட ஒதுக்கீட்டில் கல்லூரியில் சேர 5 நாட்கள் அதிகமாக இருப்பதால் சேர்க்கைக்கு வயது இல்லை எனக் கூறி நிராகரித்ததாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பு படித்தே ஆக வேண்டும் என்ற வைராக்கியத்தில் திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசை நேரில் சந்தித்து ஓவியா கோரிக்கை விடுத்தார்.

    அதனையடுத்து கலெக்டர் பரிசீலனை செய்து தமிழக அரசின் உயர் கல்வித்துறையின் ஒப்புதலோடு, அந்த திருநங்கை ஓவியாவுக்கு கருணை அடிப்படையில் பட்டப் படிப்பு பயில்வதற்கு ஏதுவாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரியில் பி.எஸ்.சி கணிதவியல் படிப்பதற்காக இடம் ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையை வழங்கினார்.

    இதனால் திருநங்கை ஓவியா தமிழக அரசுக்கும் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசுக்கும் நன்றியை தெரிவித்தார்.

    • ஆசிரியர்கள் கழிப்பறை செல்லும் போது கதவை வெளியே தாழ்ப்பாள் போட்டுவிட்டு செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
    • கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் பஸ் நிலையம் அருகே ஜெய்கோபால் கரோடியா என்ற அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் 3 மாணவர்கள் அங்கு பாடம் நடத்தும் ஆசிரியைகளிடமும், மாணவிகளிடமும் தகாத முறையில் நடப்பதாக புகார் எழுந்தது.

    மேலும் ஆசிரியர்கள் கழிப்பறை செல்லும் போது கதவை வெளியே தாழ்ப்பாள் போட்டுவிட்டு செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அந்த 3 மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் அறிவுரை சொன்னார்கள். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. மாறாக மற்ற மாணவர்களை துன்புறுத்தினார்கள். இதை தட்டிக் கேட்ட ஆசிரியர்களை மிரட்டினார்கள்.

    மேலும் மற்ற வகுப்புகளில் சென்று அமர்ந்து ஆசிரியர்களுக்கு எதிரான கருத்துக்களை கூறி அனைவரையும் தொந்தரவு செய்தனர். இந்தநிலையில் கடந்த வாரம் 3 மாணவர்களும் சேர்ந்து சில ஆசிரியர்களை கழிவறையில் வைத்து பூட்டினார்கள். இதை ஆசிரியர்கள் கண்டித்த போது மீண்டும் அவர்களை மிரட்டினார்கள்.

    இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் இதுபற்றி போலீசில் புகார் அளிக்க முடிவு செய்தனர்.

    அதன்படி பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் இதுகுறித்து திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி ஆலோசனையின் பேரில் இன்ஸ்பெக்டர் காதர் மீரான் இது குறித்து ராயபுரத்தில் உள்ள குழந்தை நல அலுவலர் லலிதாவிடம் புகாரை அனுப்பினார். அவர் மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் அழைத்து இது சம்பந்தமாக விசாரணை நடத்தினார். பின்னர் 3 மாணவர்களையும் கைது செய்து கெல்லீஸ் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினார்.

    ×