என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊத்துக்கோட்டையில் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் வெட்டிக்கொலை
- ஊத்துக்கோட்டை பழைய பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென இருவரையும் வழிமறித்தது.
- அவர்களது கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ராபின், கமல் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.
ஊத்துக்கோட்டை:
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மகன் ராபின். 24 வயதான இவர் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள புதுவாயலில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ராபினுக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இந்த நிலையில் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பொந்தவாக்கத்தில் ராபினின் நண்பர் ஒருவரின் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இது தொடர்பாக நடந்த விருந்தில் கலந்து கொள்வதற்காக ராபின் சென்றிருந்தார். விருந்து நிகழ்ச்சி முடிவடைந்ததும் ராபின், தனது நண்பர் கமலுடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
ஊத்துக்கோட்டை பழைய பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென இருவரையும் வழிமறித்தது.
அவர்களது கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ராபின், கமல் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். ஆனால் 4 பேர் கும்பல் ராபினை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது.
இதில் பலத்த காயம் அடைந்த ராபின் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஊத்துக்கோட்டை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொலையுண்ட ராபினின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பெண் தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக ராபினுடன் திருமண விருந்தில் பங்கேற்றவர்கள் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ராபின் வேலை செய்து வந்த தனியார் நிறுவனத்தில் தான் பெண் தொடர்பாக அவருக்கும் வேறு சிலருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே ராபின் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக ஊத்துக்கோட்டை போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
கொலையாளிகள், ராபினை வெட்டிக்கொன்று விட்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர். கொலை சம்பவம் நள்ளிரவு 11 மணி அளவில் நடைபெற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து கொலை நடந்த நேரத்தில் அப்பகுதியில் சுற்றி திரிந்தவர்கள் யார்-யார்? என்பது பற்றி செல்போன் டவர் மூலமாகவும் போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் முடுக்கி விடப்பட்டு உள்ளனர்.
ஊத்துக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.






