என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • மத்தூர் ரெயில்வே கேட்ட அருகே ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் கைது செய்து 2 கிலோ கஞ்சாைவ பறிமுதல் செய்தனர்.

    திருத்தணி:

    திருத்தணி அடுத்த மத்தூர் ரெயில்வே கேட்ட அருகே ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் சோதனை செய்தபோது அவர் கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    விசாரணையில் அவர், திருத்தணி அடுத்த பட்டாபி ராமபுரம் பகுதியை சேர்ந்த அபி என்கிற பிரிதிவ்ராஜ் என்பதும் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து 2 கிலோ கஞ்சாைவ பறிமுதல் செய்தனர்.

    • திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தமிழக-ஆந்திர எல்லை பகுதி ஆகும்.
    • எளாவூர் சோதனைசாவடி மற்றும் பிற பகுதிகளில் தொடர்ந்து தனிப்படை போலீசார் கஞ்சா வேட்டை நடத்தி பலரை கைது செய்து வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தமிழக-ஆந்திர எல்லை பகுதி ஆகும். இந்த வழியாக ஆந்திராவில் இருந்து சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு தொடர்ந்து மோட்டார் சைக்கிள், பஸ்கள் உள்பட இதர வாகனங்களில் கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. இத்தகைய போதை பொருட்களை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியா சக்தி மேற்பார்வையில் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள எளாவூர் சோதனைசாவடி மற்றும் பிற பகுதிகளில் தொடர்ந்து தனிப்படை போலீசார் கஞ்சா வேட்டை நடத்தி பலரை கைது செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூர், சூலூர்பேட்டை பகுதிகளில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி செல்லும் மின்சார ரெயில்கள் மூலமாகவும் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியா சக்தி தலைமையில் ஆரம்பாக்கம் ரெயில் நிலையத்தில் ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி வந்த மின்சார ரெயிலில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் ரெயில் மூலம் சென்னைக்கு கடத்த முயன்ற 8 கிலோ கஞ்சா பொட்டலங்கள் சிக்கியது. இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்சார ரெயிலில் கஞ்சா கடத்திய மதுரை இந்திரா நகரை சேர்ந்த கர்ணன் (வயது 38), ஒடிசாவை சேர்ந்த சபன் குமார் சாகு (30) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் போலீசார் கைப்பற்றினர்.

    • திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த புலியூர் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் விஜயா.
    • வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த புலியூர் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் விஜயா (வயது 69). இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த மாதம் 11-ந்தேதி வீட்டை பூட்டிக்கொண்டு சென்னை முகப்பேரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றிருந்தார். இந்த நிலையில், நேற்று வீட்டுக்கு வந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் பூட்டை உடைத்து கொண்டு உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம், வெள்ளிப்பொருட்கள், விலை உயர்ந்த சேலைகள் உள்ளிட்டவைகளை திருடி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடந்த வருடம் ஜூன் மாதம் கம்பெனியில் வாகனம் மோதி காலில் அடிபட்டு சிகிச்சை பெற்றார்.
    • கிராம மக்கள் ஒன்று திரண்டு கம்பெனிக்கு வரும் கண்டெய்னர் லாரிகளை சிறை பிடித்து யார்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அருகே உள்ள நாலூர் கம்மார் பாளையத்தில் கண்டெய்னர் யார்டு செயல்பட்டு வருகிறது. இங்கு காட்டுப்பள்ளி, சென்னை துறைமுகத்தில் இருந்து கண்டெய்னர் மூலம் கப்பல்களில் வெளிநாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றது.

    இதில் 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த கண்டெய்னர் யார்டில் நாலூர் பகுதியை சேர்ந்த லோகநாதன் (44) லோடு மேன் ஆக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த வருடம் ஜூன் மாதம் கம்பெனியில் வாகனம் மோதி காலில் அடிபட்டு சிகிச்சை பெற்றார். இதனால் சில மாதங்களாக அதே கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று கம்பெனி நிர்வாகத்திடம் குறைந்த சம்பளத்தில் குடும்பம் நடத்த முடிய வில்லை என்று கூறி சம்பள உயர்வு, பணி நிரந்தரம், நஷ்டஈடு, காப்பீடுத் தொகை, கேட்டு கம்பெனியில் விஷம் குடித்து மயக்கம் அடைந்தார். அவரை மீஞ்சூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி கிராம மக்கள் ஒன்று திரண்டு கம்பெனிக்கு வரும் கண்டெய்னர் லாரிகளை சிறை பிடித்து யார்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து வந்த மீஞ்சூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிப்பதாக தெரிவித்ததின் பேரில் போராட்டம் கைவிடபட்டது. இது குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஊராட்சி அங்கன்வாடியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது.

    பென்னேரி:

    மீஞ்சூர் அடுத்த நெய்த வாயல் ஊராட்சி அங்கன்வாடியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது.

    மீஞ்சூர் ஒன்றியத்தில் 207 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 165 பணியாளர்கள் உள்ள நிலையில் ஊட்டச்சத்து மாத விழா குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தொடக்க விழா நடைபெற்றது. துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு விழிப்புணர்வு ஜோதியை ஏற்றி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஊட்டச் சத்து உறுதிமொழி ஏற்கப் பட்டது.

    இதில் மீஞ்சூர் சேர்மன் ரவி, ஊராட்சி மன்ற தலைவர் பாலன், துணைத் தலைவர் ராஜேஷ், அங்கன்வாடி ஒருங்கி ணைப்பாளர் மோகனா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பருவமழையின் போது முன்னெச்சரிக்கையாக பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.
    • 26 தலைப்புகளில் பேரிடர் காலத்தில் உடனடியாக சென்று பொது மக்களை உரிய முறையில் மீட்கும் வகையில் பயிற்சி வழங்கி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாக்க வெள்ளத் தடுப்பு மேலாண்மை ஒத்திகை பயிற்சி பொன்னேரியை, அடுத்த விச்சூர், ஏ.ரெட்டி பாளையம், அத்திப்பட்டு புதுநகர் ஆகிய 3 பகுதியில் நடைபெற்றது.

    கடந்த ஆண்டு பருவமழையின் போது ஆரணி, மற்றும் கொசஸ்தலை ஆற்றின் வெள்ளப்பெருக்கால் ஆற்றின் கரைகள் உடைந்து, ஏ. ரெட்டிபாளையம், அத்திப்பட்டு, மணலி புதுநகர், விச்சூர், சுப்பாரட்டி பாளையம், உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

    இதனை கருத்தில் கொண்டு வருகிற பருவமழையின் போது முன்னெச்சரிக்கையாக பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதில் வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றி பேரிடர் மேலாண்மை துறையினர் பயிற்சி அளித்தனர்.இதில் ஆர்.டி.ஓ. காயத்ரி, வட்டாட்சியர் செல்வகுமார் சேர்மன் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன், ஊராட்சித் தலைவர் கவிதா மனோகரன், தீயணைப்பு துறை அதிகாரி சம்பத், அத்திப்பட்டு ஊராட்சி துணைத் தலைவர் எம்.டி. ஜி. கதிர்வேல், ரெட் கிராஸ் உறுப்பினர் கோளூர் குமார், வருவாய் ஆய்வாளர் ரகு, உள்பட வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மின்துறை, மீன்வளத்துறை, கால்நடைத்துறை, சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்பு துறை மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கொட்டும் மழையிலும் விடாமல் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

    தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் ஆபத்து கால நண்பன் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக 400 தன்னார்வலர்களுக்கு 12 நாட்கள் பேரிடர் மேலாண்மை பயிற்சியினை வழங்க திட்டமிட்டப்பட்டு அவர்களுக்கு நிலச் சரிவு, வெள்ளம், சுனாமி, இடி மற்றும் மின்னல், மீட்பு போன்ற 26 தலைப்புகளில் பேரிடர் காலத்தில் உடனடியாக சென்று பொது மக்களை உரிய முறையில் மீட்கும் வகையில் பயிற்சி வழங்கி வருகின்றனர்.

    உத்திரமேரூர் வட்டத்தில் வருகிற 12-ந்தேதி வரை மீனாட்சியம்மாள் கல்வியியல் கல்லூரியில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பயிற்சி முடிவில் பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை, சான்றிதழ் மற்றும் அடிப்படை மீட்பு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. மேற்படி பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் பேரிடர் காலங்களில் பொது மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருப்பார்கள் என்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

    • தொடுகாடு கிராமத்தில் உள்ள ஸ்ரீமான் ஏரி நீர்நிலை புறம்போக்கு அரசு நிலம் உள்ளது.
    • நீர் நிலை புறம்போக்கு பகுதியில் குடிசை மற்றும் வேலிகளை அமைத்து ஆக்கிரமிப்பு செய்தது தெரியவந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த தொடுகாடு கிராமத்தில் உள்ள ஸ்ரீமான் ஏரி நீர்நிலை புறம்போக்கு அரசு நிலம் உள்ளது. இந்த நிலம் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது.

    இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன் தலைமையில் வெங்கத்துார் மண்டல துணை வட்டாட்சியர் சுந்தர் மற்றும் கிராம நிர்வாக அலுவலவர்கள் குமரன், காளிராஜன், உமா, விஜய் உட்பட வருவாய்த்து றையினர் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது நீர் நிலை புறம்போக்கு பகுதியில் குடிசை மற்றும் வேலிகளை அமைத்து ஆக்கிரமிப்பு செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து வருவாய் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதன் மதிப்பு ரூ.10 லட்சம் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

    • முகிந்தர் அமர்நாத் கடந்த சில நாட்களுக்கு முன்பு நரசிங்க புரத்தை சேர்ந்த நபரை கத்தியைக்காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார்.
    • மப்பேடு போலீசார் திருவள்ளூர் ஆர்.டி.ஓ.விடம் நன்னடத்தை பிணைய பத்திரத்தை மீறிய முகிந்தர் அமர்நாத் மீது நடவடிக்கை எடுக்ககோரி மனு அளித்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முகிந்தர் அமர்நாத் (25). இவர் கடந்த ஜனவரி மாதம் அப்பகுதியை சேர்ந்த நபரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் மப்பேடு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    மேலும் இவர் அடிக்கடி குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த காரணத்தால் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீண்டும் ஜாமீனில் வெளியே வந்தார். ஜாமீனில் வந்த அவர் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்து வந்தார்.

    இதனைத்தொடர்ந்து அவரை திருவள்ளூர் ஆர்.டி.ஓ இதுபோன்ற குற்றசெயல்களில் ஒரு வருடம் வரை ஈடுபடக்கூடாது என எச்சரித்து நன்னடத்தை உறுதிமொழி பிணைய பத்திரம் பெற்று அனுப்பி வைத்தார்.

    இந்த நிலையில் முகிந்தர் அமர்நாத் கடந்த சில நாட்களுக்கு முன்பு நரசிங்க புரத்தை சேர்ந்த நபரை கத்தியைக்காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார். இதைத் தொடர்ந்து மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மீண்டும் முகிந்தர் அமர்நாத்தை கைது செய்து சிறையில் அடைத்தார். இதுகுறித்து மப்பேடு போலீசார் திருவள்ளூர் ஆர்.டி.ஓ.விடம் நன்னடத்தை பிணைய பத்திரத்தை மீறிய முகிந்தர் அமர்நாத் மீது நடவடிக்கை எடுக்ககோரி மனு அளித்தார்.

    இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட திருவள்ளூர் ஆர்.டி.ஓ அசோகன் நன்னடத்தை பிணைய பத்திர விதியை மீறி குற்றசெயலில் ஈடுபட்டதால் முகிந்தர் அமர்நாத்தை ஒரு வருடம் ஜெயிலில் அடைக்கவும் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

    • பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்பட வில்லை.
    • பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சரியாக மூட வேண்டும் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் பொன்னேரி நெடுஞ்சாலை எல்.என்.ஜி. கல்லூரி அருகே சாலையின் அருகில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்பட வில்லை.

    இதனால் அத்திப்பட்டில் இருந்து ஆந்திர மாநிலம் தடாவிற்கு பொருட்களை ஏற்றி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி பள்ளத்தில் சிக்கியது.

    அருகிலுள்ள டிரான்ஸ் பார்மரில் மோதாமல் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இப்பகுதியில் தொடர்ந்து கனரக வாகனங்கள் பள்ளத்தில் சிக்கிக் கொள்வதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.

    மேலும் போக்குவரத்திற்கு இடையூறாகவும் உள்ளதால் நகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சரியாக மூட வேண்டும் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

    • பழவேற்காடு கடலில் விநாயகர் சிலையை கடலில் கரைத்து விட்டு வீடு திரும்பினார்.
    • விநாயகர் சிலையை கரைத்து வீடு திரும்பிய நிலையில் சந்தோஷ் உயிரிழந்ததால் கிராமத்தினர் மிகவும் சோகத்தில் உள்ளனர்.

    பொன்னேரி:

    பழவேற்காடு அடுத்த பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (21) விவசாயி. நேற்று மாலை பழவேற்காடு கடலில் விநாயகர் சிலையை கடலில் கரைத்து விட்டு வீடு திரும்பினார்.

    அப்போது தவறி விழுந்து டிராக்டர் சக்கரத்தில் சிக்கினார். இதில் சந்தோஷ் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பாலை வனம் போலீசார் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விநாயகர் சிலையை கரைத்து வீடு திரும்பிய நிலையில் சந்தோஷ் உயிரிழந்ததால் அப்பகுதியில் கிராமத்தினர் மிகவும் சோகத்தில் உள்ளனர்.

    • ஊத்துக்கோட்டை, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மகன் ராபின்.
    • செல்போனை கைப்பற்றியும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மகன் ராபின் (வயது 24). இவர் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள புதுவாயலில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு அவர் போந்தவாக்கத்தில் நடந்த நண்பரின் திருமண விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மற்றொரு நண்பரான கமல் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்.

    ஊத்துக்கோட்டை பழைய பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கும்பல் திடீரென அவர்களை வழிமறித்தனர். அவர்கள் ராபினை மட்டும் குறிவைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இந்த கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையுண்ட ராபினின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது.

    நேற்று மாலை பரிசோதனை முடிந்து ராபினின் உடலை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். ஆனால் அவர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கொலைக் குற்றவாளிகளை கைது செய்யும் வரை ராபினின் உடலை வாங்க மாட்டோம் என்று அவர்கள் திட்ட வட்டமாக தெரிவித்தனர். இதையடுத்து ராபினின் உடல் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ராபின் கடைசியாக யாரிடம் பேசினார். அவருக்கு யாருடனுடம் மோதல் உள்ளதா? அவர் வேலை பார்க்கும் இடத்தில் தகராறு ஏற்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. அவரது செல்போனை கைப்பற்றியும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • கொசு ஒழிப்பு ஒப்பந்த பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • 55 ஊராட்சிகளில் கடும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியத்தில் சுகாதாரத் துறை சார்பில் 40 கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஒப்பந்த பணியாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.

    இவர்கள் ஒன்றியத்திற்குட்பட்ட 55 ஊராட்சிகளில் கொசு ஒழிப்பு, லார்வாக்களை அழித்தல், பிளீச்சிங் பவுடர் தெளித்தல், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்

    இந்த நிலையில் நாள் ஒன்றுக்கு ரூ.431 வீதம் கடந்த மூன்று மாதமாக ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும், ஊதியத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று தெரிகிறது.

    இதையடுத்து கொசு ஒழிப்பு ஒப்பந்த பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கொசு ஒழிப்பு பணி முடங்கி உள்ளது.

    இந்த நிலையில் மீஞ்சூர் அடுத்த நெய்த வாயல் ஊராட்சியில் நடந்த விழாவில் கலந்து கொண்ட பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரை கொசு ஒழிப்பு பணியாளர்கள் சந்தித்து மனு அளித்தனர்.

    இது குறித்து ஒப்பந்த பணியாளர்கள் கூறும் போது, 'குறைந்த சம்பளத்தில் வேலை செய்து வருகிறோம். மூன்று மாதமாக சம்பளம் வழங்காததால் குழந்தையின் படிப்பு, குடும்ப செலவுக்கு மிகவும் கஷ்டப்படுகிறோம். கடன் வாங்கி குடும்பம் நடத்தி வருகிறோம்' என்றனர்.

    கொசு ஒழிப்பு பணியாளர்கள் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 55 ஊராட்சிகளில் கடும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    ×