என் மலர்
திருவள்ளூர்
- சூப்பிரண்டு அலுவல தனிப்படை போலீசார், சந்தேகத்திற்கு இடமான ஒரு நபரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
- கஞ்சாவுடன் சிக்கிய ஒடிசாவை சேர்ந்த அஜய்குமார் என்பவரை கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை ரெயில் நிலையம் அருகே மாவட்ட சூப்பிரண்டு அலுவல தனிப்படை போலீசார், சந்தேகத்திற்கு இடமான ஒரு நபரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 24 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சாவுடன் சிக்கிய ஒடிசாவை சேர்ந்த அஜய்குமார் (வயது 21) என்பவரை கைது செய்தனர். கஞ்சாவையும் போலீசார் கைப்பற்றினர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் சின்னம்பேடு துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றது. இதையொட்டி துணைமின் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆரணி, சின்னம்பேடு, அகரம், போந்தவாக்கம், கொசவன்பேட்டை, காரணி, மங்களம், கொள்ளுமேடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று ஆரணி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மதனகோபால் தெரிவித்துள்ளார்.
- ஊத்துக்கோட்டை பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.
- அடையாள அட்டைகளை வார்டு கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் கலாதரன் வழங்கினார்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் அப்துல் ரஷீத் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் குமரவேல், செயல் அலுவலர் கலாதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அருணாச்சலம், ஆனந்தி ஆகியோர் பேசும் போது மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் மற்றும் அம்பேத்கர் படங்களை மன்றக் கூட்டத்தில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தி.மு.க. கவுன்சிலர் கோகுலகிருஷ்ணன் பேசும்போது பேரூராட்சியில் 100 கிலோ வாட் சோலார் மின்உற்பத்தி மையத்தை ஏற்படுத்தினால் பேரூராட்சி நிர்வாகத்தின் மின் கட்டணத்தை வெகுவாக குறைக்கலாம் என்று தெரிவித்தார். கூட்ட முடிவில் அடையாள அட்டைகளை வார்டு கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் கலாதரன் வழங்கினார்.
- செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் பாதையில் இருந்து கால்வாய் அமைக்க நீர் வளத்துறை முன்மொழிந்து உள்ளது.
- காவனூர் அருகே செம்பரம்பாக்கம் உபரிநீர் செல்லும் பாதையின் குறுக்கே 40 மீட்டர் அகலத்தில் சிறிய தடுப்பணை கட்ட திட்டமிடப்பட்டு இருக்கிறது.
பூந்தமல்லி:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி ஆகும். ஏரியில் தற்போது 3,231 மி.கன அடி தண்ணீர் உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி முழுவதும் நிரம்பும்போது உபரி நீர் அடையாறு ஆற்றில் திறக்கப்பட்டு வீணாக கடலில் கலந்து வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது கல்குவாரி குட்டை நீர் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்தும், ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலமாகவும் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும்போது உபரி நீரை வீணாக வெளியேற்றுவதை தடுக்கும் வகையில் மாங்காடு அருகே சிக்கராயபுரத்தில் உள்ள கைவிடப்பட்ட குவாரிகளுக்கு தண்ணீரை அனுப்பி சேமித்து வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்காக செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் பாதையில் இருந்து கால்வாய் அமைக்க நீர் வளத்துறை முன்மொழிந்து உள்ளது.
காவனூர் அருகே செம்பரம்பாக்கம் உபரிநீர் செல்லும் பாதையின் குறுக்கே 40 மீட்டர் அகலத்தில் சிறிய தடுப்பணை கட்ட திட்டமிடப்பட்டு இருக்கிறது.
இதன் மூலம் கால்வாயில் எளிதாக தண்ணீர் செல்லும். ரூ.35 கோடி மதிப்பில் நடைபெறும் இந்த திட்டத்தின் மூலம் சென்னைக்கு குடிநீர் வழங்கும் மற்றொரு ஆதாரத்தை உருவாக்கி, அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு தடுக்கப்படும்.
இதன் மூலம் கைவிடப்பட்ட குவாரிகளில் 400 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமிக்க முடியும்.
இந்த திட்டம் 8 அல்லது 9 மாதங்களில் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- முனுசாமி மகள் நதியாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.
- நகை கொள்ளை குறித்து ஊத்துக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை விசாரணை நடத்தி வருகிறார்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலேஸ்வரம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி . விவசாயி. இவரது மகள் நதியாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. இதனால் முனுசாமி கிடாவெட்டி விருந்து அளித்தார். பின்னர் இரவு அனைவரும் தூங்கி விட்டனர். அப்போது அவர்கள் கதவை திறந்து வைத்து தூங்கியதாக தெரிகிறது. இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 20 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை விசாரணை நடத்தி வருகிறார்.
- பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி ராம்குமார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பத்தூர்:
முகப்பேர் கிழக்கு, கோல்டன் ஜார்ஜ் நகர் , பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி ராம்குமார். என்ஜினீயரான இவர் போரூரில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் விநாயகர் சதுர்த்தியையொட்டி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான தேனிக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 20 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.20ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. இது குறித்து ஜெ.ஜெ நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 1-வது நிலையின் 3-வது அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
- தொழில் நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
பொன்னேரி:
அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இதில் உள்ள இரு நிலைகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் 1-வது நிலையின் 3-வது அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்ட 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தொழில் நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
- திருத்தணி முருகன் கோவில் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழுகிறது.
- புதுமண ஜோடியும், அவர்களது உறவினர்களும் கோவிலில் தரிசனம் செய்ய ஒரே நேரத்தில் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
திருவள்ளூர்:
திருத்தணி முருகன் கோவில் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழுகிறது.
முருகப்பெருமான் மணக்கோலத்தில் காட்சி அளிப்பதால் வெளியூர்களில் இருந்து வரும் புதுமண ஜோடிகள் திருத்தணி பகுதியில் அதிக அளவில் திருமணம் செய்து முருகப்பெருமானை தரிசித்து செல்கிறார்கள். இதனால் முகூர்த்த தினங்கள் கோவிலில் கூட்டம் அலைமோதும்.
இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் திருத்தணி கோவிலில் சுமார் 30-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
இதேபோல் கோவிலை சுற்றி உள்ள சுமார் 70 மண்டபங்களில் திருமணம் நடைபெற்றது. இதனால் நேற்று இரவு முதலே திருமண கோஷ்டியினர் திருத்தணியில் பஸ், கார்களில் வந்து குவிந்தனர்.
இதன் காரணமாக திருத்தணி நகரில் அனைத்து இடங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புதுமண ஜோடியும், அவர்களது உறவினர்களும் கோவிலில் தரிசனம் செய்ய ஒரே நேரத்தில் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
- சோழவரம் பகுதிகளில் சேதுபதி மற்றும் முத்தரசன் ஆகியோர் 2 கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
- கானாஆதி கொலைக்கு பழிக்கு பழியாக ராபினை பின்தொடர்ந்து வந்து எதிர்தரப்பினர் தீர்த்து கட்டி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மகன் ராபின் (வயது 24 ). இவர் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயலில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
கடந்த 31-ந் தேதி இரவு ராபின், தனது நண்பரின் திருமண விருந்து நிகழ்ச்சியில் கலந்து விட்டு மோட்டார் சைக்கிளில் ஊத்துக்கோட்டை பழைய பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஊத்துக்கோட்டை துணை போலீஸ் கண்காணிப்பாளர் சந்திரகாசன், இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சந்திரகாசன், குமரவேல், இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை, தணிகைவேல் ஆகியோரின் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக சோழவரத்தை சேர்ந்த கார்த்திக் (23 ), மதுரையை சேர்ந்த சரவணன்( 26), ராகுல்( 26) ஆகிய 3 பேரை ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாராட்சி பகுதியில் போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் பழிக்குப்பழியாக ராபின் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.
சோழவரம் பகுதிகளில் சேதுபதி மற்றும் முத்தரசன் ஆகியோர் 2 கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர். இதில் கடந்த மாதம் சேதுபதி கும்பலை சேர்ந்த கானாஆதி என்பவர் மரக்காணம் அருகே கொலை செய்யப்பட்டார். முத்தரசன் தரப்பினர் இவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த கொலையில் முத்தரசன் கும்பலை சேர்ந்த காரனோடை பகுதியை சேர்ந்த மோகன் என்பவருக்கு முக்கிய பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. இவர் அடிக்கடி ஊத்துக்கோட்டை வரும்போது தற்போது கொலையுண்ட ராபினை சந்தித்து சென்றதாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி இரவு திருமண நிகழ்ச்சியில் மோகனும், ராபினும் கலந்து உள்ளனர். இதனை அறிந்து எதிர்கோஷ்டியினர் அவர்களை பின்தொடர்ந்து இருக்கிறார்கள். ஆனால் அப்போது மோகன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதையடுத்து கானாஆதி கொலைக்கு பழிக்கு பழியாக ராபினை பின்தொடர்ந்து வந்து எதிர்தரப்பினர் தீர்த்து கட்டி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதான 3 பேரையும் போலீசார் ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.
- கவரைப்பேட்டை அடுத்த தண்டலச்சேரியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது.
- போலீசார் மதுக்கடைக்குள் இருந்த 2 வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
கும்மிடிப்பூண்டி:
கவரைப்பேட்டை அடுத்த தண்டலச்சேரியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று இரவு விற்பனை முடிந்ததும் கடையை வழக்கம் போல் மூடிவிட்டு ஊழியர் சென்றார்.
இந்த நிலையில் நள்ளிரவு போலீசார் அவ்வழியே ரோந்து வந்தபோது டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளை போடப்பட்டு இருப்பதை கண்டனர். மேலும் கடையில் உள்ளே ஆட்கள் நடமாட்டம் இருப்பதும் தெரிந்தது.
இதையடுத்து போலீசார் மதுக்கடைக்குள் இருந்த 2 வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர்கள் பள்ளிக்கரணையை சேர்ந்த சதீஷ், விழுப்புரத்தை சேர்ந்த முனியன் என்பது தெரிவந்தது.
இருவரும் டாஸ்மாக் கடையின் சுவற்றைத் துளையிட்டு புகுந்து கல்லா பெட்டியில் இருந்த ரூ.14 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் மதுபாட்டில்களை கொள்ளையடித்தனர்.
ஆனால் மது பாட்டில்களை பார்த்ததும் மதுகுடிக்க ஆசைப்பட்ட அவர்கள்அங்கேயே சாவகாசமாக அமர்ந்து மது குடித்தனர். போதை ஏறியதால் தப்பி செல்வதை மறந்து அங்கேயே தொடர்ந்து மதுகுடித்தபடி இருந்து உள்ளனர்.
அந்த நேரத்தில் போலீசார் ரோந்து வந்த போது கொள்ளையர்கள் 2 பேரும் சிக்கிக் கொண்டனர். கைதான 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மீஞ்சூரை அடுத்த நந்தியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேஷ்.
- மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த நந்தியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேஷ், காண்டிராக்டரான இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் உறவினர் திருமணத்திற்கு வெளியூர் சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்த போது கதவு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4½ பவுன் நகை, ரூ.50 ஆயிரம் பணம் திருட்டுப் போய் இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சியினை வைத்து விசாரித்து வருகின்றனர்.
- திருவள்ளூரை அடுத்த பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்புன் செல்வன்.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்புன் செல்வன். இவர் ஆவடி போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 31-ந் தேதி அப்புன்செல்வன் பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி உள்ளார். சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் தாறுமாறாக வந்த கார் திடீரென போலீஸ்காரர் அப்புன்செல்வன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அப்புன் செல்வன் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி அப்புன்செல்வன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






