என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஊத்துக்கோட்டை வாலிபர் கொலையில் 3 பேர் கைது
- சோழவரம் பகுதிகளில் சேதுபதி மற்றும் முத்தரசன் ஆகியோர் 2 கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
- கானாஆதி கொலைக்கு பழிக்கு பழியாக ராபினை பின்தொடர்ந்து வந்து எதிர்தரப்பினர் தீர்த்து கட்டி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மகன் ராபின் (வயது 24 ). இவர் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயலில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
கடந்த 31-ந் தேதி இரவு ராபின், தனது நண்பரின் திருமண விருந்து நிகழ்ச்சியில் கலந்து விட்டு மோட்டார் சைக்கிளில் ஊத்துக்கோட்டை பழைய பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஊத்துக்கோட்டை துணை போலீஸ் கண்காணிப்பாளர் சந்திரகாசன், இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சந்திரகாசன், குமரவேல், இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை, தணிகைவேல் ஆகியோரின் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக சோழவரத்தை சேர்ந்த கார்த்திக் (23 ), மதுரையை சேர்ந்த சரவணன்( 26), ராகுல்( 26) ஆகிய 3 பேரை ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாராட்சி பகுதியில் போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் பழிக்குப்பழியாக ராபின் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.
சோழவரம் பகுதிகளில் சேதுபதி மற்றும் முத்தரசன் ஆகியோர் 2 கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர். இதில் கடந்த மாதம் சேதுபதி கும்பலை சேர்ந்த கானாஆதி என்பவர் மரக்காணம் அருகே கொலை செய்யப்பட்டார். முத்தரசன் தரப்பினர் இவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த கொலையில் முத்தரசன் கும்பலை சேர்ந்த காரனோடை பகுதியை சேர்ந்த மோகன் என்பவருக்கு முக்கிய பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. இவர் அடிக்கடி ஊத்துக்கோட்டை வரும்போது தற்போது கொலையுண்ட ராபினை சந்தித்து சென்றதாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி இரவு திருமண நிகழ்ச்சியில் மோகனும், ராபினும் கலந்து உள்ளனர். இதனை அறிந்து எதிர்கோஷ்டியினர் அவர்களை பின்தொடர்ந்து இருக்கிறார்கள். ஆனால் அப்போது மோகன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதையடுத்து கானாஆதி கொலைக்கு பழிக்கு பழியாக ராபினை பின்தொடர்ந்து வந்து எதிர்தரப்பினர் தீர்த்து கட்டி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதான 3 பேரையும் போலீசார் ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.






