என் மலர்
திருவள்ளூர்
- அம்பிகா வீட்டில் 8 பவுன் நகை, அரைகிலோ வெள்ளி பொருட்கள், ரொக்கப்பணம் ரூ.15 ஆயிரம் கொள்ளை போனது.
- பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரதாபன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள கொள்ளும்மேடு கிராமம்,பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் அம்பிகா. இவரது வீட்டில் கடந்த மாதம் 8-ந்தேதி 8 பவுன் நகை, அரைகிலோ வெள்ளி பொருட்கள், ரொக்கப்பணம் ரூ.15 ஆயிரம் கொள்ளை போனது.
இதுதொடர்பாக பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரதாபன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த கொள்ளை தொடர்பாக பெரியபாளையம் அருகே உள்ள பனையஞ்சேரி பெரியகாலனி,பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த பெயிண்டர் பிரகாஷ்(வயது30) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
- தனியார் நிறுவன ஊழியரான பூவேந்தனுக்கு கடன் தொல்லை இருந்தது.
- சின்னம்மாபேட்டை ரெயில்வே பாதை அருகே உள்ள நாகாத்தம்மன் கோவில் பின்புறம் மதுபானத்தில் விஷம் கலந்து குடித்து பூவேந்தன் தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர்:
ராணிப்பேட்டை மாவட்டம் பாடிநல்லூர் கிராமம், எஸ்.பி.நகர் பகுதி சேர்ந்தவர் பூவேந்தன் (வயது40). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு கடன் தொல்லை இருந்தது. இதனால் அவர் மனவேதனையில் இருந்தார்.
இந்த நிலையில் திருவாலங்காடு அருகே உள்ள சின்னம்மாபேட்டை ரெயில்வே பாதை அருகே உள்ள நாகாத்தம்மன் கோவில் பின்புறம் மதுபானத்தில் விஷம் கலந்து குடித்து பூவேந்தன் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து திருவாலங்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புதுவாயலில் இருந்து ஆரணி ஜி.என்.செட்டி தெரு நோக்கி வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.
- ரூ. 1 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலை பொருட்கள் மற்றும் மினிவேன் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி வழியாக குட்கா, புகையிலை கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சப்-இன்ஸ்பெக்டர் பிரதாபன், தலைமை காவலர்கள் தியாகராஜன்,செல்லமுத்து ஆகியோர் ஆரணி எஸ்.பி கோவில் தெரு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது புதுவாயலில் இருந்து ஆரணி ஜி.என்.செட்டி தெரு நோக்கி வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
இதையடுத்து வேன் டிரைவரான சென்னை கொடுங்கையூர், முத்தமிழ் நகர் பகுதியை சேர்ந்த சல்மான் ஷரீப், ஆரணி ஜி.என்.செட்டி தெருவில் மளிகை கடை நடத்தி வரும் இளவரசன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலை பொருட்கள் மற்றும் மினிவேன் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான இருவரும் பொன்னேரி சிறையில் அடைக்கப்பட்டனர்.
- திருவள்ளூரை சேர்ந்த காளிமுத்து பஸ்சை ஓட்டினார். பஸ்சில் 30 தொழிலாளர்கள் இருந்தனர்.
- கடை மூடப்பட்டு இருந்ததால் பெரிய விபத்து தடுக்கப்பட்டது.
திருவள்ளூர்:
ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தனியார் தொழிற் சாலையில் பணிபுரியும் 30 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று இன்று காலை திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.
திருவள்ளூரை சேர்ந்த காளிமுத்து பஸ்சை ஓட்டி னார். பஸ்சில் 30 தொழிலாளர்கள் இருந்தனர். திருவள்ளூரை அடுத்த தொடுகாடு தனியார் மருத்துவமனை அருகே வந்தபோது எதிரே வந்த வாகனத்துக்கு வழி விடுவதற்காக இடதுபுறமாக பஸ்சை டிரைவர் திருப்பினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தறிகெட்டு ஓடி சாலை ஓரத்தில் இருந்த ஓட்டலுக்குள் புகுந்தது.
கடை மூடப்பட்டு இருந்ததால் பெரிய விபத்து தடுக்கப்பட்டது. பஸ்சின் முன்பக்கம் நொறுங்கியதால் டிரைவர் காளிமுத்துவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் பஸ்சில் இருந்த 30 பணியாளர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
- மனவேதனையில் இருந்து வந்த வாலிபர் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருமழிசை பிரையாம்பத்து ஜவஹர் தெருவைச் சேர்ந்தவர் மனோகரன் (27). இவரது நண்பர் ஒருவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் இறந்து விட்டதால் மிகவும் மன உளைச்சல் அடைந்து வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.
இதனால் மனோகரனை வேலைக்கு செல்லுமாறு பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மனோகரன் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து வெள்ளவேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- முனீஸ்வரன் கோவிலை நிர்வாகிப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது.
- 3 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி அருகே உள்ள பர்மா நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா (வயது70). கட்டிட மேஸ்திரியான இவர் பொன்னேரி தச்சூர் சாலையில் சிற்றுண்டி வியாபாரமும் செய்து வந்தார்.
இவரது குடும்பத்தினர் வெளியூர் சென்று உள்ளனர். இதையடுத்து நேற்று மாலை சுப்பையா மட்டும் தனியாக தனது தள்ளுவண்டியில் அமர்ந்து இருந்தார்.
அப்போது அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்மகும்பல் முதியவர் சுப்பையாவை சுற்றி வளைத்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கொலை கும்பலிடம் இருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர்.
இதில் தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த சுப்பையா ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்தார்.
பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உயிருக்கு போராடிய சுப்பையாவை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் போகும் வழியிலேயே சுப்பையா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொன்னேரி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அப்பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது.
இது தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் வீரக்கோவில் மோட்டூர் கிராமம் அருகே வீரமங்கலம் ஏரி உள்ளது.
- ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பள்ளிப்பட்டு:
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் வீரக்கோவில் மோட்டூர் கிராமம் அருகே வீரமங்கலம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து தண்ணீர் செல்லும் ஓடை கால்வாய் உள்ளது. இங்கு பெண் பிணம் கிடப்பதாக ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராஜு தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். 45 வயது உள்ள அந்த பெண் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றிய தகவல்கள் தெரியவில்லை. இது குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த மாதவரம் கிராமத்தில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிறப்பு தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் உள்பட போலீசார் மாதவரம் கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது மாதவரம் கிராமத்தில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராகேஷ் (வயது 34) என்பவரது கடையில் 7½ கிலோ குட்காவும், இதே பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் மாரியப்பன் (45) என்பவரது கடையில் 19 கிலோ குட்கா பொருட்களையும், சவுதம்புயி (38) என்பவரிடம் 400 கிராம் கஞ்சாவை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து 26½ கிலோ குட்கா, 400 கிராம் கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக ராகேஷ், மாரியப்பன், கவுதம்புயி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
- பஸ் நிலையத்தில் சுமார் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் காலில் கட்டப்பட்ட இரும்பு சங்கிலியுடன் பரிதாபத்துக்குரிய நிலையில் சுற்றி வந்தார்.
- காப்பகத்தில் சேர்க்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
பொன்னேரி:
பொன்னேரி புதிய பஸ் நிலையத்தில் சுமார் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் காலில் கட்டப்பட்ட இரும்பு சங்கிலியுடன் பரிதாபத்துக்குரிய நிலையில் சுற்றி வந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சிலர் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் புதுவாயல், பெரும்பேடு, ஊத்துக்கோட்டை என ஊர்களின் பெயரை வரிசையாக தெரிவித்துக் கொண்டு இருந்தார். இதனால் அவர் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர் என அறிந்து கொள்ள முடியவில்லை. மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
மேலும் அவருக்கு வாங்கிக் கொடுத்த உணவையும் சாப்பிடாமல் தூக்கி எரிந்துவிட்டு, சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோதே உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் குறுக்கும் நெடுக்குமாக ஓடினார். இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து ஒரு கடையின் முன்பு அமர வைத்தனர்.
இதுகுறித்து பொன்னேரி போலீசுக்கு தகவல் தெரவிக்கப்பட்டது. போலீசார் காலில் சங்கிலியுடன் சுற்றிய வாலிபரிடம் விசாரித்து வருகிறார்கள். அவர் மனநல காப்பகத்தில் இருந்து தப்பி வந்தாரா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட வரை பராமரிக்க முடியாமல் உறவினர்கள் அழைத்து வந்து இங்கு விட்டு சென்றனரா? என்று விசாரித்து வருகிறார்கள். அவரை காப்பகத்தில் சேர்க்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
- திருத்தணி அருகே உள்ள அம்மையார்குப்பம் பகுதியில் கிருபானந்த வாரியார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
- கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் திடீரென வந்து ஆய்வு செய்தார்.
திருத்தணி:
திருத்தணி அருகே உள்ள அம்மையார்குப்பம் பகுதியில் கிருபானந்த வாரியார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
இங்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் திடீரென வந்து ஆய்வு செய்தார். அவர், மாணவர்களிடம் கல்வி முறை மற்றும் சுகாதாரம் வகுப்பறைகள் உள்ளிட்டவை குறித்து கேட்டு அறிந்தார்.
மேலும் பள்ளிக்கு ஆசிரியர் வருகை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார். சத்துணவு கூடத்தை பார்வையிட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் மாணவர்களோடு சேர்ந்து உணவு சாப்பிட்டார். முன்னதாக மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசை ஊராட்சி தலைவர் ஆனந்தி செங்குட்டுவன் சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது அவர், பள்ளி அருகே உள்ள சாலை மிகவும் குறுகலாக போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ளது. இந்த சாலையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து கோரிக்கையை மனுவாக வழங்குமாறும், நடவடிக்கை எடுப்பதாகவும் கலெக்டர் உறுதியளித்தார்.
- உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் மோரை உள்ளிட்ட பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
- ஓட்டல்கள், பேக்கரி, மளிகைகடை என சுமார் 100-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.
திருநின்றவூர்:
ஆவடி அடுத்த மோரை, ஜே.ஜே. நகர், புதிய கன்னியம்மன் நகர், உள்ளிட்ட பகுதிகளில் கடைகளில் தரமற்ற பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் மோரை உள்ளிட்ட பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
ஓட்டல்கள், பேக்கரி, மளிகைகடை என சுமார் 100-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், தரமற்ற உணவு பொருட்கள் விற்கப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி ரவிச்சந்திரன் எச்சரிக்கை விடுத்தார்.
- மூதாட்டி வள்ளியம்மாளுக்கு உடலில் எந்த நோயின் தாக்கமும் இல்லை.
- 102 வயதிலும் அவர் தனது வேலைகளை தானே செய்து நடமாடி வந்தார்.
பொன்னேரி:
சோழவரம் அடுத்த விஜயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கேசவேலு. சென்னை துறைமுகத்தில் ஊழியராக வேலைபார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது 102). இவர்களுக்கு 4 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர்.
கேசவேலு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து வள்ளியம்மாள் தனது இளையமகன் பிரவு வீட்டில் வசித்து வந்தார். அவரது வீட்டில் பேரன், பேத்தி கொள்ளுப்பேரன் உள்ளிட்ட 42 குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர்.
மூதாட்டி வள்ளியம்மாளுக்கு உடலில் எந்த நோயின் தாக்கமும் இல்லை. 102 வயதிலும் அவர் தனது வேலைகளை தானே செய்து நடமாடி வந்தார். அவரை குடும்பத்தினர் கவனித்து வந்தனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மூதாட்டி வள்ளியம்மாள் வீட்டில் இருந்தபோது திடீரென கால் தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் உடல்நிலையில் முன்னேற்றம் அடையவில்லை.
இந்த நிலையில் நேற்று மாலை வள்ளியம்மாள் இறந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் சோகம் அடைந்தனர். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது.
'இதுகுறித்து குடும்பத்தினர் கூறும்போது 102 வயதில் வள்ளியம்மாள் இறந்து விட்டார். அவர் 5 தலைமுறை கண்டு இருக்கிறார். இது வரை அவரது உடலில் பெரிய அளவில் நோய் பாதிப்பு ஏற்பட்டதில்லை. அவரது வேலைகளை அவரே செய்து வந்தார்' என்றனர்.






