என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொன்னேரியில் வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க பேரிடர் மேலாண்மை பயிற்சி
- பருவமழையின் போது முன்னெச்சரிக்கையாக பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.
- 26 தலைப்புகளில் பேரிடர் காலத்தில் உடனடியாக சென்று பொது மக்களை உரிய முறையில் மீட்கும் வகையில் பயிற்சி வழங்கி வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாக்க வெள்ளத் தடுப்பு மேலாண்மை ஒத்திகை பயிற்சி பொன்னேரியை, அடுத்த விச்சூர், ஏ.ரெட்டி பாளையம், அத்திப்பட்டு புதுநகர் ஆகிய 3 பகுதியில் நடைபெற்றது.
கடந்த ஆண்டு பருவமழையின் போது ஆரணி, மற்றும் கொசஸ்தலை ஆற்றின் வெள்ளப்பெருக்கால் ஆற்றின் கரைகள் உடைந்து, ஏ. ரெட்டிபாளையம், அத்திப்பட்டு, மணலி புதுநகர், விச்சூர், சுப்பாரட்டி பாளையம், உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
இதனை கருத்தில் கொண்டு வருகிற பருவமழையின் போது முன்னெச்சரிக்கையாக பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றி பேரிடர் மேலாண்மை துறையினர் பயிற்சி அளித்தனர்.இதில் ஆர்.டி.ஓ. காயத்ரி, வட்டாட்சியர் செல்வகுமார் சேர்மன் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன், ஊராட்சித் தலைவர் கவிதா மனோகரன், தீயணைப்பு துறை அதிகாரி சம்பத், அத்திப்பட்டு ஊராட்சி துணைத் தலைவர் எம்.டி. ஜி. கதிர்வேல், ரெட் கிராஸ் உறுப்பினர் கோளூர் குமார், வருவாய் ஆய்வாளர் ரகு, உள்பட வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மின்துறை, மீன்வளத்துறை, கால்நடைத்துறை, சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்பு துறை மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கொட்டும் மழையிலும் விடாமல் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் ஆபத்து கால நண்பன் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக 400 தன்னார்வலர்களுக்கு 12 நாட்கள் பேரிடர் மேலாண்மை பயிற்சியினை வழங்க திட்டமிட்டப்பட்டு அவர்களுக்கு நிலச் சரிவு, வெள்ளம், சுனாமி, இடி மற்றும் மின்னல், மீட்பு போன்ற 26 தலைப்புகளில் பேரிடர் காலத்தில் உடனடியாக சென்று பொது மக்களை உரிய முறையில் மீட்கும் வகையில் பயிற்சி வழங்கி வருகின்றனர்.
உத்திரமேரூர் வட்டத்தில் வருகிற 12-ந்தேதி வரை மீனாட்சியம்மாள் கல்வியியல் கல்லூரியில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பயிற்சி முடிவில் பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை, சான்றிதழ் மற்றும் அடிப்படை மீட்பு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. மேற்படி பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் பேரிடர் காலங்களில் பொது மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருப்பார்கள் என்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.






