என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பாட்டில் இருக்கும் சங்கதி- பாடலில் பிறந்த பாடல்
    X

    பாட்டில் இருக்கும் சங்கதி- பாடலில் பிறந்த பாடல்

    • எம்.எஸ். விஸ்வநாதனும், டி.கே.ராமமூர்த்தியும் ஒரு பாடலுக்கு டியூன் அமைக்க ரொம்ப நேரமாக யோசித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
    • ஒரு கவிஞர் ரொம்ப நேரம் முயற்சித்தும் அந்த பாடலுக்கான வரிகள் கிடைக்கவில்லை.

    மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதனும், டி.கே.ராமமூர்த்தியும் ஒரு பாடலுக்கு டியூன் அமைக்க ரொம்ப நேரமாக யோசித்துக் கொண்டே இருக்கிறார்கள்.. ஆனால் அதற்கான டியூன் பிடிபடவேயில்லை.

    சரி.... கொஞ்ச நேரம் வெளியே போயிட்டு வரலாம். அப்ப ஏதாவது நல்ல டியூன் கிடைத்தாலும் கிடைக்கலாம்.. என்று இரண்டு பேரும் வெளியே கிளம்பினார்கள்.

    அவர்கள் எங்கே போனார்கள் தெரியுமா? கவிஞர் மருதகாசி ஐயா வசனம், கவிதை, பாடல்கள் எழுதிய நாடகத்தைப் பார்க்க போனார்கள்.

    நாடகத்தை பார்த்து விட்டு வெளியே வரும் போது கவிஞர் மருதகாசியை சந்தித்து, நாடகம் மிகவும் அருமை என்று பாராட்டினார்கள். குறிப்பாக அதில் இடம்பெற்ற கவிதை மிக மிக சிறப்பு என்றார்கள்.

    தென்றல் உறங்கியது

    திங்கள் உறங்கியது

    கண்கள் உறங்காது...

    என்ற அந்த கவிதையை மையமாக வைத்து நமக்கு ஒரு பாட்டு எழுதிக் கொடுக்கலாமே.. என்று கேட்கிறார்கள்.

    நீங்கள் அதற்கு ஏற்ற மாதரி டியூன் போட்டுக் கொடுங்க, நான் பாட்டு எழுதிக் கொடுக்கிறேன் என்று மருதகாசி சொல்கிறார்.

    அந்த வேகத்தோடு வந்து ஸ்டூடியோவில் உட்காருகிறார்கள் மெல்லிசை மன்னர்கள். அங்கே உருவாகியது சவாலான அந்தப் பாடல்.

    மெல்லிசை மன்னர்கள் அந்த பாட்டுக்காக போட்ட டியூனை கவிஞர் மருதகாசியிடம் போட்டு காட்டி விட்டு, அதிகபட்சம் எத்தனை வார்த்தைகள் போடமுடியுமோ அவ்வளவு வார்த்தைகளை போட்டு இந்த பாடலை எழுதிக் கொடுங்கள் என்று கேட்கிறார்கள். அப்படி அவர்கள் ஆர்மோனியத்தில் இருந்து போட்ட டியூனில் உருவான பாடல்தான்..

    தென்றல் உறங்கிய போதும்

    திங்கள் உறங்கிய போதும்

    கண்கள் உறங்கிடுமா...

    காதல் கண்கள் உறங்கிடுமா...?

    என்ற பாடல்.

    பெற்ற மகனை விற்ற அன்னை என்ற படத்தில் வரும் இந்த பாடல் உருவான கதை இதுதான்.

    ஒரு நாடகத்தில் மருதகாசி ஐயாவோட கவிதையை கேட்டுவிட்டு, அந்த கவிதையை இன்ஸ்பிரேஷனாக வைத்து அவரிடமே பெறப்பட்டது அந்த பாடல்.

    மெல்லிசை மன்னர்கள் சொன்ன மாதிரி, கவிஞர் மருதகாசி அந்த பாடலில் அதிகபட்சமான வார்த்தைகளை போடுகிறார்..

    தென்றல் உறங்கிய போதும்

    திங்கள் உறங்கிய போதும்

    கண்கள் உறங்கிடுமா

    காதல் கண்கள் உறங்கிடுமா?

    நேசமாக பேசிடாமல்

    பாசம் வளருமா?

    ஆசையாக கொஞ்சிடாமல்

    இன்பம் மலருமா?

    இப்படியாக வார்த்தைகள் வந்து விழுந்து கிட்டே இருக்கு.

    எங்கேயோ கேட்ட ஒரு கவிதையில் இருந்து உருவான இந்த பாடல், ரொம்ப வருசம் கழிச்சு மற்றொரு பாடல் உருவாகவும் காரணமாக இருந்ததுதான் வியக்கத்தக்க விசயம்.

    ஒரு கவிஞர் ரொம்ப நேரம் முயற்சித்தும் அந்த பாடலுக்கான வரிகள் கிடைக்கவில்லை. குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே யோசிக்கிறாரு. பாடலுக்கான டியூன் இருக்கு.. அந்த டியூனுக்கு ஏற்ற பாடல் எழுதனும்.. ரொம்ப நேரம் யோசிக்கிறாரு..

    அந்த சமயம் திடீரென ரேடியோவை திருப்புராரு, தென்றல் உறங்கிய போதும்.. திங்கள் உறங்கிய போதும்.. என்ற பாடல் ஒலிக்கிறது.

    அதை கேட்டபோது கவிஞருக்கு பளிச்சென சிந்தையில் ஊற்றெடுத்தது அவர் எதிர்பார்த்திருந்த பாடல் வரிகள்.

    இளையராஜா சாரோட டியூனுக்கு அந்த வார்த்தைகளை கொண்டு பாட்டு கட்டிக் கொடுத்த அந்த கவிஞர் அறிவுமதி.

    தென்றல் தான்

    திங்கள் தான்

    காதல் சந்தம்...

    என்ற அந்த பாடல் கேளடி கண்மணி படத்தில் இடம் பெற்றுள்ளது.

    ஒரு செயின் மாதிரி... ஒரு நாடகத்தில் வந்த கவிதை பாட்டாகி, அந்த பாட்டிலிருந்து இன்னொரு பாட்டு உருவான அழகான கதையைப் பார்க்கிறோம்.

    ஒரு பாடலில் அளவுக்கு அதிகமான வார்த்தைகளை போட்டு கையாள்வது என்பது சாதாரண விசயம் அல்ல. மெட்டுக்கு பாட்டு எழுதும் போது கவிஞர்களுக்கு அது ஒரு பெரிய சவால்.

    எம்.எஸ்.வி. சார் அடிக்கடி சொல்லுவார், "மீட்டருக்கு மேட்டரா அல்லது மேட்டருக்கு மீட்டரா?" என்று கேட்பது வழக்கம். அதாவது நான் டியூனை போட்டதுக்கு அப்புறம் பாடலை எழுதுகிறீர்களா? அல்லது நீங்க எழுதுன பாட்டுக்கு டியூன் போடனுமா? என்பது தான் அதன் அர்த்தம்.

    இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் கிட்டதட்ட இதே மாதிரியான ஒரு சம்பவம் நடந்தது.

    அதிகபட்ச வார்த்தைகள் வருகிற மாதிரி ஒரு பாடலை எழுதிக் காட்டுங்கள் என்று ராஜா சார் சொல்கிறார்.

    எந்த பாட்டு அந்த மாதிரி உருவாச்சி தெரியுமா?

    வெட்கப்படுவது.." என்ற பாடல் தான்.

    அந்த பாடலின் பல்லவியைக் கேட்டு இருக்கீங்களா..?

    டட் டட் டடடா

    டட் டட் டடடா

    என்ற டியூனுக்கு ஏற்றவகையில் "சிட்டுக்குருவி வெட்கப்படுதுன்னு" எழுதியிருப்பார் வைரமுத்து.

    இந்த மாதிரியான உரையாடல் இசையமைப்பாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் இடையே நடக்கும் போதுதான் நமக்கு நல்ல நல்ல பாடல்கள் கிடைக்கின்றன.

    இதெல்லாம் சட்டென வந்த பாடல்கள். ஆனால் நீண்ட நாட்கள் முயற்சித்தும் வராமல் தவிக்க விட்ட பாட்டு ஒன்னு இருக்கு.

    6 மாதமாக முயற்சித்தும் ஒரு டியூனும் சரிபட்டு வரல. அதனால் கோவம் வந்திருச்சு ஸ்ரீதர் சாருக்கு. இனிமே இந்த பாடலை நம்பி உட்கார்ந்திருக்க முடியாது என்று கோவப்படுகிறார்.

    ஆனால் அந்த காத்திருத்தலுக்கு பரிசாக முத்து மாதிரி வந்து விழுந்தது டியூன். அதில் பிறந்த பாடல் தான்

    "நெஞ்சம் மறப்பதில்லை

    அது நினைவை இழப்பதில்லை...."

    இந்த பாடலை கேட்டுவிட்டு கண்ணீர் விட்டு அழுதாராம் ஸ்ரீதர் சார். இந்த பாட்டுக்காக இத்தனை நாட்களா காத்துகிட்டு இருந்தது தப்பே இல்லை என்றாராம். 6 மாதம் தவமிருந்து பெற்ற குழந்தை தான் அந்த பாடல்.

    சில பாடல்கள் இந்த மாதிரி கதையோடு உருவாகும். சில பாடல்கள் களத்தில் வந்து மாறும். அப்படியும் நிறைய நடந்திருக்கு. அந்த மாதிரி நடந்த ஒரு அழகான சம்பவம்தான் இது...

    ஒரு தடவை கம்போஸ் நடந்துகிட்டு இருக்கும் போது எல்லாரும் இருக்காங்க. ஆனால் இயக்குனர் ஸ்ரீதர் சார் மட்டும் அங்கு இல்லை. வெளியே வந்து ஒரு மரத்துக்கு அடியில் சிகரெட் பிடிச்சுக்கிட்டு நிக்கிறாரு.

    அப்போது அங்கு வந்த எம்.எஸ்.வி. அவர்கள் "என்ன.. எல்லோரும் உள்ளே ரிக்கார்டிங்கில் இருக்காங்க. நீங்க மட்டும் வெளியே வந்து நிக்கிறீங்களே ஏன்?" என்று கேட்டார்.

    "நான் என்னத்துக்கு வரணும்? நீங்க டியூன் போட்டீங்க.. சுற்றி இருந்தவங்க எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னாங்க. அது போதும்! எனக்கு பிடிக்கிறதா என்று யார் கேட்டீங்க?" என்றார்.

    "அப்படி சொல்லாதீங்க... உங்களுக்கு எந்தமாதிரி பிடிக்கும்னு சொல்லுங்க, அந்த மாதிரியே டியூன் போட்டுடலாம்" என்றார் எம்.எஸ்.வி.

    இந்த மாதிரியான தர்க்க வாதத்தில் தான் சிவந்த மண் படத்தோட பாடல்கள் உருவாகிச்சு.

    தனக்கு என்ன வேணும் என்பதை சிலசமயம் தான் சிலரால் சொல்ல முடியும். சொல்ல முடியாமலே ஸ்ரீதர் சார் பல சமயம் தவிச்சு இருக்கார். அந்த மாதிரியான ஒரு சம்பவம் இது...

    அன்றைய தினம் எம்.எஸ்.வி. அவர்கள் கதைக்கு ஏற்றபடி முழுக்க முழுக்க கர்நாடக இசை அடிப்படையில் பந்துவராளி ராகத்தில் ஒரு பாடலை கற்பனை செய்து கொண்டு ஸ்டூடியோவுக்கு வந்துட்டாரு.

    பாடலை கம்போஸ் செய்ய உட்காரும் போது ஸ்ரீதர் சார் சொன்ன காட்சி வேறு, ஒரு கவர்ச்சி நடனத்துக்குரிய காட்சியை சொல்கிறார்.

    அதை கேட்டு எம்.எஸ்.விக்கு மூடு அவுட் ஆகிவிட்டது. நாம என்னத்தையோ நெனச்சிக்கிட்டு வந்தோம், இவர் வேற எதையோ சொல்றாரே... என்று குழப்பமடைகிறார்.

    "இப்ப சொன்னீங்கள்ல, டியூன் ரெடியா இருக்கு என்று... அதை அப்படியே இந்த பாடலுக்கு பொருத்திடலாம்" என்று ஸ்ரீதர் சொல்கிறார்.

    சுத்தமான கர்நாடக இசை ராகத்துல நினைச்சுக்கிட்டு வந்த டியூனை கிளப் டான்ஸ் பாடலுக்கு ஏற்றவாறு மாற்றுகிறார் எம்.எஸ்.வி.

    எப்படி அது சாத்தியம்? எம்.எஸ்.வி.சாருக்கு அது சாத்தியம் தான். அந்த பாடல்தான் "நீராட நேரம் நல்ல நேரம்..." பாடல்.

    இந்த பாட்டோட டியூனை பாடி காட்டியாச்சு. அதுக்கானப் பாடலை எழுதி வாங்கியாச்சு.பிரமாதமாக இருக்கு என்று ஸ்ரீதர் சாருக்கு ரொம்ப சந்தோசம். பாடலைப் பாட எல்.ஆர்.ஈஸ்வரியை கூப்பிடுங்க என்கிறார்.

    எம்.எஸ்.வி.யோ வாணி ஜெயராமை கூப்பிடுங்க என்றார்.

    இந்த மாதிரியான கிளப்டான்ஸ் பாடலுக்கு வாணிஜெயராம் சரிபடுமா என்று இசைக் குழுவினர் கேட்டார்கள்.

    "முதலில் அவர் பாடி நீங்க கேளுங்க... அப்புறமா சொல்லுங்க" என்றார்.

    வாணிஜெயராம் வந்து "நீராட நேரம் நல்ல நேரம்.." பாடலைப் பாடினாங்க. பிரமாதமாக அமைந்தது அந்த பாடல். அது அவரது இசைப்பயணத்தில் திருப்பு முனையாகவும் அமைந்தது.

    ஒவ்வொரு பாடலுக்கு பின்னாடியும் இந்த மாதிரியான பல சுவாரசியமான கதைகள் இருக்கும். அந்த கதைகளைக் கேட்கும் போது அந்த பாடல்கள் மீதான மரியாதை அதிகமாகும். அடுத்தப் பகுதியில் இது போன்ற சிலவற்றை பார்ப்போம்!.

    தொடர்புக்கு-info@maximuminc.org

    Next Story
    ×