என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் மாவட்டத்தில் 951 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி
    X

    திருவள்ளூர் மாவட்டத்தில் 951 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி

    • விநாயகர் சதுர்த்தி விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
    • போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

    திருவள்ளூர்:

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. திருவள்ளூரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விநாயகர் சிலைகளை வைக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர். சிலைகள் நிறுவப்பட்டுள்ள இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    மாவட்டத்தில் மொத்தம் 951 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட போலீசார் அனுமதி அளித்து உள்ளனர். அதன்படி திருவள்ளூரில் 173, திருத்தணியில் 284, ஊத்துக்கோட்டையில் 210, பொன்னேரியில் 68, கும்மிடிப்பூண்டியில் 216 இடங்களில் விநாயகர் சிலை வழிபாடு நடைபெறுகிறது.

    விநாயகர் சிலைகளுக்கு அந்தந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும், பூஜை நடத்துபவர்கள், ஒருங்கிணைப்பாளர்களின் பெயர், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை போலீசார் பெற்று வருகின்றனர். மேலும் கடுமையான கட்டுப்பாடுகளும் விதித்து உள்ளனர்.

    பூஜை முடிந்த பின்னர் விநாயகர் சிலைகள் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட 17 இடங்களில் கரைக்கப்பட இருக்கிறது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா அமைதியான முறையில் நடைபெறவும், பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்பதை வலியுறுத்தும் வகையிலும் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

    மாவட்ட போலீஸ் சூரப்பிரண்டு எம்.சுதாகர் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கொடி அணி வகுப்பு ஊர்வலத்தில் திரடிப்படை, அதிவிரைவு படை, ஆயுதப்படை, சட்ட ஒழுங்கு போலீசார்,என 300-க்கும் மேற்பட்ட போலீசாரும், உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

    கொடி அணிவகுப்பு பேண்டு வாத்தியங்கள் முழங்க காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

    Next Story
    ×