என் மலர்
திருவள்ளூர்
- தண்ணீர் திறக்கப்பட்டால் அதனை தேக்கி வைக்க ஏரிகளில் இடமில்லை.
- ஏரிகளில் போதிய தண்ணீர் இருப்பதால் கிருஷ்ணா நதி நீர் திறப்பை நிறுத்தி வைக்க கூறி உள்ளோம்
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கன அடி ஆகும்.
பூண்டி ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது சென்னை குடிநீருக்காக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்படும்.
தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் பூண்டி ஏரி முழு கொள்ளவை எட்டியது. மேலும் கண்டலேறு அணையில் இருந்தும் தொடர்ந்து கிருஷ்ணா நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதையடுத்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகின்றன.
கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை பூண்டி ஏரிக்கு அனுப்ப வேண்டும்.
ஜூலை முதல் அக்டோபர் வரை முதல் தவணையில் 8 டி.எம்.சி.யும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும் வழங்க வேண்டும்.
ஏற்கனவே சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளது. இதனால் தற்போது வந்து கொண்டு இருக்கும் கிருஷ்ணா தண்ணீரையே தேக்கி வைக்க முடியாத நிலை நிலவுகிறது. இதனால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பை நிறுத்த வேண்டும் என்று கடந்த மாதமே தமிழக அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இதற்கிடையே கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி இந்த மாதம் (ஜனவரி) முதல் ஏப்ரல் வரையிலான 2வது தவணையாக வழங்க வேண்டிய 4 டி.எம்.சி. தண்ணீர் திறப்பை நிறுத்தி வைத்து விட்டு சில மாதங்கள் கழித்து திறக்க வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதி உள்ளனர்.
கண்டலேறு அணையில் இருந்து தற்போது 4 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டால் அதனை தேக்கி வைக்க ஏரிகளில் இடமில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கன அடி. இதில் 2,899 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 165 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. சென்னை குடிநீருக்காக லிங்க் கால்வாய் மூலம் 550 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கன அடி. இதில் 3,115 மி.கன அடி தண்ணீர் உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கன அடி. இதில் 3,491 மி.கன அடி தண்ணீர் இருக்கிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழ வரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மி.கன அடி (11.7 டி.எம்.சி.) தண்ணீர் சேமித்து வைக்கலாம். இதில் தற்போது 10 ஆயிரத்து 775 மி.கன அடி (10.7 டி.எம்.சி.) தண்ணீர் உள்ளது.
இந்த தண்ணீரை கொண்டு இந்த ஆண்டு முழுவதும் சென்னையில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் சப்ளை செய்ய முடியும். ஏரிகளில் போதிய தண்ணீர் இருப்பதால் கிருஷ்ணா நதி நீர் திறப்பை நிறுத்தி வைக்க கூறி உள்ளோம் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமிரா உடைக்கப்பட்டு ஹார்டு டிஸ்க்கும், காரும் மாயமாகி இருந்தது.
- இருவரும் ஆந்திர மாநிலம் சத்தியவேடு அருகே உள்ள ராள்ளபாடி கிராமத்தில் இருப்பது தெரிந்தது.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த பல்லவாடா கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் குமார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர் அ.தி.மு.க. அம்மா பேரவை இணைச் செயலாளராக உள்ளார்.
இவரது மனைவி ரோஜா (44). கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தின் 1-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். இவரது மகன் ஜேக்கப் (22).
நேற்று மதியம் வீட்டில் இருந்த ரோஜா, அவரது மகன் ஜேக்கப் ஆகியோர் திடீரென மாயமானார்கள். வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமிரா உடைக்கப்பட்டு ஹார்டு டிஸ்க்கும், காரும் மாயமாகி இருந்தது. மேலும் ரோஜாவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. ரோஜாவும், ஜேக்கப்பும் கடத்தப்பட்டு இருப்பது தெரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் ரமேஷ் குமார் இது குறித்து பல்லவாடா போலீசில் புகார் செய்தார். தனிப்படை போலீசார் கடத்தப்பட்ட ரோஜா, அவரது மகன் ஜேக்கப் ஆகியோரை தேடி வந்தனர்.
இதற்கிடையே இரவு 10.30 மணியளவில் அவர்கள் இருவரும் ஆந்திர மாநிலம் சத்தியவேடு அருகே உள்ள ராள்ளபாடி கிராமத்தில் இருப்பது தெரிந்தது.
விரைந்து சென்ற போலீசார் ரோஜா, அவரது மகன் ஜேக்கப் ஆகியோரை பத்திரமாக மீட்டனர். அங்கு நிறுத்தப்பட்டு இருந்த அவர்களது காரும் மீட்கப்பட்டது.
இது குறித்து ரோஜாவிடம் போலீசார் விசாரித்த போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ரோஜா போலீசாரிடம் கூறும்போது, 10 பேர் கும்பல் வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் எங்களை காரில் கடத்தி சென்றனர். கண்ணையும், கையையும் கட்டி இருந்தனர்.
கடத்தல் கும்பல் கணவர் ராஜேஷ்குமார் குறித்து கேட்டு தேடினர். பின்னர் ராள்ளபாடி அருகே எங்களை விடுவித்து எனது தாலி செயினை பறித்து தப்பி சென்றுவிட்டனர் என்று கூறி உள்ளார்.
கடத்தல் கும்பல் ஜேக்கப்பின் கால் அருகே துப்பாக்கியால் சுட்டு மிரட்டியதாகவும் தெரிகிறது. மர்ம நபர்கள் ராஜேஷ்குமாரை தேடி வந்து இருப்பதும் அவர் இல்லாததால் ரோஜாவையும், அவரது மகன் ஜோக்கப்பையும் கடத்தி சென்று இருப்பதும் தெரிய வந்து உள்ளது. ராஜேஷ்குமார் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். தொழில் போட்டியில் ஏற்பட்ட மோதலில் இந்த கடத்தல் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மேலும் ரோஜாவும், ஜேக்கப்பும் கடத்தல் கும்பல் குறித்து மாறுபட்ட தகவல் தெரிவித்து வருவதாகவும் போலீசார் கூறினர். இதனால் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
+2
- இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்களின் பரப்பு 5,42,429.32 ஏக்கர் ஆகும்.
- வருவாய்துறை ஆவணங்களோடு முழுமையாக ஒத்துப்போகும் நிலங்களின் பரப்பு 3,43,000 ஏக்கர் ஆகும்.
இந்து சமயஅறநிலையத் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்து எல்லை கற்கள் பதிக்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.
அவ்வகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் 1,00,001-வது ஏக்கர் நில அளவீடு செய்யும் பணியினை தொடங்கி வைத்து, எல்லை கற்களை நட்டார்.
அதனை தொடர்ந்து நில அளவை பணிகளில் சிறப்பாக பணியாற்றிய குழுத் தலைவர்களான 20 மண்டலங்களின் நில அளவர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:-
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்களின் பரப்பு 5,42,429.32 ஏக்கர் ஆகும், இதில் வருவாய் துறை ஆவணங்களோடு முழுமையாக ஒத்துப்போகும் நிலங்களின் பரப்பு 3,43,000 ஏக்கர் ஆகும். மீதியுள்ள நிலங்களின் பரப்பு 1,99,429.32 ஏக்கர் ஆகும்.
கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்வதற்கான முதல் நடவடிக்கையாக உரிமம் பெற்ற நில அளவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு, 50 குழுக்களாக பிரிக்கப்பட்டு 20 மண்டல இணை ஆணையர்களின் நேரடி கட்டுப்பாட்டில் பணி அமர்த்தப்பட்டனர்.
கடந்த 8-ந்தேதி அன்று சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரர் கோவில் வளாகத்தில் டி.ஜி.பி.எஸ். கருவியின் மூலம் முதன் முதலாக நில அளவை செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
எல்லைக் கற்களை அனைத்து இடங்களிலும் ஒரே வடிவத்தில் அமைத்திடும் வகையில் சிமெண்ட் பில்லர்களை தயாரித்து, அதற்கு வெள்ளை நிற வர்ணமும், அப்பில்லரின் ஒரு பக்கத்தில் எச்.ஆர்.சி.இ. என்ற ஆங்கில எழுத்துக்கள் வடிவமைக்கப்பட்டு அதில் சிவப்பு நிற வர்ணமும் தீட்டி அளவிடப்பட்ட நிலங்களில் பில்லர்கள் நடப்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்புலிவனம் வியாக்ரபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 972 ஏக்கர் நிலங்களை அளவீடு செய்யப்பட்டதன் மூலம் முதல் கட்டமாக 50,000 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணி நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து, பணிகள் விரைவுபடுத்தப்பட்டு 1,00,000 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணி நிறைவடைந்து, இன்றைய தினம் 1,00,001வது ஏக்கர் நிலத்தினை அளவீடு செய்து எல்லை கற்கள் நடப்பட்டது.
கோவில் நிலங்களை அளவீடு செய்யும் பணிகளில் இயற்கை இடர்பாடுகளுக்கிடையே சிறப்பாக பணியாற்றி இறைவனின் சொத்துக்களை காப்பாற்றியும், அடையாளம் காட்டியும், எல்லை கற்களை நட்டு பாதுகாத்து இருக்கின்ற 172 நில அளவர்களுக்கும், இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இப்பணி மிகப்பெரிய பணியாகும். அதனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 172 நில அளவர்களுக்கு வழங்கப்படுகின்ற ஊதியத்தை ரூ.2,000 உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார். அறிவிக்கப்பட்ட கூடுதல் ஊதியம் பிப்ரவரி மாதத்தில் இருந்து வழங்கப்படும்.
2023-ம் ஆண்டிற்குள் ஒரு லட்சம் என்பதை 2 லட்சம் ஏக்கராக அளவீடு செய்து உயர்த்தி காட்டுங்கள். உங்களுக்கு கூடுதலாக ஊக்கத் தொகை காத்துக் கொண்டிருக்கிறது
இவ்வாறு அவர் பேசினார்.
- ஆர்ப்பாட்டத்தின் போது, களப்பணியாளர்களின் பணி சுமையை குறைக்க வேண்டும், களப்பணியாளர்களின் மீது சுமத்தப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கையை முற்றிலுமாக கைவிட வேண்டும்.
- உட்பிரிவு செய்ய முடியாத இன மனுக்கள் மீது கூட்டு பட்டா பரிந்துரை வழங்கிட வேண்டும்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கம் சார்பில் 26 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் செந்தில்குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் ராஜசேகரன், மாவட்ட பொருளாளர் தாலிப், மாவட்ட செயலாளர் பிரதீப் நரேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அண்ணா குபேரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி மெல்கி ராஜா சிங் ஆகியோர் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தின் போது, களப்பணியாளர்களின் பணி சுமையை குறைக்க வேண்டும், களப்பணியாளர்களின் மீது சுமத்தப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கையை முற்றிலுமாக கைவிட வேண்டும். உட்பிரிவு செய்ய முடியாத இன மனுக்கள் மீது கூட்டு பட்டா பரிந்துரை வழங்கிட வேண்டும்.
துணை ஆய்வாளர்கள், ஆய்வாளர் ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும். தமிழகம் முழுவதும் நவீன மறு நில அளவை திட்டம் துவங்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
- ஒன்றிய கவுன்சிலர் ரோஜா மற்றும் அவரது மகன் ஜேக்கப் ஆகியோர் வீட்டில் தனியாக இருந்தனர்.
- பெண் கவுன்சிலர் மகனுடன் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார் (வயது 46). இவர் பல்லவாடா ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும், திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க அம்மா பேரவை இணைச் செயலாளராகவும் உள்ளார்.
இவரது மனைவி ரோஜா (44). இவர் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தின் 1-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். இவர்களுக்கு ஜாய் (24) என்ற மகளும், ஜேக்கப் (22) என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று ஒன்றிய கவுன்சிலர் ரோஜா மற்றும் அவரது மகன் ஜேக்கப் ஆகியோர் வீட்டில் தனியாக இருந்தனர். இதற்கிடையே வெளியே சென்றிருந்த ரமேஷ் குமார் மதிய நேரத்தில் வீட்டுக்கு போன் செய்துள்ளார். 2 பேரும் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த ரமேஷ் குமார் வீட்டின் அருகே உள்ள உறவினருக்கு போன் செய்து வீட்டிற்கு சென்று பார்க்கும்படியாக கூறினார்.
அவர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அங்கு வீட்டின் கதவு திறந்து கிடந்தது. அங்கு யாரும் இல்லை. வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்டு 'ஹார்ட் டிஸ்க்' மாயமாகி இருந்தது. மேலும் வீட்டில் இருந்த கார் ஒன்றும் காணாமல் போனது. இதுகுறித்து ரமேஷ் குமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதுகுறித்து அவர் பல்லவாடா போலீசில் புகார் தெரிவித்தார். எனவே பெண் கவுன்சிலர் மகனுடன் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது.
இதனையடுத்து போலீசார் இருவரது செல்போன் சிக்னல் மூலம் இருப்பிடத்தை ஆய்வு செய்தனர். அப்போது ஆந்திர மாநிலம் வரதையாபாளையத்தில் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது தெரியவந்தது. எனவே காருடன் அவர்களை மர்ம ஆசாமிகள், ஆந்திரா நோக்கி கடத்தி சென்றதாக தெரிகிறது. சம்பவ இடத்திற்கு நேற்று இரவு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சி.பி.கல்யாண் நேரில் விசாரணை நடத்தினார். இந்த நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் கவுன்சிலர் மகனுடன் தப்பி வந்ததாக தெரிகிறது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.
- அமைச்சர் சா.மு.நாசர், தொண்டர்கள் மீது கல்லை வீசும்போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே வேடங்கிநல்லூரில் திமுக சார்பில் நாளை நடைபெற உள்ள மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதனை முன்னிட்டு விழா ஏற்பாடு பணிகளை ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், வந்திருக்கும் நிர்வாகிகள் உட்காருவதற்கு நாற்காலிகளை எடுத்து வரும்படி கட்சித் தொண்டர்களிடம் கூறினார்.
கட்சி நிர்வாகிகள் அதிக அளவில் இருந்த நிலையில், ஒருசில நாற்காலிகள் மட்டுமே எடுத்து வரப்பட்டதோடு, தாமதமும் ஆனதால் தனது கோபத்தை தொண்டர்கள் மீது அமைச்சர் நாசர் வெளிப்படுத்தினார். அமைச்சர் சா.மு.நாசர், தொண்டர்கள் மீது கல்லை எடுத்து வீசினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
- குபேந்திரனும், பூபதியும் கூறியபடி வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
- மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணி மற்றும் போலீசார் விசாரித்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த குபேந்திரன், பூபதி ஆகிய இருவரும் கூவம் அரசுப் பள்ளியில் சத்துணவு உதவியாளர் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். மேலும் வேலை வாங்கித்தர ரூ.4 லட்சம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து சுரேஷ் கடந்த அக்டோபர் மாதம் ரூ.4 லட்சத்தை அவர்களிடம் கொடுத்தார். ஆனால் குபேந்திரனும், பூபதியும் கூறியபடி வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதுபற்றி சுரேஷ் கேட்டபோது பணத்தையும் திருப்பி கொடுக்காமல் சரிவர பதில் கூறாமல் இருந்தனர்.
இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுரேஷ் இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணிடம் புகார் அளித்தார்.
அவரது உத்தரவுப்படி மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணி மற்றும் போலீசார் விசாரித்தனர்.
இதில் குபேந்திரனும், பூபதியும் சத்துணவு உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- குமார் வீட்டை பூட்டி விட்டு பூந்தமல்லி சென்று இருப்பதை நோட்டமிட்டு மர்மகும்பல் கைவரிசை காட்டி உள்ளனர்.
- டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளைபோன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த போளிவாக்கம், எஸ்.என்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். டிராவல்ஸ் உரிமையாளர். இவரது மனைவி வாணி. இவர்களுக்கு யோகேஷ், மனோஜ் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகன் யோகேஷ் பூந்தமல்லியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அடுத்த ஆண்டு 10-ம் வகுப்பு அரசு தேர்வு என்பதால் சிரமம் இல்லாமல் சென்று வருவதற்காக குமார் பூந்தமல்லியிலேயே வாடகைக்கு வீடு எடுத்து இருந்தார்.
அந்த வீட்டில் குடியேற, பால் காய்ச்சும் நிகழ்ச்சிக்காக குமார் போளிவாக்கத்தில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு நேற்று குடும்பத்துடன் சென்றார்.
இந்தநிலையில் இன்று காலை குமாரின் சகோதரர் ஒருவர் போளிவாக்கம் பகுதி வழியாக சென்றார். அப்போது குமாரின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து பூந்தமல்லியில் உள்ள குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.9 லட்சம் ரொக்கம், 25 பவுன் நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து அள்ளி சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மணவாளநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மோப்பநாயுடன் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.கைரேகை நிபுணர்கள் அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர்.
குமார் வீட்டை பூட்டி விட்டு பூந்தமல்லி சென்று இருப்பதை நோட்டமிட்டு மர்மகும்பல் கைவரிசை காட்டி உள்ளனர். இதனால் குமாரை பற்றி நன்கு அறிந்த நபர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.
இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளைபோன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 166 மாட்டின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
- ரூ.61 ஆயிரத்து 500 -க்கு மாடுகளை ஏலம் விடப்பட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆவடி :
ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாநகராட்சி சாலை, பஞ்சாயத்து மற்றும் நகராட்சி சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துக்கள் ஏற்படுவதாலும், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதாலும், கால்நடைகளின் உயிர்களையும் பாதுகாக்கும் நோக்கில் ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் விஜயகுமாரி மேற்பார்வையில் மாடுகளின் உரிமையாளர்களை நேரில் அழைத்து கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அதன்படி சாலைகளில் மாடுகள் சுற்றித்திரியாத வண்ணம் பார்த்துக் கொள்ளும்படி மாட்டு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதனை மீறி சாலைகளை சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர்களின் விவரங்கள் சேகரித்து 166 உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் ஆவடி மாநகராட்சி, பூந்தமல்லி நகராட்சி, மாங்காடு நகராட்சி, திருவேற்காடு நகராட்சி ஆணையர்களுக்கும், மற்றும் அய்யப்பன்தாங்கல், வானகரம் பஞ்சாயத்து தலைவர்களுக்கும் மற்றும் பகுதி - 7 மண்டல அதிகாரிக்கும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதின் பேரில் அவர்கள் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து சாலைகளில் சுற்றித்திரிந்த 184 மாடுகளை பிடித்து அவற்றின் உரிமையாளர்களிடம் இருந்து இதுவரை ரூ.3 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.61 ஆயிரத்து 500 -க்கு மாடுகளை ஏலம் விடப்பட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
+2
- மாலதி வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த மர்ம நபர் வீட்டின் மாடி வழியாக வீட்டின் உள்ளே இறங்கி திருடி உள்ளான்.
- ஆரணி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், மல்லியங்குப்பம் ஊராட்சியை சேர்ந்த ஏரிக்கரை தெருவில் வசித்து வருபவர் உதயகுமார் (வயது30) காய்கறி வியாபாரி ஆவார். திருமணம் ஆன இவருக்கு மாலதி (வயது26) என்ற மனைவியும், தர்சிணி (வயது8), ஹாருணி (வயது6) என இரண்டு மகள்களும் உள்ளனர். மகள்கள் பெரியபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என படித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை உதயகுமார் காய்கறி வியாபாரம் செய்ய வெளியே சென்று விட்டார். இரண்டு குழந்தைகளும் பள்ளிக்கு சென்று விட்டனர். இதனால் மாலதி வீட்டில் தனியாக இருந்தார். இதனை அறிந்த மர்ம ஆசாமி ஒருவன் முகத்தை மூடிய வண்ணம், ரெயின் கோட் அணிந்து கொண்டு வீட்டின் மாடி வழியாக வீட்டின் உள்ளே இறங்கி வந்து உள்ளான்.
பின்னர், தனியாக இருந்த மாலதியின் கழுத்தில் இருந்த தங்கச் செயின், கம்மல், மூக்குத்தி ஆகியவற்றை பறிக்க முயன்றார். ஆனால், மாலதி நகைகளை கொடுக்க மறுத்ததால் அந்த வாலிபர், மாலதியை சரமாரியாக கத்தியால் வெட்டினாராம். ரத்தம் சொட்டச் சொட்ட மர்ம நபரிடம் போராடிய மாலதியிடம் இருந்து மூக்குத்தி உள்ளிட்ட நகைகளை பிடுங்கி உள்ளார். பின்னர், பீரோ சாவியை கேட்டுள்ளார். பீரோ சாவியை தராமல் மாலதி கதவை திறந்து கொண்டு வெளியே ஓடி வர முயற்சி செய்துள்ளார். அப்பொழுது அந்த வாலிபர் மாலதியின் கால்களை கத்தியால் வெட்டியுள்ளார்.
இதனால் பலத்த காயமடைந்த மாலதி காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! என்று கூக்குரல் இட்டுள்ளார். இதற்குள் மர்ம நபர் பீரோவை திறந்து அதிலிருந்து தங்க நகைகள், ரொக்கப்பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துக் கொண்டு மாடிப்படி வழியாக ஏறி வெளியே சென்றார்.
பின்னர், வீட்டின் அருகே நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் ரத்தம் சொட்டச்சொட்ட கதவை திறந்து கொண்டு வெளியே வந்த மாலதியின் கூக்குரலை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.
நடந்தவற்றை மாலதி கூறிவிட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். தகவல் அறிந்த ஆரணி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்துக்கு ஊத்துக்கோட்டை துணை போலிஸ் சூப்பிரண்டு சாரதி வந்து விசாரணை மேற்கொண்டு மேற்கொண்டார். எவ்வளவு நகைகள் கொள்ளை போனது, ரொக்கப் பணம் எவ்வளவு? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இக்கொள்ளை சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பாஸ்கரன்.
- விபத்தில் டாஸ்மாக் ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பாஸ்கரன் (42). பேரம்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் இரவுமோட்டார் சைக்கிளில் சிவபுரத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.
நரசிங்கபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பாஸ்கரன் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த பாஸ்கரன் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து மப்பேடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- மூதாட்டி கொலையில் முதியவர் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த கொண்டமாநல்லூர் கிராமம் மேட்டுகாலனியை சேர்ந்தவர் சுலோசனா (வயது 62). இவரது கணவர் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். சுலோச்சனா மட்டும் குடிசை வீட்டில் தனியே வசித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 20-ந் தேதி வீட்டிற்குள் சுலோச்சனா வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளி குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக ஏடூரைச்சேர்ந்த முதியவர் வீரராகவன் என்கிற வீரய்யா (வயது 70) என்பவரை போலீசார் கைது செய்தனர். கணவர் இறந்த பிறகு கடந்த 10 வருடங்களுக்கு மேலாக சுலோச்சனாவிடம் வீரராகவன் நெருங்கி பழகி வந்து உள்ளார். ஒரு கட்டத்தில் வீரராகவனை, சுலோச்சனா வெறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த வீரராகவன், சம்பவத்தன்று இரவு சுலோச்சனாவின் வீட்டிற்குள் புகுந்து அவரை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி இருப்பது தெரிந்தது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது. மூதாட்டி கொலையில் முதியவர் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






