என் மலர்
உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. பெண் கவுன்சிலர், மகன் துப்பாக்கி முனையில் கடத்தல்- தாலி செயினை பறித்துவிட்டு விடுவித்த கும்பல்
- வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமிரா உடைக்கப்பட்டு ஹார்டு டிஸ்க்கும், காரும் மாயமாகி இருந்தது.
- இருவரும் ஆந்திர மாநிலம் சத்தியவேடு அருகே உள்ள ராள்ளபாடி கிராமத்தில் இருப்பது தெரிந்தது.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த பல்லவாடா கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் குமார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர் அ.தி.மு.க. அம்மா பேரவை இணைச் செயலாளராக உள்ளார்.
இவரது மனைவி ரோஜா (44). கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தின் 1-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். இவரது மகன் ஜேக்கப் (22).
நேற்று மதியம் வீட்டில் இருந்த ரோஜா, அவரது மகன் ஜேக்கப் ஆகியோர் திடீரென மாயமானார்கள். வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமிரா உடைக்கப்பட்டு ஹார்டு டிஸ்க்கும், காரும் மாயமாகி இருந்தது. மேலும் ரோஜாவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. ரோஜாவும், ஜேக்கப்பும் கடத்தப்பட்டு இருப்பது தெரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் ரமேஷ் குமார் இது குறித்து பல்லவாடா போலீசில் புகார் செய்தார். தனிப்படை போலீசார் கடத்தப்பட்ட ரோஜா, அவரது மகன் ஜேக்கப் ஆகியோரை தேடி வந்தனர்.
இதற்கிடையே இரவு 10.30 மணியளவில் அவர்கள் இருவரும் ஆந்திர மாநிலம் சத்தியவேடு அருகே உள்ள ராள்ளபாடி கிராமத்தில் இருப்பது தெரிந்தது.
விரைந்து சென்ற போலீசார் ரோஜா, அவரது மகன் ஜேக்கப் ஆகியோரை பத்திரமாக மீட்டனர். அங்கு நிறுத்தப்பட்டு இருந்த அவர்களது காரும் மீட்கப்பட்டது.
இது குறித்து ரோஜாவிடம் போலீசார் விசாரித்த போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ரோஜா போலீசாரிடம் கூறும்போது, 10 பேர் கும்பல் வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் எங்களை காரில் கடத்தி சென்றனர். கண்ணையும், கையையும் கட்டி இருந்தனர்.
கடத்தல் கும்பல் கணவர் ராஜேஷ்குமார் குறித்து கேட்டு தேடினர். பின்னர் ராள்ளபாடி அருகே எங்களை விடுவித்து எனது தாலி செயினை பறித்து தப்பி சென்றுவிட்டனர் என்று கூறி உள்ளார்.
கடத்தல் கும்பல் ஜேக்கப்பின் கால் அருகே துப்பாக்கியால் சுட்டு மிரட்டியதாகவும் தெரிகிறது. மர்ம நபர்கள் ராஜேஷ்குமாரை தேடி வந்து இருப்பதும் அவர் இல்லாததால் ரோஜாவையும், அவரது மகன் ஜோக்கப்பையும் கடத்தி சென்று இருப்பதும் தெரிய வந்து உள்ளது. ராஜேஷ்குமார் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். தொழில் போட்டியில் ஏற்பட்ட மோதலில் இந்த கடத்தல் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மேலும் ரோஜாவும், ஜேக்கப்பும் கடத்தல் கும்பல் குறித்து மாறுபட்ட தகவல் தெரிவித்து வருவதாகவும் போலீசார் கூறினர். இதனால் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.






