என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • திருவொற்றியூர் நெடுஞ்சாலை அருகில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
    • மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் திருவொற்றியூர் நெடுஞ்சாலை அருகில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்று பார்த்து விசாரித்ததில் அவர் மீஞ்சூர் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தவர் என்பது தெரிந்தது. அவர் யார் என்று தெரியவில்லை. இது குறித்து மீஞ்சூர் போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

    • மீஞ்சூர் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.
    • வரி பாக்கியை நீதிமன்றம் மூலமாகவும் நேரில் சென்று வசூலிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மீஞ்சூர் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் பேரூராட்சித் தலைவர் ருக்குமணி மோகன்ராஜ் தலைமையில் செயல் அலுவலர் வெற்றியரசு துணைத் தலைவர் அலெக்சாண்டர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் குடிநீர், மழை நீர், கால்வாய், மின்விளக்கு, சாலை அமைத்தல் மற்றும் வியாபாரிகள் 1988 முதல் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய 6.80 லட்சம் வரி பாக்கியை நீதிமன்றம் மூலமாகவும் நேரில் சென்று வசூலிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • காக்களூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ஹரிஹரன்.
    • மர்ம நபர் திடீரென சியாமளா மீது மிளகாய் பொடியை தூவினார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த காக்களூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ஹரிஹரன். இவரது மனைவி சியாமளா. இவர் அதிகாலை வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர் திடீரென சியாமளா மீது மிளகாய் பொடியை தூவினார். இதில் சியாமளா நிலைகுலைந்தபோது அவர் அணிந்து இருந்த செயின், மோதிரம், வளையலை பறித்து அவர் தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளியான ராஜன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 7½ பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

    • மத்திய அரசின் விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது.
    • சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர், உழவர் சந்தை அருகே மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மத்திய அரசின் விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது.

    ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் துளசி நாராயணன் கலந்து கொண்டு டிராக்டர் பேரணியை தொடங்கி வைத்தார்.

    இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு டிராக்டர்களில் பேரணியாக சென்றனர். அவர்கள் திருவள்ளூர் உழவர் சந்தையில் இருந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை பேரணி நடத்தினர். இதேபால் ஏராளமானோர் மோட்டார்சைக்கிள்களிலும் பேரணியாக பங்கேற்றனர்.

    எம்.எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரையின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அரசு கொள்முதலை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

    சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும். பயிர் காப்பீட்டு திட்டத்தை விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்60 வயதை பூர்த்தி செய்த அனைத்து விவசாயிகளுக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி நிர்வாகிகள் பொது மக்களுக்கும் போக்கு வரத்துக்கும் இடையூறாக போலீசாரின் அனுமதி இல்லாமல் பேரணியாக சென்றதாக கூறப்படுகிறது.

    இதை தொடர்ந்து அனுமதி இன்றி பேரணியாக சென்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணி நிர்வாகிகள், விவசாயிகள் உட்பட 90 பேர் மீது திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி வழக்கு பதிவு செய்து உள்ளார். இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    • இந்த ஓட்டல் 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
    • உரிமையாளர் டிஜிட்டல் பேனர் மூலம் அறிவிப்பு செய்திருந்தார்.

    திருத்தணி :

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சித்தூர் சாலையில் அசைவ ஓட்டல் ஒன்று 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 3-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 3 ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என ஓட்டல் உரிமையாளர் டிஜிட்டல் பேனர் மூலம் அறிவிப்பு செய்திருந்தார்.

    இதனையடுத்து நேற்று அதிகாலை முதல் அலைமோதிய அசைவ பிரியர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து 3 ரூபாய்க்கு பிரியாணியை வாங்கி உணவகத்தில் அமர்ந்து அருந்தியும், பார்சல் வாங்கி கொண்டும் சென்றனர்.

    • கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார்.
    • ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. புல்லரம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    இந்த கூட்டத்தில், ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், செலவினங்கள், ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட பணிகளின் விவரங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, திருவள்ளூர் சப்-கலெக்டர் மகாபாரதி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபிநேசன், தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெபக்குமாரி அனி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் ரூபேஷ் குமார், திருவள்ளூர் ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பேபி மனோகரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பல்வேறு துறையை சேர்ந்த திரளான அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி திருமலை தலைமை தாங்கினார்.
    • வைப்புத் தொகை கணக்கு குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் கலைஞர் நகர் அரசமரம் அருகே நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி திருமலை தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மகேஷ் முன்னிலை வகித்தார். பற்றாளராக கேளம்மாள் கலந்து கொண்டார்.

    காலை 10.30 மணிக்கு துவங்க வேண்டிய கிராமசபை கூட்டம், 12 மணி வரையில் பற்றாளர் வராததால் பொதுமக்கள் காத்திருந்தனர். மேலும், கூட்டத்தில் வார்டு உறுப்பினர் சித்ராவின் கணவர் ராஜு, பூங்கொடியின் கணவர் வெங்கடேசன் ஆகிய இருவர் மட்டுமே கலந்து கொண்டனர். வார்டு உறுப்பினர்கள் பத்மாவதி, பவானி, பாபு, எழிலரசு, நஷீலா ஆகியோர் கூட்டம் துவங்கும் வரையில் வரவில்லை.

    உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளே கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றால் அரசு நலத்திட்ட பணிகள் எவ்வாறு முறையாக நடைபெறும் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். மேலும், வைப்புத் தொகை கணக்கு குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் முறையான கணக்குகளை கூறவில்லை. இதனால் கூட்டத்தில் நீண்ட நேரம் கூச்சலும்-குழப்பமும் நிலவியது. இதன் பின்னர், ஊராட்சி மன்ற தலைவர் எழுந்து உரிய கணக்குகளை அடுத்த கிராம சபை கூட்டத்தில் சமர்பிப்பதாக கூறினார். இதன் பின்னர், கிராம சபை கூட்டம் நிறைவு பெற்றது. 

    • ஆவடி ரெயில்வே போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
    • ரெயில் முன்பு பாய்ந்து பெண் போலீஸ் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருநின்றவூர்:

    திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீபிரியா (வயது35). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் பரங்கிமலையில் லஞ்ச ஒழிப்பு துறையில் காவலராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை ஸ்ரீபிரியா ஆவடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ரெயில் மோதியதில் உடல் சிதறிய நிலையில் இறந்து கிடந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஆவடி ரெயில்வே போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இன்று காலை 10 மணியளவில் ஸ்ரீபிரியா தண்டவாளம் அருகே நடந்து வந்தபோது சென்னை நோக்கி வந்த ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் மீது பாய்ந்ததை சில பயணிகள் பார்த்ததாக தெரிவித்து உள்ளனர்.

    எனவே அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். பணி செய்த இடத்தில் ஏதேனும் நெருக்கடி இருந்ததா? அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன என்பது குறித்து ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.

    ரெயில் முன்பு பாய்ந்து பெண் போலீஸ் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அரசின் பல்வேறு துறைகளின் வாயிலாக 17 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்து 7 ஆயிரத்து 456 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.
    • விழாவில் தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களை 23 போலீசாருக்கும், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 373 அலுவலர்களுக்கும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளுர் மாவட்டத்தில் நடைபெற்ற 74-வது குடியரசு தினவிழாவில் திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து வண்ண பலூன்களை வானில் பறக்கவிட்டு காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    மேலும் அரசின் பல்வேறு துறைகளின் வாயிலாக 17 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்து 7 ஆயிரத்து 456 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

    விழாவில் தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களை 23 போலீசாருக்கும், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 373 அலுவலர்களுக்கும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

    அதைத்தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து இனிப்புகள், பரிசுகள் வழங்கி கௌரவித்தனர். தொடர்ந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் போலீஸ் சூப்ரெண்ட் சீப்பாஸ் கல்யாண், உதவி போலீஸ் சூப்பிரண்ட் விவேகானந்தா சுக்லா, திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அரசி ஸ்ரீ வத்சன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜவர்கலால், வட்டாட்சியர் மதியழகன் மற்றும் அரசு அலுவலர்கள் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

    • அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட கலெக்டர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
    • திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பஸ் நிறுத்தம் அருகே உள்ள பா.ஜ.க. கொடி கம்பத்தில் அக்கட்சியினர் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர்.

    பெரியபாளையம்:

    நாடு முழுவதும் 74-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக கவர்னர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட கலெக்டர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

    மேலும், அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்பு அலுவலக கட்டிடங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

    இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பஸ் நிறுத்தம் அருகே உள்ள பா.ஜ.க. கொடி கம்பத்தில் அக்கட்சியினர் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர்.

    கட்சி கொடி கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பெரியபாளையத்தில் உள்ள எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 74-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
    • வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 74-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியை ஒன்றிய பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். துணை பெரும் தலைவர் வக்கீல் கே.சுரேஷ் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், ஒன்றிய குழு உறுப்பினர் கோடுவெளி குழந்தைவேலு, வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் (நிர்வாகம்) சுபதாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தமிழ் காக்க தங்கள் உயிரையும் துச்சமாக நினைத்து உயிரை கொடுத்த வீரமறவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாள் இந்நாள்.
    • தியாக வரலாற்றை மீண்டும் மீண்டும் சொல்வது நமது தமிழர் இனம் தாழ்ந்துவிட கூடாது என்பதற்காகத் தான்.

    திருவள்ளூரில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

    வீழ்ச்சியுற்றிருந்த தமிழினம் பகுத்தறிவு கருத்துக்களால் இன, மான, மொழி உணர்ச்சி பெற்று வீறுகொண்டு எழுந்த வீர வரலாற்றை ஒவ்வொரு தமிழரும் நினைவு கூற கூடிய நாள் தான் இந்த வீரவணக்க நாள்.

    ஆங்கில ஆட்சியின் பிடியில் இருந்து நாம் விடுதலை பெறுவதற்கு முன்பாகவே இந்திய ஆதிக்கத்தை நிறுவ முயன்றவர்களை எதிர்த்து தமிழ் காக்க தங்கள் உயிரையும் துச்சமாக நினைத்து உயிரை விலையென கொடுத்த வீரமறவர்களுக்கு வீர வணக்கம்  செலுத்துகிற நாள் இந்த நாள்.

    தமிழ்நாடு இதுவரை பல்வேறு மொழிப்போர் களங்களை சந்தித்திருக்கிறது. 1938 முதல் 1940 வரை முதல் களம். 1948 முதல் 1950 இரண்டாம் களம், 1953 முதல் 1956 வரை மூன்றாம் களம், 1959 முதல் 1961 வரை நான்காம் களம், 1986 ஐந்தாம் களம் இந்த தியாக வரலாற்றை மீண்டும் மீண்டும் சொல்வது நமது தமிழர் இனம் தாழ்ந்துவிட கூடாது என்பதற்காக தான். ஒரு நல்ல காரியத்திற்காகவும் நாட்டிற்காகவும் வாழ்ந்து தமிழுக்காக உயிரீந்தவர்கள் தான் இந்த மொழிப்போர் தியாகிகள்.

    மத்தியில் ஆளும் பாஜக அரசு, இந்தி மொழியை திணிக்க தொடர்ந்து முயற்சி செய்கிறது. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே தேர்தல், ஒரே தேர்வு, ஒரே உணவு, ஒரே பண்பாடு என்ற வரிசையில் ஒரே மொழியை வைத்து மற்ற தேசிய இன மக்களின் மொழிகளை அழிக்க பார்க்கிறார்கள். 

    இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

    ×