என் மலர்
திருவள்ளூர்
- காரின் கண்ணாடியை உடைத்து விட்டு டேஷ் போர்டில் இருந்த ரொக்கப் பணம் ரூ.2 லட்சத்தை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.
- பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமம் ராஜா தெருவில் வசித்து வருபவர் ரவிராஜ்(வயது52) தொழிலதிபர் ஆவார். இவருக்கு பூரிவாக்கம் மற்றும் ஊத்துக்கோட்டை ஆகிய இரண்டு இடங்களில் ரைஸ்மில்கள் உள்ளது.
இந்நிலையில் ரைஸ்மில்லுக்கு புதியதாக ஒரு இயந்திரம் வாங்க இன்று மதியம் பெரியபாளையத்தில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் ரூ.5.35 லட்சம் டெபாசிட் செய்தார். மீதி இருந்த ரொக்க தொகை ரூ.2. லட்சத்தை தனது காரின் முன்பக்க டேஷ் போர்டில் வைத்தார். வங்கியில் தனது செக் புக்கை மறதியாக வைத்துவிட்டு காரில் வந்து ஏறிவிட்டார். தனது வீடு நோக்கி செல்ல முற்பட்டவருக்கு செக் புக்கை மறந்து விட்டோம் என நினைவு வந்தது. உடனடியாக கார் கண்ணாடிகளை ஏற்றிவிட்டு காரை பூட்டிக்கொண்டு வங்கிக்குள் சென்று தனது செக் புக்கை எடுத்துக்கொண்டு தனது காரை நோக்கி நடந்து வந்தார்.
அப்பொழுது ஒரு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டிருந்த இரண்டு மர்ம நபர்கள் வேகமாக வந்து காரின் இடது பக்கமாகம் நின்றனர். கண் இமைக்கும் நேரத்தில் காரின் கண்ணாடியை உடைத்து விட்டு டேஷ் போர்டில் இருந்த ரொக்கப் பணம் ரூ.2 லட்சத்தை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரவிராஜ் திருடன், திருடன் என்று கத்தினார். ஆனால் மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர். தகவல் அறிந்து பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பட்டப் பகலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்திற்கு ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி விரைந்து வந்து சிசிடிவி கேமரா உள்ளிட்ட பல்வேறு வகையிலான தடயங்களை சேகரித்தார். பின்னர் கொள்ளையர்களை பிடிக்க பகதூர் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பை நிறுத்தி உள்ளனர்.
- பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 240 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
செம்பரம்பாக்கம்:
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம். கிருஷ்ணாநீர் திட்டத்தின் படி ஆந்திரா அரசு வருடம் தோறும் தமிழகத்திற்கு 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி. எம். சி. தண்ணீரை பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.
அதன்படி கடந்த நவம்பர் 28-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 2 ஆயிரத்து 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டாஸ் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை கொட்டியது. இதனால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பூண்டி ஏரிக்கும் தண்ணீர் வரத்து அதிகமானது. ஆந்திராவிலும் பலத்த மழை பெய்ததால் நீர்வரத்து அதிகமாகி பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியது.
போதுமான தண்ணீர் இருப்பு உள்ளதால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பை நிறுத்தும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர்.
இதனை ஏற்று கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பை நிறுத்தி உள்ளனர். பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 33.68 அடியாக பதிவானது. 2.724 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 240 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 38 கன அடி விதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
நவம்பர் 28-ந் தேதியில் இருந்து நேற்று இரவு வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 3½ டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- திருமணமான பிறகு கைக்குழந்தையுடன் ராகிணி வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் வாழ்ந்து வந்ததை அவரது வீட்டார் கவுரவ பிரச்சினையாக கருதியுள்ளனர்.
- கொளத்தூர் துணை கமிஷனர் ராஜாராம் மேற்பார்வையில் புழல் உதவி கமிஷனர் ஆதிமூலம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.
செங்குன்றம்:
புழல் விநாயகபுரத்தை சேர்ந்தவர் சுதா சந்தர். 22 வயதான இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ராகிணி என்ற பெண்ணும் காதலித்து வந்தனர்.
ஆனால் ராகிணியின் வீட்டினர் சுதாசந்தருக்கு அவரை திருமணம் செய்து கொடுக்க மறுத்துள்ளனர். இதையடுத்து அம்பத்தூர் ஒரகடம் பகுதியைச் சேர்ந்த வசந்த் என்ற வாலிபருக்கும் ராகிணிக்கும் இடையே திருமணம் நடைபெற்றுள்ளது.
இதன் பின்னர் ராகிணிக்கு குழந்தையும் பிறந்துள்ளது. திருமணத்துக்கு பிறகு ராகிணியின் காதல் விவகாரம் வசந்துக்கு தெரியவந்தது. இதனால் அவர் மனைவி ராகிணியிடம் குழந்தையின் பிறப்பில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ராகிணி, கணவர் வசந்தை பிரிந்து காதலன் சுதாசந்தருடன் சென்று விட்டார். போகும் போது கைக் குழந்தையையும் தூக்கிச் சென்று விட்டார்.
இது தொடர்பாக ராகிணியிடம் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. அப்போது அவர் கணவர் வசந்துடன் வாழ பிடிக்கவில்லை என்றும், காதலன் சுதாசந்தருடனேயே சென்று விடுகிறேன் என்றும் கூறியுள்ளார். இதன் பின்னர் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இருப்பினும் சுதாசந்தர், மனைவியை அபகரித்துச் சென்று விட்டதாக வசந்த் கருதினார்.
இந்த நிலையில் நேற்று இரவு புழல் விநாயகபுரம் கல்பாளையம் அருகே சுதா சந்தரும், ராகிணியும் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோவில் வந்த கும்பல் இவர்களை வழி மறித்து மோட்டார் சைக்கிளை கீழே இடித்து தள்ளியது. இதில் கீழே விழுந்த சுதாசந்தரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே சுதாசந்தர் துடிதுடித்து பலியானார்.
கண் இமைக்கும் நேரத்தில் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டு சுதாசந்தரை தீர்த்துக் கட்டிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் புழல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது காதலன் சுதாசந்தரின் உடலை பார்த்து ராகிணி கதறி அழுது கொண்டிருந்தார்.
அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது ராகிணி, கண்ணீர் மல்க, காதலன் சுதா சந்தரை தனது குடும்பத்தினரும், கணவரும் சேர்ந்தே தீர்த்துக் கட்டியதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.
திருமணமான பிறகு கைக்குழந்தையுடன் ராகிணி வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் வாழ்ந்து வந்ததை அவரது வீட்டார் கவுரவ பிரச்சினையாக கருதியுள்ளனர். அதே நேரத்தில் கணவர் வசந்துக்கும் இது மானப் பிரச்சினையாக மாறி உள்ளது. இதனால் வசந்த் மாமியார் வீட்டினருடன் சேர்ந்து சுதாசந்தரை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டினர். இதன்படி சுதாசந்தரும் ராகிணியும் வெளியில் செல்லும் இடங்களை இவர்கள் கூட்டாக கண்காணித்து உள்ளனர்.
நேற்று இரவும் இருவரையும் பின் தொடர்ந்து சென்றனர். அப்போதுதான் புழல் விநாயகபுரம் பகுதியில் வைத்து சுதாசுந்தரை வெட்டிக்கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
கணவர் வசந்த், தனது தாய், அண்ணன் மற்றும் உறவினர்கள் என 5 பேர் சேர்ந்து சுதாசந்தரை தீர்த்துக் கட்டியதாக ராகிணி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் கொலை குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
கொளத்தூர் துணை கமிஷனர் ராஜாராம் மேற்பார்வையில் புழல் உதவி கமிஷனர் ஆதிமூலம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.
- தைகிருத்திகையையொட்டி அதிகாலை மூலவருக்கு பால், விபூதி, பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உட்பட, பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.
- திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருத்தணி:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் இன்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
இந்நிலையில் தை கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் மலைக்கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.
தைகிருத்திகையையொட்டி இன்று அதிகாலை மூலவருக்கு பால், விபூதி, பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உட்பட, பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.
இதை தொடர்ந்து தங்கவேல், தங்க கீரிடம் உட்பட, வைர ஆபரணங்களால் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்தது.
மேலும் காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப் பெருமானுக்கு, சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஏராளமான பக்தர்கள் மயில் காவடி, பால் காவடி, பன்னீர் காவடி, மலர் காவடி, மற்றும் அலகு குத்தி நேர்த்திக்கடனை செலுத்தினர்.
- மின்கோபுரம் அமைய உள்ள மீனவர்களின் மீன்பிடி பகுதியில் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
- கொசஸ்தலை ஆற்றின் மீன்பிடி பகுதியில் கட்டிட கழிவுகள் கொட்டப்படுவதால் ஆற்றின் நீரோட்டம் தடைபடும்.
பொன்னேரி:
வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து மின்சாரத்தை வெளியிடத்துக்கு அனுப்ப கொசஸ்தலை ஆற்றில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக மின்கோபுரம் அமைய உள்ள மீனவர்களின் மீன்பிடி பகுதியில் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதற்கு எண்ணூரை சுற்றி உள்ள மீனவ கிராம மக்கள் ஆரம்பத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கொசஸ்தலை ஆற்றின் மீன்பிடி பகுதியில் கட்டிட கழிவுகள் கொட்டப்படுவதால் ஆற்றின் நீரோட்டம் தடைபடும். மீன்பிடி தொழில் பாதிக்கும் என்று தெரிவித்தனர்.
மேலும் கொசஸ்தலை ஆற்றில் உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எண்ணூர் மீனவ மக்கள் நலச் சங்கத்தினர் இன்று படகுகிளல் சென்று கொசஸ்தலை ஆற்றில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி இன்று காலை எண்ணூரை சுற்றி உள்ள 8 மீனவ கிராம மக்கள் மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் படகுகளில் கருப்பு கொடியுடன் மின்கோபுரம் அமைய உள்ள இடத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட படகுகளில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் கொசஸ்தலை ஆற்றில் மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து மீனவர்கள் கூறும் போது, 'கொசஸ்தலை ஆற்றில் வடசென்னை அனல்மின் நிலையம் உயர் மின் கோபுரம் அமைத்து வருகிறது.
இதனால் ஆற்றின் நீரோட்டம் தடைபடும். மீன்பிடி பகுதியில் அமைப்பதால் எங்களது வாழ்வா தாரமும் பாதிக்கப்படும். இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும்' என்றனர்.
- வீட்டில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
- மொத்தம் 21 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி கம்மார் தெரு, அத்திக்குளம் மேடு ஆகிய பகுதிகளில் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கள்ளத்தனமாக விற்பனை செய்வதாக ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
எனவே, இன்று காலை போலீசார் அந்தப் பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
ஆரணி கம்மார் தெருவில் மது விற்பனை செய்த காஞ்சனா(வயது32) என்ற பெண்ணை கைது செய்து அவரிடமிருந்து 13 மது பாட்டில்களையும், அத்திக்குளம் மேடு பகுதியில் மேற்கொண்ட சோதனையில் மது விற்பனை செய்த பத்மாவதி(வயது65) என்ற மூதாட்டியையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 9 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
எனவே, மொத்தம் 21 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இரண்டு பெண்களையும் காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
- அத்திப்பட்டு புதுநகரில் வல்லூர் அனல் மின் நிலையம் உள்ளது.
- மூன்றாவது அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்து அத்திப்பட்டு புதுநகரில் வல்லூர் அனல் மின் நிலையம் உள்ளது. இங்குள்ள மூன்று அலகுகளில் தலா 500 மெகாவாட் என மொத்தம் 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் மூன்றாவது அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்ட 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
- வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட மாண்டாஸ் புயல் காரணமாக பூண்டி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
- புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 3158 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.
ஊத்துக்கோட்டை:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியில் மழை நீர், பள்ளிப்பட்டு அருகே உள்ள அம்மாபள்ளி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட மாண்டாஸ் புயல் காரணமாக பூண்டி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் நீர்வரத்து அதிகமானதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து முழுவதும் நிரம்பியது.
இதனை கருத்தில் கொண்டு கடந்த மாதம் 13-ந்தேதி பூண்டி ஏரியில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இரு ஏரிகளுக்கும் வினாடிக்கு 550 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
இதற்கிடையே பூண்டி ஏரியில் போதுமான அளவு தண்ணீர் இருந்ததால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. இதனால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது.
இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியிலும் போதுமான அளவு தண்ணீர் உள்ளதை கருத்தில் கொண்டு இன்று காலை முதல் பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. புழல் ஏரிக்கு மட்டும் வினாடிக்கு 240 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 33.82 அடி ஆக பதிவானது. ஏரியில் 2.767 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீர் வாரி யத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 38 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி. இதில் 3424 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 3158 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. புழல் ஏரியும் 95 சதவீதம் நிரம்பி இருப்பதால் வரும் நாட்களில் பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கும் தண்ணீர் அனுப்ப முடியாத நிலை ஏற்படும். எனவே கண்டலேறு அணை யில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பும் வரும் நாட்களில் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழக அதிகாரிகள் ஏற்கனவே ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- கவுன்சிலர் ரோஜாவின் கணவரான ரமேசுக்கும், சுரேந்தருக்கும் நிலம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.
- கடத்தல் கும்பலிடம் இருந்து கார், துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பல்லவாடா கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.வில் ஜெயலலிதா பேரவை இணை செயலாளராக உள்ளார்.
இவரது மனைவி ரோஜா. இவர் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தின் 1-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். இவர்களது மகன் ஜேக்கப். கல்லூரி மாணவர்.
கடந்த 24-ந்தேதி காலை வீட்டில் இருந்த கவுன்சிலர் ரோஜா, அவரது மகன் ஜேக்கப் ஆகிய 2 பேரையும் மர்ம கும்பல் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ் இது தொடர்பாக போலீசில் புகார் செய்தார். இதற்கிடையே மர்ம கும்பல் ஆந்திர மாநிலம் சத்தியவேடு அருகே ராள்ளகுப்பம் பகுதியில் விட்டுவிட்டு தப்பி சென்று விட்டதாக கூறி அன்று இரவே கவுன்சிலர் ரோஜாவும், அவரது மகன் ஜேக்கப்பும் திரும்பி வந்தனர்.
இது தொடர்பாக பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதில் அதே கிராமத்தை சேர்ந்த சுரேந்தர், தனது கூட்டாளிகளான கும்ப்ளியை சார்ந்த சந்தோஷ் (26), ஆந்திர மாநிலம் சுதிர் பாளையத்தை சேர்ந்த பாஸ்கர் (30), நாகலாபுரத்தை சேர்ந்த நவீன் (28), ராச பாளையத்தை சேர்ந்த சந்திரசேகர் (30) ஆகியோருடன் சேர்ந்து இந்த கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து சுரேந்தர், சந்தோஷ், பாஸ்கர், நவீன் ஆகிய 4பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. கவுன்சிலர் ரோஜாவின் கணவரான ரமேசுக்கும், சுரேந்தருக்கும் நிலம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. நிலத்தை குறைந்த விலைக்கு விற்குமாறு ரமேஷ் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் விவசாயம் செய்ய மின் இணைப்பு பெறுவதற்காக சென்றபோது மின் இணைப்பு வாங்க விடாமல் ரமேஷ் தடுத்ததாகவும் தெரிகிறது.
இதைத்தொடர்ந்து ரமேசை மிரட்டுவதற்காக அவரது மனைவி மற்றும் மகனை சுரேந்தர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடத்தி உள்ளார். பின்னர் போலீசார் தேடுவதை அறிந்ததும் விட்டுச்சென்று இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதற்காக பீகார் சென்று கள்ள கைத்துப்பாக்கி ஒன்றையும் வாங்கி உள்ளனர்.
இந்த கடத்தல் தொடர்பாக தலைமறைவாக உள்ள சந்திரசேகர் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள். கடத்தல் கும்பலிடம் இருந்து கார், துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
- நகைகளை கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் மாலதியை சரமாரியாக கத்தியால் வெட்டியுள்ளான்.
- போலீசார் அருண்குமாரை அழைத்து வைத்து முறையாக விசாரணை மேற்கொண்டதில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டான்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், மல்லியங்குப்பம் ஊராட்சியை சேர்ந்த ஏரிக்கரை தெருவில் வசித்து வருபவர் உதயகுமார்(வயது30). காய்கறி வியாபாரி. திருமணம் ஆன இவருக்கு மாலதி (வயது26) என்ற மனைவியும், தர்சிணி(வயது8), ஹாருணி(வயது6) என இரண்டு மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவரும் பெரியபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முறையே மூன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை காலை உதயகுமார் காய்கறி வியாபாரம் செய்ய வெளியே சென்று விட்டார். அவரது இரண்டு குழந்தைகளும் பள்ளிக்கு சென்று விட்டனர். இதனால் மாலதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை அறிந்த மர்ம நபர், முகத்தை மூடிய வண்ணம், ரெயின் கோட் அணிந்து கொண்டு வீட்டின் மாடிப்படி வழியாக வீட்டின் உள்ளே இறங்கி வந்து உள்ளான். பின்னர், தனியாக இருந்த மாலதியின் கழுத்தில் இருந்த தங்கச் செயின், கம்மல், மூக்குத்தி ஆகியவற்றை பறிக்க முயன்றார். ஆனால், மாலதி நகைகளை கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் மாலதியை சரமாரியாக கத்தியால் வெட்டியுள்ளான்.
ரத்தம் சொட்டச் சொட்ட மர்ம நபரிடம் போராடிய மாலதி தங்க நகைகள், ரொக்கப்பணம் உள்ளிட்டவைகளை பீரோவில் இருந்து எடுத்துக் கொடுத்தார். அதனை வாங்கிக் கொண்ட அந்த வாலிபர் மீண்டும் மாடிப்படி வழியாக ஏறி வெளியே தப்பி சென்றான்.
பின்னர், வீட்டின் அருகே நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றான். சிறிது நேரத்தில் ரத்தம் சொட்ட,சொட்ட கதவை திறந்து கொண்டு வெளியே வந்த மாலதியின் கூக்குரலை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். மாலதி நடந்தவற்றை கூறிவிட்டு மயங்கி விழுந்து விட்டார். உடனடியாக அவரை பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
தகவல் அறிந்த ஆரணி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்துக்கு ஊத்துக்கோட்டை துணை போலிஸ் சூப்பிரண்டு சாரதி வந்து விசாரணை மேற்கொண்டார். சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வந்து சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்து கொண்டு சென்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இக்கொள்ளை சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்நிலையில், உதயகுமாரின் பங்காளி மகன் மல்லியங்குப்பம் வேலன்தெருவில் வசித்து வரும் அருண்குமார்(வயது22) என்பவர் மீது ஆரணி காவல் நிலைய தனி பிரிவு காவலர் குமரவேலுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே, போலீசார் அருண்குமாரை அழைத்து வைத்து முறையாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாலதியை தாக்கி கொள்ளையடித்ததாக அருண் குமார் கூறி உள்ளார்.
அருண்குமார் மற்றும் அவரது நண்பரான ஆரணி அருகே உள்ள மங்களம் காலனியைச் சேர்ந்த ஜேபி (வயது24) ஆகியோர் போந்தவாக்கம் அரசு மதுபான கடை அருகே திங்கட்கிழமை காலை சந்தித்தார்களாம்.
அப்பொழுது 'மல்லியங்குப்பம் கிராமத்தில் எனது அண்ணன் முறையான உதயகுமாரின் மனைவி மாலதி தனியாக உள்ளார். அவரது வீட்டில் நகைகள், பணம் தற்போது உள்ளது என்றும் அங்கு எளிதாக கொள்ளையடிக்கலாம்' என அருண்குமார் கூற, இருவரும் சேர்ந்து கொள்ளையடிக்க முடிவு செய்தார்களாம்.
மேலும், அதே ஊரைச் சேர்ந்த அருண்குமார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டால் யாருக்கும் சந்தேகம் வராது என்ற காரணத்தால் அருண்குமாரே இச்சம்பவத்தில் ஈடுபட்டாராம். இதன்பின்னர், போந்தவாக்கம் அரசு மதுபான கடை அருகே காத்திருந்த ஜேபியை அருண்குமார் சந்தித்துள்ளார். பின்னர், இருவரும் ஜேபி வீட்டிற்கு சென்று ரத்தக்கறையுடன் இருந்த ஆடைகளை மாற்றிக்கொண்டு ஒன்றும் தெரியாததை போன்று அருண்குமார் மட்டும் மல்லியங்குப்பம் பகுதியிலேயே சுற்றி திரிந்துள்ளார். இருப்பினும், போலீசார் தன்னை பிடித்து விட்டனர் என்று அருண்குமார் விசாரணையின்போது கூறியிருக்கிறார்.
அருண்குமார் கொடுத்த தகவலின்படி தங்க நகைகளையும், ரொக்க பணத்தையும் போலீசார் மீட்டனர். மேலும், ஜேபியை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். இதன் பின்னர், குற்றவாளிகள் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று கும்மிடிப்பூண்டி குற்றவியல் நீதிமன்றம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
- அரசு அலுவலர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் கிரிதரன் தலைமை தாங்கினார்.
- பங்களிப்பு ஓய்வு ஊதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இன்று தமிழ்நாடு அரசு அலுவலர்கள் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அலுவலர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் கிரிதரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்கள் தமிழ்நாடு அரசு சங்கத்தின் தென் சென்னை மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், மாநில துணை தலைவர்கள் சங்கர், ஆலீஸ் ஷீலா, தமிழ்நாடு அரசு அலுவலர் மாநிலத் துணைத் தலைவர் அரங்க ஆனந்த கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். 100க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியவாறு, பங்களிப்பு ஓய்வு ஊதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படி மத்திய அரசு அறிவித்த அதே நாளில் வழங்கப்பட வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே நடத்த வேண்டும், சிறப்பு கால முறை ஊதியத்தில் பணியாற்றி வரும் சத்துணவு, அங்கன்வாடி, ஊர்புற நூலகர்கள் காலம் வரை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கொரோனா காலத்தில் பொது சுகாதார மற்றும் மருத்துவத் துறையில் பணியாற்றப்பட்ட அனைத்து பணியாளர்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும், ஒட்டுமொத்த அரசு அலுவலர் சமுதாயத்தை பலி கொடுக்கும் அரசாணை 115, அரசாணை எண் 152, அரசாணை எண் 139 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்... உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
- 60 குடும்பம் வீடுகள் இல்லாதது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சார் ஆட்சியர் தெரிவித்தார்.
- அங்கன்வாடி மையத்தை சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் ஆய்வு செய்தார்.
திருவள்ளூர்:
மீஞ்சூர் அடுத்த நந்தியம் பாக்கம் ஊராட்சியில் 150-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் உள்ளன. இவர்களின் ஜாதி சான்றிதழ், இருப்பிடம், அடிப்படை தேவைகள், உள்ளிட்டவைகள் குறித்து பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார்.
அப்போது 60 குடும்பம் வீடுகள் இல்லாதது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். முன்னதாக அதே பகுதியில் அங்கன்வாடி மையத்தில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருவதாகவும் அங்கன்வாடி மையம் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் காணப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். பின்னர் அங்கன்வாடி மையத்தை சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் ஆய்வு செய்தார்.






