என் மலர்
உள்ளூர் செய்திகள்

மல்லியங்குப்பம் கிராமத்தில் பட்டப்பகலில் இளம்பெண்ணை தாக்கி கொள்ளை: இரண்டு வாலிபர்கள் சிறையில் அடைப்பு
- நகைகளை கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் மாலதியை சரமாரியாக கத்தியால் வெட்டியுள்ளான்.
- போலீசார் அருண்குமாரை அழைத்து வைத்து முறையாக விசாரணை மேற்கொண்டதில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டான்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், மல்லியங்குப்பம் ஊராட்சியை சேர்ந்த ஏரிக்கரை தெருவில் வசித்து வருபவர் உதயகுமார்(வயது30). காய்கறி வியாபாரி. திருமணம் ஆன இவருக்கு மாலதி (வயது26) என்ற மனைவியும், தர்சிணி(வயது8), ஹாருணி(வயது6) என இரண்டு மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவரும் பெரியபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முறையே மூன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை காலை உதயகுமார் காய்கறி வியாபாரம் செய்ய வெளியே சென்று விட்டார். அவரது இரண்டு குழந்தைகளும் பள்ளிக்கு சென்று விட்டனர். இதனால் மாலதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை அறிந்த மர்ம நபர், முகத்தை மூடிய வண்ணம், ரெயின் கோட் அணிந்து கொண்டு வீட்டின் மாடிப்படி வழியாக வீட்டின் உள்ளே இறங்கி வந்து உள்ளான். பின்னர், தனியாக இருந்த மாலதியின் கழுத்தில் இருந்த தங்கச் செயின், கம்மல், மூக்குத்தி ஆகியவற்றை பறிக்க முயன்றார். ஆனால், மாலதி நகைகளை கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் மாலதியை சரமாரியாக கத்தியால் வெட்டியுள்ளான்.
ரத்தம் சொட்டச் சொட்ட மர்ம நபரிடம் போராடிய மாலதி தங்க நகைகள், ரொக்கப்பணம் உள்ளிட்டவைகளை பீரோவில் இருந்து எடுத்துக் கொடுத்தார். அதனை வாங்கிக் கொண்ட அந்த வாலிபர் மீண்டும் மாடிப்படி வழியாக ஏறி வெளியே தப்பி சென்றான்.
பின்னர், வீட்டின் அருகே நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றான். சிறிது நேரத்தில் ரத்தம் சொட்ட,சொட்ட கதவை திறந்து கொண்டு வெளியே வந்த மாலதியின் கூக்குரலை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். மாலதி நடந்தவற்றை கூறிவிட்டு மயங்கி விழுந்து விட்டார். உடனடியாக அவரை பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
தகவல் அறிந்த ஆரணி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்துக்கு ஊத்துக்கோட்டை துணை போலிஸ் சூப்பிரண்டு சாரதி வந்து விசாரணை மேற்கொண்டார். சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வந்து சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்து கொண்டு சென்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இக்கொள்ளை சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்நிலையில், உதயகுமாரின் பங்காளி மகன் மல்லியங்குப்பம் வேலன்தெருவில் வசித்து வரும் அருண்குமார்(வயது22) என்பவர் மீது ஆரணி காவல் நிலைய தனி பிரிவு காவலர் குமரவேலுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே, போலீசார் அருண்குமாரை அழைத்து வைத்து முறையாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாலதியை தாக்கி கொள்ளையடித்ததாக அருண் குமார் கூறி உள்ளார்.
அருண்குமார் மற்றும் அவரது நண்பரான ஆரணி அருகே உள்ள மங்களம் காலனியைச் சேர்ந்த ஜேபி (வயது24) ஆகியோர் போந்தவாக்கம் அரசு மதுபான கடை அருகே திங்கட்கிழமை காலை சந்தித்தார்களாம்.
அப்பொழுது 'மல்லியங்குப்பம் கிராமத்தில் எனது அண்ணன் முறையான உதயகுமாரின் மனைவி மாலதி தனியாக உள்ளார். அவரது வீட்டில் நகைகள், பணம் தற்போது உள்ளது என்றும் அங்கு எளிதாக கொள்ளையடிக்கலாம்' என அருண்குமார் கூற, இருவரும் சேர்ந்து கொள்ளையடிக்க முடிவு செய்தார்களாம்.
மேலும், அதே ஊரைச் சேர்ந்த அருண்குமார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டால் யாருக்கும் சந்தேகம் வராது என்ற காரணத்தால் அருண்குமாரே இச்சம்பவத்தில் ஈடுபட்டாராம். இதன்பின்னர், போந்தவாக்கம் அரசு மதுபான கடை அருகே காத்திருந்த ஜேபியை அருண்குமார் சந்தித்துள்ளார். பின்னர், இருவரும் ஜேபி வீட்டிற்கு சென்று ரத்தக்கறையுடன் இருந்த ஆடைகளை மாற்றிக்கொண்டு ஒன்றும் தெரியாததை போன்று அருண்குமார் மட்டும் மல்லியங்குப்பம் பகுதியிலேயே சுற்றி திரிந்துள்ளார். இருப்பினும், போலீசார் தன்னை பிடித்து விட்டனர் என்று அருண்குமார் விசாரணையின்போது கூறியிருக்கிறார்.
அருண்குமார் கொடுத்த தகவலின்படி தங்க நகைகளையும், ரொக்க பணத்தையும் போலீசார் மீட்டனர். மேலும், ஜேபியை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். இதன் பின்னர், குற்றவாளிகள் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று கும்மிடிப்பூண்டி குற்றவியல் நீதிமன்றம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.






