என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • ஆரணியில் போர்க்கால அடிப்படையில் பேருந்து நிலையம் ஒன்று அமைத்துக் கொடுக்க வேண்டும்.
    • தூய்மை பணியாளர்களையும், மின் கம்பங்களை பழுதுபார்க்கும் தொழிலாளர்களையும் நிரந்தரமாக்க வேண்டும்

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில் சோழவரம் ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.வெங்கடேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்,ஆர்.மணி,ஆர்.முருகன், எம்.திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.முடிவில், நகரச் செயலாளர் எஸ்.வாசு நன்றி கூறினார்.

    சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சியில் வீட்டு வரியுடன் குப்பை வரி வசூலிப்பதை கண்டித்தும், இடிந்து விழும் நிலையில் உள்ள ஆரணி காய்கறி மார்க்கெட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும், மேலும், சுகாதார சீர்கேடுடன் உள்ள காய்கறி மார்க்கெட் கழிவறையை சுத்தம் செய்து தர வேண்டும், தூய்மை பணியாளர்களையும், மின் கம்பங்களை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும், அவர்களுக்கு சீருடை உள்ளிட்ட உபகரணங்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இப்போராட்டம் நடைபெற்றது.

    ஆரணி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆரணியில் போர்க்கால அடிப்படையில் பேருந்து நிலையம் ஒன்று அமைத்துக் கொடுக்க வேண்டும். ஆரணி பகுதியில் கொசு தொல்லையை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரணி அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். 24 மணி நேரமும் டாக்டர்கள் மற்றும் நர்சுகளை பணி அமர்த்த வேண்டும். இப்பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் சர்வீஸ் வாகனத்தை நிறுத்தி வைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனையில் போதிய அளவு மருந்து-மாத்திரைகள் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரணிக்கு வருவாய் அலுவலர் அலுவலகம் அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. 

    • விசாரணையின்போது குறிப்பிட்ட அந்த நிலம் பட்டா நிலம் என்று தெரிவிக்கப்பட்டது.
    • நிலத்தை அளந்து ஆக்கிரமிப்பில் உள்ளதா, இல்லையா? என்பதை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

    திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ள வீட்டை காலி செய்ய வேண்டும் என்று ஆவடி தாசில்தார் நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட மூன்று பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

    இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை தடுப்பதற்காக ஆக்கிரமிப்பாளர்களுக்கு 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    பின்னர் பத்து மடங்கு மின்கட்டணத்தை செலுத்த தயாராக இருப்பதாக மனு தாக்கல் செய்தால், வீட்டை காலி செய்ய பிறப்பித்த நோட்டீசிற்கு இடைக்கால தடை விதிப்பதாக மனுதாரர்களுக்கு நீதிபதிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மனு தாக்கல் செய்யவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதன் பிறகு இந்த பத்து மடங்கு மின் கட்டணத்தை செலுத்த தயாராக இருப்பதாக மனுதாரர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குறிப்பிட்ட அந்த நிலம் பட்டா நிலம் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நிலத்தை அளந்து ஆக்கிரமிப்பில் உள்ளதா, இல்லையா? என்பதை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆவடி தாசில்தாருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.

    • மயங்கி விழுந்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தான்.
    • கட்டையால் தாக்கியதில், வாந்தி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    நேற்று முன்தினம் கழிவறையில் சிறுவன் மயங்கி விழுந்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தான். பிரேத பரிசோதனையில், சிறுவன் அடித்து துன்புறுத்தப்பட்டது தெரியவந்தது. சிறுவனை கட்டையால் தாக்கியதில், வாந்தி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் விஜயகுமார், ஊழியர்கள் யுவராஜ், டில்லிபாபு, ஜீவிதன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • மர்ம கும்பல், கண்டெய்னர் பெட்டிகளை உடைத்து சுமார் ரூ.3கோடி மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றுவிட்டனர்.
    • திருடிய மின்சாதன பொருட்களை மர்ம கும்பல் குறைந்த விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு 3-ம் நிலையின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அனல் மின் நிலையத்தின் பாதுகாப்புக்காக சூழலும் கண்காணிப்பு கேமரா, டி.வி., கம்ப்யூட்டர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் பெங்களூருவில் இருந்து 2 கண்டெய்னர் பெட்டிகளில் வரவழைக்கப்பட்டு இருந்தன.

    இந்நிலையில் மர்ம கும்பல், கண்டெய்னர் பெட்டிகளை உடைத்து சுமார் ரூ.3கோடி மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றுவிட்டனர். இதனால் அனல் மின் நிலைய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து காவலாளி பழனி மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். உதவி ஆணையர் முருகேசன் ஆலோசனையின்படி இன்ஸ்பெக்டர் டில்லிபாபு, சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையிலான தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது எண்ணூர் பகுதியில் டி.வி. உள்ளிட்ட மின்சாதனை பொருட்களை சிலர் குறைந்து விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் வடசென்னை அனல் மின்நிலையத்தில் கண்டெய்னர் பெட்டிகளை உடைத்து திருடிய மின்சாதன பொருட்களை மர்ம கும்பல் குறைந்த விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து வடசென்னை அனல்மின் நிலையத்தில் திருட்டில் ஈடுபட்ட எண்ணூரை சேர்ந்த ஹரிஷ், விக்னேஷ், வாசு, பிரதாப், முத்துப்பாண்டி, அஜித், அருள்பாண்டி ஆகிய 7 பேரை கைது செய்தனர். வீட்டில் பதுக்கி வைத்திருந்த பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இரவு நேரத்தில் அவர்கள் படகில் சென்று திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப் பதிவு செய்த மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

    • பொன்னேரியில் முத்திரைத்தாள் குறைவு கட்டணம் வருவாய் வசூல் சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • முத்திரைத்தாள் குறைவு கட்டணத்தை செலுத்தி உடனடியாக பத்திரத்தை மீட்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    பொன்னேரி:

    பொன்னேரியில் முத்திரைத்தாள் குறைவு கட்டணம் வருவாய் வசூல் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் முத்திரைத்தாள் குறைவு கட்டணத்தை செலுத்தி உடனடியாக பத்திரத்தை மீட்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம் ஒரே நாளில் 251 பேர் முத்திரைத்தாள் குறைவு கட்டணத்தை செலுத்தினர். இதன்மூலம் ரூ.81 லட்சத்து 18 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சாரதா ருக்மணி, துணைப்பதிவு தலைவர் சேகர், முத்திரைதாளுக்கான சிறப்பு தனி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், பொன்னேரி சார் பதிவாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • கச்சூரில் உள்ள காப்பகத்தில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
    • இரவில் எங்கு செல்வது என்று தெரியாமல் பஸ் நிலையத்தில் நின்றபோது போலீசாரிடம் சிக்கினர்.

    திருவள்ளூர்:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள கச்சூரில் தனியார் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அங்கிருந்த 2 மாணவர்கள் திடீரென மாயமானார்கள். அவர்களை அங்குள்ள ஊழியர்கள் தேடி வந்தனர்.

    இதற்கிடையே திருவள்ளூர் பஸ் நிலையத்தில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக சுற்றிய 2 சிறுவர்களை பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் மற்றொருவர் பூந்தமல்லி அருகே தண்டலம் பகுதியைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவன் என்பது தெரியவந்தது.

    அவர்கள் கச்சூர் பகுதியில் உள்ள காப்பகத்தில் தங்கி படித்து வந்ததும், அங்கு இருக்க பிடிக்காததால் ஓட்டம் பிடித்து இருந்ததும் தெரிந்தது.

    திருவள்ளூர் வந்த அவர்கள் காலை முதல் திருவள்ளூர் ரெயில் நிலையம், வீரராகவர் கோவில் மற்றும் சிவன் கோவில்களில் சுற்றித்திரிந்து உள்ளனர். இரவில் எங்கு செல்வது என்று தெரியாமல் பஸ் நிலையத்தில் நின்றபோது போலீசாரிடம் சிக்கினர்.

    2 மாணவர்களையும் தலைமை காவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் விசாரித்தனர். பின்னர் இதுகுறித்து காப்பக நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    • எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு அஜித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    • ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஆவடி:

    அரியலூர் மாவட்டம் வங்குடி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 26). இவருடைய தம்பி ராஜ் (23). இவர்கள் இருவரும் ஆவடியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளனர். அஜித்குமார், சென்னையில் ஒரு தனியார் மாலில் வேலை செய்து வந்தார். அவருடைய தம்பி ராஜ், ஆவடியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு அஜித்குமார், ஆவடி-அண்ணனூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு அஜித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சின்ன காவனம் பகுதியில் ஏலியம்பேடு-பழவேற்காடு சாலையில் 4 கிலோமீட்டர் தூரம் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • சாலை விரிவாக்கப்பணிக்கு வீடு, கோவில்கள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த சின்ன காவனம் பகுதியில் ஏலியம்பேடு-பழவேற்காடு சாலையில் 4 கிலோமீட்டர் தூரம் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சாலையில் உள்ளபெரிய காவனம் ரெயில்வே கேட் முதல் சின்ன காவனம் வரை நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் 5 கோவில்கள் சாலை விரிவாக்க பணிக்காக அகற்றப்பட இருக்கிறது.

    இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது சாலை விரிவாக்கப்பணிக்கு வீடு, கோவில்கள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கூட்டத்தில் இருந்து சிலர் வெளிநடப்பு செய்தனர்.  இதனால் கூட்டத்தில பரபரப்பு ஏற்பட்டது.

    • பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூரில் பிரசித்தி பெற்ற திரிபுர சுந்தரி அம்பாள் சமேத தீர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கும்பாபிஷேகம் விழா கடந்த 27-ந் தேதி காலை கணபதி ஹோமம், லஷ்மிஹோமம், நவகிரக ஹோமத்துடன் தொடங்கியது.

    28-ந் தேதி காலை மூர்த்தி ஹோமம், சாந்தி ஹோமமும், திசா ஹோமமும், 29-ந் தேதி காலை அக்னி சங்கிரஹணம், தீர்த்த ஹங்கி ரஹணம், பிரசன்னாபிஷேகம், தீபாராதனை, யாக அலங்கா ரமும், மாலை கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை நடைபெற்றது 30-ந் தேதி காலை விசேஷ சந்தி, பாவனா பிஷேகம், இரண்டாம் கால யாகம், அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல், மாலை முதல் விஷேச சந்தி, பாவனா பிஷேகம், மூன்றாம் கால யாகம், பூர்ணாஹுதி, தீபாரா தனையும் நடந்தது.

    நேற்று காலை விசேஷ சந்தி, நான்காம் கால யாகம், தத்வார்ச்சனை, திரவி யாஹூதி, தீபாராதனையும், மாலை ஐந்தாம் கால யாகம், ஸ்பரிஸாஹூதி, தீபாராதனையும் நடந்தது. இன்று காலை 6 மணிக்கு 6-ம் கால யாக பூஜையும், 8.30 மணிக்கு மகா பூர்ணாஹூதி, சண்டேச யாகமும் 9 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடும் நடந்தது.

    இதனைத் தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியர்கள் ராஜ கோபுரம், மூலவர் விமான கோபுரம் மற்றும் அனைத்து விமான கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றினர். இதில் சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

    கும்பாபிஷேக விழாவை யொட்டி கோவிலை சுற்றியுள்ள அனைத்து சாலைகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. இன்று மாலை 6 மணிக்கு தீர்த்தீஸ்வரர் திருக்கல்யாணம், ரிஷப வாகன சேவை, பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீதீர்த்தீஸ்வரர் கோவில் பரம்பரை தர்ம கத்தா ஆர்.ரவி குருக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து உள்ளனர்.

    • பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
    • ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளிலும் நகராட்சி அலுவலகத்தில் வரிகள் செலுத்துவதற்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகள், வணிக வளாகங்கள், குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் தொழில் வரி, சொத்து வரி, காலி நிலமனை வரி, குடிநீர் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் கட்டாமல் நிலுவையில் உள்ளவர்கள் வரியை விரைந்து செலுத்த வேண்டும் என பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் நகராட்சிக்கு உட்பட்ட வணிக வளாகங்களில் நோட்டீஸ் அனுப்பியும் தொழில் வரி, சொத்து வரியை செலுத்தாத கடைகளை ஜப்தி செய்யும் நடவடிக்கை பூந்தமல்லி நகராட்சி கமிஷனர் நாராயணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. நகராட்சி அதிகாரிகள் ஜப்தி செய்ய வந்திருப்பதை அறிந்த கடை உரிமையாளர்கள் உடனடியாக நிலுவையில் உள்ள வரி பாக்கியினை நகராட்சிக்கு செலுத்தினார்கள். இதனால் வரி செலுத்திய கடைகளுக்கு ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.

    ஒரே நாளில் மட்டும் ரூ.10 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து வரி செலுத்தாத கடைகள் மீது ஜப்தி நடவடிக்கை செய்யப்படும் என நகராட்சி கமிஷனர் நாராயணன் தெரிவித்தார். மேலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளிலும் நகராட்சி அலுவலகத்தில் வரிகள் செலுத்துவதற்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் விரைந்து நிலுவையில் உள்ள வரியை செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது நகரமன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • பேருந்துகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
    • அடிக்கடி பயணிகளை தள்ளச் சொல்லி டிரைவர்கள் பஸ்சை ஸ்டார்ட் செய்து இயக்குகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம் ஆரணியில் 15,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இப்பகுதி மக்களின் வசதிக்காக ஆவடியில் இருந்து ஆரணிக்கு மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் சமீப காலமாக இப்பேருந்துகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    பேருந்துகள் குறித்த நேரத்தில் வருவதில்லை, இரவு நேரங்களிலும், விடியற்காலையிலும் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்பதால் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

    குறிப்பாக இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் சில பேருந்துகளின் செல்ப் மோட்டார் வேலை செய்யாததாலும், பேட்டரிகள் சரியில்லாததாலும் டிரைவர்கள் பஸ்சை குறித்த நேரத்தில் ஸ்டார்ட் செய்ய இயலவில்லை என கூறப்படுகிறது. அடிக்கடி பயணிகளை தள்ளச் சொல்லி டிரைவர்கள் பஸ்சை ஸ்டார்ட் செய்து இயக்குகின்றனர்.

    ஆரணி-ஆவடி வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளில் பயணம் செய்ய மிகவும் சிரமமாக உள்ளது என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். பள்ளி மாணவர்களுக்கும், பெண்களுக்கும் இலவச பஸ் பயணம் என்று கூறிவிட்டு இப்படி தள்ளு மாடல் வண்டியை இயக்க வேண்டாம் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வெங்கல் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனை மேற்கொண்டனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனை மேற்கொண்டனர். அரும்பாக்கம் கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது தலா 2 யூனிட் அளவு கொண்ட சவுடு மண்ணை ஏற்றிக்கொண்டு வந்த 4 லாரிகளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த லாரியில் அனுமதி இன்றி சவுடு மண் ஏற்றி வந்தது தெரிய வந்தது. அரும்பாக்கம் கிராமத்தில் அனுமதி இன்றி சவுடு மண் குவாரி நடத்துவதாகவும், அங்கிருந்து சவுடு மண் ஏற்றி வந்ததும் தெரிய வந்தது. எனவே போலீசார் சவுடுமண் குவாரியில் இருந்த ஜேசிபி இயந்திரம் மற்றும் நான்கு லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

    இது தொடர்பாக சவுடுமண் குவாரி நடத்திய வெற்றிவேல், ஜேசிபி இயந்திரத்தின் உரிமையாளர் கீழானூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன், லாரி உரிமையாளர்களான வெள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி, விளாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வேலு, திருநின்றவூரை சேர்ந்த மோகனகிருஷ்ணன், வீராபுரம் பகுதியை சேர்ந்த தனுஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×