என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • நாட்டுவெடி குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.
    • நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ரவுடி கார்த்திக்கின் 2 ககைளும் துண்டானது. அவருக்கு தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அம்பத்தூர்:

    வண்டலூர் அடுத்த ஓட்டேரி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி கார்த்திக்(38). இவர் மீது தாம்பரம், பள்ளிக்கரணை, செங்கல்பட்டு, பல்லாவரம், உள்பட சென்னையின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் 6 கொலை வழக்குகளும், கொலை முயற்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பல்வேறு குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் கார்த்திக் தனது கூட்டாளியான அம்பத்தூர், ஒரகடம் பகுதியில் உள்ள விஜயகுமாரின் வீட்டு மாடியில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.அப்போது நாட்டுவெடி குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

    இதில் கார்த்திக்கின் இரண்டு கைகள் மற்றும் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்த விஜயகுமாருக்கு காயம் ஏற்பட்டது.

    நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ரவுடி கார்த்திக்கின் 2 ககைளும் துண்டானது. அவருக்கு தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் சோதனைசெய்தபோது அங்கு நாட்டு வெடிகுண்ட தயாரிக்க பயன்படுத்த வைத்திருந்த ரசாயனங்கள், துணி, நூல், வெடிமருந்துகளை கைப்பற்றப்பட்டது.

    கூடுவாஞ்சேரியை சேர்ந்த ரவுடி ஒருவரால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற பயத்தில் கார்த்திக் கூட்டாளியுடன் சேர்ந்து நாட்டு வெடி குண்டை தயார் செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    • பூங்கோவன் அவரது மனைவி ரோசி, மகள் ஹேமலதா உள்ளிட்டோர் மூதாட்டி குமாரியை தாக்கியதாக கூறப்படுகிறது.
    • மூதாட்டி குமாரி கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கனகம்மாசத்திரம்:

    கனகம்மாசத்திரம் அடுத்த ராமஞ்சேரியை சேர்ந்தவர் குமாரி (வயது 60). இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த பூங்கோவன் குடும்பத்திற்கும் ஏற்கனவே தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில், பூங்கோவன் அவரது மனைவி ரோசி, மகள் ஹேமலதா உள்ளிட்டோர் மூதாட்டி குமாரியை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து மூதாட்டி குமாரி கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மூதாட்டியை தாக்கிய 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • நாட்டு நல பணித்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டன.
    • கல்லூரி மாணவர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை தெருக்களில் போடக்கூடாது என எடுத்துரைத்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கல்லூரி மாணவர்கள் நாட்டு நல பணித்திட்டத்தின் கீழ் பொன்னேரி அடுத்த வேண்பாக்கத்தில் உள்ள தெருக்களில் குப்பைகளை சுத்தம் செய்து வீடு வீடாக சென்று குப்பைகளை தெருக்களில் போடக்கூடாது எனவும் குப்பைத்தொட்டியில் போட வேண்டும் எனவும் எடுத்துரைத்தனர்.

    பின்னர் அதே பகுதியில் புவி வெப்பமயமாதலை தடுக்க ஒரே நேரத்தில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன இதில் ஊராட்சி மன்ற தலைவர் பாபு துணைத் தலைவர் சபிதா பாபு ஒருங்கிணைப்பாளர் கருப்பசாமி மற்றும்கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    • கோவில் வளாகத்திற்குள் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் சிதறி கிடப்பதை கண்டு கோயில் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பூந்தமல்லி:

    குன்றத்தூர் நத்தம்- திருநீர்மலை செல்லும் சாலையில் ஸ்ரீதேவி காத்தியாயினி அம்மன், மந்தைவெளி அம்மன், கங்கை அம்மன் உள்ளிட்ட 3 அம்மன் கோவில் உள்ளது.

    நேற்று இரவு சாமி தரிசனம் முடிந்த பிறகு கோவிலின் நடை சாத்தப்பட்டது. இன்று காலை கோவிலின் நடையை திறக்க வந்து பார்த்தபோது கோவில் வளாகத்திற்குள் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் சிதறி கிடப்பதை கண்டு கோயில் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் கொள்ளை நடந்த கோவிலில் ஆய்வு செய்தனர். இதில் கோவில் வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பக்தர்கள் காணிக்கையாக அளித்த ரூபாய் நோட்டுகள் மற்றும் தங்க-நகையை அள்ளி சென்றனர்.

    சில்லரை காசுகளை அப்படியே விட்டுவிட்டு சென்றது தெரியவந்தது.

    ஆண்டிற்கு ஒரு முறை ஆடி மாதம் முடிந்த பிறகு கோவிலில் காணிக்கை எண்ணப்படும் என்றும் கடந்த ஆண்டு எண்ணப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஆடி மாதம் முடிந்த பிறகு காணிக்கைகளை எண்ண இருந்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    மேலும் கொள்ளை போன பணம், நகை எவ்வளவு என்பது தெரியவில்லை. கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.

    • உணவு சாப்பிட்ட பிறகு அறைக்குச் சென்ற மாணவன் காலை வெகுநேரம் ஆகியும் வெளியே வரவில்லை.
    • கதவும் திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக பார்த்த போது மாணவன் மெடாரமெட்லா சரண் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த அரண்வாயில் குப்பம் பகுதியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஆந்திர மாநிலம், நெல்லூர் அருகே உள்ள காவலி பகுதியைச் சேர்ந்த மெடாரமெட்லா சரண் இ.சி.இ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் தங்கி இருந்தார்.

    நேற்று வழக்கம் போல் உணவு சாப்பிட்ட பிறகு அறைக்குச் சென்ற மாணவன் காலை வெகுநேரம் ஆகியும் வெளியே வரவில்லை. கதவும் திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக பார்த்த போது மாணவன் மெடாரமெட்லா சரண் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் செவ்வாப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மாணவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன் மற்றும் செவ்வாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விடுதி காப்பாளர் மற்றும் சக மாணவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • குழந்தை உள்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.
    • காய்ச்சல் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியம் வண்ணிப்பாக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட 5 வது வார்டு மேட்டுப்பாளையத்தில் கடந்த ஒரு வாரமாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. பொது மக்கள் மீஞ்சூர், பொன்னேரி, அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தொடர்ந்து குழந்தை உள்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.

    இதையடுத்து மீஞ்சூர் வட்டார மருத்துவமனையின் நடமாடும் மருத்துவக் குழு பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்று முகாமிட்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து மாத்திரை மற்றும் பரிசோதனை செய்தனர்.

    துப்புரவு பணியாளர் குப்பைகளை அகற்றி தெருக்களில் பிளீச்சிங் பவுடர், கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன. மீஞ்சூர் ஒன்றிய கொசு ஒழிப்பு பணியாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் வீடு வீடாக சென்று வீடுகளில் உள்ள குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்து, டயர், தேங்காய் சிரட்டை, பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தினர், இதனைத் தொடர்ந்து குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ஆழ்துளை கிணற்று நீர், பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. காய்ச்சல் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக தெரியவந்துள்ளது.

    மேலும் காய்ச்சல் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    • வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் ரூ. 20,000 பணம் திருட்டு போனது தெரியவந்தது.
    • கார்த்திகேயன் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் வி.எம்.நகர் சமரியாஸ் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (45). திருவள்ளூரில் கார் சர்வீஸ் சென்டர் மற்றும் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    கடந்த 2-ந் தேதியன்று கார்த்திகேயனின் தாயார் காலமானார். அதை தொடர்ந்து கார்த்திகேயன் தனது குடும்பத்தாருடன் வீட்டை பூட்டிவிட்டு மணவாளநகரில் உள்ள வீட்டிற்கு சென்று குடும்பத்துடன் தங்கினார். நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்து ரூ.13 லட்சம் மதிப்புள்ள செயின், வளையல், மூக்குத்தி என 30 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 20,000 பணம் திருட்டு போனது தெரியவந்தது.

    இது குறித்து கார்த்திகேயன் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பச்சைப்பயிறு சாகுபடி குறித்த சமுதாய பண்ணை பள்ளி துவங்கப்பட்டுள்ளது.
    • மகளிர் குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    பொன்னேரி:

    தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் தடபெரும்பாக்கம் ஊராட்சியில் பச்சைப்பயிறு சாகுபடி குறித்த சமுதாய பண்ணை பள்ளி துவங்கப்பட்டுள்ளது.

    இந்த சமுதாய பண்ணை பள்ளி மூலம் பச்சைப் பயிறு விதை விதைக்கும் நிகழ்ச்சி தடபெரும்பாக்கம் ஊராட்சி சிங்கிலிமேடு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட மீஞ்சூர் வட்டார அணித்தலைவர் கா.கணபதி, திட்ட செயலர் அருள், ஊராட்சி மன்ற துணை தலைவர் சபிதா பாபு , ஊராட்சி அளவில்லா கூட்டமைப்பு செயலாளர் சுகுணா, பயிற்சியாளர் அனுசுயா மற்றும் தடபெரும்பாக்கம் மருதம் உழவர் உற்பத்தியாளர்கள் மகளிர் குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • அங்கன்வாடி மையங்கள் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு சிறப்பு ஊட்டசத்து வழங்கப்படுகிறது.
    • மீஞ்சூர் அரியன் வாயல் பகுதியில் சுமார் 400 குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    பொன்னேரி:

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பிறந்த குழந்தை முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை மற்றும் சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    மீஞ்சூர் ஒன்றியத்தில் ஊட்டசத்து குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிய வீடு, வீடாக கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அங்கன்வாடி மையங்கள் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு சிறப்பு ஊட்டசத்து வழங்கப்படுகிறது.

    இதன் ஒரு பகுதியாக மீஞ்சூர் அரியன் வாயல் பகுதியில் சுமார் 400 குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இதில் ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மேனகா, குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர் அபுபக்கர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மேற்பார்வையாளர் சசிகலா, அங்கன்வாடி ஆசிரியர் ரகுமாபீ உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

    • திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் நடத்தும் 3 உணவகங்கள் உள்ளன.
    • கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 3 உணவகத்திலும் மாட்டிறைச்சி போன்ற அசைவ உணவுகளை சேர்க்க கலெக்டர் அனுமதி அளித்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் நடத்தும் 3 உணவகங்கள் உள்ளன. இங்கு தயிர் சாதம், சாம்பார் சாதம், கருவேப்பிலை சாதம், பிரிஞ்சி சாப்பாடு, கேழ்வரகு களி உள்ளிட்ட உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இந்த உணவகத்தில் மாட்டிறைச்சி உணவும் சேர்க்க வேண்டும் என்று திருவள்ளுர் மாவட்ட முன்னாள் ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர் மோகன் என்பவர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் மனு அளித்திருந்தார். அத்தகைய மனுவை கலெக்டர் முதலில் நிராகரித்திருந்தார். இதனை எதிர்த்து மோகன், தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்தில் முறையிட்டார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் நடத்தும் உணவ கத்தில் மாட்டு இறைச்சி போன்ற அசைவ உணவுகளும் சேர்க்க கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 3 உணவகத்திலும் மாட்டிறைச்சி போன்ற அசைவ உணவுகள் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டருக்கு உத்தரவிட்டு இருந்தது.

    அதன் அடிப்படையில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 3 உணவகத்திலும் மாட்டிறைச்சி போன்ற அசைவ உணவுகளை சேர்க்க கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அனுமதி அளித்தார்.

    இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உணவகத்தில் பீப் பிரியாணி சேர்க்கப்பட்டு உள்ளது. இதன் விலை ரூ.100 ஆகும். இதேபோல் அசைவ உணவுக்கான விலைப் பட்டியலும் உணவு விடுதி முன்பாக பேனராக வைத்து உள்ளனர். அதில் சிக்கன் பிரியாணி ரூ.100, சிக்கன் குழம்பு-ரூ.50, முட்டை-ரூ.15, சிக்கன்65-ரூ.60, மீன் குழம்பு -ரூ.50, மீன் வறுவல்-ரூ.30, மட்டன் குழம்பு-ரூ.100, ஆட்டுக்கால் சூப்-ரூ.100, மட்டன் பிரியாணி-ரூ.200, தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உணவகத்தில் மாட்டிறைச்சி உணவு சேர்க்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • சொப்னா 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.
    • 2 குழந்தையுடன் தாய் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி மதினா பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பரசுராமன். இவர் பொன்னேரி பஜாரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சொப்னா இவரது மகள்கள் மோனிகா (8), கன்னிகா (6). சொப்னா செல்போனில் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பதை கணவர் பரசுராமன் கண்டித்தார். இதனால் கோபம் அடைந்த சொப்னா 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மாடுகள் மற்றும் ரேக்ளா வண்டி பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
    • மணமகள் பயத்தில் மணமகனை இறுக பிடித்தபடி அமர்ந்து வந்தார்.

    செங்குன்றம் :

    செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கம் செட்டிமேடு பகுதியை சேர்ந்த கோபால்-கண்ணகி தம்பதியின் மகன் விஜய் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன்-மேரி தம்பதியின் மகள் ரம்யாவுக்கும் இருவீட்டு உறவினர்கள் முன்னிலையில் அவர்களது குலதெய்வம் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

    திருமணம் முடிந்த கையோடு மணமகன் விஜய், மணமகள் ரம்யாவை குலதெய்வம் கோவிலில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரம் உள்ள தனது வீட்டுக்கு 2 மாடுகள் பூட்டிய ரேக்ளா வண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்தார். இதற்காக மாடுகள் மற்றும் ரேக்ளா வண்டி பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ரேக்ளா வண்டியை மணமகன் ஓட்ட, காளைகள் இரண்டும் சாலையில் சீறிப்பாய்ந்து வந்தன. மணமகள் ரம்யா, பயத்தில் மணமகனை இறுக பிடித்தபடி அமர்ந்து வந்தார்.

    அப்போது மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் ரேக்ளா வண்டியின் இருபுறமும் புடைசூழ வந்தனர். வீட்டுக்கு வந்த மணமக்களை உறவினர்கள் வாழ்த்தினர்.

    தற்போது திருமண வீட்டில் ஆடம்பரமாக கார்களில் மணமக்கள் ஊர்வலமாக அழைத்து வருவது வழக்கமாக உள்ளது. ஆனால் ரேக்ளா வண்டியில் மணமக்கள் ஊர்வலமாக சென்றதை பார்த்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்.

    ×