என் மலர்
திருவள்ளூர்
- வசந்தகுமார் கடம்பத்தூர் ராஜாஜி சாலையில் பண பரிமாற்றம் செய்யும் கடை வைத்து உள்ளார்.
- பணப்பெட்டியில் இருந்த ரூ.75 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
திருவள்ளூர்:
கடம்பத்தூர் அருகே உள்ள விடையூர் காரணியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் கடம்பத்தூர் ராஜாஜி சாலையில் பண பரிமாற்றம் செய்யும் கடை வைத்து உள்ளார்.
காலையில் வழக்கம்போல் கடையை திறக்க வந்தபோது கடையின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு வசந்தகுமார் அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பணப்பெட்டியில் இருந்த ரூ.75 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இது குறித்து வசந்தகுமார் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- சுமார் ஒரு கிலோ 200 கிராம் எடை கொண்ட கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை புழல் சிறையில் அடைத்தனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் அகரம் கூட்டுச்சாலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது சந்தேகத்துக்கு இடமான வகையில் அவ்வழியே சென்ற வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது அவர் சின்னம்பேடு கிராமம், அய்யனார் மேடு பகுதியைச் சேர்ந்த தளபதி(வயது30) என்று கூறினார்.
மேலும், அவரது பையில் வைத்திருந்த பொருட்களை சோதனை செய்தபோது அதில் சுமார் ஒரு கிலோ 200 கிராம் எடை கொண்ட கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர், அவரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது அவர் சுமார் ஏழு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி என்பது தெரியவந்தது. எனவே, போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
- மின்இணைப்பு வழங்க இத்ரீத்திடம் ரூ.9 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என்று மின்வாரிய ஆய்வாளர் பாளையம் நெருக்கடி கொடுத்தார்.
- லஞ்சம் கொடுக்க விரும்பாத இத்ரீத் இதுபற்றி திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.
ஆவடி:
ஆவடியை அடுத்த கோவில் பதாகையை சேர்ந்தவர் இத்ரீத். இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்கு புதிய மின்இணைப்பு வழங்க திருமுல்லைவாயிலில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் கோரிக்கை விடுத்து இருந்தார்.
ஆனால் மின்இணைப்பு வழங்க இத்ரீத்திடம் ரூ.9 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என்று மின்வாரிய ஆய்வாளர் பாளையம் நெருக்கடி கொடுத்தார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத இத்ரீத் இதுபற்றி திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.
லஞ்சஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தல்படி இன்று காலை ரசாயன பவுடர் தடவிய ரூ. 9 ஆயிரத்தை இத்ரீத், மின்வாரிய ஆய்வாளர் பாளையத்திடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி கலைச்செல்வன் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஆய்வாளர் பாளையத்தை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னீர்குப்பத்தை சேர்ந்த ஒருவருக்கும், கடை உரிமையாளர் ராஜாவுக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது.
- இருதரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பூந்தமல்லி:
பூந்தமல்லியை சேர்ந்தவர் ராஜா. இவர் பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் கனரக வாகனங்கள் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். இங்கு வடமாநிலத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று இரவு கடைக்கு வந்த சிலர் தகராறு செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த கடையில் இருந்த வடமாநில தொழிலாளர்கள் ஸ்பேனர், இரும்பு ராடு, உருட்டுக்கட்டைகளால் தகராறில் ஈடுபட்டவர்களை சரமாரியாக தாக்கினர். இதில் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு பூந்தமல்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னீர்குப்பத்தை சேர்ந்த ஒருவருக்கும், கடை உரிமையாளர் ராஜாவுக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட தகராறில் இந்த தாக்குதல் நடந்து இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக இருதரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திருத்தணி மலைக்கோவிலில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன.
- சுமார் ஒரு மணிநேரத்துக்கு பின்னர் கோவிலுக்குள் இருந்த குரங்குள் அனைத்தும் வெளியே விரட்டப்பட்டன.
திருத்தணி:
திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவிலில் முருகப் பெருமானின் 5-ம் படை வீடாக உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.
திருத்தணி மலைக்கோவிலில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன. இங்கு தரிசனம் முடிந்து வெளியே வரும் பக்தர்கள் வைத்திருக்கும் பழம் உள்ளிட்ட பொருட்களை பறித்து செல்வதும், பல நேரங்களில் பக்தர்களை கடித்த சம்பவமும் நடந்து உள்ளது.
இதனால் திருத்தணி கோவிலில் குரங்குகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிலில் சுற்றித் திரிந்த சில குரங்குகள் பிடிக்கப்பட்டன. ஆனாலும் அதன் அட்டகாசத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. குரங்குகளின் எண்ணிக்கை சில மாதங்களிலேயே மீண்டும் அதிகரித்து விட்டது.
இந்த நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் சுமார் 50 குரங்குகள் கூட்டமாக கோவிலுக்குள் புகுந்தன. குரங்குகள் பக்தர்களை மிரட்டியபடி அட்டகாசம் செய்தன. இதனால் பக்தர்கள் அலறியடித்து வெளியே வந்தனர்.
அப்போது சில குரங்குகள் மூலவர் சன்னிதானம் செல்லும் வழி வரை சென்றன. இதனால் அதிர்ச்சி அடைந்த கோவில் ஊழியர்கள் உடனடியாக பக்தர்கள் தரிசனத்தை நிறுத்தினர். இதனால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கூடுதல் கோவில் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கோவிலுக்குள் புகுந்த குரங்குகளை விரட்ட தொடங்கினார். ஆனால் குரங்குகள் அங்கும், இங்கும் தாவி ஊழியர்களுக்கு போக்கு காட்டியது.
சுமார் ஒரு மணிநேரத்துக்கு பின்னர் கோவிலுக்குள் இருந்த குரங்குள் அனைத்தும் வெளியே விரட்டப்பட்டன. இதன் பின்னரே கோவில் ஊழியர்களும், பக்தர்களும் நிம்மதி அடைந்தனர்.
குரங்குகளின் அட்டகாசம் காரணமாக பக்தர்கள் தரிசனம், அபிஷேகம் ஆகியவை சுமார் ஒரு மணி நேரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பின்னர் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் திருத்தணி மலைக்கோவில் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.
திருத்தணி கோவிலில் குரங்குகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- தடுப்பணை 200 மீட்டர் நீளத்தில் அதிகத்தூர்-ஏகாட்டூர் கிராம எல்லை பகுதிகளில் உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட இருக்கிறது.
- ரூ.17.70 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகே கேசாவரம் பகுதியில் கல்லாற்றின் கிளை ஆறாக கூவம் ஆறு உருவாகிறது. இது பேரம்பாக்கம், கடம்பத்தூர், மணவாளநகர், அரண்வாயல் வழியாக 72 கி.மீ. தூரம் ஓடி, சென்னையில் நேப்பியர் பாலம் அருகே கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் கேசவபுரம், ஜமீன் கொரட்டூர், பருத்திப்பட்டு ஆகிய இடங்களில் தடுப்பணைகள் உள்ளன.
மேலும் மழை காலங்களில் அதிக அளவில் வீணாகும் தண்ணீரை தடுக்கும் வகையில், கூவம் ஆற்றில் முக்கிய இடங்களில் தடுப்பணை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து பொதுப்பணித் துறை சார்பில் திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் பிஞ்சிவாக்கம், புட்லூர் ஆகிய 2 இடத்தில் தடுப்பணை அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் தற்போது அதிகத்தூர் கிராம எல்லையின் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே நீர்வளத் துறை மூலம் ரூ.17.70 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை 200 மீட்டர் நீளத்தில் அதிகத்தூர்-ஏகாட்டூர் கிராம எல்லை பகுதிகளில் உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட இருக்கிறது.
இந்த தடுப்பணை மூலம் அதிகத்தூர், ஏகாட்டூர், சேலை, தண்டலம் மற்றும் கடம்பத்தூர் கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் உயரும். மேலும் சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். அப்பகுதியில் உள்ள கால்நடைகள் மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய இந்த புதிய தடுப்பணை உதவும் என்று மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்து உள்ளார்.
- போலீசார் திறமையாக துப்பு துலக்கி நகைபறிப்பில் ஈடுபட்ட விஜய், படகோட்டி தமிழன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
- போதைக்கு அடிமையான இருவரும் உல்லாச செலவுக்காக செயின் பறிப்பில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
பூந்தமல்லி:
சென்னை ராமாபுரம், திருவள்ளுவர் சாலையை சேர்ந்தவர் ராதா. இவர் கெருகம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த திருமணத்தில் கலந்து கொள்ள நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ராதா அணிந்து இருந்த 4 பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து மாங்காடு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக போலீசார் நகை பறிப்பு நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் கொள்ளையர்களை பிடிக்க வித்தியாசமாக போலீசார் முயற்சி செய்தனர். செயின் பறிப்பு நடந்த இரவு நேரத்தில் கொள்ளையர்களின் உருவம் சரியாக தெரியாது என்பதால் சம்பவம் நடப்பதற்கு முன்பாக அதாவது ரிவர்ஸ் முறையில் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். சுமார் 600 கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தபோது செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் பல்வேறு பகுதிகளில் சுற்றி திரிந்தது தெரியவந்தது.
இதைவைத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட நெற்குன்றத்தை சேர்ந்த விஜய்(29) அவரது நண்பரான நொளம்பூரை சேர்ந்த படகோட்டி தமிழன்(35) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் அவர்கள் போலீசில் சிக்காமல் செயின் பறிப்பில் ஈடுபடுவது எப்படி என்பது குறித்து யூடியூப் வீடியோக்களை பார்த்து நகை பறித்தது தெரியவந்தது. அவர்கள் யூடியூப்பில் போலீசார் எதனை வைத்துசெயின் பறிப்பில் ஈடுபடுபவர்களை பிடிப்பார்கள், எந்தெந்த தடயங்களை சேகரிப்பார்கள் என்பதை எல்லாம் தெரிந்து கொண்டு உள்ளனர்.
இதனை வைத்து நண்பர்கள் இருவரும் நகை பறிப்பு சம்பவத்துக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் மதுரவாயல், திருவேற்காடு, நொளம்பூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள பல்வேறு தெருக்களில் ஹெல்மெட் அணிந்து கொண்டு சுற்றி வந்துள்ளனர்.ஒவ்வொரு பகுதிக்கு செல்லும்போது தங்களின் உடைகளை மாற்றி இருக்கிறார்கள். மேலும் கெருகம்பாக்கத்தில் வந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட பின்னர் அவர்கள் பல்வேறு தெருக்களின் வழியாக சென்று ஒரு இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அங்கிருந்து வேறு உடைகளை மாற்றி உள்ளனர். இதைத்தொடர்ந்து மதனந்தபுரம் அருகே சென்றபோது ஒருவர் மோட்டார் சைக்கிளிலும் மற்றொருவர் ஆட்டோவிலும் சர்வ சாதாரணமாக தப்பி இருக்கிறார்கள். இதேபோல் மோட்டார் சைக்கிளின் நம்பர் பிளேட்டையும் மாற்றி உள்ளனர்.
ஆனால் போலீசார் திறமையாக துப்பு துலக்கி நகைபறிப்பில் ஈடுபட்ட விஜய், படகோட்டி தமிழன் ஆகிய 2 பேரையும் கைதுசெய்தனர். யூடியூப் வீடியோக்களை பார்த்து பல்வேறு முயற்சிகள் எடுத்தும் முதல் நகைபிறிப்பிலேயே நண்பர்கள் இருவரும் சிக்கிக்கொண்டனர்.
போதைக்கு அடிமையான இருவரும் உல்லாச செலவுக்காக செயின் பறிப்பில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- மீஞ்சூர் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- காலி பணியிடங்களில் 50 சதவீதம் ஊழியர்களை நியமிக்க வேண்டும்.
பொன்னேரி:
தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீஞ்சூர் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் ஓய்வூதிய சங்க மாவட்ட தலைவர் செல்வராஜ் சத்துணவு ஊழியர் சங்க தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் குறைந்த பட்சம் ஓய்வு ஊதியம் 6750 வழங்க வேண்டும். அரசு துறையில் கல்வி தகுதி அடிப்படையில் காலி பணியிடங்களில் 50 சதவீதம் ஊழியர்களை நியமிக்க வேண்டும் காலை உணவு திட்டத்தை சத்துணவு திட்டத்தில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் சத்துணவு அமைப்பாளர், சமையளர், உதவியாளர்கள் அங்கன்வாடி உதவியாளர்கள் ஓய்வு ஊதியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தெப்பத்திருவிழா மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள தெப்ப குளத்தில் நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பூந்தமல்லி:
மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் சிறப்பு வாய்ந்தது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைபூசத்தை முன்னிட்டு தெப்பத்திரு விழா 3 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான தெப்பத்திருவிழாவின் இறுதி நாளான நேற்று மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள தெப்ப குளத்தில் நடைபெற்றது.
தெப்ப திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் வெள்ளீஸ்வரர், காமாட்சி அம்மன், வைகுண்ட பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
நேற்று வள்ளி-தெய்வானை சமேதராக சுப்பிரமணிய சுவாமி தெப்பத்தில் எழுந்தருளினார். பின்னர் காமாட்சி அம்மன் தெப்பத்தில் எழுந்தருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து காமாட்சி அம்மன் அன்ன வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தெப்பத்தில் பழங்கள், மலர், வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மாங்காடு போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- கூடுதல் விலைக்கு மதுவிற்ற 4 பெண்கள் உள்பட 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- 534 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் கூடுதல் விலைக்கு மதுவிற்ற 4 பெண்கள் உள்பட 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து 534 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- ஒரு மணிநேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே மேல்நல்லாத்தூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு வரும் கனரக வாகனங்கள் மற்றும் பணியாளர்களின் வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் இருபுறமும் நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று காலை கீழ்நல்லாத்தூர் பஸ் நிறுத்தம் அருகே திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
- சாமுண்டீஸ்வரி வீடு கட்டுவதற்காக ஜல்லி, மணல், செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை வீட்டின் முன்பு இறக்கி வைத்துள்ளார்.
- சாமுண்டீஸ்வரி திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
திருத்தணி:
திருத்தணி ஒன்றியம் சிறுகுமி ஊராட்சிக்குட்பட்ட வி.சி.ஆர். கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் மனைவி சாமுண்டீஸ்வரி (வயது 25). இவர்களுக்கும் இவரது வீட்டிற்கு அருகே வசிக்கும் மணிகண்டன் (வயது 29) என்பவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சாமுண்டீஸ்வரி வீடு கட்டுவதற்காக ஜல்லி, மணல், செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை வீட்டின் முன்பு இறக்கி வைத்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மணிகண்டன் சாமுண்டீஸ்வரி மற்றும் அவரது கணவர் ஏகாம்பரத்தை தகாத வார்த்தைகளால் பேசி கல்லால் அடித்ததில் அவருக்கு பல் உடைந்தது மேலும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இதுகுறித்து சாமுண்டீஸ்வரி திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி ஏகாம்பரத்தை தாக்கிய மணிகண்டனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்.






