என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்றத்தூரில் அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை
    X

    குன்றத்தூரில் அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை

    • கோவில் வளாகத்திற்குள் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் சிதறி கிடப்பதை கண்டு கோயில் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பூந்தமல்லி:

    குன்றத்தூர் நத்தம்- திருநீர்மலை செல்லும் சாலையில் ஸ்ரீதேவி காத்தியாயினி அம்மன், மந்தைவெளி அம்மன், கங்கை அம்மன் உள்ளிட்ட 3 அம்மன் கோவில் உள்ளது.

    நேற்று இரவு சாமி தரிசனம் முடிந்த பிறகு கோவிலின் நடை சாத்தப்பட்டது. இன்று காலை கோவிலின் நடையை திறக்க வந்து பார்த்தபோது கோவில் வளாகத்திற்குள் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் சிதறி கிடப்பதை கண்டு கோயில் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் கொள்ளை நடந்த கோவிலில் ஆய்வு செய்தனர். இதில் கோவில் வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பக்தர்கள் காணிக்கையாக அளித்த ரூபாய் நோட்டுகள் மற்றும் தங்க-நகையை அள்ளி சென்றனர்.

    சில்லரை காசுகளை அப்படியே விட்டுவிட்டு சென்றது தெரியவந்தது.

    ஆண்டிற்கு ஒரு முறை ஆடி மாதம் முடிந்த பிறகு கோவிலில் காணிக்கை எண்ணப்படும் என்றும் கடந்த ஆண்டு எண்ணப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஆடி மாதம் முடிந்த பிறகு காணிக்கைகளை எண்ண இருந்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    மேலும் கொள்ளை போன பணம், நகை எவ்வளவு என்பது தெரியவில்லை. கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.

    Next Story
    ×