என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரியபாளையத்தில் பட்டப் பகலில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளை
- காரின் கண்ணாடியை உடைத்து விட்டு டேஷ் போர்டில் இருந்த ரொக்கப் பணம் ரூ.2 லட்சத்தை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.
- பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமம் ராஜா தெருவில் வசித்து வருபவர் ரவிராஜ்(வயது52) தொழிலதிபர் ஆவார். இவருக்கு பூரிவாக்கம் மற்றும் ஊத்துக்கோட்டை ஆகிய இரண்டு இடங்களில் ரைஸ்மில்கள் உள்ளது.
இந்நிலையில் ரைஸ்மில்லுக்கு புதியதாக ஒரு இயந்திரம் வாங்க இன்று மதியம் பெரியபாளையத்தில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் ரூ.5.35 லட்சம் டெபாசிட் செய்தார். மீதி இருந்த ரொக்க தொகை ரூ.2. லட்சத்தை தனது காரின் முன்பக்க டேஷ் போர்டில் வைத்தார். வங்கியில் தனது செக் புக்கை மறதியாக வைத்துவிட்டு காரில் வந்து ஏறிவிட்டார். தனது வீடு நோக்கி செல்ல முற்பட்டவருக்கு செக் புக்கை மறந்து விட்டோம் என நினைவு வந்தது. உடனடியாக கார் கண்ணாடிகளை ஏற்றிவிட்டு காரை பூட்டிக்கொண்டு வங்கிக்குள் சென்று தனது செக் புக்கை எடுத்துக்கொண்டு தனது காரை நோக்கி நடந்து வந்தார்.
அப்பொழுது ஒரு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டிருந்த இரண்டு மர்ம நபர்கள் வேகமாக வந்து காரின் இடது பக்கமாகம் நின்றனர். கண் இமைக்கும் நேரத்தில் காரின் கண்ணாடியை உடைத்து விட்டு டேஷ் போர்டில் இருந்த ரொக்கப் பணம் ரூ.2 லட்சத்தை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரவிராஜ் திருடன், திருடன் என்று கத்தினார். ஆனால் மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர். தகவல் அறிந்து பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பட்டப் பகலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்திற்கு ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி விரைந்து வந்து சிசிடிவி கேமரா உள்ளிட்ட பல்வேறு வகையிலான தடயங்களை சேகரித்தார். பின்னர் கொள்ளையர்களை பிடிக்க பகதூர் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






