என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • காய்ச்சலுக்கு குழந்தை பலியானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • குழந்தை இறந்தது தொடர்பாக திருப்பாளைவனம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    பொன்னேரி:

    சென்னையை அடுத்த பழவேற்காடு லைட்அவுஸ் குப்பத்தைச் சேர்ந்த 8 மாத குழந்தைக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென்று காய்ச்சல், வாந்தி-பேதி ஏற்பட்டது. இதையடுத்து அந்த குழந்தையை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் பழவேற்காடு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு போதிய மருந்து இல்லை என்று கூறி குழந்தை பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. காய்ச்சலுக்கு குழந்தை பலியானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே குழந்தைக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி பழவேற்காடு, பொன்னேரி அரசு மருத்துவமனை டாக்டர்களுடன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    குழந்தை இறந்தது தொடர்பாக திருப்பாளைவனம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    • மாணவிகளுடன் “காபி வித் கலெக்டர்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.
    • அனைத்து பெண் குழந்தைகளும் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டும்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு 53 சிறுமியர்களுக்கு நடைபெறவிருந்த குழந்தை திருமணங்களும், 2020-ம் ஆண்டு 41 சிறுமியர்களுக்கு நடைபெறவிருந்த குழந்தை திருமணங்களும், 2021 -ம் ஆண்டு 24 சிறுமியர்களுக்கு நடைபெறவிருந்த குழந்தை திருமணங்களும் 2022 -ம் ஆண்டு 18 சிறுமியர்களுக்கு நடைபெறவிருந்த குழந்தை திருமணங்களும் என கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 136 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டு மீட்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு கல்வி பயிலவும். தொழில் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. பெண் குழந்தையை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் குழந்தை திருமணம் குறித்தான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் ஒரு பகுதியாக குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்டு உயர்கல்வி பயின்றுவரும் மாணவிகளுடன் "காபி வித் கலெக்டர்" என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடை பெற்றது.

    இந்த கூட்டத்தில் குழந்தை திருமண தடுப்புச் சட்டம்-2006 குறித்தும் குழந்தை திருமணத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் தெளிவாக விவரித்தும், குழந்தை திருமணத்தில் இருந்து மீட்கப்பட்டு உயர்கல்வி பயிலும் உங்களை போன்று உள்ள மற்றவர்களுக்கும் இதுபோன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது குறித்தும் சம்பந்த ப்பட்ட துறைகள் மூலம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

    அனைத்து பெண் குழந்தைகளும் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டும். அதற்கு அரசு சார்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் மாவட்ட நிர்வாகமும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். எனவே, எந்தவித அச்சமுமின்றி உங்கள் கல்வியில் முழு கவனம் செலுத்தி படித்து நாளை நல்லதொரு சமுதாயத்தை கட்டமைக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, சமூக நலத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு நடை பெறவிருந்த குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வி பயின்று வரும் 16 மாணவியர்க ளோடு "காபி வித் கலெக்டர்" என்ற தலைப்பில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்துரையாடி அம்மாணவிகளை பாராட்டி, புத்தகங்களை பரிசாக வழங்கினார். மேலும் தொடர்ந்து படிக்குமாறு அறிவுறுத்தினார்.

    • பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே பாலமுருகன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
    • சம்பவம் குறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த நந்தியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 48).

    இவர் சென்னை எண்ணூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் பொன்னேரிக்கு தமது மனைவியுடன் குடி பெயர்ந்தார். நேற்று மாலையில் பாலமுருகனை அவரது அக்காள் மகன் ராபர்ட் தனக்கு பிரச்சினை என்பதால் உதவிக்கு போன் செய்து அழைத்தார். தனது அக்கா மகன் பாலமுருகன் உடனடியாக வீட்டில் இருந்து புறப்பட்டு பொன்னேரி அடுத்த ஆலாடு பகுதியில் உறவினர் வீட்டில் தங்கி இருந்த ராபர்ட்டை பார்க்க சென்றுள்ளார்.

    அப்போது அங்கிருந்த வினோத், அவரது நண்பர் கிரண்ராஜ் திலீப், ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கை மற்றும் கல்லால் பாலமுருகனை தாக்கினர். தலையில் அடிபட்டு பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாலமுருகன் துடித்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து பாலமுருகனை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே பாலமுருகன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆலாடு பகுதியில் சொத்து தகராறு காரணமாக இரு தரப்பினர் தாக்கிக் கொண்ட சி.சி.டி.வி. காட்சிகள் வெளியான நிலையில் அதே பிரச்சினை தொடர்பாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இந்த கொலை சம்பவம் குறித்து டி.எஸ்.பி. கிரியா சக்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். தப்பி ஓடிவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    • மர்மநபர்கள் பீரோவில் இருந்த ரொக்க பணம் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம், தங்க செயின், டாலர், கம்மல் உள்ளிட்ட 7 பவுன் தங்க நகைகளையும், 3 ஜோடி வெள்ளி கொலுசுகளையும் திருடி சென்றிருந்தனர்.
    • இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம் ஆரிக்கம்பேடு கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் மாரியம்மாள் (வயது50). பூச்செடிகள் பயிர் செய்து வருகிறார். இவரது உறவினர் வீட்டு திருமணத்திற்காக மாரியம்மாள் வீட்டை பூட்டி விட்டு கடந்த 8-ந்தேதி காவனூர் கிராமத்திற்கு சென்றிருந்தார்.

    உறவினர் வீட்டு திருமணம் முடிந்த பின்னர் நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற மர்மநபர்கள் பீரோவில் இருந்த ரொக்க பணம் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம், தங்க செயின், டாலர், கம்மல் உள்ளிட்ட 7 பவுன் தங்க நகைகளையும், 3 ஜோடி வெள்ளி கொலுசுகளையும் திருடி சென்றிருந்தனர்.

    இதுகுறித்து மாரியம்மாள் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கடைக்கு வந்து பார்த்த போது மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து மளிகை பொருட்களை திருடி சென்றது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த பாப்பரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது45). இவர் அதே பகுதியில் சொந்தமாக மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றார். இன்று காலை கடைக்கு வந்து பார்த்த போது மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்களை திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து ராஜேந்திரன் மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • பூந்தமல்லி அடுத்த திருமழிசை பகுதியில் டாஸ்மாக் கிடங்கு செயல்பட்டு வருகிறது.
    • லாரிகளில் ஏற்றப்பட்ட டாஸ்மாக் மதுபானங்கள் மதுபான கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    திருமழிசை:

    பூந்தமல்லி அடுத்த திருமழிசை பகுதியில் டாஸ்மாக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தினந்தோறும் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 4 மாதங்களாக ஒப்பந்த முறையில் செயல்படும் லாரிகளுக்கு ரூ.4 கோடிக்கு மேல் நிலுவை பாக்கி இருப்பதால் வாகனங்களை இயக்காமல் லாரிகளை நிறுத்தி அதன் உரிமையாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து டாஸ்மார்க் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து தற்காலிக வாபஸ் பெற்றனர்.

    இதையடுத்து லாரிகளில் ஏற்றப்பட்ட டாஸ்மாக் மதுபானங்கள் மதுபான கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைபோல் டாஸ்மாக் கிடங்கில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும் உரிய சம்பளம் கொடுக்கவில்லை என அவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • எங்கிருந்தோ வந்த சுமார் 10 அடி நீள சாரைப்பாம்பு திடீரென கழிவறைக்குள் புகுந்தது.
    • பாம்புபிடி நிபுணரான பண்டிக்காவனூர் பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டியனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த இருளிப்பட்டை சேர்ந்தவர் யுவராஜ். இவரது வீட்டின் வெளியே கழிவறை உள்ளது.

    இந்த நிலையில் எங்கிருந்தோ வந்த சுமார் 10 அடி நீள சாரைப்பாம்பு திடீரென கழிவறைக்குள் புகுந்தது. இதனை கண்டு வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.

    இதுகுறித்து பாம்புபிடி நிபுணரான பண்டிக்காவனூர் பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டியனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து பாம்பை பிடிக்க முயன்றார். ஆனால் சாரைப்பாம்பு அங்கிருந்த சிறிய துளைக்குள் புகுந்தது.

    இதையடுத்து அந்த துளையின் அருகே இருந்த இரண்டு படிக்கட்டுகளை உடைத்தனர். மேலும் 3 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி சுமார் ஒரு மணி நேரம் போராடி அந்த பாம்பை முத்துப்பாண்டியன் லாவகமாக பிடித்தார். அப்போது அந்த பாம்பு சீறியது. பார்ப்பவர்களை அச்சம் அடைய வைத்தது.

    பின்னர் பிடிபட்ட பாம்பை அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.

    • தகவல் அறிந்ததும் மணவாளநகர் போலீசார் மற்றும் திருவூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
    • பல்வேறு கோணங்களில் மணவாளநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த வெங்கத்தூர் கண்டிகை பகுதியில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இதனை காணொலி காட்சி மூலம் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திறந்து வைக்கிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு பா.ஜ.க.அலுவலகம் அருகே சாலை ஓரத்தில் கண்டெய்னர் லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நள்ளிரவில் திடீரென லாரி தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மணவாளநகர் போலீசார் மற்றும் திருவூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் லாரியின் முன்பகுதி முழுவதும் எரிந்து நாசமானது.

    லாரியில் திடீரென தீப்பிடித்தது எப்படி?மர்ம நபர்கள் யாரேனும் தீவைத்தனரா? என்று பல்வேறு கோணங்களில் மணவாளநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வடமாநில தொழிலாளர்களிடம் இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
    • வடமாநில தொழிலாளர்களுக்கு பாதிப்புகள் இருப்பதாக வெளியான தகவல் வதந்தி. பொய்யான இந்த வதந்திகளை நம்ப வேண்டாம்

    பொன்னேரி:

    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர் மீது தாக்குதல் நடைபெறுவதாக பரவிய வதந்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வடமாநில தொழிலாளர்களிடம் இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் வல்லூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்களை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் சந்தித்து குறைகள், பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.

    பின்னர் கலெக்டர் கூறும்போது, தமிழகத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதிப்புகள் இருப்பதாக வெளியான தகவல் வதந்தி. பொய்யான இந்த வதந்திகளை நம்ப வேண்டாம். வடமாநில தொழிலாளர்கள் சிறிய புகார்களாக இருந்தாலும், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தற்போது 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை எந்தவிதமான பிரச்சினைகளும் வடமாநில தொழிலாளர்களுக்கு இல்லை என்றார்.

    அப்போது துணை ஆணையர் மணிவண்ணன், சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, தாசில்தார் செல்வகுமார் உடன் இருந்தனர்.

    இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் நலன் தொடர்பான ஆலோசனை கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், கோட்டாட்சியர் சரவணகண்ணன், தொழிற்சாலை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • திருமணமானதை மறைத்து காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கிய எபிநேசர் மீது இளம்பெண் திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து எபிநேசரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த கொண்டஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் எபிநேசர்(38) தனியார் தொழிற்சாலை டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் எபினேசர் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து உடன் வேலைபார்த்து வரும் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுடன் நட்பாக பழகினார். மேலும் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பிய இளம்பெண் எபிநேசருடன் நெருக்கமாக பழகி வந்தார்.

    இதற்கிடையே இளம்பெண் கர்ப்பமானார். தற்போது அவர் 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதையடுத்து அவர் எபிநேசரிடம் தன்னை உடனடியாக திருமணம் செய்ய வற்புறுத்தினார். அப்போதுதான் அவர் தனக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்தார். இதனை கேட்டு இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, திருமணமானதை மறைத்து காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கிய எபிநேசர் மீது இளம்பெண் திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து எபிநேசரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • வழுதிகை மேடு டோல்கேட் அருகே வந்த போது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது திடீரென ரோந்து வாகனம் மோதியது.
    • இன்ஸ்பெக்டர் ஜெகநாதனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    பெரியபாளையம்:

    செங்குன்றம் அடுத்த நாராவாரிக்குப்பம், சீனிவாசன் தெருவை சேர்ந்தவர் மாரநாத சுவிசேஷ்(வயது18). இவர் கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் வீட்டில் இருந்து கல்லூரி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    பெரியபாளையம் அருகே மஞ்சங்காரணை பஸ் நிறுத்தம் அருகே செங்குன்றம்-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் திடீரென சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாணவர் மாரநாத சுவிசேஷ் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மஞ்சங்காரணையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மாணவர் மாரநாத சுவிசேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், போலீஸ்காரர் வெங்கட்ராமன் ஆகியோர் நேற்று இரவு ரோந்து வாகனத்தில் மீஞ்சூர்-வண்டலூர் சாலையில் பணியில் இருந்தனர். வழுதிகை மேடு டோல்கேட் அருகே வந்த போது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது திடீரென ரோந்து வாகனம் மோதியது. இதில் இன்ஸ்பெக்டர் ஜெகநாதனுக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. அவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இதுகுறித்து சோழவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ஊத்துக்கோட்டை அருகே உள்ள மேலக்கரமனூர் கிராமத்தில் கருமாரியம்மன் கோவில் உள்ளது.
    • நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் நகையை திருடி தப்பி இருப்பது தெரிந்தது.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள மேலக்கரமனூர் கிராமத்தில் கருமாரியம்மன் கோவில் உள்ளது. இரவு வழக்கம் போல் பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டிச் சென்றனர். இந்தநிலையில் காலையில் கோவிலை திறக்க பூசாரி வந்தார். அப்போது கோவில் கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உள்ளே சென்று பார்த்த போது, அம்மன் கழுத்தில் இருந்த தங்க நகைகள் கொள்ளை போய் இருந்தது.

    நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் நகையை திருடி தப்பி இருப்பது தெரிந்தது. இது குறித்து கோவில் நிர்வாகி புருஷோத்தமன் பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×