என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • மாசி மாத தவன உற்சவம் 3 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
    • மரிக்கொழுந்து மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பதும் தவன உற்சவம் எனப்படுகிறது.

    திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோவில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருத்தலமாகும். இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிருந்தும், அண்டை மாநிலங்களிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

    இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத தவன உற்சவம் 3 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். மாசி மாத பருவ காலத்தில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி செடி, கொடிகள், புல், பூண்டுகளுக்கு அருளாசி வழங்குவதும், தவனக்கொழுந்து எனப்படும் மரிக்கொழுந்து மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பதும் தவன உற்சவம் எனப்படுகிறது.

    அவ்வகையில் இந்தாண்டு மாசி மாத தவன உற்சவம் நேற்று முருகன் கோவில் வெகு விமரிசையாக தொடங்கியது. சிறப்பு தீபாராதனை நடைபெற்ற பிறகு வள்ளி தெய்வானையுடன் உற்சவர் முருகப்பெருமான் கோவில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த வசந்த மண்டபத்தில் ஊஞ்சல் சேவையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தவன உற்சவத்தையொட்டி கோவில் முழுவதும் கண்னை கவரும் வகையில் வண்ண வண்ண மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    • மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
    • வரி செலுத்தாதவர்கள் மீது முதற்கட்டமாக குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் 2022-23-ம் ஆண்டிற்கான சொத்து வரி தொழில் வரி,குடிநீர் வரி, கடை வரி, வீட்டு வரி, வசூலிக்க பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு தலைமையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    எனினும் இன்னும் பலர் வரி செலுத்தாமல் உள்ளனர். தெருக்களில் முகாமிட்டு பணியாளர்கள் மூலம் வரி வசூல் செய்தும், ஒலி பெருக்கி மற்றும் துப்புரவு பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று அறிவிப்பு, உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் வருகின்றனர்.

    வரி செலுத்தாதவர்கள் மீது முதற்கட்டமாக குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் வரி பாக்கி உள்ளவர்களின் பெயர் பட்டியலை மீஞ்சூர்-காட்டூர் சாலையில் பேரூராட்சி அதிகாரிகள் வைத்து உள்ளனர். இதேபோல் வரி செலுத்தாதவர்களின் பெயர் பட்டியலை ஒவ்வொரு தெருக்களிலும் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பேரூராட்சி செயல்அலுவலர் வெற்றியரசு தெரிவித்து உள்ளார். மீஞ்சூர் பேரூராட்சியில் இதுவரை 65 சதவீதம் பேர் வரி செலுத்தி உள்ளனர். வருகிற 30-ந் தேதிக்குள் வரி செலுத்தாதவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    • பிரதமராக கூடிய தகுதியும் உடையவர்.
    • பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு யார் பிரதமராக வரவேண்டும்? என்பதை தீர்மானிக்கும் சக்தியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருப்பார்.

    பூந்தமல்லி:

    திருவேற்காட்டில், நகர தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு பேசியதாவது:-

    கொங்கு மண்டலத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இவ்வளவு குறைவாக அ.தி.மு.க. வாக்கு வாங்கியது கிடையாது. ஆனால் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள அ.தி.மு.க. சில வாக்குச்சாவடிகளில் இரண்டு இலக்கத்தில் வாக்கு பெற்றுள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளாக இருண்டு கிடந்த தமிழ் நாட்டை வெற்றிப் பாதையில் அழைத்து செல்வது போல் இந்தியாவிற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல வழிக்காட்ட வேண்டும் என்று அகில இந்திய தலைவர்கள் எல்லாம் அழைப்புவிடுத்து வருகின்றனர். இதற்கு எடுத்துக்காட்டு தான் அண்மையில் நடந்த கூட்டத்தில் அகில இந்திய தலைவர்கள் கலந்து கொண்டது.

    ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், கலைஞர் ஆட்சியைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி நடந்து வருகிறது. பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு யார் பிரதமராக வரவேண்டும்? என்பதை தீர்மானிக்கும் சக்தியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருப்பார்.

    பிரதமராக கூடிய தகுதியும் உடையவர். இந்தியாவுக்கே வழிகாட்டக் கூடியவர். முதல்வர்களுக்கெல்லாம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்று அகில இந்திய தலைவர்கள் கூறி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி, திருவேற்காடு நகர செயலாளரும், நகரமன்ற தலைவருமான என்.இ.கே.மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்ததால் பெரியபாளையம் மேம்பாலம் அருகே வாகன போக்குவரத்து ஏற்பட்டது.
    • ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி விரைவான போக்குவரத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் புகழ் பெற்ற பவானி அம்மன் திருக்கோவில் ஒன்று உள்ளது.

    இக்கோவிலுக்கு ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி 15 ஞாயிற்றுக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து நேர்த்திக் கடனை செலுத்தி விட்டு செல்வர்.

    இந்நிலையில், வார விடுமுறை நாட்கள் ஆன சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் இக்கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது வாகனங்களில் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வது வாடிக்கையாக உள்ளது.

    ஆனால், பெரியபாளையம் பஜார் பெரியபாளையம்-ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை, பெரியபாளையம்- கன்னிகைப்பேர் நெடுஞ்சாலை, பெரியபாளையம்- ஆரணி நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்திருப்பதாலும், கடைகளுக்கு முன் பக்கத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதாலும் வாகன போக்குவரத்து மிகவும் பாதிக்கப்படுகிறது.

    இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்ததால் பெரியபாளையம் மேம்பாலம் அருகே வாகன போக்குவரத்து ஏற்பட்டது. இதனால் இப்பகுதியை கடக்க சுமார் ஒரு மணி நேரம் ஆனது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்களும், வாகன ஓட்டிகளும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி விரைவான போக்குவரத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • செவ்வாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தார்.
    • வேப்பம்பட்டு பாரதி நகரை சேர்ந்த நவீன் (வயது 33) என்பவரை நேற்று கைது செய்து அவரிடமிருந்து 4 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஆவடி:

    திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பாரதி நகரை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 38). இவர் கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி காலை குழந்தையை வேப்பம்பட்டில் உள்ள அரசு பள்ளியில் விட்டு வீட்டுக்குள் நுழையும்போது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென விஜயலட்சுமியை தாக்கி அவரை கட்டிப்போட்டு அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலி மற்றும் கம்மல், காலில் அணிந்திருந்த கொலுசு ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தார். இந்நிலையில் விஜயலட்சுமியிடம் நகை பறித்த திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பாரதி நகரை சேர்ந்த நவீன் (வயது 33) என்பவரை நேற்று கைது செய்து அவரிடமிருந்து 4 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • கடை முழுவதும் தீ பரவியதால் கடையில் பழுது பார்க்க வைத்திருந்த 5-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் தீயில் கருகி சாம்பலானது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    பொன்னேரி நகராட்சி பகுதியில் திருவொற்றியூர் நெடுஞ்சாலை அருகே பெண்கள் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியின் அருகே தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் திருவேங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கந்தன் (வயது 44) என்பவர் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடையும், அதே பகுதியில் கோகுல தெருவை சேர்ந்த இதயகுமார் (62) என்பவர் பேன்சி ஸ்டோர் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த நேதாஜி நகரில் வசிக்கும் ராமதாஸ் (60) டீக்கடையும் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடையில் ஊழியர்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டபோது, திடீரென மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. பின்னர் கடை முழுவதும் தீ பரவியதால் கடையில் பழுது பார்க்க வைத்திருந்த 5-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் தீயில் கருகி சாம்பலானது.

    இதனை தொடர்ந்து அருகில் உள்ள பேன்சி கடைக்கும் தீ பரவியதால் கடையில் இருந்த ஜெராக்ஸ் எந்திரம், கம்ப்யூட்டர் மற்றும் பல்வேறு வகையான பேன்சி பொருட்கள் சாம்பலானது. இதனை அடுத்து டீக்கடைக்கு தீ பரவிய நிலையில் சேதமானது. இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னேரி தீயணைப்பு மீட்புத்துறை அலுவலர் சம்பத் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

    இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பட்டப்பகலில் மோட்டார் சைக்கிள் பழுது பார்த்துக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட தீ விபத்தில் 2 கடைகள் எரிந்து சாம்பலான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ‘மென டோரா அறக்கட்டளை’ தன்னார்வ தொண்டு நிறுவனம் வாலிபரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தது.
    • ஆஸ்பத்திரி மனநல மருத்துவர்கள் தீபா, பத்மாகவுரி மற்றும் டாக்டர்கள், ஊழியர்கள் உரிய சிகிச்சை அளித்தனர்.

    திருவள்ளூர்:

    ஆவடி ரெயில் நிலையத்தில் கடந்த மாதம் வாலிபர் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி வந்தார். அவரிடம் அப்பகுதி மக்கள் விசாரித்த போது யார்? எங்கிருந்து வந்தார் என்ற விபரம் தெரியவில்லை.

    இதுபற்றி அறிந்த 'மென டோரா அறக்கட்டளை' தன்னார்வ தொண்டு நிறுவனம் அந்த வாலிபரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தது.

    அங்கு அவருக்கு ஆஸ்பத்திரி மனநல மருத்துவர்கள் தீபா, பத்மாகவுரி மற்றும் டாக்டர்கள், ஊழியர்கள் உரிய சிகிச்சை அளித்தனர். இதில் அந்த வாலிபர் விரைவில் குணமடைந்தார்.

    இதைத்தொடர்ந்து வாலிபரிடம் விசாரித்தபோது, அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் பெங்களூரில் என்ஜினீயரிங் படித்து வந்ததும் தெரிய வந்தது.

    போதை பழக்கத்துக்கு அடிமையான அவர் மன நலம் பாதிக்கப்பட்டு பெங்களூரில் இருந்து சென்னை வந்திருப்பதும் பின்னர் ஆவடி ரெயில் நிலையத்தில் வழிதெரி யாமல் சுற்றி வந்ததும் தெரிந்தது.

    தற்போது மாணவர் நல்ல முறையில் குணமாகி இருந்தார். இதைத் தொடர்ந்து அவர் கொடுத்த விவரங்களின்படி பீகாரில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாக அவரை தேடி வந்த பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக அமைந்தது.

    உடனடியாக அவர்கள் விரைந்து வந்தனர். அவர்களிடம் மீட்கப்பட்ட வாலிபரை மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீஸ் ஒப்படைத்தார். முன்னதாக வாலிபருக்கு கலெக்டர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சி நெகிழ்ச்சியாக நடந்தது.

    ஒரு மாதத்துக்கு பின்னர் மாயமான வாலிபரை மீட்டுக்கொடுக்க பெரும் உதவியாக இருந்த தொண்டு நிறுவனத்துக்கும், மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீசுக்கும் வாலிபரின் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.

    இதுகுறித்து கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீஸ் கூறியதாவது:-

    ஆவடி ரெயில் நிலையத்தில் வீடின்றி தங்குவதற்கு இடமின்றி ஒரு நபர் மிகவும் முடியாத நிலையில் உள்ளதாக ஹெல்ப்லைன் மூலமாக மெனடோரா அறக்கட்டளைக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், இ.சி.ஆர்.சி. மூலமாக அந்த நபரை மீட்டெடுத்து பிப்ரவரி 21-ந் தேதியில் இருந்து தற்பொழுது வரை நம் பாதுகாப்பில் இருந்து வந்தார். அவரிடம் இருந்து தொலைபேசி எண் போன்ற விவரங்களை சேகரித்து பீகாரில் உள்ள உறவினரை அழைத்தோம். அவர்கள் உடனடியாக வந்ததன் அடிப்படையில், அந்த குடும்பத்துடன் அந்த நபரை ஒருங்கிணைப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தது.

    இதுபோன்ற நிகழ்வு முதலாவதாக கிடையாது, இதேபோல் 35 நபர்கள் மீட்டெடுத்தும், 20 நபர்களை குடும்பத்துடன் ஒருங்கிணைப்பும் செய்திருக்கிறோம். இது ஒரு நல்ல முன்மாதிரியான மீட்டெடுப்பு சம்பவம் என்பதால் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.

    தொண்டு நிறுவனம் சார்பில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 200 எண்ணிக்கையில் தீவிர சிகிச்சை பிரிவிலான நபர்களுக்கு உரிய சிகிச்சை செய்துள்ளார்கள். 35 நபர்களை தெருக்களில் இருந்து மீட்டெடுத்துள்ளனர்.

    இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 18 நபர்களை மீண்டும் ஒருங்கிணைத்துள்ளனர். ஒரு சில நேரங்களில் அந்த நபர்களை ஏற்றுக்கொள்ள விருப்பமில்லாத குடும்பங்களை பார்த்திருக்கிறோம். அப்படிபட்டவர்களை தொண்டு நிறுவனம் மூலமாக காப்பகத்தில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அறக்கட்டளை இயக்குனர்கள் ரதீஷ்கான் கோட், ரெவலீனா, திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி மனநல மருத்துவர்கள் தீபா, பத்மா கவுரி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான மேத்யூபெர்ரி என்ற போர்க் கப்பல் பழுது பார்ப்பதற்காக வந்தது.
    • போர்க்கப்பல் வருகிற 29-ந் தேதி புறப்பட்டு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொன்னேரி:

    காட்டுப்பள்ளி துறைமுகத்தில், 'எல் அண்டு டி' கப்பல் கட்டும் தளம் உள்ளது. இங்கு இந்திய கடலோர காவல் படைக்கு தேவையான ரோந்து கப்பல்கள் கட்டப்பட்டு வருகிறது. கப்பல் பழுது பார்க்கும் மையமும் உள்ளது.

    கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த 'சார்லஸ் ட்ரூ' என்ற ராணுவ தளவாட கப்பல் பழுது மற்றும் பராமரிப்புக்காக, முதன்முறையாக இந்தியாவுக்கு வந்தது. அந்த கப்பலுக்கு காட்டுப்பள்ளி துறைமுகத்தில் பழுது நீக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 10 நாட்களுக்கு பின்னர் அந்த கப்பல் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    அதன் பழுதுகளை சரி செய்யமுதன் முறையாக அமெரிக்க கப்பற்படையை சேர்ந்த ராணுவ தளவாட கப்பல் இந்தியாவில் பழுது பார்க்க வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு நேற்று மாலை 5 மணியளவில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான மேத்யூபெர்ரி என்ற போர்க் கப்பல் பழுது பார்ப்பதற்காக வந்தது.

    அதில் பழுது பார்க்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிந்ததும் அந்த போர்க்கப்பல் வருகிற 29-ந் தேதி புறப்பட்டு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சீனா ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு 2-வது முறையாக அமெரிக்க போர்க்கப்பல் பழுது நீக்க வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • எண்ணூர் போலீசார் சார்பில் கிராம ஒருங்கிணைப்பு சங்க நிர்வாகிகளுடன் சமுதாய நல்லுறவு கூட்டம் நடைபெற்றது.
    • கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை யாராவது விற்பனை செய்தால் போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுக்க வேண்டும்.

    திருவொற்றியூர்:

    எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் உள்ள சமுதாயக்கூடத்தில் எண்ணூர் போலீசார் சார்பில் கிராம ஒருங்கிணைப்பு சங்க நிர்வாகிகளுடன் சமுதாய நல்லுறவு கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். இதில் 60 கிராமங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் செங்குன்றம் துணை கமிஷனர் என். மணிவண்ணன் கலந்து கொண்டு போதையில்லா சமுதாயம் அமைந்திட அந்தந்த பகுதியில் உள்ள இளைஞர்களை நல்வழிப்படுத்திட கிராம தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை யாராவது விற்பனை செய்தால் போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுக்க வேண்டும். அவர்களது ரகசியம் பாதுகாக்கப்படும் என்றார். இதில் இன்ஸ்பெக்டர்கள் தட்சிணாமூர்த்தி, ஜி. கண்ணன் மற்றும் சங்க நிர்வாகிகள் பி. வின்சன்ட் ராஜரத்தினம், எம்.ரகுநாதன் எஸ்.டி. சங்கர்,எம்.கோபால், சங்க இணை செயலாளர் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 2 கோடியே 29 லட்சத்து 60 ஆயிரத்து 640 ரூபாய் வசூல் செய்து இழப்பீடு வழங்கப்பட்டது.
    • பொன்னேரி பார் அசோசியேசன் தலைவர் தேவேந்திரன் மற்றும் வழக்கறிஞர்கள் உடனிருந்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் சிறப்பு லோக் அதாலத், முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. முதன்மை சார்பு நீதிபதி பிரேமாவதி தலைமையில் குற்றவியல் நீதிபதி ஐயப்பன் முன்னிலையில் நடைபெற்ற இந்த லோக் அதாலத்தில், பல்வேறு வழக்குகள் தொடர்பாக விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.

    மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் 22 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 2 கோடியே 29 லட்சத்து 60 ஆயிரத்து 640 ரூபாய், வசூல் செய்து இழப்பீடு வழங்கப்பட்டது. இதில் பொன்னேரி பார் அசோசியேசன் தலைவர் தேவேந்திரன் மற்றும் வழக்கறிஞர்கள் உடன் இருந்தனர்.

    • ஏழு சவரன் தங்க நகைகளையும், மூன்று ஜோடி வெள்ளி கொலுசுகளையும் திருடி சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • கொள்ளை சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், குருவாயல் ஊராட்சி, ஆரிக்கம்பேடு கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் மாரியம்மாள்(வயது50). கணவனை இழந்த இவர் பூச்செடிகள் பயிர் செய்து வருகிறார். இந்நிலையில், இவரது உறவினர் வீட்டு திருமணத்திற்காக மாரியம்மாள் வீட்டை பூட்டிக் கொண்டு கடந்த புதன்கிழமை காவனூர் கிராமத்திற்கு சென்றிருந்தார். இந்நிலையில், உறவினர் வீட்டு திருமணம் முடிந்த பின்னர் நேற்று மாலை வீடு திரும்பினார்.

    அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. வீட்டின் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ரொக்க பணம் ரூ.ஒரு லட்சத்து 8 ஆயிரம், தங்க சங்கிலி, டாலர், கம்மல் உள்ளிட்ட ஏழு சவரன் தங்க நகைகளையும், மூன்று ஜோடி வெள்ளி கொலுசுகளையும் திருடி சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து மாரியம்மாள் நேற்று இரவு வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சீட்டுக்கட்டு மற்றும் ரொக்கம் ரூ.750-யை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
    • மூன்று பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சிறுவாபுரியில் உள்ள அய்யனார் மேடு ஏரிக்கரை அருகே சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஆரணி காவல் நிலைய போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

    இந்நிலையில், ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் நேற்று மதியம் அய்யனார் மேடு ஏரிக்கரை அருகே ரோந்து சென்ற போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த மூன்று பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டு மற்றும் ரொக்கம் ரூ.750-யை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர்கள் அய்யனார் மேடு பகுதியைச் சேர்ந்தவர்களான மேகநாதன்(வயது50), தேவராஜ்(வயது42), பாளையம்(வயது60) என தெரிய வந்தது. மூன்று பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×