என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • பட்டா கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் பட்டா வழங்கப்படவில்லை.
    • இதன் காரணமாக அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியாமல் தவித்து வந்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் ஊராட்சியில் அடங்கிய போரக்ஸ் நகரில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் இப்பகுதி மக்கள் பட்டா கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் பட்டா வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியாமல் தவித்து வந்தனர்.

    இந்நிலையில் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதனிடம் பட்டா வேண்டி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அனு மீது விரைவாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐஸ்வர்யா ராமநாதன் உறுதி அளித்தார்.

    • 15 நாளில் வீடுகளை அனைவரும் காலி செய்ய வேண்டும் என ரெயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
    • வீடுகளை உடனே காலி செய்தால், 120 குடும்பங்களை சேர்ந்த 609 பேர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்

    பொன்னேரி:

    கும்மிடிப்பூண்டியில் திருவள்ளூர் நகர், வள்ளியம்மன் நகர், கரிமேடு உள்ளிட்ட ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் 30 ஆண்டுகளாக 120 குடும்பங்கள் வீடு கட்டி வாழ்ந்து வந்தனர். கடந்த மாதம் 27 ஆம் தேதி வீடுகளை காலி செய்யும்படி சென்னை தென்னக ரெயில்வே தலைமை அலுவலகத்தில் இருந்து பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    அவர்களை மார்ச் 23ஆம் தேதி சென்னை ரெயில்வே தலைமை அலுவலகத்திற்கு அழைத்தனர். அங்கு சென்ற பொதுமக்களிடம், அடுத்த நோட்டீஸ் வழங்கியதும் 15 நாளில் வீடுகளை அனைவரும் காலி செய்ய வேண்டும் என ரெயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    இதனை தொடர்ந்து சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதனிடம் பாமக திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் விஎம் பிரகாஷ் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனு வழங்கினர்.

    வீடுகளை உடனே காலி செய்தால், 120 குடும்பங்களை சேர்ந்த 609 பேர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே, மேற்கண்ட 120 குடும்பத்தாருக்கும் மாற்று இடம் ஒதுக்கி தரும் வரை வீடுகளை காலி செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.

    அப்போது செய்தியாளர்களை சந்தித்த பாமக மாவட்ட செயலாளர் விஎம் பிரகாஷ், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசும். அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    • 15 வருடங்களுக்கு முன்பு தோராய பட்டாக்களை வருவாய்த் துறையினர் வழங்கினர்.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் மதியம் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர்

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், அம்மணம்பாக்கம் பிர்காவுக்கு உட்பட்ட மாகரல், கோமக்கம்பேடு, அம்மணம் பாக்கம், அகரம் செம்பேடு, வெங்கல் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு 15 வருடங்களுக்கு முன்பு தோராய பட்டாக்களை வருவாய்த் துறையினர் வழங்கினர். ஆனால், இதனை கிராம கணக்குகளில் ஏற்றி சிட்டா அடங்கல் வழங்க கோரி கடந்த நவம்பர் மாதம் 400-க்கும் மேற்பட்ட மக்கள் அம்மணம்பாக்கம் வருவாய் அலுவலர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். அதனை ஏற்று போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். ஆனால், நத்தம்-பாட்டைதோப்பு உள்ளிட்ட ஆட்சேபனை அற்ற இடங்களில் குடியிருக்கும் மக்களுக்கும் பட்டா வழங்கவில்லை.

    இந்நிலையில், இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் எல்லாபுரம் ஒன்றிய கிளையின் சார்பாக மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற கோரி அமணம்பாக்கம் வருவாய் அலுவலர் அலுவலகம் அருகே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் மதியம் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். அதிகாரிகள் வந்து உரிய நடவடிக்கை எடுக்கும் வரையில் அங்கேயே தங்கியிருந்து சமைத்து சாப்பிட்டுவிட்டு போராட்டத்தை தொடர்வதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

    இப்போராட்டத்துக்கு வட்டச் செயலாளர் எம்.பழனி தலைமை தாங்கினார். கோமக்கம்பேடு தேவேந்திரன், மணிவண்ணன், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாநிலச் செயலாளர் துளசிநாராயணன், மாவட்ட செயலாளர் சம்பத், வட்டத் தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினர்.

    • பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் கடந்த 2 மாதத்துக்கு முன்பு நிறுத்தப்பட்டது.
    • தண்ணீர் முழுவதும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் மூலம் அனுப்பப்படும்.

    ஊத்துக்கோட்டை:

    பூண்டி ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்.

    தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளதால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடவேண்டாம் என்று தமிழக அதிகாரிகள் ஏற்கனவே ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். அதன்படி பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் கடந்த 2 மாதத்துக்கு முன்பு நிறுத்தப்பட்டது.

    பூண்டி ஏரியில் உள்ள தண்ணீர் இணைப்பு கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி. இதில் தற்போது 1908 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    பூண்டி ஏரியில் மொத்தம் 16 ஷட்டர்கள் உள்ளன. இதில் 8 மற்றும் 9-வது ஷட்டர்கள் பழுதடைந்து உள்ளது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக புதிய ஷட்டர்கள் தயார்நிலையில் உள்ளது. இது தொடர்பாக அரசுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அனுமதி கிடைத்ததும் இந்த ஷட்டர்கள் பழுது பார்க்கப்படும். இந்த பணி 45 நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது. இதைத்தொடர்ந்து பூண்டி ஏரியில் உள்ள தண்ணீர் முழுவதையும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது. விரைவில் ஏரியின் ஷட்டர் பழுது பார்க்கப்படும் என்று தெரிகிறது. இந்த பணி முடிந்ததும் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் பெறப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறும்போது, பூண்டி எரியில் உள்ள 8,9-வது ஷட்டர் பழுது பார்க்க தயார் நிலையில் உள்ளது. இதுதொடர்பாக உரிய அனுமதி கிடைத்ததும் பணி தொடங்கும். இந்த பணி நடைபெறும் போது ஏரியில் உள்ள தண்ணீர் இருப்பை குறைக்க வேண்டும். எனவே தண்ணீர் முழுவதும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் மூலம் அனுப்பப்படும். தண்ணீரை சென்னை குடிநீருக்கு அனுப்புவதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்றார்.

    • கடந்த சில நாட்களில் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடு போய் இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
    • போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அனுப்பப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தி. இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு மணலி புதுநகரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். பின்னர் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் 3 1/2 பவுன் நகை மற்றும் வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.

    இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களில் அப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடு போய் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சுரேஷ் திடீரென பக்கிங்காம் கால்வாய்க்குள் தவறி விழுந்தார். தலையில் பலத்த அடிபட்டதால் அவர் மயங்கினார்.
    • மீஞ்சூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    திருப்பத்தூரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது42). லாரி கிளீனர். இவர் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதிக்கு லாரியில் வந்தார். இரவில் லாரியை அங்குள்ள சாலை ஓரம் நிறுத்திவிட்டு டிரைவர் தூங்கினார். கிளீனராக சுரேஷ் அங்குள்ள பக்கிங்காம் கால்வாய் கல்வெட்டு சுவற்றில் படுத்து இருந்தார்.

    அப்போது சுரேஷ் திடீரென பக்கிங்காம் கால்வாய்க்குள் தவறி விழுந்தார். தலையில் பலத்த அடிபட்டதால் அவர் மயங்கினார்.

    இதில் தண்ணீரில் மூழ்கி சுரேஷ் பரிதாபமாக இறந்தார். சிறிது நேரம் கழித்து டிரைவர் வந்து பார்த்தபோது பக்கிங்காம் கால்வாயில் சுரேஷ் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக மீஞ்சூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இந்த கோவில் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
    • நாளை முதல் 48 நாட்கள் மண்டலபிஷேக விழா நடக்கிறது.

    திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், மதுரவாசல் கிராமத்தில் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ருக்மணி நாயிகா சமேத ஸ்ரீ வேணுகோபால பெருமாள் திருக்கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று காலை நடைபெற்றது.

    இதை முன்னிட்டு சனிக்கிழமை மாலை அனுக்ஞை,வேத பிரபந்தம் தொடக்கம்,அங்குரார்பணம், கணபதி ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது. நேற்று காலை கும்ப திருவாராதனம்,மகா சாந்தி, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல்,நவக்கலச ஸ்தாபனம்,மகா சாந்தி, திருமஞ்சனம் உள்ளிட்டவை நடைபெற்றது.

    இன்று காலை விஸ்வரூபம்,மகாபூர்ணாகுதி உள்ளிட்டவை நடைபெற்றது. இதன் பின்னர், ஆரணி தாசரதி பட்டாச்சாரி தலைமையில் புனித நீர் அடங்கிய கலசங்களை பட்டாச்சாரியார்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.காலை 9 மணிக்கு விமான கோபுரம்,மூலவர் உள்ளிட்டவைகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர்.

    இதன் பின்னர்,மூலவருக்கு மகா அபிஷேகம், அலங்காரம் மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. பின்னர்,பக்தர்களுக்கு தீர்த்தம், பிரசாதம், அன்னதானம் உள்ளிட்டவைகள் கோவில் வளாகத்தில் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உற்சவர் மாட வீதி வழியாக திருவிதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில்,ஊராட்சி மன்ற தலைவர் கீதா கணபதி மற்றும் துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எம்.எஸ்.வரதராஜன் தலைமையில் திருக்கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.நாளை முதல் தொடர்ந்து 48 நாட்கள் மண்டலபிஷேக விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    • கட்சியின் வளர்ச்சி குறித்தும் பட்டியல் அணியின் பணிகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
    • பிற கட்சிகளில் இருந்து விலகிய சிலர் பாஜகவில் இணைந்தனர்.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பட்டியலின அணி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட பட்டியலின அணி தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். மாநில பட்டியலணி செயலாளர் அன்பாலயா சிவகுமார் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாநில அரசுத்துறை தலைவர் பாஸ்கர் தேசிய செயற்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் ஆகியோர் சிறப்பு அழைப்பார்களாக கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்தும் பட்டியல் அணியின் பணிகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

    மேலும் பிற கட்சிகளில் இருந்து விலகிய சிலர் பாஜகவில் இணைந்தனர். இதில் மாவட்டச் செயலாளர்கள் நந்தன், பொன்.பாஸ்கர், கோட்டி, நகர தலைவர் சிவகுமார், இளங்கோ, பொன்னேரி நகர பட்டியலின அணி தலைவர் ஹரிதாஸ், வழக்கறிஞர் பிரிவு கௌதமன், பொன்னேரி நகர மகளிர் அணி தலைவர் ராகிணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கோண சமுத்திரம் அருகே விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவனின் வலது கால், வலது தோள்பட்டை ஆகியவற்றில் முறிவு ஏற்பட்டது.
    • பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொதட்டூர்பேட்டை:

    பள்ளிப்பட்டு தாலுகா, பொதட்டூர்பேட்டை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் இளங்கோவன் (வயது 40). இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு அத்திமாஞ்சேரி பேட்டை பகுதியில் ரோந்து சென்றார். அதன் பிறகு பாத்தகுப்பம், கொத்த குப்பம் ஆகிய பகுதிகளின் வழியாக அவர் மோட்டார் சைக்கிளில் பொதட்டூர்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு நள்ளிரவில் திரும்பி வந்து கொண்டிருந்தார். வழியில் கோண சமுத்திரம் கிராமம் அருகே உள்ள சாலை வளைவில் மோட்டார் சைக்கிள் திரும்பும்போது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது.

    இதில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவனின் வலது கால், வலது தோள்பட்டை ஆகியவற்றில் முறிவு ஏற்பட்டது. மேலும் அவரது விலா எலும்பிலும் முறிவு ஏற்பட்டு அவர் படுகாயம் அடைந்தார். தகவல் கிடைத்ததும் பொதட்டூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை உடனடியாக சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அவரை சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்டையார்பேட்டை, நேரு நகரை சேர்ந்தவர் கமல்ராஜ்.
    • கடந்த 16-ந்தேதி கம்பெனி முன்பு நிறுத்தி இருந்த இவரது மோட்டார் சைக்கிள் திருட்டுபோனது.

    அம்பத்தூர்:

    தண்டையார்பேட்டை, நேரு நகரை சேர்ந்தவர் கமல்ராஜ். இவர் அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 16-ந்தேதி கம்பெனி முன்பு நிறுத்தி இருந்த இவரது மோட்டார் சைக்கிள் திருட்டுபோனது.

    இதுகுறித்து அம்பத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி செல்வது பதிவாகி இருந்தது. இந்த நிலையில் திருவள்ளூரில் பதுங்கி இருந்த காக்களூர் ஆஞ்சநேயபுரம் பகுதியை சேர்ந்த லோகேஷ், குளக்கரை பகுதியை சேர்ந்த சோனு ஆகிய2 பேரை இன்ஸ்பெக்டர் அலமேலு, சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

    • திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகள் உள்ளன.
    • ஊராட்சி செயலர்களை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த ஊராட்சி செயலர்களை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

    அதன்படி கடம்பத்துார், திருவள்ளூர் தாலுகாவில் 14 ஊராட்சி செயலர்கள், சோழவரம், பூண்டியில் தலா 18 பேர், பள்ளிப்பட்டு -20 பேர், ஆர்.கே.பேட்டை-24 பேர், மீஞ்சூர்-23 பேர், பூந்தமல்லி-7 பேர், எல்லாபுரம்-25பேர், கும்மிடிப்பூண்டி-26 பேர், திருத்தணி-8 பேர், வில்லிவாக்கம்-3 பேர், திருவாலங்காடு-11 பேர் என மொத்தம் 211 ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம் செய்ய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    இந்த பணியிட மாறுதல் அடுத்தமாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி முதல், நடைமுறைக்கு வருகிறது.

    சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ள ஊராட்சி செய லர்களை பணியில் இருந்து விடுவித்தது மற்றும் இடம் மாறுதலாகி பணியில் சேர்ந்த ஊராட்சி செயலர்கள் விவரத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீஸ் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

    • பொன்னேரி போலீஸ் நிலையத்தில் செல்போன் கடை சங்கம் சார்பில் நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர்.
    • போலீசார் கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து நூதன முறையில் செல்போன் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    பொன்னேரி, டி.எச். சாலையில் செல்போன் கடை நடத்தி வருபவர் நாகராஜ். இவர் கடையில் வியாபரம் செய்து கொண்டு இருந்தபோது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.

    அவர்களில் ஒருவன் மட்டும் செல்போன் வாங்குவது போல் செல்போன், ஹெட்போன், சார்ஜர், ஆகியவற்றை வாங்கி பார்த்தார். சிறிது நேரம் கழித்து உடன் வந்த மற்றொரு வாலிபர் கடையில் இருந்து வெளியே சென்று தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள் அருகே நின்றான்.

    கடையில் இருந்த வாலிபர் வேறு மாடல் செல்போனை எடுத்து காட்டும்படி கூறினார். இதையடுத்து கடை ஊழியர் வேறு ஒரு புதிய செல்போன் எடுப்பதற்காக திரும்பினார்.

    அந்த நேரத்தில் கடையில் இருந்த வாலிபர் காண்பிப்பதற்காக வைத்திருந்த புதிய செல்போன் மற்றும் ஹெட் போன் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வெளியில் மோட்டார் சைக்கிளில் தயாராக நின்ற கூட்டாளியுடன் தப்பி சென்று விட்டார்.

    இதுகுறித்து பொன்னேரி போலீஸ் நிலையத்தில் செல்போன் கடை சங்கம் சார்பில் நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர்.

    போலீசார் கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து நூதன முறையில் செல்போன் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி பகுதியில் இதுபோன்று அடிக்கடி செல்போன் பறிப்பு மற்றும் கொள்ளை நடப்பதாகவும் இதுகுறித்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் செல்போன் கடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×