என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • தொடரும் மின்வெட்டால் தேர்விற்கு படிக்கும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமம் அடைந்து உள்ளனர்.
    • கடைகளில் வியாபாரிகள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வியாபாரம் செய்யும் நிலை நீடித்து வருகிறது.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி கடும் வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் தினமும் வெப்பத்தின் அளவு தொடர்ந்து அதிகரித்த படி இருக்கிறது. மேலும் வெயிலின் உக்கிரம் வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் வாட்டி வதைக்கிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது.

    இந்தநிலையில் திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. தினமும் பலமணி நேரம் அவ்வப்போது மின் தடை ஏற்படுவதால் வீட்டில் உள்ள நோயாளிகள், வயதானோர், குழந்தைகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இரவு நேரத்தில் தொடரும் மின்வெட்டால் தேர்விற்கு படிக்கும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமம் அடைந்து உள்ளனர். கடைகளில் வியாபாரிகள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வியாபாரம் செய்யும் நிலை நீடித்து வருகிறது. காலை முதல் இரவு வரை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மின் தடை ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். ஊத்துக்கோட்டையில் இன்று காலை 6 மணிக்கு மின்தடை ஏற்பட்டது. பின்னர் காலை 8.30 மணிக்கு மீண்டும் மின்சாரம் வினியோகிக்கப்பட்டது.

    மீண்டும் இரவு வரை மின்தடை விட்டு விட்டு ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, அடிக்கடி மின்தடை ஏற்படுவது குறித்து சரியான காரணத்தை அதிகாரிகள் கூறுவதில்லை. திருவள்ளூர் பகுதியில் மின்சாரம் தடையின்றி கிடைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்வெட்டு குறித்து முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்றனர்.

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது மின்தடைக்கான காரணத்தை கூற மறுத்துவிட்டனர்.

    • சுமார் ஒரு மணி நேரம் கழித்து கிருஷ்ணமூர்த்தியும், கற்பகமும் வீட்டுக்கு திரும்பினார்கள்.
    • வீட்டு கதவு உள்புறம் பூட்டப்பட்டு இருந்தது.

    'ஹே... மல்லிப்பூ

    வச்சி வச்சி வாடுதே...

    அந்த வெள்ளி நிலா

    வந்து வந்து தேடுதே...

    ம்... மச்சான் எப்போவரப் போ

    மச்சான் எப்பவரப்போறே...'

    -இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோவில் வரும் இந்த பாடலுக்கு தலைமுடியை கோதிவிட்டு, கைவிரல்களை நளினமாக அசைத்து நடனமாடி, தனது கண்ணசைவுடன் கூடிய முக பாவனையால் அனைவரையும் கொள்ளை கொண்டவர் 9 வயது சிறுமி பிரதிக்ஷா.

    திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி- கற்பகம் தம்பதியின் மகளான இவர் திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு வடித்து வந்தார்.

    சிறுமி பிரதிக்ஷா குழந்தை பருவத்திலேயே துருதுருவென்று இருப்பார். அப்போதே அவருக்கு தனித்திறமை ஒன்று இருந்தது. சினிமாவில் வரும் காமெடி காட்சிகளுக்கு டயலாக் பேசுவார். மேலும் பாடல்களுக்கு அழகிய முக பாவனையுடன் நடனம் ஆடுவார்.

    குழந்தை பருவத்திலேயே அவருக்கு இருந்த இந்த திறமைகள் அவரை இன்ஸ்டாவில் பிரபலமாக்கியது.

    குழந்தை பருவத்தில் இருந்து சிறுமியாக மாறிய பிரதிக்ஷா இன்ஸ்டாகிராமில் தனக்கென ஒரு ஐ.டி.யை கிரியேட் செய்து அதில் சினிமா பாடல்கள், கானா பாடல்களுக்கு தானே முகபாவனை காட்டி நடனமாடி ரீல்ஸ் வீடியோ வெளியிடத் தொடங்கினார்.

    'கண் பாஷை பேசினால்

    நான் என்ன செய்வேன்

    கன்பியூஷன் ஆகிறேன்'

    -என்ற பாடலுக்கு கண்பாஷையிலேயே பேசி அவர் வெளியிட்ட வீடியோக்கள் பார்வையாளர்களை கவர்ந்தன. தொடர்ந்து சிறுமி பிரதிக்ஷா இன்ஸ்டாவில் வீடியோக்களை வெளியிட தொடங்கினார்.

    "சின்ன சின்ன ஆச...

    திக்கி திக்கி பேச

    மல்லிகைப்பூ வாசம்

    கொஞ்சம்

    காற்றோட வீச..."

    என மனதை வருடும் காதல் பாடல்கள் அவருடைய இன்ஸ்டா பக்கங்களை அலங்கரித்தன.

    காதல் பாடல்கள், கிராமிய பாடல்கள் மட்டுமின்றி கானா பாடல்களையும் அவர் விட்டுவைக்கவில்லை.

    'தப்பு தண்டா பண்ணதில்ல...

    பொய்கூட சொன்னதில்ல

    நானு... அது நானு...

    நாலு பேரு மத்தியில

    பொங்க வைப்பேன் நெத்தியில

    நானு... அது நானு'

    என்ற கானா பாடலிலும் அவர் முக அசைவு மற்றும் நடனத்தில் பின்னியெடுத்தார்.

    கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு அவர் இன்ஸ்டாவில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டார்.

    ஒவ்வொரு பாடல்களுக்குமே அந்தந்த பாடல்களுக்கு ஏற்ப முக பாவனைகளை மாற்றி காட்டி அவர் அந்த பகுதி மக்களையும், பார்வையாளர்களையும் கவர்ந்தார்.

    இதனால் அந்த பகுதி மக்கள் அவரை 'இன்ஸ்டா குயின்' என்று அழைத்தனர். அவரது வீடியோக்களை பார்த்தவர்களும் விமர்சனங்களால் புகழ்ந்து தள்ளினர். இதனால் அவர் இன்ஸ்டா குயினாக தனித்துவமாக வலம் வந்தார். இந்த நிலையில் தான் நடக்கக்கூடாத அந்த சம்பவம் நிகழ்ந்தது. நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் சிறுமி பிரதிக்ஷா அருகில் உள்ள தனது பாட்டி வீட்டில் பக்கத்து வீட்டு தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

    அப்போது தந்தை கிருஷ்ணமூர்த்தியும், தாய் கற்பகமும் அங்கு வந்தனர். சிறுமி பிரதிக்ஷாவிடம், 'விளையாடியது போதும்... இனி வீட்டுக்கு சென்று படி' என்று கூறி கண்டித்ததாக தெரிகிறது.

    மேலும் தாங்கள் வெளியில் செல்வதாகவும் சிறிது நேரத்தில் வந்து விடுவதாகவும் கூறி வீட்டின் சாவியை பிரதிக்ஷாவிடம் கொடுத்துவிட்டு பெற்றோர் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றனர்.

    சுமார் ஒரு மணி நேரம் கழித்து கிருஷ்ணமூர்த்தியும், கற்பகமும் வீட்டுக்கு திரும்பினார்கள். அப்போது வீட்டு கதவு உள்புறம் பூட்டப்பட்டு இருந்தது.

    உடனே கிருஷ்ணமூர்த்தி கதவை தட்டினார். பலமுறை தட்டிப்பார்த்தும் கதவு திறக்கவில்லை. இதனால் பயந்து போன கிருஷ்ணமூர்த்தி படுக்கை அறை ஜன்னல் கதவை உடைத்தார். அப்போது சிறுமி பிரதிக்ஷா வெள்ளை நிற சிறிய துண்டால் ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

    அதிர்ச்சி அடைந்த அவர் மேல்புற கூரையை பிரித்து வீட்டிற்குள் இறங்கினார். பின்னர் படுக்கை அறை கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார். அப்போது சிறுமிக்கு உயிர் இருந்தது.

    உடனடியாக சிறுமியை தூக்கிக் கொண்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போதும் சிறுமி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர்.

    சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக உயிர்காக்கும் சிகிச்சைகளை அளித்த நிலையில் திடீரென்று சிகிச்சை பலனளிக்காமல் சிறுமி பிரதிக்ஷா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக சிறுமியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி திருவள்ளூர் போலீசில் புகார் செய்தார். 9 வயது சிறுமி எப்படி தற்கொலை செய்து கொள்ள முடியும் என்ற கேள்வியும், சந்தேகமும் போலீசாருக்கு எழுந்தது.

    இதனால் போலீசார் கிருஷ்ண மூர்த்தியின் வீட்டுக்கே சென்று விசாரணை நடத்தினார்கள். சிறுமி தூக்கில் தொங்கிய அறையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வீட்டின் படுக்கை அறையில் உள்ள கட்டில் மெத்தையின்மீது சிறிய ஸ்டூல் போட்டு சிறுமி அதில் ஏறியுள்ளார்.

    பின்னர் டவலை ஜன்னல் கம்பியில் கட்டி தூக்குப்போட்டு ஸ்டூலில் இருந்து குதித்துள்ளார். அந்த துண்டு கழுத்தை முழுவதும் நெரிக்காததால் தூக்கில் தொங்கிய படியே 1 மணி நேரத்துக்கும் மேலாக உயிருக்கு போராடியுள்ளார்.

    ஆஸ்பத்திரியில் சேர்க்கும்போது அவருக்கு உயிர் இருந்தும் துரதிருஷ்டவசமாக அவரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. தோழிகள் முன்பு திட்டியதாலேயே அவர் மனம் உடைந்து தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    கண்ணசைவை காட்டி இன்ஸ்டா குயினாக கலக்கிய சின்னஞ்சிறு சிறுமி பிரதிக்ஷாவின் மீது யார் கண்பட்டதோ தெரியவில்லை. விதி 'திடீர்' சூறாவளியாய் அவரது வாழ்க்கையை முடித்துவிட்டது.

    "மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே...

    அந்த வெள்ளி நிலா

    வந்து வந்து தேடுதே...

    நீ எப்போ வரப்போறே...

    இனி எப்போ வரப்போறே..."

    • வீட்டில் தனியாக இருந்த ஆர்த்தி திடீரென மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கடந்த 6 மாதங்களாக ஆர்த்தி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள கரக்கம்பாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிவேல். உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி புஷ்பலதா. இவர்களது மகள் ஆர்த்தி (வயது 17).

    இவர் சீதஞ்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்- 2 படித்து வந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஆர்த்தி திடீரென மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் கதறி துடித்தார்.

    இதுகுறித்து பென்னாலூர் பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சக்தியபாமா மற்றும் போலீசார் விரைந்து வந்து ஆர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடந்த 6 மாதங்களாக ஆர்த்தி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து உள்ளார். அவரது தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆர்த்தியின் சகோதரியும் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது. பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • அங்கன்வாடி மையங்களுக்கு ஒரு மாத காலம் விடுமுறை வழங்க வேண்டும்
    • பதிவேடு அல்லது செல்போன் இரண்டில் ஒன்றை மட்டும் உறுதிப்படுத்த வேண்டும்.

    பெரியபாளையம்:

    தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய மூன்றாம் கட்ட போராட்டம் இன்று நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில், பத்து ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எந்த விதமான நிபந்தனையும் இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்பு அரசு ஊழியர்களுக்கு ஒரு வருடம் வழங்குவது போல் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும். மினி மையத்திலிருந்து பிரதான மையங்களுக்கு பதவி உயர்வு பெற்று சென்ற ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும். 10 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் பிரதான மையங்களை மினி மையமாக்குவதையும், 5 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மினி மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தையும் கைவிட வேண்டும். காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்.

     

    சிலிண்டர் விலை ஏற்றத்திற்கு ஏற்றாற்போல் அகவிலைப் படியை உயர்த்தி தர வேண்டும். செல்போனில் போசான் டிராக்கர் அல்லது டி.என். ஆப்பில் உள்ள வித்தியாசத்தை சரி செய்ய வேண்டும். பதிவேடு அல்லது செல்போன் இரண்டில் ஒன்றை மட்டும் உறுதிப்படுத்த வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பாக 2 அல்லது மூன்று மையங்கள் இன்சார்ஜ் கொடுப்பதால் மன உளைச்சல் ஏற்படுகிறது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடுவது போல் அங்கன்வாடி மையங்களுக்கு ஒரு மாத காலம் விடுமுறை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டத் துணைத் தலைவர் எம்.உஷாராணி தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் பி.கலைச்செல்வி, செயலாளர் என்.சந்திரா, பொருளாளர் எம்.வினோதினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில், துணைத் தலைவர் பி.அம்பிகா, துணை செயலாளர் எம்.பொன்மணி ஆகியோர் நன்றி கூறினார்கள்.

    • பேரக் குழந்தைகள் தங்களின் தாத்தா பாட்டிகளுக்கு பாத பூஜைகள் செய்து சிறப்பித்தனர்.
    • சிறப்பு அழைப்பாளர்களாக ஆசிரியர் சங்க மாநில தலைவர் காத்தவராயன் மற்றும் சேகர் கலந்துகொண்டனர்

    பொன்னேரி:

    பொன்னேரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாத்தா பாட்டியர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தாளாளர் கனகராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக ஆசிரியர் சங்க மாநில தலைவர் காத்தவராயன் மற்றும் சேகர் கலந்துகொண்டு மாணவ மாணவிகளை பற்றி சிறப்புரையாற்றினர்.

    இதில் 100-க்கும் மேற்பட்ட பேரப்பிள்ளைகளின் கலை நிகழ்ச்சிகளை தாத்தா, பாட்டிகள் கண்டுகளித்தனர். பின்னர் பேரக் குழந்தைகள் தங்களின் தாத்தா பாட்டிகளுக்கு பாத பூஜைகள் செய்து சிறப்பித்தனர். இதுவரை எந்த மாவட்டத்திலும் நடைபெறாத ஒரு நிகழ்வாக இருந்தது என இதில் கலந்து கொண்டவர்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர். விழா ஏற்பாட்டினை பள்ளி முதல்வர் இ.வி. ரமேஷ் செய்திருந்தார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    • கோவில் பணியாளர்கள் 6 வருடங்களாக கோவில் நிர்வாகத்திடம் 7-வது ஊதிய குழுவை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    • ஒவ்வொரு பணியாளருக்கும் சுமார் ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை நிலுவைத்தொகை வர வேண்டி உள்ளது.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு திருவாலங்காடு,மத்தூர், நாகப்பூண்டி, திருப்பாச்சூர் உள்ளிட்ட 28 இடங்களில் உப கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கோவில் ஊழியர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 7-வது ஊதிய குழு அமல்படுத்தப்பட வில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து கோவில் பணியாளர்கள் 6 வருடங்களாக கோவில் நிர்வாகத்திடம் 7-வது ஊதிய குழுவை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஒவ்வொரு பணியாளருக்கும் சுமார் ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை நிலுவைத்தொகை வர வேண்டி உள்ளது.

    இதைத்தொடர்ந்து 7-வது ஊதியக்குழுவை அமல்படுத்தக்கோரி திருத்தணி கோவில் ஊழியர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருத்தணி கமலா திரையரங்கம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    • நாகராஜ் போலி பில் தயாரித்து வீட்டு உபயோக பொருட்களை மற்ற கடைகளுக்கு சப்ளை செய்து ரூ.18 லட்சத்து 83 ஆயிரம் வரை சுருட்டி இருப்பது தெரிந்தது.
    • திருவொற்றியூரில் பதுங்கி இருந்த நாகராஜை போலீசார் கைது செய்தனர்.

    திருவொற்றியூர்:

    புது வண்ணாரப்பேட்டை, கிராஸ் ரோட்டை சேர்ந்தவர் அஜீஸ் குப்தா. இவர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், பிரபல நிறுவனத்தின் வீட்டு உபயோக பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

    இங்கு புது வண்ணாரப்பேட்டை, ராமஅரங்கனல் தெருவைச் சேர்ந்த நாகராஜ் (35) என்பவர் ஊழியராக வேலைபார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடை உரிமையாளர் அஜிஸ்குப்தா கடையின் விற்பனை கணக்குகளை சரிபார்த்த போது ஊழியர் நாகராஜ் போலி பில் தயாரித்து வீட்டு உபயோக பொருட்களை மற்ற கடைகளுக்கு சப்ளை செய்து ரூ.18 லட்சத்து 83 ஆயிரம் வரை சுருட்டி இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து அஜீஸ் குப்தா, புது வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் யுவராஜ் வழக்குப் பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட நாகராஜை தேடிவந்தனர். இதற்கிடையே திருவொற்றியூரில் பதுங்கி இருந்த நாகராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தந்தை இறந்த 2 மாதத்தில் மகள் தற்கொலை செய்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • செங்குன்றம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    செங்குன்றம்:

    செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்தவர் சரவணன். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த அவர் தற்கொலை செய்து இறந்து போனார். இவரது மனைவி அமுதா. தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் கீர்த்தி (வயது20). மாதவரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கிரிமினாலஜி 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல அமுதா வேலைக்கு சென்று விட்டார். கீர்த்தியை கல்லூரிக்கு அழைத்துச் செல்ல அருகில் உள்ள மாணவர் ஒருவர் வந்த போது வீட்டில் உள்ள அறையில் கீர்த்தி மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து செங்குன்றம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் கீர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தந்தை இறந்தது முதல் மாணவி கீர்த்தி சோகமாக இருந்ததாக தெரிகிறது. எனவே தந்தை இறந்த மனவேதனையில் கீர்த்தி தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. தந்தை இறந்த 2 மாதத்தில் மகள் தற்கொலை செய்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் இப்பகுதி மக்கள் பட்டா கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
    • பட்டா வழங்ககோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த ஆண்டார் குப்பம் ஊராட்சிக்குட்பட்ட போரக்ஸ் நகரில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் இப்பகுதி மக்கள் பட்டா கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால் அவர்களுக்கு இன்னும் பட்டா வழங்கப்படவில்லை.

    இதனால் அவர்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் பட்டா வழங்ககோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    பின்னர் அவர்கள் பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதனிடம் பட்டா வழங்கக்கோரி மனு அளித்துள்ளனர். இதனால் கோட்டாட்சியர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் 120 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருவதாக தெரிகிறது.
    • 15 நாட்களில் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று ரெயில்வே சார்பில் நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது.

    கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் நகர், வள்ளியம்மன் நகர், கரிமேடு உள்ளிட்ட ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் 120 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருவதாக தெரிகிறது.

    இந்தநிலையில் அவர்கள் 15 நாட்களில் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று ரெயில்வே சார்பில் நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது. இதனால் 120 குடும்பங்களை சேர்ந்த 609 பேர் பாதிக்கப்படும் நிலை உள்ளது. அவர்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்க கோரியும் வீடுகளை காலி செய்ய கால அவகாசம் வழங்க கோரியும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் பிரகாஷ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதனிடம் மனு அளித்தனர்.

    • சிறுமி பிரதிக்‌ஷா அருகில் உள்ள கிருஷ்ணமூர்த்தியின் மாமியார் வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்தார்.
    • தந்தை படிக்குமாறு கூறி கண்டித்ததால் மனவேதனை அடைந்த பிரதிக்‌ஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர், பெரிய குப்பத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் பிரதிக்ஷா (வயது10). தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு சிறுமி பிரதிக்ஷா அருகில் உள்ள கிருஷ்ணமூர்த்தியின் மாமியார் வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்தார்.

    இதனை தந்தை கிருஷ்ணமூர்த்தி கண்டித்தார். மேலும் தேர்வு நேரம் என்பதால் வீட்டில் சென்று படிக்க வேண்டும் என்று கூறி வீட்டின் சாவியை கொடுத்து அனுப்பினார்.

    பின்னர் கிருஷ்ணமூர்த்தி, தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் அருகில் பெட்ரோல் பங்க்கிற்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பினார்.

    அப்போது மகள் பிரதிக்ஷா வீட்டு ஜன்னலில் துண்டில் தூக்குப்போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மகளை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பிரதிக்ஷா பரிதாபமாக உயிரிழந்தார்.

    தந்தை படிக்குமாறு கூறி கண்டித்ததால் மனவேதனை அடைந்த பிரதிக்ஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. 4-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் பெட்டி உடைந்து கிடந்தது.
    • உதயன் பணத்துடன் வருவதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர்.

    மீஞ்சூரை அடுத்த மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் உதயன். 108 ஆம்புலன்சு டிரைவர். இவர் மீஞ்சூர் வேளாளர் தெருவில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கியில் அடகு வைத்திருந்த நகையை மீட்பதற்காக சென்றார். அப்போது ரூ.50 ஆயிரத்தை மோட்டார் சைக்கிளில் பெட்டியில் வைத்து விட்டு மீதி பணம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துடன் வங்கிக்கு சென்றார்.

    சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் பெட்டி உடைந்து கிடந்தது. அதில் இருந்த ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. மீதி பணத்தை உதயன் எடுத்து சென்றதால் அது தப்பியது. உதயன் பணத்துடன் வருவதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்து இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர். இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ×