search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் பகுதியில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
    X

    திருவள்ளூர் பகுதியில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி

    • தொடரும் மின்வெட்டால் தேர்விற்கு படிக்கும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமம் அடைந்து உள்ளனர்.
    • கடைகளில் வியாபாரிகள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வியாபாரம் செய்யும் நிலை நீடித்து வருகிறது.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி கடும் வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் தினமும் வெப்பத்தின் அளவு தொடர்ந்து அதிகரித்த படி இருக்கிறது. மேலும் வெயிலின் உக்கிரம் வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் வாட்டி வதைக்கிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது.

    இந்தநிலையில் திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. தினமும் பலமணி நேரம் அவ்வப்போது மின் தடை ஏற்படுவதால் வீட்டில் உள்ள நோயாளிகள், வயதானோர், குழந்தைகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இரவு நேரத்தில் தொடரும் மின்வெட்டால் தேர்விற்கு படிக்கும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமம் அடைந்து உள்ளனர். கடைகளில் வியாபாரிகள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வியாபாரம் செய்யும் நிலை நீடித்து வருகிறது. காலை முதல் இரவு வரை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மின் தடை ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். ஊத்துக்கோட்டையில் இன்று காலை 6 மணிக்கு மின்தடை ஏற்பட்டது. பின்னர் காலை 8.30 மணிக்கு மீண்டும் மின்சாரம் வினியோகிக்கப்பட்டது.

    மீண்டும் இரவு வரை மின்தடை விட்டு விட்டு ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, அடிக்கடி மின்தடை ஏற்படுவது குறித்து சரியான காரணத்தை அதிகாரிகள் கூறுவதில்லை. திருவள்ளூர் பகுதியில் மின்சாரம் தடையின்றி கிடைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்வெட்டு குறித்து முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்றனர்.

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது மின்தடைக்கான காரணத்தை கூற மறுத்துவிட்டனர்.

    Next Story
    ×