என் மலர்
உள்ளூர் செய்திகள்

செங்குன்றம் அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
- தந்தை இறந்த 2 மாதத்தில் மகள் தற்கொலை செய்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- செங்குன்றம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
செங்குன்றம்:
செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்தவர் சரவணன். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த அவர் தற்கொலை செய்து இறந்து போனார். இவரது மனைவி அமுதா. தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் கீர்த்தி (வயது20). மாதவரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கிரிமினாலஜி 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல அமுதா வேலைக்கு சென்று விட்டார். கீர்த்தியை கல்லூரிக்கு அழைத்துச் செல்ல அருகில் உள்ள மாணவர் ஒருவர் வந்த போது வீட்டில் உள்ள அறையில் கீர்த்தி மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து செங்குன்றம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் கீர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தந்தை இறந்தது முதல் மாணவி கீர்த்தி சோகமாக இருந்ததாக தெரிகிறது. எனவே தந்தை இறந்த மனவேதனையில் கீர்த்தி தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. தந்தை இறந்த 2 மாதத்தில் மகள் தற்கொலை செய்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






