search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எல்லாபுரம் ஒன்றியத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    எல்லாபுரம் ஒன்றியத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    • அங்கன்வாடி மையங்களுக்கு ஒரு மாத காலம் விடுமுறை வழங்க வேண்டும்
    • பதிவேடு அல்லது செல்போன் இரண்டில் ஒன்றை மட்டும் உறுதிப்படுத்த வேண்டும்.

    பெரியபாளையம்:

    தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய மூன்றாம் கட்ட போராட்டம் இன்று நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில், பத்து ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எந்த விதமான நிபந்தனையும் இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்பு அரசு ஊழியர்களுக்கு ஒரு வருடம் வழங்குவது போல் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும். மினி மையத்திலிருந்து பிரதான மையங்களுக்கு பதவி உயர்வு பெற்று சென்ற ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும். 10 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் பிரதான மையங்களை மினி மையமாக்குவதையும், 5 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மினி மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தையும் கைவிட வேண்டும். காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்.

    சிலிண்டர் விலை ஏற்றத்திற்கு ஏற்றாற்போல் அகவிலைப் படியை உயர்த்தி தர வேண்டும். செல்போனில் போசான் டிராக்கர் அல்லது டி.என். ஆப்பில் உள்ள வித்தியாசத்தை சரி செய்ய வேண்டும். பதிவேடு அல்லது செல்போன் இரண்டில் ஒன்றை மட்டும் உறுதிப்படுத்த வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பாக 2 அல்லது மூன்று மையங்கள் இன்சார்ஜ் கொடுப்பதால் மன உளைச்சல் ஏற்படுகிறது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடுவது போல் அங்கன்வாடி மையங்களுக்கு ஒரு மாத காலம் விடுமுறை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டத் துணைத் தலைவர் எம்.உஷாராணி தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் பி.கலைச்செல்வி, செயலாளர் என்.சந்திரா, பொருளாளர் எம்.வினோதினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில், துணைத் தலைவர் பி.அம்பிகா, துணை செயலாளர் எம்.பொன்மணி ஆகியோர் நன்றி கூறினார்கள்.

    Next Story
    ×