என் மலர்
திருப்பூர்
- அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதால் இலவச பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- சூரிய குடும்பத்தில் உள்ள சிறுகோள்கள் குறித்த பல்வேறு ஆய்வுகள் நடக்கின்றன.
திருப்பூர்:
ஓபன் ஸ்பேஸ் பவுண்டேஷன் சார்பில் விண்கற்கள் தேடுதல் திட்டத்தில் பங்கேற்று அவற்றிற்கு பெயர் வைக்கும் வாய்ப்பும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதால் இலவச பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அறிவியல் கல்வி நிறுவனமான ஓபன் ஸ்பேஸ் பவுண்டேஷன் சார்பில் ஆண்டுதோறும் விண்கற்களை கண்டறிவதற்கான பயிற்சி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது.
சர்வதேச வானியல் தேடல் கூட்டமைப்பான ஐ.எஸ்.ஏ.சி., மற்றும் நாசா இணைந்து, ஹவாயில் உள்ள பான்-ஸ்டார்ஸ் தொலைநோக்கி வாயிலாக எடுக்கப்படும் படங்களை இணையதளம் வாயிலாக அனுப்பி வைக்கப்படும்.பிரத்யேக மென்பொருள் உதவியோடு, படங்களில் இருப்பவை விண்கற்களா என மாணவர்களும், ஆசிரியர்களும் ஆராய்ந்து, நகரும் பொருட்கள் இருப்பின் மீண்டும் வானியலாளர்களுக்கு அனுப்பப்படும்.
பல நிலை பரிசோதனைகளுக்கு பின், மாணவர்கள் அனுப்பியவை விண்கற்கள் என அடையாளம் காணப்பட்டால் அதற்கு பெயர் வைக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இது குறித்து ஓபன் ஸ்பேஸ் பவுண்டேஷன் உதவி அறிவியலாளர் கிரித்திகா கூறியதாவது:-
சூரிய குடும்பத்தில் உள்ள சிறுகோள்கள் குறித்த பல்வேறு ஆய்வுகள் நடக்கின்றன. விண்கற்களை கண்டறிவதன் வாயிலாக அதன் மோதலால் பூமிக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முடியும்.இதற்காக, வானியல் கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த விண்கற்கள் தேடுதல் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு பின் திட்டத்தில் பங்கேற்பாளர்களாக சேர்க்கப்படுவர்.நவம்பர் மாதம் ஆன்லைன் பயிற்சி வகுப்பு துவங்குவதால், ஆர்வமுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் www.openspacefoundation.in என்ற இணையதளத்திலோ அல்லது 99522 09695 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 90 சதவீத விண்ணப்பங்களுக்கு பிரேம் ஒர்க் எனப்படும் தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- 3.51 கோடி ரூபாயில் புதிய சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர்:
தமிழகத்தில் நகர், ஊரமைப்பு சட்ட விதிகளை மீறி, அங்கீகாரமின்றி மனைப்பிரிவுகளை உருவாக்குவது தடை செய்யப்பட்டுள்ளது.இத்தகைய மனைகளின் விற்பனையை பதிவு செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில், 2016 அக்டோபர் 20க்கு முன் உருவான அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகளை மட்டும் வரன்முறைப்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான திட்டம் 2017ல் அறிவிக்கப்பட்டது.
கடந்த 2019 நவம்பர் 3-ந்தேதி வரை இத்திட்டத்தில் சென்னை பெருநகரில் 6,303 மனைப்பிரிவுகள், சென்னைக்கு வெளியில் 34,168 மனைப்பிரிவுகளுக்கான வரன்முறை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 90 சதவீத விண்ணப்பங்களுக்கு பிரேம் ஒர்க் எனப்படும் தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மனைப்பிரிவுகளுக்கும் மனைகளுக்கும், தனித்தனியாக வரன்முறை உத்தரவுகள் உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன.
இதில் 2019 வரையிலான காலத்தில் வரன்முறைக்கு விண்ணப்பிக்க தவறிய மனைப்பிரிவுகளுக்கு கூடுதலாக ஒரு வாய்ப்பு வழங்க அரசு முடிவு செய்தது. அதன்படி, அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகள், மனைகளின் உரிமையாளர்கள் 2024 பிப்ரவரி 29 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இதற்கென தனி இணையதளம் துவக்கப்பட்டு, ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இருப்பினும் வரன்முறைக்கு வராத மனைப்பிரிவுகளில் விற்பனையை முடக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:-
அங்கீகாரமின்றி உருவாகும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இருப்பினும் பல இடங்களில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், இந்த வரம்புக்குள் வர மறுப்பது தெரிகிறது.தற்போதைய நிலவரப்படி முறையாக அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகள் வரன்முறை செய்யப்பட்ட மனைப்பிரிவுகளின் விபரங்கள் ஆன்லைன் முறையில் தொகுக்கப்படுகின்றன. புவியிட அமைப்பு அடிப்படையில் இவற்றின் இருப்பிடங்கள் திரட்டப்பட்டுள்ளன.இதன் அடிப்படையில், செயற்கை கோள் உதவியுடன் அங்கீகாரமின்றி உருவான மனைப்பிரிவுகள் கண்டு பிடிக்கப்படும்.
இதற்காக 3.51 கோடி ரூபாயில் புதிய சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதை பயன்படுத்தி அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகளில் விற்பனை, கட்டுமான பணிகள் போன்றவற்றை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- நன்னீரில் வளரக்கூடிய லார்வா, கொசு ஓழிப்பு பணியில் வேகம் காட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை மிகுந்த கவனமுடன் பணியாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
மழை காரணமாக டெங்கு பாதிப்பு மெல்ல தமிழகத்தில் தலைதூக்கி வருகிறது. இதனால் நன்னீரில் வளரக்கூடிய லார்வா, கொசு ஓழிப்பு பணியில் வேகம் காட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தாலுகா அளவில் டாக்டர், செவிலியர், மருத்துவ பணியாளர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது. மாநில எல்லையில் கேரளா மாநிலத்தில் இருந்து வருவோர் உடல் நலம் பரிசோதிக்கப்படுகிறது.
இந்நிலையில் சுகாதாரத்துறை செயலர் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மற்றும் சுகாதார பணிகள் துணை இயக்குனருக்கு வழங்கியுள்ள அறிவுறுத்தல் வருமாறு:-
அவ்வப்போது மழை பெய்வதால் வரும் நாட்களில் டெங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கொசு ஓழிப்பு பணியை வேகப்படுத்த வேண்டும். கொசு இனப்பெருக்கம் அதிகமுள்ள இடங்களை கண்டறிந்து காலை, மாலை இருவேளையும் சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும்.
டெங்கு வார்டில் அனுமதிக்கப்படும் நோயாளியின் உடல்நிலையை, 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இறப்பு என்பது கூடவே கூடாது. மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை மிகுந்த கவனமுடன் பணியாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலை ஏற்று கடந்த, 15-ந்தேதி டெங்கு சிறப்பு வார்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் துவங்கப்பட்டது.தற்போதைய நிலவரப்படி, 9பேர் டெங்கு வார்டில் சிகிச்சையில் உள்ளனர்.
அனைவரும் ஆரோக்கியமுடன் மருந்து, மாத்திரை எடுத்து வருகின்றனர். ஓரிரு நாளில் உடல் நலம் தேறி வீடு திரும்புவர் என அரசு டாக்டர்கள் தெரிவித்தனர்.
- மண்புழு உரம் தயாரிப்புக்கூடம் அமைக்க சில ஆண்டுகளுக்கு முன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- இயற்கை உரக்குடிலில் அமைக்கப்பட்ட தொட்டிகளில் மக்கும் குப்பையும் நிரப்பப்படவில்லை.
உடுமலை:
மத்திய அரசின் தூய்மை இந்தியா மற்றும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் மண்புழு உரம் தயாரிப்புக்கூடம் அமைக்க சில ஆண்டுகளுக்கு முன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.திட்டத்தில் இயற்கை உரம் உற்பத்திக்கு குடில் அமைத்து தயாரிப்பதற்கு தேவையான தொட்டிகள் அமைக்கப்பட்டன.
கிராமங்களில், தூய்மைக்காவலர்களால் சேகரிக்கப்படும் குப்பையை தரம் பிரித்து மக்கும் கழிவுகளைக்கொண்டு, மக்கும் கழிவுகளை பயன்படுத்தி இயற்கை உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டது.உற்பத்தியாகும் உரத்தை விற்பனை செய்து வருவாயை ஊராட்சி நிதியில் சேர்க்கவும் அரசு உத்தரவிட்டது.இத்தகைய மண்புழு உரம் தயாரிப்புக்கு ஊராட்சிகளில் 90 ஆயிரம் ரூபாய் செலவில் 8 தொட்டிகளுடன் இயற்கை உரக்குடில் அமைக்கப்பட்டது.
உரம் தயாரிப்பு மற்றும் உரக்குடில் பராமரிப்புக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஆட்களும் நியமிக்கப்பட்டனர். சில மாதங்கள் மட்டுமே இத்திட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் செயல்பாட்டில் இருந்தது. பின்னர் மக்கும், மட்காத குப்பையை தரம் பிரிப்பதில் தொய்வு ஏற்பட்டது. இயற்கை உரக்குடிலில் அமைக்கப்பட்ட தொட்டிகளில் மக்கும் குப்பையும் நிரப்பப்படவில்லை. படிப்படியாக இத்திட்டத்தின் செயல்பாடுகள் அனைத்தும் முடங்கின. தற்போது அனைத்து ஊராட்சிகளிலும், இயற்கை உரக்குடில் காட்சிப்பொருளாகவும் சில இடங்களில் பராமரிப்பில்லாமல் மேற்கூரை சுவர்கள் இடிந்தும் வருகின்றன.
ஊராட்சிகளில் குப்பையை தீ வைத்து எரித்து, சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கவும் மண் புழு உரம் தயாரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்தவும் கொண்டு வரப்பட்ட திட்டம் முற்றிலுமாக முடங்கியுள்ளது அனைத்து தரப்பினரையும் வேதனையடைய செய்துள்ளது.
தூய்மை இந்தியா தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி வீணடிக்கப்பட்டது குறித்து ஊரக வளர்ச்சித்துறையினர் முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கான நீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.
- தண்ணீர் திருட்டை ஒழிக்க ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்த வேண்டும்.
உடுமலை:
4-வது மண்டல பாசனத்துக்கு பாலாறு உபவடி நில பகுதிகளுக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்த திருமூர்த்தி நீர்த்தேக்க குழுவின் பகிர்மான குழு (எண்:7) கூட்டம், பொங்கலூர் செயற் பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது. தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார்.பி.ஏ.பி., தொகுப்பு அணைகளின் நீர் இருப்பு மற்றும் எதிர்பார்ப்பு நீர்வரத்து மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது.
நாளை 20ந் தேதி முதல், 4வது மண்டல பாசனத்துக்கு நிலுவையில் உள்ள பயிர்களை காப்பாற்றவும், குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கான நீர் தேவையை பூர்த்தி செய்யவும், உயிர் நீராக ஒரு சுற்று தண்ணீர் திறக்க வேண்டும்.மழை பெய்து கூடுதல் நீர் கிடைத்தால் அதற்கு ஏற்ப தண்ணீர் வழங்கலாம். கால்வாயில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பவர்கள் மீது கோவை - திருப்பூர் மாவட்ட கலெக்டர்கள் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.
தண்ணீர் திருட்டை ஒழிக்க ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்த வேண்டும். கிளை கால்வாய்களில் பாசன சங்கங்கள் வாயிலாக சுத்தம் செய்து கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேசிய வேலை உறுதி திட்டத்தில் கால்வாய்களை சுத்தம் செய்ய ஆவண செய்ய வேண்டும்.
உட்பிரிவு செய்யாத உபகிளை வாய்க்கால்கள் மற்றும் பகிர்வு வாய்க்கால்களை உட் பிரிவு செய்ய மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- விரிவாக்க கிடங்குகளில் விவசாயிகளுக்கு தேவையான இடு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
- தங்களுக்கு தேவையான இடு பொருட்களை உழவன் செயலி வாயிலாக பதிவு செய்து வாங்க முடியும்.
உடுமலை,செப்.19-
குடிமங்கலம் வட்டார வேளாண் விரிவாக்க கிடங்குகளில் விவசாயிகளுக்கு தேவையான இடு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது:-
குடிமங்கலம் வட்டாரத்தில் பருவமழையை எதிர்பார்த்து மக்காச்சோளம், உளுந்து, பாசிபயறு, கம்பு, சோளம், நிலக்கடலை, கொண்டைக்கடலை சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் தயாராக உள்ளனர்.
வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்ய தேவையான அளவு விதைகள், நுண்ணுயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
மக்காச்சோளம் - 2,112 கிலோ, சோளம் (சி.ஓ.,32) - 1,300 கிலோ, சோளம் (கே-12) -492 கிலோ, உளுந்து (வி.பி.என்.,8) - 750 கிலோ, உளுந்து (வி.பி.என்.,9) - 217 கிலோ, உளுந்து (வி.பி.என்.,11) - 1,500 கிலோ, கொண்டைக்கடலை - 600 கிலோ, நிலக்கடலை (தரணி) - 1,260 கிலோ ஆகிய ரக விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம், பொட்டாஷ் பாக்டீரியா ஆகியவையும் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டு மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. பயிர்களுக்கு நுண்ணூட்ட உரங்களான பயறு வகை நுண்ணூட்டம், தானிய வகை நுண்ணூட்டம் மற்றும் தென்னை நுண்ணூட்ட உரங்களும், உயிரியல் பூச்சி மற்றும் பூஞ்சான கொல்லிகளான மெட்டாரைசியம் அனிசோபிலே, டிரைகோடெர்மா விரிடி, சூடோ மேனாஸ் ஆகியவையும் விவசாயிகளுக்கு வழங்க தயாராக உள்ளது.
நடப்பாண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டினை முன்னிட்டு சிறுதானிய பயிர் சாகுபடியை ஊக்குவிக்க, கம்பு மற்றும் ராகி செயல்விளக்க திடல் அமைக்க, விதைகள், நுண்ணூட்ட உரங்கள், நுண்ணூட்ட சத்து உரங்கள் ஆகியவை அடங்கிய தொகுப்புகள், விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது.விவசாயிகள், தங்களுக்கு தேவையான இடு பொருட்களை உழவன் செயலி வாயிலாக பதிவு செய்தும், வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டும் பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பதிவு மூப்பு நிலை இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்
- ஒரு சதவீதமான மகளிர் உரிமை தொகை திட்டம் துவங்கப்பட உள்ளதாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உடுமலை:
பதிவு மூப்பு நிலை இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற தி.மு.க., தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றி வருகின்றனர்.
இது குறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் அருண்குமார் மற்றும் மனோஜ் கூறியதாவது:-
ஏற்கனவே, தி.மு.க.,வின், 311வது தேர்தல் வாக்குறுதியான, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முதல் கட்டமாக சென்னையில், கோரிக்கை வெல்ல ஆயத்த மாநாடு நடத்தினோம்.இரண்டாவது கட்டமாக செப்டம்பர் 5-ந்தேதி முதல் வருகிற 27ந் தேதி வரை கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியும் அறவழி போராட்டத்தை நடத்தி வருகிறோம்.
அதிலும், அரசு கோரிக்கையை ஏற்கவில்லை என செப்டம்பர் 28-ந்தேதி முதல் சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட போவதாக ஏற்கனவே முடிவு செய்திருந்தோம்.
இந்நிலையில் கடந்த 14ந் தேதி ஒரு திருமண விழாவில்தமிழக முதல்வர் 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகவும், மீதம் உள்ள ஒரு சதவீதமான மகளிர் உரிமை தொகை திட்டம் துவங்கப்பட உள்ளதாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனவே உண்ணாவிரத போராட்டத்தை தீவிரப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
உண்ணாவிரத போராட்டத்தில் ஆசிரியர்கள் மட்டும் தனியாக பங்கெடுக்காமல் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்பது என முடிவெடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- 2 மாதங்களாக அவிநாசி பகுதியில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
- பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் திருப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவிநாசி:
திருப்பூர் அவிநாசி-மங்கலம் புறவழிச்சாலை பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடப்பதாக அவிநாசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் இளம்பெண் உடலை மீட்டு விசாரணை நடத்தினா். இதில் அப்பெண் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனா்.
இதில் அப்பகுதியில் உள்ள ஒரு கடை முன் அந்தப்பெண் தூங்கி கொண்டிருந்ததும், அவ்வழியே வந்த வாலிபர் ஒருவா் அந்த பெண்ணின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்ததும் பதிவாகியிருந்தது.
தொடா்ந்து நடத்திய விசாரணையில் கொலை செய்த நபா் திண்டுக்கல் மாவட்டம் புஷ்பபுதூா் பகுதியை சோ்ந்த ஜெயபால் ராஜ்சிங் மகன் ஹில்டன் ஜெயபால் ராஜ்சிங்(வயது22) என்பதும், 2 மாதங்களாக அவிநாசி பகுதியில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
மேலும் அவர் இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றபோது அவிநாசி-கோவை பிரதான சாலைத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகி, அவிநாசி அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஹில்டன் ஜெயபால் ராஜ்சிங்குக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட இளம்பெண் சற்று மனநிலை பாதித்தவர். இதனால் அவர் அவினாசி-மங்கலம் சாலையில் சுற்றி திரிந்து வந்துள்ளார். இரவு அங்குள்ள கடைகளில் படுத்து தூங்குவது வழக்கம். இதனை ஹில்டன் ஜெயபால் ராஜ்சிங் நோட்டமிட்டு வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததால் அவரை பணிக்கு வர வேண்டாம் என்று ஆம்புலன்ஸ் உரிமையாளர் கூறிவிட்டார். இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் அவிநாசி-மங்கலம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்துள்ளார். மேலும் கஞ்சா போதையிலும் இருந்துள்ளார்.
இந்தநிலையில் மனநிலை பாதித்த பெண் தனியாக சுற்றிதிரியவே அவரிடம் பேச்சு கொடுத்த ஹில்டன், அந்த பெண்ணை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து சென்று விட்டார்.
தொடர்ந்து அவிநாசி-மங்கலம் சாலையில் சுற்றி திரிந்த ஹில்டன், அங்குள்ள கடை முன்பு மனநிலை பாதித்த பெண் படுத்து கிடப்பதை பார்த்துள்ளார். பாலியல் பலாத்காரம் செய்ததை வெளியில் சொல்லி விடுவாளோ என்று பயந்த ஹில்டன், திடீரென அங்கு கிடந்த கல்லை தூக்கி பெண்ணின் தலையில் போட்டார். இதில் அந்த பெண் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். பின்னர் பெண்ணின் உடலை மறைக்க அங்குள்ள வடிகால் பகுதிக்கு கொண்டு செல்ல முடிவு செய்தார்.
இதையடுத்து உடலை கடை முன்பு இருந்து தரதரவென இழுத்து சென்றார். சாலையை கடந்து மறுபுறம் வரை இழுத்து சென்று வடிகால் பகுதியில் போட்டு விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளார். அப்போது போதை மயக்கத்தில் இருந்ததால் சாலை தடுப்பில் மோதி விபத்தில் சிக்கினார். பின்னர் தனது நண்பர்களுக்கு போன் செய்து வரவழைத்துள்ளார். நண்பர்கள் வந்து ஹில்டனை மீட்டு அவிநாசி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அப்போது நண்பர்களிடம் கொலை செய்ததை கூறவில்லை.
இந்தநிலையில் வடிகால் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணின் உடலை மீட்க தனியார் ஆம்புலன்ஸ் வந்தது. அப்போது கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பெண்ணை கொலை செய்த வாலிபரின் உருவம் பதிவாகி இருந்ததை போலீசார் அப்பகுதி பொதுமக்களிடம் காண்பித்தனர்.
அந்த வாலிபரின் உருவத்தை ஆம்புலன்ஸ் டிரைவர் பார்த்த போது ஹில்டன் என்பது தெரியவரவே அதிர்ச்சியடைந்தார். உடனே இது குறித்து போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் விவரத்தையும் கூறியுள்ளார். அதன்பிறகே போலீசார் ஹில்டனை கைது செய்துள்ளனர். மேலும் கொலை செய்ததற்காக காரணங்களை ஹில்டன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் விவரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மனநிலை பாதித்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் திருப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஹில்டன் , பெண்ணின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொல்லும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
- கும்பாபிஷேக திருப்பணிக்கான பாலாலய நிகழ்ச்சி நேற்று நடந்தது
- பராமரிப்பு பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்துவது என கோவில் நிர்வாகத்தில் முடிவு செய்யப்பட்டது.
அவினாசி :
அவினாசி மங்கலம் ரோட்டில் பிரசித்தி பெற்ற ஆகாச இராயர் கோவில் உள்ளது இக்கோவில் கும்பாபிஷேக திருப்பணிக்கான பாலாலய நிகழ்ச்சி நேற்று நடந்தது. இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2001 ம் ஆண்டு நடைபெற்றது. தற்போது 22 ஆண்டுகளுக்கு பிறகு பராமரிப்பு பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்துவது என கோவில் நிர்வாகத்தில் முடிவு செய்யப்பட்டது. அதற்கான பாலாலய நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி ஹோமம் நடந்தது. கோவில் சிவாச்சாரியார்கள் இந்த பாலாலய பூஜை செய்தனர். நிகழ்ச்சியில் அவினாசி, காசிகவுண்டன்புதூர், கருணை பாளையம், புதுப்பாளையம், பூல காட்டு பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- தாராபுரம் சாலையில் குண்டடம் ஒன்றிய திமுக., சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது
- முதலிடம் பிடித்த ரேக்ளா மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசு 1 பவுன் தங்க நாணயம் வழ்ஙகப்பட்டது.
தாராபுரம்:
தாராபுரத்தை அருகேயுள்ள உப்பாறு அணை அருகே பூளவாடி_தாராபுரம் சாலையில் குண்டடம் ஒன்றிய திமுக., சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.ரேக்ளா மாட்டுவண்டி பந்தயத்திற்கு பொள்ளாச்சி, மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, காங்கேயம், சென்னிமலை, முத்தூர் ,ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தயம், கரூர், அரவக்குறிச்சி ,கன்னிவாடி ஆகிய பகுதியில் இருந்து ஏராளமானோர் பந்தயத்தில் கலந்து கொண்டனர். 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது.
200 மீட்டர் மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த ரேக்ளா மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசு 1 பவுன் தங்க நாணயம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.இரண்டாம் பரிசு 3/4 தங்க நாணயம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. மூன்றாவது பரிசு 1/2 பவுன் தங்க நாணயம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. நான்காவது பரிசு 1/4 பவுன் தங்க நாணயம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. ஐந்தாவது பரிசு வெள்ளி நாணயம் வழங்கப்பட்டது.
300 மீட்டர் ரேக்ளா மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த ரேக்ளா மாட்டு வண்டியின் உரிமையாளருக்கு 1 பவுன் தங்க நாணயம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசு 3/4 பவுன் தங்க நாணயம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. மூன்றாவது பரிசு 1/2 பவுன் தங்க நாணயம்- கோப்பை வழங்கப்பட்டது.நான்காவது பரிசு 1/4 பவுன் தங்க நாணயம் வழங்கப்பட்டது.
உப்பாறு அணை அருகே நடைபெற்ற ரேக்ளா மாட்டு வண்டி பந்தயத்தை காண குண்டடம் ,கொடுவாய் ,தாராபுரம் ,உடுமலைப்பேட்டை ,காங்கேயம் பகுதிகளிலிருந்து ஆண்கள், பெண்கள் ,குழந்தைகள் என ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.
- தேவையான உணவு மற்றும் தண்ணீரை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் கொடுத்து அடைக்கலம் அளித்து வருகிறது
- வனவிலங்குகள் உடுமலை-மூணாறு சாலையை கடந்து அணைப் பகுதிக்குள் சென்று வந்த வண்ணம் உள்ளது
உடுமலை :
உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரங்கள் உள்ளன.இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, கடமான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அவற்றுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீரை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் கொடுத்து அடைக்கலம் அளித்து வருகிறது. இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:- வறட்சி காலத்தில் ஏற்படுகின்ற தண்ணீர் பற்றாக்குறையால் உணவு மற்றும் குடிநீரை தேடிக்கொண்டு வனவிலங்கு அடிவாரப் பகுதிக்கு வந்து விடுவது வாடிக்கையாக உள்ளது. அப்போது வாகன போக்குவரத்து காரணமாக உடுமலை-மூணாறு சாலையை கடந்து அமராவதிஅணைக்கு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வன விலங்குகள் மனித மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அதைத் தொடர்ந்து மலை அடிவாரப் பகுதியில் வனத்துறை சார்பில் தடுப்பணைகள், தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டது. கோடை காலத்தில் குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்புவதுடன் தடுப்பணையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் வனவிலங்குகள் சாலையை கடப்பதற்கான அவசியம் எழவில்லை. தடுப்பணைகள் வறண்டன .அவற்றில் தேங்கி உள்ள தண்ணீரை குடித்து விட்டு வனவிலங்குகள் வனப்பகுதிக்குள் சென்று விடுவது வாடிக்கையாக இருந்தது. இந்த சூழலில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையவில்லை. இதனால் அடிவாரப் பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நீர்வரத்து இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இதன் காரணமாக தண்ணீரை தேடி கொண்டு வரும் வனவிலங்குகள் உடுமலை-மூணாறு சாலையை கடந்து அணைப் பகுதிக்குள் சென்று வந்த வண்ணம் உள்ளது.பருவமழை பெய்யுமா?தடுப்பணைகள் நிரம்புமா? வனவிலங்குகளுக்கான உணவு தண்ணீர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா என்பது இயற்கையின் கையில் தான் உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள்.
- மிஷன் இந்திர தனுஷ் 5.0 திட்டத்தின் கீழ் 17 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
உடுமலை,
உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் அமராவதி மற்றும் உடுமலை வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை சார்பாக எரிசினம்பட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மாவடப்பு, காட்டுப்பட்டி, குளிப்பட்டி, குருமலை ஆகிய மலைவாழ் குடியிருப்புகளில் சுகாதார முகாம் நடைபெற்றது.
டாக்டர்.பூபதி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் அடங்கிய குழுவினர் மிஷன் இந்திர தனுஷ் 5.0 திட்டத்தின் கீழ் 17 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தொற்று நோய் பரிசோதனை செய்யப்பட்டு 109 நபர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
இதனால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.






