என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அங்கீகாரமில்லாத மனைகள் புதிதாக உருவாவதை தடுக்க செயற்கைகோள்  தொழில்நுட்பத்தை பயன்படுத்த நடவடிக்கை
    X

    கோப்பு படம்.

    அங்கீகாரமில்லாத மனைகள் புதிதாக உருவாவதை தடுக்க செயற்கைகோள் தொழில்நுட்பத்தை பயன்படுத்த நடவடிக்கை

    • 90 சதவீத விண்ணப்பங்களுக்கு பிரேம் ஒர்க் எனப்படும் தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • 3.51 கோடி ரூபாயில் புதிய சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    தமிழகத்தில் நகர், ஊரமைப்பு சட்ட விதிகளை மீறி, அங்கீகாரமின்றி மனைப்பிரிவுகளை உருவாக்குவது தடை செய்யப்பட்டுள்ளது.இத்தகைய மனைகளின் விற்பனையை பதிவு செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில், 2016 அக்டோபர் 20க்கு முன் உருவான அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகளை மட்டும் வரன்முறைப்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான திட்டம் 2017ல் அறிவிக்கப்பட்டது.

    கடந்த 2019 நவம்பர் 3-ந்தேதி வரை இத்திட்டத்தில் சென்னை பெருநகரில் 6,303 மனைப்பிரிவுகள், சென்னைக்கு வெளியில் 34,168 மனைப்பிரிவுகளுக்கான வரன்முறை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 90 சதவீத விண்ணப்பங்களுக்கு பிரேம் ஒர்க் எனப்படும் தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மனைப்பிரிவுகளுக்கும் மனைகளுக்கும், தனித்தனியாக வரன்முறை உத்தரவுகள் உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன.

    இதில் 2019 வரையிலான காலத்தில் வரன்முறைக்கு விண்ணப்பிக்க தவறிய மனைப்பிரிவுகளுக்கு கூடுதலாக ஒரு வாய்ப்பு வழங்க அரசு முடிவு செய்தது. அதன்படி, அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகள், மனைகளின் உரிமையாளர்கள் 2024 பிப்ரவரி 29 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இதற்கென தனி இணையதளம் துவக்கப்பட்டு, ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இருப்பினும் வரன்முறைக்கு வராத மனைப்பிரிவுகளில் விற்பனையை முடக்க அரசு திட்டமிட்டுள்ளது.

    இது குறித்து வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    அங்கீகாரமின்றி உருவாகும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இருப்பினும் பல இடங்களில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், இந்த வரம்புக்குள் வர மறுப்பது தெரிகிறது.தற்போதைய நிலவரப்படி முறையாக அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகள் வரன்முறை செய்யப்பட்ட மனைப்பிரிவுகளின் விபரங்கள் ஆன்லைன் முறையில் தொகுக்கப்படுகின்றன. புவியிட அமைப்பு அடிப்படையில் இவற்றின் இருப்பிடங்கள் திரட்டப்பட்டுள்ளன.இதன் அடிப்படையில், செயற்கை கோள் உதவியுடன் அங்கீகாரமின்றி உருவான மனைப்பிரிவுகள் கண்டு பிடிக்கப்படும்.

    இதற்காக 3.51 கோடி ரூபாயில் புதிய சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதை பயன்படுத்தி அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகளில் விற்பனை, கட்டுமான பணிகள் போன்றவற்றை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×