என் மலர்
திருப்பூர்
- அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சந்தோஷ் கவுதம் மற்றும் மகேஸ்வரன் ஆகியோருக்கு காயங்கள் ஏற்பட்டது.
- தி.மு.க., அ.தி.மு.க.வினர் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள சங்கராமநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட மயிலாபுரம் பகுதியில் கடந்த சில தினங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று இரவு அ.தி.மு.க. மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 200 பேர் உடுமலை சாலையில் அரசு பேருந்துகளை சிறைபிடித்து காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர் . அப்போது தி.மு.க.வை சேர்ந்த சங்கராமநல்லூர் பேரூராட்சி தலைவர் மல்லிகாவின் கணவர் கருப்புசாமி மற்றும் தி.மு.க.வினர் பேச்சு வார்த்தை நடத்த வந்தனர்.
பேச்சுவார்த்தையின் போது அ.தி.மு.க.- தி.மு.க.வினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உண்டானது. இதில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதில், தி.மு.க. பேரூர் கழக இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகதீஸ்வரனின் மண்டை உடைந்தது.
அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சந்தோஷ் கவுதம் மற்றும் மகேஸ்வரன் ஆகியோருக்கு காயங்கள் ஏற்பட்டது. அவர்கள் மடத்துக்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தி.மு.க.வை சேர்ந்த பிரகதீஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் அ.தி.மு.க.வை சேர்ந்த சந்தோஷ் கவுதம், கருப்புசாமி ஆகியோர் மீது குமரலிங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடுமலை அருகே தி.மு.க., அ.தி.மு.க.வினர் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- விற்பனையாகாமல் நின்று போன மாவிலைகள், வாழைக் கன்றுகளை அங்கேயே விட்டுச் சென்று விட்டனர்.
- பூஜை முடிந்த பின் இன்னும் அதிகமாக குப்பைகள் குவிந்தது.
காங்கயம்:
காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட திருப்பூர் சாலை, கடைவீதி, சென்னிமலை சாலை, கோவை சாலை, முத்தூர் சாலை பிரிவு உள்பட நகரின் பல இடங்களில் ஆயுதபூஜை பொருட்கள் விற்க திடீர் சாலையோரக் கடைகள் வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு சுமார் 75 கடைகளில் வாகனங்களில் கொண்டு வரப்பட்ட வாழைக் கன்றுகள், மாவிலைகள், பூக்கள், தேங்காய், இளநீர் போன்ற ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்கள் சாலையோரங்களில் குவிக்கப்பட்டு விற்கப்பட்டன.
இத்துடன் வாழைப்பழம், பொரி, சூடம், திருநீறு, சந்தனம் போன்ற பூஜைப் பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன. யஇவற்றில் விற்பனையாகாமல் நின்று போன மாவிலைகள், வாழைக் கன்றுகளை அங்கேயே விட்டுச் சென்று விட்டனர். இத்துடன் கடைகளிலிருந்து ஏராளமான இதர குப்பைகளும் குவிந்து கிடந்தது. தவிர ஆயுத பூஜைக்காக கடைகள், வணிக வளாகங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்த போது கிடைத்த உபயோகமற்ற பொருட்கள் ஆங்காங்கே குவிந்தது. பூஜை முடிந்த பின் இன்னும் அதிகமாக குப்பைகள் குவிந்தது.
வழக்கமாக காங்கயம் நகரில் நாள்தோறும் சுமார் 10 டன் வரை குப்பைகள் அகற்றப்படும். ஆனால் ஆயுத பூஜையை முன்னிட்டு கூடுதலாக குப்பைகள் சேர்ந்தது. இதனால் 16 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாக நகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். மேலும் கோவை சாலை உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் அகற்றப்படாத குப்பைகளை உரிய நேரத்தில் அகற்றுமாறு காங்கயம் நகராட்சி நிர்வாகத்துக்கு நகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நடை சாத்தப்பட்டு நாளை திறக்கப்படும்.
- சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில்களின் நடை சாத்தப்படுவது வழக்கம்.
காங்கயம்:
சந்திர கிரகணத்தை முன்னிட்டு காங்கயம் அருகே சிவன்மலை முருகன் கோவிலில் இன்று சனிக்கிழமை இரவு 7 மணி முதல் நடை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிவன்மலை முருகன் கோவில் தரப்பில் கூறியுள்ளதாவது:-
சந்திர கிரகண நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை ஏற்படுவதை அடுத்து, திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நடை சாத்தப்பட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம்போல கோவில் திறக்கப்பட்டு வழிபாடு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கணக்கீடு செய்யப்பட்ட நாளில் இருந்து 20 நாட்களில் மின்கட்டணம் செலுத்துமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
- புதிய மின்கட்டண அட்டைகளை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
திருப்பூர்:
திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் சு.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
திருப்பூர் மின்பகிர்மான வட்டம் திருப்பூர் கோட்டம் கிராமியம் உபகோட்டம் நல்லூர் பிரிவு அலுவலகத்தை சார்ந்த முத்தணம்பாளையம் (008) பகிர்மானத்திலிருந்து சுமார் 750 மின் இணைப்புகளை பிரித்து காட்டுப்பாளையம் (010) என்ற புதிய பகிர்மானம் உருவாக்கி மின் இணைப்புகளுக்கு புதிய மின் இணைப்பு எண்கள் வழங்கப்பட்டு ஒற்றைப்படை மாதத்தில் கணக்கீடு செய்ய அடுத்த மாதம் முதல் மாற்றம் செய்யப்பட உள்ளது.
எனவே காட்டுப்பாளையம் பகுதியில் உள்ள யாசின்பாபு நகர், பூஞ்சோலை நகர், அபிராமிநகர், அங்காளம்மன் நகர் பகுதிகளில் உள்ள மின்நுகர்வோர் இனி வரும் காலங்களில் ஜனவரி, மார்ச், மே, ஜூலை, செப்டம்பர், நவம்பர் மாதங்களில் கணக்கீடு செய்யப்பட்டு, கணக்கீடு செய்யப்பட்ட நாளில் இருந்து 20 நாட்களில் மின்கட்டணம் செலுத்துமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இனி வரும் காலங்களில் மின்கட்டணம் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் புதிய மின் இணைப்பு எண்களை பயன்படுத்துமாறும் புதிய மின்கட்டண அட்டைகளை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நேற்று காங்கேயத்தில் மாட்டு தீவணம் வாங்கி கொண்டு ஸ்கூட்டியில் வீடு திரும்பினார்.
- கேமராவில் விபத்து சம்பவம் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள கீரனூர் பகுதியை சேர்ந்தவர் தங்கமுத்து (வயது 60). விவசாயியான இவர் நேற்று காங்கேயத்தில் மாட்டு தீவணம் வாங்கி கொண்டு ஸ்கூட்டியில் வீடு திரும்பினார்.அப்போது சிவன்மலை பகுதியில் சென்ற போது அதிவேகமாக வந்த கார் மோதியதில் உயிரிழந்தார்.
இந்நிலையில் விபத்து நிகழ்ந்த இடத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி., கேமராவில் விபத்து சம்பவம் பதிவாகி தற்போது காங்கேயம் பகுதி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் ஸ்கூட்டியில் செல்லும் விவசாயி மீது பின்னால் அதிவேகத்தில் வந்த கார் மோதுவதும், பின்னர் சுமார் 100 அடி தூரத்திற்கு விவசாயியை இழுத்து செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- திருப்பூரின் ஜீவநதியாக நொய்யல் ஆறு இருந்து வருகிறது.
- சாயக்கழிவுகள் கலப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
திருப்பூர்:
ஜம்முகாஷ்மீர் தலைநகரம் ஸ்ரீநகர் மாநகராட்சியில் இந்திய அளவிலான மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிற ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்த பணிகள் மற்றும் ஆறுகளை பராமரிக்கும் பணிகள் குறித்த கலந்தாய்வுகூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிற பணிகள் குறித்தும், நொய்யல் ஆறு பராமரிப்பு பணிகள் குறித்தும், அழகுபடுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் கமிஷனர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் எடுத்துரைத்தனர். இதற்காக திருப்பூர் மாநகராட்சிக்கு அதிகாரிகள் குழுவினர் பாராட்டு தெரிவித்து, தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
இது குறித்து மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:-
திருப்பூரின் ஜீவநதியாக நொய்யல் ஆறு இருந்து வருகிறது. கோவையில் இருந்து தொடங்கும் நொய்யல் ஆறு திருப்பூர், ஈரோடு வழியாக கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை கடந்து செல்கிறது. இந்த மாவட்டங்கள் அனைத்தும் தொழில்கள் நிறைந்த மாவட்டங்களாக இருந்து வருகிறது.
குறிப்பாக திருப்பூரில் பனியன் தொழில் பிரதான தொழிலாக இருப்பதால் நொய்யல் ஆற்றில் பனியன் நிறுவன கழிவுகள் மற்றும் சாயக்கழிவுகள் கலப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதுபோல் நொய்யல் ஆற்றை சீரமைக்கவும், தூர்வாரவும் செய்துள்ளோம். இந்த பணிகள் காரணமாக நொய்யல் ஆறு தற்போது சுத்தமாக உள்ளது.
மாநகராட்சி பகுதியில் 13 கிலோ மீட்டர் தொலைவிற்கு சீரமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.110 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நொய்யல் ஆற்றின் இருபுறமும் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் பாலங்கள், சாலைகள் உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல் திருப்பூரை விவரிக்கும் ஓவியங்களும் கரைகளில் வரையப்பட்டுள்ளன. நொய்யல் ஆறு பகுதியில் பார்க் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
தற்போது வரை 75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. விரைவில் மீதமுள்ள 25 சதவீத பணிகளும் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அப்போது திருப்பூர் நொய்யல் ஆறு புதுப்பொலிவுடனும், அழகாகவும் இருக்கும். ஜம்மு காஷ்மீரில் நடந்த கருத்தரங்கில் இது குறித்து தெரிவித்த போது பலரும்பாராட்டுக்களை தெரிவித்தனர்.
இது நமது திருப்பூர் மாநகராட்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும். திருப்பூர் மாநகராட்சி மற்ற மாநகராட்சிகளுக்கு முன் உதாரணமாகவும் விளங்கி வருகிறது. நொய்யல் ஆறு பராமரிப்பு மட்டுமின்றி பல பணிகளுக்கும் திருப்பூர் மாநகராட்சி அனைத்து மாநகராட்சிகளுக்கும் முன்னுதாரணமாக விளங்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
- பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடி சென்றது தெரியவந்தது.
- இச்சம்பவம் குறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
அவிநாசி:
அவிநாசி அருகேயுள்ள அவிநாசிலிங்கம்பாளையம் பெரியாா் நகரை சோ்ந்தவா் நெல்லைராஜ் ( வயது 58), பனியன் நிறுவன அலுவலா். இவா் குடும்பத்துடன் வெளியூா் சென்றிருந்தார். பின்னா் வீடு திரும்பியுள்ளாா். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா்.உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து அவிநாசி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்துக்கு வந்த போலீசாா், கைரேகை, தடயவியல் நிபுணா்கள் அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனா்.மேலும், இச்சம்பவம் குறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
- தூய்மைப் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியாா் மயமாக்கப்பட்டு ஒப்பந்ததாரா் மூலம் நடைபெற்று வருகிறது.
- அவிநாசி வட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சியில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
அவிநாசி:
அவிநாசி வட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சியில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். தூய்மைப் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியாா் மயமாக்கப்பட்டு ஒப்பந்ததாரா் மூலம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருமுருகன்பூண்டி நகராட்சி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக., உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த 18 நகா்மன்ற உறுப்பினா்கள் நகராட்சி ஆணையா் பி. ஆண்டவனிடன் கோரிக்கை மனு அளித்தனா்.
அதில், கூறியிருப்பதாவது:- 5 மாதங்களுக்கு முன்பு தனியாா் மயமாக்கப்பட்ட தூய்மைப் பணியால், நகராட்சி முழுவதும் பொது சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், சாக்கடை கால்வாய் தூய்மை செய்யப்படாமல் புழு மற்றும் கொசு உற்பத்தியாகி சுகாதார கேடு ஏற்பட்டு நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
தனியாா் மயமாக்கப்பட்ட தூய்மைப் பணியால் செலவு தொகையும் பல மடங்கு உயா்ந்துள்ளது. மக்களின் வரிப்பணம் பெருமளவு தூய்மைப் பணிக்கு செலவாகிறது. பொது நிதியிலிருந்து புதிதாக தெரு விளக்குகூட அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.ஆகவே தனியாா் மயமாக்கப்பட்ட தூய்மைப் பணி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மனு அளிப்பின்போது, நகா்மன்றத் துணைத் தலைவா் ராஜேஸ்வரி, முன்னாள் பேரூராட்சித் தலைவா் லதா சேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
- சாலையை ஆக்கிரமித்து கடைகள் நடத்துவதால் விபத்துகள் ஏற்படுவது மட்டுமின்றி, பாதசாரிகள், வாகன ஓட்டிகளும் அவதியடைந்து வருகின்றனா்.
- மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டம் தொடரும் என்று பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் தெரிவித்துள்ளனா்.
அவினாசி:
அவிநாசி நகரப் பகுதியில் சாலையோரங்களில் புதிய புதிய கடைகள் உருவாகி செயல்பட்டு வருகின்றன.
சாலையை ஆக்கிரமித்து கடைகள் நடத்துவதால் விபத்துகள் ஏற்படுவது மட்டுமின்றி, பாதசாரிகள், வாகன ஓட்டிகளும் அவதியடைந்து வருகின்றனா். இந்நிலையில், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காத வகையில் கடைகளை முறைப்படுத்த வேண்டும் என பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், வியாபாரிகள் சங்கத்தினா் உள்ளிட்டோா் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தில் செப்டம்பா் 22-ந் தேதி நடைபெற்றது. இதில், சாலையோரக் கடைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச் சந்தை வளாகத்துக்கு மாற்றப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், அக்டோபா் 1-ந் தேதி முதல் தீா்மானம் அமல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், தீா்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து நேற்று நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டம் தொடரும் என்று பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் தெரிவித்துள்ளனா்.
- பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயிறு வகை தானியங்கள் விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது.
- திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது:-
திருப்பூர் மாவட்டத்தின் இயல்பான வருடாந்திர மழை 618.20 மி.மீ அளவு. அக்டோபர்- 2023ம் மாதம் முடிய சராசரியாக பெய்ய வேண்டிய மழை அளவு 451.60 மி.மீ.,நடப்பு 2023-ம் ஆண்டில் நாளது வரை பெய்த மழையின் அளவு 342.66 மி.மீ ஆகும். பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயிறு வகை தானியங்கள் விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது.
அதன்படி நெல் 41.39 மெட்ரிக் டன், சிறுதானிய பயிறுகள் 15.25 மெட்ரிக் டன், பயிறுவகை பயிறுகள் 28.98 மெட்ரிக் டன் மற்றும் எண்ணெய் வித்து பயிர் விதைகள் 1.770 மெட்ரிக் டன் இருப்பிலுள்ளது. நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா, பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளது. யூரியா 1642 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 1160மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 5,765 மெட்ரிக் டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 612 மெட்ரிக் டன்அளவு இருப்பில் உள்ளதென கலெக்டர் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். முந்தைய கூட்டரங்கில் விவசாயிகள் வழங்கிய மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து துறை வாரியாக கலெக்டர் மனுதாரர்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டதுடன் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் காலதாமதமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளிடமிருந்து 144 கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், இணை இயக்குநர் (வேளாண்மை) மாரியப்பன், இணைப் பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) கிருஷ்ணவேணி, துணை ஆட்சியர்கள் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- கடந்த 25-ந் தேதியுடன் இந்த ெரயில் தொடங்கப்பட்டு 200 நாட்களை நிறைவடைகிறது.
- சென்னை- கோவை வந்தே பாரத் 5.50 மணி நேரத்தில் இலக்கை சென்றடைகிறது.
திருப்பூர்:
இந்திய ெரயில்வே துறையை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே வந்தே பாரத் ெரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு தொடக்கம் முதலே மக்கள் ஆதரவு அதிகமாக இருந்தது.
தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட முதல் வந்தே பாரத் என்றால் அது சென்னை- பெங்களூர்- மைசூர் வந்தே பாரத் தான். இருப்பினும் அதன் பெரும்பகுதி கர்நாடகாவில் தான் செல்கிறது. எனவே முழுக்க முழுக்க தமிழ்நாட்டில் இயக்கப்பட்ட முதல் வந்தே பாரத் என்றால் அது சென்னை- கோவை வந்தே பாரத் தான். இதனை கடந்த ஏப்ரல் 8-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
கடந்த 25-ந் தேதியுடன் இந்த ெரயில் தொடங்கப்பட்டு 200 நாட்களை நிறைவடைகிறது.இந்தியாவில் இயக்கப்படும் பல வந்தே பாரத் ெரயில்கள் காலியாகவும் பயணிகள் இல்லாமல் இயக்கப்படும் நிலையில், சென்னை- கோவை வந்தே பாரத் ெரயில்கள் இந்த 199 நாட்களும் ஹவுஸ்புல்லாகவே இருந்துள்ளது.
இந்த ெரயிலை முதல் நாள் பிரதமர் மோடி நேரில் வந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது முதலே இந்த ெரயில் டிக்கெட்கள் வெயிடிங் லிஸ்டிலேயே இருந்துள்ளது. அதிலும் கோவை - சென்னை மார்க்கத்தில் வந்தே பாரத் ெரயில்களின் டிக்கெட்டுகள் பல நாட்கள் முன்பாகவே விற்று தீர்ந்துவிடுகிறது. இதனால் கோவை - சென்னை வந்தே பாரத்தில் பயணிக்க விரும்புவோர் முன்கூட்டியே நிச்சயம் புக் செய்தாக வேண்டும்.
சென்னை -கோவை வந்தே பாரத்தில் 56 இருக்கைகளை கொண்ட முதல் வகுப்பு எக்ஸிகியூட்டிவ் க்ளாஸ் இருக்கைக்கான டிக்கெட் ரூ. 2,310ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல 450 சீட்களை கொண்ட வழக்கமான சேர் காருக்கு டிக்கெட் ரூ.1,215ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக வந்தே பாரத்தில் டிக்கெட் விலை சற்று அதிகமாக இருக்கிறது என்ற விமர்சனம் இருக்கும். ஆனால், இது சென்னை- கோவை வந்தே பாரத் ெரயில்கள் முன்பதிவை குறைக்கவில்லை.
எப்போதும் இருக்கும் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்கள் இதற்கு சாட்சியாகும். ஒரு சில வந்தே பாரத் ெரயில்களில் டிக்கெட் விற்பனை குறைவாக உள்ளதாக புகார் இருக்கும் நிலையில் சென்னை -கோவை வந்தே பாரத் நல்ல வரவேற்புடன் புதிய சாதனை படைத்து வருகிறது.
முதலில் சென்னை- கோவை வந்தே பாரத் 6 மணி நேரம் 10 நிமிடங்களில் செல்லும் என அறிவிக்கப்பட்டது. அதிவேகமாக ெரயில்கள் செல்லும் வகையில் டிராக் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட நிலையில் வந்தே பாரத் பயண நேரம் மேலும் 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டது. இப்போது சென்னை- கோவை வந்தே பாரத் 5.50 மணி நேரத்தில் இலக்கை சென்றடைகிறது.
கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் திருப்பூர், ஈரோடு. சேலம் வழியாக 11.50க்கு சென்னை சென்றடையும். அதேபோல சென்னையில் இருந்து மதியம் 2.25 மணிக்குக் கிளம்பும் வந்தே பாரத் இரவு 8.15 மணிக்கு மீண்டும் கோவை வந்தடையும். இந்த ெரயில் திருப்பூர் மற்றும் சேலத்தில் இரண்டு நிமிடங்களும் ஈரோட்டில் 3 நிமிடங்களும் நிறுத்தப்படுகிறது.
சென்னை - ஜோலார்பேட்டை இடையே மணிக்கு 130 கி.மீ வேகத்தில் செல்ல அனுமதித்ததும், அதைத் தொடர்ந்து அரக்கோணம் - ஜோலார்பேட்டை பிரிவில் வேகத்தை அதிகரித்ததும் பயண நேரத்தை குறைக்க உதவி இருக்கிறது. சென்னை- கோவை இடையே பகல் நேரத்தில் ஏற்கனவே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இயக்கப்படும் நிலையில், அதையும் தாண்டி வந்தே பாரத்திற்கு மக்கள் ஆதரவு அதிகமாக இருக்கிறது.
மேலும் நாட்டில் இயக்கப்படும் மற்ற வந்தே பாரத் ெரயில்களில் மொத்தம் 16 பெட்டிகள் இருக்கும். ஆனால், சென்னை -கோவை ரூட்டில் 8 பெட்டிகள் மட்டும் இருக்கிறது. இந்த ரூட்டில் டிக்கெட் தேவை அதிகமாக இருப்பதால் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருப்பினும் ஒரு ரூட்டில் 6 மாதங்கள் ெரயில் இயங்கிய பிறகே தேவையான மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதால் தற்போதைய சூழலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
- தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறை சார்பாக கடந்த 10-ந் தேதி முதல் தொழிற்கல்வி சார்ந்த நேரடி உள்ளுறை பயிற்சி நடைபெற்றது.
- நிறைவு விழாவையொட்டி மையத்தில் தென்னை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கான ஒரு கண்காட்சியும் நடத்தப்பட்டது.
உடுமலை:
உடுமலை அடுத்த தளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் தென்னை மகத்துவ மையம் உள்ளது.இந்த மையத்தில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறை சார்பாக கடந்த 10-ந் தேதி முதல் தொழிற்கல்வி சார்ந்த நேரடி உள்ளுறை பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியில் ஜல்லிபட்டி அரசு மேல்நிலைபள்ளியில் பிளஸ்-2 வகுப்பில் வேளாண் அறிவியல் பிரிவில் படித்து வருகின்ற மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சியின் போது மாணவர்களுக்கு தென்னை உயர் சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் தென்னை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் பற்றிய விவரங்கள் கற்பிக்கபட்டது. மேலும், செய்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது.
நிறைவு விழாவையொட்டி மையத்தில் தென்னை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கான ஒரு கண்காட்சியும் நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி விவசாயிகளின் தோட்டங்கள் மற்றும் தொழிற்சாலையையும் பார்வையிட்டு மாணவர்கள் பல தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டனர்.10 நாள் பயிற்சியின் நிறைவு விழா தளியில் அமைந்துள்ள தென்னை மகத்துவ மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு மேலாளர் கு.ரகோத்துமன் தலைமை தாங்கினார்.ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி வெற்றிகரமாக பயிற்சியினை நிறைவு செய்தமைக்கு மாணவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பயிற்சியாளர் ஹேமலதா தனது அனுபங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார். முடிவில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் விவசாய ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.






