search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயிர் சாகுபடிக்கு தேவையான  நெல், தானிய  விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது - கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்ற காட்சி. 

    பயிர் சாகுபடிக்கு தேவையான நெல், தானிய விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது - கலெக்டர் தகவல்

    • பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயிறு வகை தானியங்கள் விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது.
    • திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது:-

    திருப்பூர் மாவட்டத்தின் இயல்பான வருடாந்திர மழை 618.20 மி.மீ அளவு. அக்டோபர்- 2023ம் மாதம் முடிய சராசரியாக பெய்ய வேண்டிய மழை அளவு 451.60 மி.மீ.,நடப்பு 2023-ம் ஆண்டில் நாளது வரை பெய்த மழையின் அளவு 342.66 மி.மீ ஆகும். பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயிறு வகை தானியங்கள் விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது.

    அதன்படி நெல் 41.39 மெட்ரிக் டன், சிறுதானிய பயிறுகள் 15.25 மெட்ரிக் டன், பயிறுவகை பயிறுகள் 28.98 மெட்ரிக் டன் மற்றும் எண்ணெய் வித்து பயிர் விதைகள் 1.770 மெட்ரிக் டன் இருப்பிலுள்ளது. நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா, பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளது. யூரியா 1642 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 1160மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 5,765 மெட்ரிக் டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 612 மெட்ரிக் டன்அளவு இருப்பில் உள்ளதென கலெக்டர் தெரிவித்தார்.

    திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். முந்தைய கூட்டரங்கில் விவசாயிகள் வழங்கிய மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து துறை வாரியாக கலெக்டர் மனுதாரர்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டதுடன் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் காலதாமதமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளிடமிருந்து 144 கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், இணை இயக்குநர் (வேளாண்மை) மாரியப்பன், இணைப் பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) கிருஷ்ணவேணி, துணை ஆட்சியர்கள் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×