என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • சமூக வலைதளங்களில் பரவியதால் திரும்பப் பெறப்பட்டது
    • ஆங்கில முறைப்படி சிகிச்சை அளித்ததாக புகார்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள தாமலேரிமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் (வயது 35). இவர் அந்தப்பகுதி யில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிளினிக் நடத்தி வருகிறார். இவர் முறைப்படி மருத்துவம் படிக்காமல்

    பொதுமக்களுக்கு ஆங்கில முறைப்படி சிகிச்சை அளித்து வருவதாக புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து, மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகளின் இணை இயக்குனர் மாரிமுத்து தலைமையிலான மருத்துவக்குழுவினர் ஜோலார்பேட்டை போலீசாருடன் இணைந்து சில நாட்களுக்கு முன்பு சம்பத் நடத்தும் கிளினிக்கில் ஆய்வு நடத்தினர்.

    அப்போது, சம்பத் மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தியது தெரியவந்ததால் கிளினிக்கிற்கு சீல் வைக்கப்பட்டது. சம்பத் கைது செய்யப்பட்டார். சில நாட்கள் கழித்து வெளியே வந்த சம்பத் மீண்டும் கிளினிக் நடத்தி வந்தார்.

    இதற்கிடையே, திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மாரி முத்து கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி சம்பத் கிளினிக் நடத்த தகுதிச்சான்றிதழ் அளித்திருக்கும் தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து இணை இயக்குனர் மாரிமுத்துவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:- கடந்த 2019-ம் ஆண்டு கிளினிக் நடத்தும் மருத்துவர்கள் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனரிடம் தகுதி சான்றிதழ் பெற வேண்டும் என்ற விதி நடைமுறைக்கு வந்தது. அதைதொடர்ந்து 2020-ம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் இருந்து செயல்பட்டு வந்த மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து சுமார் 152 நபர்களுக்கு தகுதிச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் நான் திருப்பத்தூர் மாவட்ட இணை இயக்குனராக 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் பொறுப்புக்கு வந்தேன். அதனைதொடர்ந்து தகுதிச்சான்றிதழ் பெற என்னிடம் வந்த விண்ணப்பங்களில் 80 நபர்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கினேன். அதன் பிறகு ஆய்வு நடத்திய போது சம்பத் போலி மருத்துவர் என்பது கவனத்துக்கு வந்தது. இதனால் அவருக்கு வழங்கப்பட்ட சான்றிதழ் திரும்பப்பெறப்பட்டது.

    இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடியை அடுத்தநெக்குந்தி காவாக்கரை பகுதியில் உள்ள சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் விபசாரம் நடைபெறுவதாக வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் வாணியம்பாடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி,சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த பெண் ஒருவ ரும், திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த விக்கி என்பவரும் காவாக் கரை பகுதியை சேர்ந்த மகாலிங்கம் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த பெண் ஒருவரையும், அவ ருக்கு உதவியாக இருந்த நாட்டறம்பள்ளி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 30) என்பவரையும் கைது செய்தனர்.

    தலைமறைவாக உள்ள விக்கி என்பவரை தேடி வருகின்றனர். அங்கிருந்து மீட்கப்பட்ட ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பெண்ணை திருப்பத்தூர் பகுதியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    • ரேசன் கடை மூலம் பணியாளர்கள் நேரடியாக விண்ணப்பங்களை விநியோகம்
    • கலெக்டர் தொடங்கி வைத்தார்

    ஜோலார்பேட்டை:

    தமிழகம் முழுவதும் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் ரேசன் கடை மூலம் பணியாளர்கள் நேரடியாக விண்ணப்பங்களை விநியோகம் செய்து வருகின்றனர்.

    விண்ணப்பங்கள் வினியோகத்திற்குப் பிறகு அனைத்து பகுதிகளிலும் முகாம் நடத்தப்பட்டு விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதன் பிறகு மகளிர் உரிமைத்தொகை அவரது வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட உள்ளது.

    இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட வக்கணம்பட்டி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கான சிறப்பு ஒத்திகை முகாம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, தாசில்தார் சிவப்பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வங்கி கணக்கு இல்லாத குடும்ப அட்டைதாரர்களை கண்டறிந்து சேமிப்பு கணக்கு தொடங்க நடவடிக்கை
    • கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ஆய்வு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப பதிவு முகாம் 2 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்நிலையில் ஆம்பூர் வட்டம் சோலூர் கிராமத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்பம் வழங்கும் பணியினை கண்காணிப்பு அலுவலரும். கூடுதல் பதிவாளரும். தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனருமான எம்.அந்தோணிசாமி ஜான்பீட்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் வங்கி கணக்கு இல்லாத குடும்ப அட்டைதாரர்களை நேரில் கண்டறிந்து சேமிப்பு கணக்கு துவக்கிட உரிய விண்ணப்பம் அளித்து அவர்களுக்கு அடுகில் உள்ள வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் கிளைகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை எதுவும் இல்லாமல் "ஜீரோ பேலன்ஸ்" என்ற அடிப்படையில் உடனுக்குடன் சேமிப்பு கணக்கு உடனுக்குடன் துவக்கி கொடுக்குமாறும் ஆம்பூர் சரக களமேலாளர் சி.சுப்பிரமணி, திருப்பத்தூர் வங்கி கிளை உதவியாளர் எம்.மஞ்சுநாத் ஆகியோருக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார்.

    இந்நிகழ்வின்போது திருப்பத்தூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சி.பெ.முருகேசன் . கூட்டுறவு சார்பதிவாளரும் , ஆம்பூர் சரக அலுவலருமான எம்.கோபிநாத் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • வார விடுமுறையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம்
    • ஏலகிரி மலை கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. இம்மலை தமிழ்நாட்டில் சுற்றுலாத் தலங்களில் சிறந்த சுற்றுலாத்தலமாக பெயர் பெற்றுள்ளது.

    அத்தனாவூர், நிலாவூர், மங்கலம் உள்ளிட்ட 14 கிராமங்கள் உள்ளடக்கிய இந்த மலையில் மா, பலா, வாழை என முக்கனிகளில் இடமாகவும் ஏலகிரி மலை திகழ்ந்து வருகிறது.

    இதனால் இங்கு வெளிநாடுகள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள்

    இங்கு பயணிகளின் பொழுது ேபாக்கிற்காக படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, மூலிகை பண்ணை, மங்களம் சுவாமி மலை ஏற்றம், முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் உள்ளன.

    மேலும் இங்கு 50-க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. விடுமுறை நாட்களில் அனைத்து தனியார் விடுதிகளிலும் நிறைந்து காணப்படும் நிலையில் வரும் முன்னரே முன்பதிவு செய்து விட்டு வருகின்றனர்.

    இங்கு ஏராளமான தனியார் சுற்றுலா தலங்கள் உள்ள நிலையில் அரசு சுற்றுலா தலமாக படகு இல்லமும், இயற்கை பூங்காவும், மற்றும் மங்களம் சுவாமி மலை ஏற்றம் உள்ளிட்ட ஒரு சில இடம் மட்டும் உள்ளது.

    வார விடுமுறையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலைக்கு அதிகளவில் வருவது வழக்கம். ஆனால் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை ஏலகிரி மலையில் மழை தொடர்ந்து பெய்தது.

    இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது. இதனால் ஏலகிரி மலை கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    • எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்டது

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்மேம்பாட்டு நிதியில் இருந்து உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.10 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிட திறப்புவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சிதலைவர் பூசாராணி தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற உறுப் பினர் கீதாஜெகன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயலாளர் சரவணன் வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்துவைத்து, குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்ச் சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந் தில்குமார், குழைந்தைகள் வளர்ச்சி அலுவலர் (பொறுப்பு) ஆர். செல்வி மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர் சரவணன், முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா?
    • போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    குடியாத்தத்தை அடுத்த மேல்பட்டி ரெயில் நிலைய யார் டில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் காட்பாடி- ஜோலார்பேட்டை செல்லும் மார்க்கத்தில் தண்டவாளத் தில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் உஷாராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டனர். பிண மாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

    முதல் கட்ட விசாரணைக்கு பிறகு உடலை பிரேத பரி சோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனைதொடர்ந்து இறந்த வர் யார்? என்பது குறித்தும் படிக்கட்டில் பயணம் செய்த போது தவறி விழுந்து இறந் தாரா? அல்லது தண்டவா ளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தாரா? என்பது குறித்தும் போலீசார் பல் வேறு கோணங்களில் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் அருகே உள்ள சுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சந்திரன் (வயது 15).

    இவர் பச்சூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவன் கடந்த 6 மாதமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி சந்திரனுக்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டது.

    இதில் வலி தாங்க முடியாத மாணவன் வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை குடித்து மயங்கி கிடந்தார்.

    இதனை பார்த்த அவரது குடும்பத்தினர், சந்திரனை மீட்டு சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தீயணைப்பு துறையினர் கருவி மூலம் பிடித்தனர்
    • வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த புள்ளானேரி ஊராட்சி, புகலைக்காரன் வட்டம் பகுதியில் பிரகாசம் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் 6 அடி நீளம் உள்ள நல்லபாம்பு ஒன்று விழுந்து சுருண்டு கிடந்தது.

    இதனால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என கருதி பிரகாசம் என்பவர் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி கருவி மூலம் நல்லபாம்பை மீட்டனர்.

    பின்னர் அதனை கோணிப்பை மூலம் கட்டி திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    • எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • 2 பெரிய பாலங்களும், 5 சிறிய பாலங்களும் கட்டப்படுகிறது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று ரூபாய் 8.49 கோடி மதிப்பீட்டில் 7 தரைப் பாலங்கள் அமைப்பதற்கான பணியை எம்எல்ஏ க.தேவராஜி நேற்று துவக்கி வைத்தார்.

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் இருந்து புத்துக்கோயில் செல்ல தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    பெரிய கம்மியம் பட்டு, காவேரிபட்டு, சின்னக்கம்மியம் பட்டு, பெரிய மோட்டூர், கூத்தாண்ட குப்பம், கேத்தாண்டப்பட்டி, புத்துக்கோயில் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் சென்று வர இந்த பிரதான சாலை மட்டுமே உள்ளது.

    இந்த சாலையில் நடுவில் ஆங்காங்கே பாலாற்றுக்கு மழைநீர் செல்லும் கால்வாய் உள்ளது. மழைக்காலங்களில் கால்வாய்களில் அதிகளவு தண்ணீர் தேங்குவதால் மக்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கிறது.

    இது குறித்து பொதுமக்கள், கால்வாயை கடந்த செல்ல பாலம் கட்டி தர வேண்டும் என ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ. தேவராஜியிடம் கோரிக்கை விடுத்தனர்.

    அதன்படி கால்வாய்களை கடந்து செல்ல 2 பெரிய பாலங்களும், 5 சிறிய பாலங்களும் கட்ட ரூ.8.49 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று பாலம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

    நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி தலைமை தாங்கினார்.

    உதவி கோட்ட பொறியாளர் மணி சுந்தரம் முன்னிலை வகித்தார். சாலை ஆய்வாளர் வெங்கடேசன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி கலந்து கொண்டு தரைப் பாலங்கள் கட்ட அடிக்கல் நாட்டினார்.

    • ஆபாசமாக பேசியவரை கைது செய்ய வலியுறுத்தல்
    • போலீசார் பேச்சு வார்த்தை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிக்குப்பம் ஊராட்சியில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்கின்றனர்.

    அதன்படி இன்று காலை 100 நாள் வேலை திட்ட பெண்கள் வழக்கம் போல் அத்திகுப்பம் ஏரியில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த தி.மு.க. பிரமுகர் சாமு என்பவர், பெண்களை வலுக்கட்டாயமாக வம்புக்கு இழுத்து தகராறில் ஈடுபட்டார்.

    இதனை தட்டி கேட்ட பெண்களை அவர் ஆபாசமாக பேசி திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 100 நாள் வேலை திட்ட பெண்கள், காலை 10 மணி அளவில் வேலையை புறக்கணித்து திருப்பத்தூரில் இருந்து பொம்மிக்குப்பம் செல்லும் சாலைக்கு வந்தனர்.

    அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறப்பிடித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இருப்பினும் அவர்கள், ஆபாசமாக பேசிய தி.மு.க. பிரமுகரை கைது செய்யும் வரை கலைந்து செல்ல மாட்டோம் எனக்கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் பழைய பேட்டை பகு தியை சேர்ந்தவர் பெரியதம்பி மகன் அப்பு அப்பரஞ்சி (வயது 38).

    இவர் நாட்டறம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பேக்கரிகளில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கு தேவையான மூலப்பொருட்களை விற்பனை செய்யும் நிறுவ னத்தை நடத்தி வருகிறார்.

    நேற்று காலை இவரது மனைவி கடையை திறந்து பார்த்தபோது கடையில் உள்ள பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.

    இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டதில் 2 சிறுவர்கள் இணைந்து கடைக்குள் இருந்த விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு செல்போனையும், கல்லாப் பெட்டிக்குள் இருந்த ரூ.2ஆயிரத்தையும் திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பினர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் காலியானதால் வாகனம் அங்கேயே நின்றது. இதனையடுத்து அங்கே இருந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் பெட்ரோலை திருடி தங்களுடைய இருசக்கர வாகனத்தில் நிரப்பி தப்பிய காட்சிகளும் பதிவாகியிருந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தது 2 சிறுவர்களையும் தேடி வருகின்றனர்.

    ×